என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

03 February, 2009

மணமுறிவை தவிர்க்க இதோ சில ஆலோசனைகள்..


" மணமுறிவு செய்து கொள்வதற்காக யாரும் மணம் செய்து கொள்வதில்லை. ஒன்று சிறப்பாக அமைய நாம் நேரத்தை ஒதுக்கி நிறைய முயற்சி செய்கிறோம். அவ்வாறுதான் திருமண வாழ்கையும். மண வாழ்க்கை பந்தம் தொடர்ந்திருக்க தம்பதிகள் பரஸ்பரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை எல்லாவற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால், இருவரும் இணை பிரியா தம்பதிகளாக தெரிவர். ஆனால் அவர்களுக்குள் எத்தனையோ கசப்புகள் இருக்கலாம். இவற்றை களைந்து உள்ளும் புறமும் இணை பிரியாமல் இருப்பதற்கு அத்தம்பதிகள் சேர்ந்து செயலாற்ற வேண்டும். "

எனவே புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களே அல்லது இன்றோ நாளையோ மணமுறிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கிட சிந்தித்து கொண்டிருக்கும் தம்பதிகளே, உங்கள் இல்வாழ்க்கை இனிதாக எந்த இடர்படும் இன்றி தொடர இங்கு சில ஆலோசனைகளை உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம். கடைபிடித்துப் பாருங்கள்.... உங்கள் துணை உங்கள் அன்புக்கு அடிமை ஆவது உறுதி.


இதோ அந்த ஆலோசனைகள் ....

1. உங்கள் இல்வாழ்க்கை துணையை கலந்தாலோசித்தே எதையும் செய்யுங்கள். அவர் கூறும் கருத்தை கூர்ந்து கேளுங்கள்.


2. இருவரும் தவறுகளை செய்யக் கூடியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்தவறுகளில் இருந்து சரியானதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.


3. ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள், மாறுபட்ட உணர்ச்சி கொண்டவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள்.


4. உங்கள் துணையிடம் மணம் விட்டு பேசுங்கள், கேளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்.


5. மண வாழ்க்கைக்கு புறம்பான தொடர்புகளை கை விடுங்கள்.


6. ஏற்பட்ட பிரச்சனை தீராமல் இருந்தாலும், இரவில் தனித்தனி படுகைகளில் படுக்காதீர்கள். படுப்பதற்கு முன் அப்பிரச்சனையை தீர்க்க ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க முயலுங்கள்.


7. உங்களை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்கள் துணையை சலிப்படைய செய்து விடும்.


8. சிறு சிறு கேலியும் கிண்டலும் இருக்கலாம். ஆனால் அது வன்மமாக மாறி விடக்கூடாது.


9. ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகவும், அன்பான காதலர்களாகவும் இருங்கள்.


10. உங்கள் துணையின் நண்பர்களை உங்கள் துணையை அருகில் வைத்து கொண்டு குறை கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் நண்பர்களின் முன்னிலையில் உங்கள் துணையை குறை கூறாதீர்கள்.


11. உங்கள் துணையின் பெற்றோர்களை இழிவு படுத்தாதீர்கள் அல்லது குறை கூறாதீர்கள்.


12. கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.


13. உடலுறவு கொள்வதை ஏதோ ஒரு வழக்கமாக மேற்கொள்ளாதீர்கள். ஆசையும், காதலும் கொண்டு அணுகுங்கள்.


14. என்ன சொல்லி விடப் போகிறாள்/றார் என்ற எண்ணத்தில் செயல்படுவதை தவிர்க்கவும். அதாவது உரிமை என்ற பெயரில் அத்து மீறாதீர்கள்.


15. உங்கள் துணையர் சோர்ந்திருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள், நம்பிக்கை கொடுங்கள். மாறாக அவரது சோர்வை அதிகப்படுத்தி விட வேண்டாம்.


16. உங்கள் தோற்றத்தை பொலிவாக வைத்திருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். அழகு படுத்திக் கொள்ளுங்கள். அழுது வடியதீர்கள்.


17. ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.


18. சமாதானம்தான் தீர்வு என்பதை உணருங்கள்.


19. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.


20. எதையாவது கடனாக பெற விரும்பினால், அது பற்றி உங்கள் துணையிடம் கேளுங்கள்.


21. உங்களது எல்லா தகவல்களையும் உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


22. நீங்கள் உங்கள் துணையரை அதிகம் நேசிப்பதாக அவரிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருங்கள்.


23. ஒருவருக்கொருவர் பாராட்ட பழகுங்கள். உள்ளன்போடு வாழ்த்துகளை சொல்லி மகிழுங்கள்.


24. சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளுங்கள். குறிப்பாக துக்கத்தின் போது ஆறுதல் கூறி ஆதரவாக இருங்கள்.


25. பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.26. ஒருவருக்கொருவர் நன்றி மறவாதீர்.


27. உங்கள் துணையை ஒருபோதும் ஏமாற்ற முயலாதீர்கள்.


28. "என்னை மன்னித்துவிடு" என்று சொல்ல தயங்காதீர்கள்.


29. இயன்ற அளவு உங்கள் துணையை திருப்திபடுத்துங்கள். இயலாத நிலைக்கு வருத்தம் தெரிவியுங்கள்.


30. சகித்து கொள்ளுங்கள்.


31. சச்சரவுகளை கலந்து பேசி தீருங்கள். குறிப்பாக கணவன் எச்சமயத்திலும் மனைவியிடம் வன்முறையை கையாளக் கூடாது.


32. சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி நினைவு படுத்தி கொள்ளுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...