என்னைப் பற்றி....

My Photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

17 January, 2012

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. 


  • ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். 
  • ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
  • பூஜை அறையில் கடவுளின் படம்  அல்லது  உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
  • பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து  வைக்க  வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
  • தென் - கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
  • முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.
  • பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
  • பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். 
  • சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சிலசமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் வைக்கலாம்.
  • கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும்.  அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
  • ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. 
  • பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.
  • அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது. 
நன்றி : architectureideas.info. 

11 January, 2012

சில வரிச் சிந்தனைகள் ....

















25 December, 2011

நுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

நுகர்வோருக்காக வழக்குரைஞர் அல்லாத ஒரு முகவரும் வழக்கு நடத்தலாம் - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

நுகர்வோர் ஒருவர் தனது வழக்கை தனது அதிகாரம் பெற்ற ஒரு முகவரை (ஏஜென்ட்) கொண்டு நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் நடத்தலாம் என்றும், அத்தகு முகவர் ஒரு வழக்குரைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மருத்துவ கவனக்குறைவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்காக அல்லது அவருக்கெதிராக இன்னொரு மருத்துவர் வழக்கு நடத்தலாம் என்றும் அண்மையில் உரிமையியல் மேல்முறையீடு ஒன்றில் நமது உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. 


மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் எழுந்த வழக்கு என்ன?

சேவைக் குறைபாடு தொடர்பாக சுற்றுலா நடத்துனர்கள் இருவர் மீது நுகர்வோர் ஒருவர் தெற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கிடுகிறார்.  அந்த நுகர்வோர் தனது வழக்கை நடத்த முகவர் ஒருவருக்கு அதிகாரம் அளித்திருந்தார். இப்புகார் நிலுவையில் இருக்கும் போது, எதிர் தரப்பினர்களான அச்சுற்றுலா நடத்துனர்கள் இடைநிலை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் புகார்தாரரான நுகர்வோருக்காக வழக்கு நடத்த அவரது முகவருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், காரணம் அந்த முகவர் ஒரு வழக்குரைஞராக தன்னை பதிவு செய்து கொள்ளாதவர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதை ஆராய்ந்த மும்பை மாவட்ட மன்றம், நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர் தன்னை ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொள்ளாத காரணத்தால், மாவட்ட மன்றத்தின் முன் தோன்றவோ, வாதுரைக்கவோ உரிமை பெற்றவர் அல்ல என்று தீர்ப்புரைத்தது.

ஆனால் இதே போன்ற பிரச்னை எழுந்த மற்றொரு புகாரில், நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர்கள் அவருக்காக நுகர்வோர் மன்றங்களில் புகார் தாக்கல் செய்ய, செயல்பட, தோன்ற, வாதிட உரிமை பெற்றவர்கள் என்று தீர்ப்புரைக்கப்பட்டது. 

மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு:

ப்பிரச்சனைகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக  மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டன. அது, நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர்கள் தோன்றி நடத்தும் வழக்குகளுக்கு எல்லாம் தடையாணை  பிறப்பித்தது. அதே நேரத்தில் நுகர்வோர் மன்றங்களில் நுகர்வோரின் முகவர்கள் தோன்றுவதிலிருந்து தடை விதித்து மாவட்ட மன்றங்கள் பிறப்பித்த உறுத்துக்கட்டளைக்கு தடையாணை பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் நுகர்வோர் மன்றங்களில் அதிகாரம் பெற்ற முகவர்கள் தோன்றும் ஏராளமான வழக்குகள் அப்படியே நின்று போயின.


பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 
நீதிப்பேராணை (ரிட்) மனுக்கள் தாக்கல் :

மாநில ஆணையம் மேற்கண்டவாறு பிறப்பித்த தடையாணைகளுக்கு எதிராக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்களை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஈராயம் அனுமதித்து ஆணையிட்டன. அதில், "1986-ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட நுகர்வோர் மன்றங்கள், 'ஒரு உரிமையில் நீதிமன்றத்தின் அம்சங்களை கொண்டதாகும்' (trappings of a Civil Court) என்றும், ஆனால் அவை, "உரிமையியல் நடைமுறை சட்ட வகை முறைகளின் கீழ் உரிமையியல் நீதிமன்றங்கள் அல்ல (are not civil courts within the meaning of the provisions of the Code of Civil Procedure)' என்றும்" கருத்துரைத்தது.

இதன் அடிப்படையில், முடிவில் மாவட்ட மன்றம் அல்லது மாநில ஆணையத்தில் வழக்கிடும்   நுகர்வோர் ஒருவர் தனது வழக்குக்காக வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்றும், அவ்வாறு வழக்குரைஞர் அல்லாத முகவர் ஒருவர் நுகர்வோர் மன்றங்களில்/ஆணையங்களில் தோன்றுவது 1961 -இன் வழக்குரைஞர் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரண்பட்டதல்ல என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

மேலும் மற்றொரு முக்கிய கருத்தையும் பம்பாய் உயர் நீதிமன்றம் முன் வைத்தது.  அதாவது,  வருமான வரிச் சட்டம், விற்பனை வரிச் சட்டம், முற்றுரிமை  மட்டும் தடுப்பூட்டும்  வணிக  நடவடிக்கை (Monopolies and Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியன சம்பந்தப்பட்ட அதிகராமைப்புகளுக்கு முன் வழக்குரைஞர்கள் அல்லாதவர்களையும் தரப்பினர்களுக்காக பேச, வாதிட அனுமதி அளிக்கின்றன. அவர்களை சட்டத் தொழில் புரிபவர்களாக கூற முடியாது. அவ்வாறே 1986-ஆம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2000 -ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகள் மாவட்ட மன்றங்களில் நுகர்வோர்களுக்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் தோன்றுவதை அனுமதிக்கின்றன. அவ்வாறு தோன்றுவதை வழக்குரைஞர்கள் சட்டம் பிரிவு 33-க்கு முரண்பட்ட ஒன்று என்று கூற முடியாது என பம்பாய் உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

ஒருவேளை அத்தகு முகவர்கள், மாவட்ட மன்றம்/மாநில ஆணையத்தில்   ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களது வாதத்தை அந்த குறிப்பிட்ட வழக்கில் கேட்க மறுத்து அவை ஆணையிடலாம். அதற்கு அவற்றுக்கு அதிகாரம் உண்டு என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 

உச்ச நீதிமன்றத்தில் உரிமையியல் மேல்முறையீடு

னினும் இத்தீர்ப்பினால் குறையுற்ற எதிர் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீடுகள்  செய்தனர். அம்மேல் முறையீடுகளை ஆராய்ந்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய ஈராயம், அவற்றில் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அடங்கியுள்ளது என்பதால்,அவற்றை மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயத்தின் முன் முடிவுக்கு வைத்தது.

அம்மேல்முறையீடுகளை மாண்பமை நீதியரசர்கள்   தல்வீர் பண்டரி, முனைவர் முகுன்டகம் சர்மா மற்றும் அணில் ஆர்.தேவே ஆகியோர் அடங்கிய ஆயம் பல்வேறு முன் தீர்ப்பு நெறிகள், சட்ட திட்டங்கள்,  பல நாட்டு சட்ட நிலைப்பாடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு ஆராய்ந்தது. 

அது தனது தீர்ப்பில் பல்வேறு சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து, முற்றுப் புள்ளி வைத்தது. அது தனது தீர்ப்பில் பம்பாய் உயர் நீதிமன்றம் எடுத்த மேற்கண்ட முடிவுகள் யாவும் சரியான ஒன்றே என ஏற்றுக் கொண்டது. மாவட்ட மன்றங்கள் / மாநில ஆணையங்கள் ஆகியவற்றில் நுகர்வோர்களுக்காக அவரது அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை வாதிட அனுமதிக்கலாம், அம்முகவர்கள் சட்டத் தொழில் ஆற்றுபவர்களாக, வழக்குரைஞர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை என்ற கருத்தை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சரியென அங்கீகரித்தது.

மருத்துவரின் வழக்குக்கு மற்றொரு மருத்துவர் தோன்றி வாதிடலாம் 
பொறியாளருக்கு எதிரான வழக்கில் புகார்தாரருக்காக மற்றொரு பொறியாளர் வழக்கு நடத்தலாம் 

து தொடர்பாக உச்ச நீதிமன்றம் 'மகாராஷ்டிரா நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை' பரிசீலிக்கையில், பின்வரும் கருத்துகளை தெளிவுபடுத்தியது. அதாவது, "நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எழும் வழக்குகள் சிறிய அளவிலான இழப்பீட்டுக் கோரிக்கைகளை கொண்டவை. எல்லா வழக்குகளிலும் வழக்குரைஞர்களை நியமனம் செய்வது என்பது பொருளாதாரரீதியாக  சரி  வராது. அதே நேரத்தில் பல வழக்குகள் துறை சார்ந்த நிபுணர்களின் உதவி தேவைப்படுவதாக இருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் மருத்துவ கவனக் குறைவுக்காக மருத்துவமனை மீது வழக்கிடலாம்; அல்லது கட்டட வரைபடத்தை தவறாக வரைந்து கொடுத்தமைக்காக வரைகலைஞர் மீது வழக்கிடலாம்; அல்லது கட்டடத்தை தவறாக கட்டிக் கொடுத்தமைக்காக கட்டட ஒப்பந்தக்காரர் மீது வழக்கிடலாம். இப்படிப்பட்ட வழக்குகளில், மருத்துவர், வரைகலை நிபுணர், பொறியாளர் போன்ற தொழிலாற்றுனர்கள், ஒரு வழக்குரைஞரை விட பொருத்தமானவர்கள் ஆவர். எனவே, புகார்தாரர் மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவருக்கும் தங்கள் வழக்கை நடத்த அவர் வழக்குரைஞர் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் வல்லுனர்களாக இருக்கும் வேறு எவரையும் நியமனம் செய்யலாம், அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இந்நிலைப்பாடு வழக்கின் இரு தரப்பினரையும் சமமான நிலையில் வைக்கின்றது," உச்ச நீதிமன்றம் கூறியது.

விதிகள் வகுக்கும்படி தேசிய ஆணையத்திற்கு
உச்ச நீதிமன்றம் ஏவுரை 

மேலும் இது குறித்து விதிகளை வகுக்கும்படி தேசிய நுகர்வோர் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் சில ஆலோசனைகளை முன் வைத்தது. அவற்றின்படி அந்த முகவர் தனியொரு வழக்கு என்ற அடிப்படையில் தோன்ற வேண்டும். நுகர்வோருக்கும் முகவருக்கும் ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக, உறவினர், அண்டை வீட்டுக்காரர், தொழில் துணைவர் அல்லது நெருங்கிய நண்பர் போன்று), மேலும் வழக்குக்காக கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்று மாவட்ட மன்றத்தின் முன் அம்முகவர் விளம்புகை செய்ய வேண்டும், தரப்பினருக்காக தான் வழக்காட தகுதி பெற்றவர் என்பதை மாவட்ட மன்ற தலைவர் முன் காட்ட வேண்டும். இவ்வாறு பல்வேறு யோசனைகளை உச்ச நீதிமன்றம் முன் வைத்து அவற்றை விதிகளாக வகுப்பதற்கு பரிசீலனை செய்யும்படி தேசிய ஆணையத்திற்கு ஏவுரைத்தது.

முடிவு

முடிவில் முன் சொன்னபடி பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முழு நீள ஆங்கிலத் தீர்ப்புக்கு 
பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும் 


C.Venkatachalam Vs. Ajitkumar C.Shah and Ors.  - C.A.No. 868 of 2003 and Bar Council of India Vs. Sanjay R.Kothari and Ors. - C.A.No. 869 - 870 of 2003 - Supreme Court of India - Dalveer Bhandari, Dr. Mukundakam Sharma & Anil R. Dev, JJ. - Decided on 29-08-2011.


24 December, 2011

இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா?

இயக்கூர்திகள் சட்டம் (59/1988), பிரிவு 169 - உரிமையியல் நடைமுறை சட்டம், கட்டளை 38, விதி 5; கட்டளை 41, விதி 23-A. - 

வழக்கின் சங்கதிகள்படி, விபத்து ஏற்படுத்திய 'டிராக்டர் மற்றும் ட்ரைலர்'  வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்தை 'தீர்ப்பிற்கு முன் பற்றுகை' (Attachment before judgment) செய்யவும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா எனும் கேள்வி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன் எழுந்த போது, உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 38, விதி 5-இல் கண்ட வகைமுறைகள் (தீர்ப்பிற்கு முன் பற்றுகை செய்வது குறித்த நடைமுறைகளைக் கூறுவது), இயக்கூர்திகள் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நிலை நிறுத்தப்பட்டது.

எனவே, விபத்து வழக்குகளில் இழப்பீட்டிற்கான முடிவான தீர்வம் பகரப்படுவதற்கு முன்னதாக அத்தீர்வத் தொகையை பின்னிட்டு வசூலிப்பதற்கு உதவிகரமாக இருப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தை பற்றுகை (ஜப்தி) செய்யலாம். தீர்வத்திற்கு பிறகு அவ்வாகனத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

(Duvvuru Siva Kumar Reddy and etc. v. Malli Srinivasulu and etc.)


23 December, 2011

அணிலைப் போலவாவது வாழ்வோமே !


" ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....

அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...

ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....

காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்

நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .............."

இது அண்மையில் நான் படித்த, கவிஞர் சுஜா எழுதிய கவிதை. அப்படி ஒரு சிறு துரும்பெடுத்து போட்டதற்கே,  இராமாயணத்தில் அணிலுக்கு மிகச் சிறப்பானதொரு இடம் கிடைத்தது.

சீதையை மீட்க, கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டது. பாலவேலை நடந்த இடத்தில் இருந்த அணில், வானரங்களோடு சேர்ந்து பணிசெய்து ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று எண்ணியது. கடல் நீரில் மூழ்கி, கடற்கரை மணலில் புரண்டு எழுந்தது. ஈரவுடம்பில் ஒட்டிக் கொண்ட மணலை குரங்குகள் போட்ட பாறையில் உதிர்த்துவிட்டு வந்தது. (சில குறிப்புகளில் அது மிகச் சிறிய கூழாங் கற்களை தனது வாயில் கவ்வி கொண்டு வந்து இட்டது எனப்படுகிறது). இப்படி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த அணிலின் செயலை கவனித்தார் ராமன். அன்போடு அதன் முதுகில் தனது கைகளால் தடவிக் கொடுத்தார். அது அணிலின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகளாக விழுந்தன. அன்றுமுதல் அணில் ராமபிரானுக்கு மட்டுமல்ல, நமக்கும் அன்பிற்குரிய பிராணியாகிவிட்டது. 

இந்த ராமாயண குறுங்கதை சொல்லாமல் சொல்வது என்ன?

ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்பது அணிலின் விருப்பம். அதற்கு அவரது கருத்தைக் கவர வேண்டும். அருகில் பாலம் கட்டப்படுகிறது. ஆனால் அதற்காக பலம் வாய்ந்த வானரங்கள் பணி செய்கின்றன. சிறியவன், எளியவனாகிய தான் என்ன செய்து விட முடியும் என்று அணில் திகைத்தது. எனினும் தனது சக்திக்கு இயன்ற வரையில் செய்ய முடிவு செய்து அப்பாலம் கட்ட மணலை, (சிறு கூழாங் கற்களை) ஒட்டிக் கொண்டு வந்து உதிர்த்தது.    சிறிய உதவிதான். எனினும் அப்பாலத்தின் உருவாக்கத்தில் அணிலின் மணலும் சேர்ந்துள்ளது. அணில் காலத்தே செய்த உதவி ராமனின் மனதை ஈர்த்தது. அவர் அன்புடன் அணிலை தடவிக் கொடுத்து அதற்கு அருள் பாலித்தார். அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் அதற்கு ராமர் அணிவித்த தங்கப் பதக்கமாக இன்றும் காட்சி தருகிறது. இறைவனின் அருளைப் பெற்றதும்,   சமகாலத்தில் கண்ணெதிரே வாழ்வதுமான ஓர் உயிரினத்திற்கு இந்த சிறு அணிலும் ஒரு சான்று. முதுகில் மூன்று கோடுகள் உள்ள அணில்கள் ராமனின் அருளையும், அன்பையும் பெற்றவையாக போற்றப்படுகின்றன. அணில் 'பிள்ளை' என்று பாசமுடன் அழைக்கின்றோம்.

எளியவனின் சிறு உதவி என்றாலும் அது காலத்தே செய்யும் உதவியாக இருப்பின், மிகப் பெரியது. அதை போற்ற வேண்டும். மறந்து விடக் கூடாது. உதவி செய்தோருக்கு தக்க சமயத்தில் மறு உதவி செய்யவும் தயங்கக் கூடாது. 

ஆனால் இந்தக் காலத்தில் யார் இப்படிப்பட்ட கதை பற்றி கவலைப் படுகிறார்கள் ? கேட்டு கேட்டு உதவிகளை வலியப் பெற்று, பலன் அடைந்தவுடன், உடனடியாக அதை மறந்தும் விடுகிறர்கள். உதவி செய்தவரை எங்கோ பார்த்தது போல் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது. ஏறி வந்த ஏணியை எட்டித் தள்ளி விடுகிறார்கள். இன்னும் சில நேரங்களில் உதவி செய்தவனுக்கு சுயநலம் கருதி உபத்திரவம் செய்யவும் தயங்குவதில்லை. கொடுமையிலும் கொடுமை இதுவன்றோ..?

"வலியவனோ, எளியவனோ அவன் யாராக இருந்தாலும் எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும். வாங்கியாச்சுன்னா அவ்வளவுதான்.., நீ யாரோ.. நான் யாரோ.. " என்று சொல்லும் கூட்டம்தான் இந்த உலகில்  அதிகம் நடமாட்டம் செய்கிறது. 

இப்படி கூட சொல்லலாம்... 

அதாவது, இராமாயணத்தில் ராமர் ஒரு மானுட அவதாரம். அப்படி ஒரு மனிதன் ஒரு நெருக்கடியில், தேவையில் இருந்த போது அவருக்கு அணில் உதவியது. அத்துடன் குரங்கு, ஜடாயு போன்ற மற்ற உயிரினங்களும் உதவின. அப்படி மற்ற உயிரினங்களே உதவும் போது ஒரு மனிதன் துன்பத்தில், தேவையில் இருக்கையில், மற்றொரு சக மனிதன் அவனுக்கு பெரிய உதவி செய்யாது போனாலும் அணிலைப் போல சிறு துரும்பையாவது தூக்கிப் போடலாம். சில ஆறுதல் வார்த்தைகள் கூட போதும். அதே போன்று செய்த உதவிக்கு ராமன் அணிலுக்கு கொடுத்த அங்கீகாரம் மிகப் பெரியது. அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், இந்த மனிதப் பிறவியினர் செய் நன்றி மறக்காமலாவது இருந்தால் நன்று. 

செய் நன்றி கொன்றவருக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும்  உய்வில்லை !  

Related Posts Plugin for WordPress, Blogger...