என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

28 December, 2010

அடி ஆத்தி... இத்தனை வரிகளா?


கேள்வி  : நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பதில் : தொழில் / வணிகம்.
வரி : அப்படியானால்  PROFESSIONAL TAX  கட்டுங்கள் !
___________________________________________________________________

கேள்வி : வணிகத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
பதில் : சரக்குகளை விற்றுக் கொண்டிருக்கிறேன்.
வரி : அப்படியானால்  SALES TAX  கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : சரக்குகளை எங்கிருந்து தருவிக்கிறீர்கள்  ?
பதில் : வெளி மாநிலம் / வெளி நாட்டிலிருந்து
வரி : அப்படியானால் CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI! ஆகியவற்றில் பொருத்தமானதை  கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : சரக்குகளை விற்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
பதில் : இலாபம்
வரி : அப்படியானால் INCOME TAX  கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : இலாபத்தை எப்படி பகிர்ந்து அளிக்கிறீர்கள் ?
பதில் : டிவிடென்ட் மூலமாக.
வரி : அப்படியானால் dividend distribution Tax  கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : சரக்குகளை எங்கே உற்பத்தி செய்கிறீர்கள்?
பதில் : Factory யில்
வரி : அப்படியானால் EXCISE DUTY கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : உங்களுக்கு அலுவலகம் / பண்டக சாலை / பாக்டரி உள்ளதா?
பதில் : ஆம்
வரி : அப்படியானால்  MUNICIPAL & FIRE TAX  ஆகியவற்றை கட்டுங்கள் !
___________________________________________________________________

கேள்வி : உங்களிடம் பணியாட்கள் உள்ளனரா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால்  STAFF PROFESSIONAL TAX கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி :  இலட்சங்களில் வியாபாரம் செய்கிறீர்களா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் TURNOVER TAX கட்டுங்கள் !
பதில் : இல்லை நான் இலட்சங்களில் வியாபாரம் செய்யவில்லை :
வரி : அப்படியானால் Minimum Alternate Tax கட்டுங்கள்
___________________________________________________________________


கேள்வி : வங்கியிலிருந்து நீங்கள் ரூபாய் 25000 எடுத்து செல்கிறீர்கள?
பதில் : ஆம். சம்பளத்திற்காக .
வரி : அப்படியானால் CASH HANDLING TAX கட்டுங்கள்.
___________________________________________________________________


கேள்வி : நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை லஞ்ச் மற்றும் டின்னருக்கு எங்கே அழைத்து செல்கிறீர்கள்?
பதில் : ஹோட்டலுக்கு
வரி : அப்படியானால்  FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்கள்
___________________________________________________________________


கேள்வி : நீங்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறீர்களா?
பதில்  : ஆம்.
வரி : அப்படியானால் FRINGE BENEFIT TAX கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : நீங்கள் ஏதேனும் சேவையை பெற்றுள்ளீர்கள அல்லது கொடுத்துள்ளீர்களா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் சேவை வரி கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : உங்களுக்கு எப்படி இவ்வளவு  பெரிய தொகை வந்தது?
பதில் : பிறந்த நாள் பரிசாக
வரி : அப்படியானால் GIFT TAX கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : உங்களுக்கு சொத்து எது உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் WEALTH TAX கட்டுங்கள்.
___________________________________________________________________


கேள்வி : உங்கள் மன இறுக்கத்தை குறைக்க, நீங்கள் பொழுதுபோக்கிற்காக எங்கு செல்வீர்கள்?
பதில் : சினிமா அல்லது கடலோர விடுதி
வரி : அப்படியானால் ENTERTAINMENT TAX கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : நீங்கள் வீடு வாங்கி உள்ளீர்களா?
பதில் : ஆம்
வரி : அப்படியானால் STAMP DUTY & REGISTRATION FEE கட்டுங்கள் !
___________________________________________________________________


கேள்வி : நீங்கள் எப்படி  பயணம் செய்கிறீர்கள் ?
பதில் : பஸ்
வரி : அப்படியானால் SURCHARGE கட்டுங்கள்  !
___________________________________________________________________


கேள்வி : வேறு ஏதும்  கூடுதல் வரி உள்ளதா?
பதில் : ஆம்.
வரி :  EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX ஆகியவற்றை சூழலுக்கு தக்கவாறு நீங்கள் செலுத்த வேண்டி வரும்.
___________________________________________________________________

கேள்வி: வரி கட்டுவதில் கால தாமதம் ஏதும் ஏற்பட்டு உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் INTEREST & PENALTY கட்டுங்கள் !
____________________________________________________________________


கேள்வி : உங்களுக்கு சொந்தமாக வாகனம் உள்ளதா?
பதில் : ஆம்.
வரி : அப்படியானால் சாலை வரி கட்டுங்கள் !
____________________________________________________________________


கேள்வி : நீங்கள் வாகனத்தை ஓட்டுவீர்களா ?
பதில் : ஓ.. நன்றாக ஓட்டுவேனே ....
வரி : அப்படியானால் Toll Tax கட்டுங்கள்
____________________________________________________________________


இந்தியன் : நான் இப்போது இறக்கலாமா  ?
பதில் : கொஞ்சம் காத்திருங்கள் ... நாங்கள் தகன/புதை வரி விதிப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
____________________________________________________________________

25 December, 2010

கணவன்மார்கள் - பாவப்பட்ட ஜென்மங்கள்

கணவனின் நிலை ஒரு ஸ்பிலிட் ஏ.சி.-யைப் போன்றது.
அவுட்டோர் யூனிட்டில் எவ்வளவு சத்தம் வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இன்டோரில் எந்த சத்தமும் வராதபடிக்கு அது வடிவமைக்கப்பட்டுள்ளது....
_______________________________________________________________________
"கணவன் என்பவன் குடும்பத் தலைவன்;
ஆனால் மனைவி என்பவள் அவனது கழுத்து.
அவள் எப்படி தனது கழுத்தை திருப்புகிறாளோ  அப்படி அவன் செல்ல வேண்டும்" 
_______________________________________________________________________
நரகத்தில் சென்ற ஒரு கணவன் அங்கிருந்த ஒரு பேயிடம், "உங்களுடைய செல் போனை ஒரு நிமிடம் கொடுத்தால் நான் எனது மனைவியிடம் பேசி விடுவேன்" என்றான்.  அதற்கு அந்தப் பேயும் தனது செல் போனை கொடுத்தது. கணவன் தனது மனைவியிடம் பேசி முடித்து விட்டு, "பேசியதற்கு எவ்வளவு சார்ஜ் தர வேண்டும்" என்று பேயிடம் கேட்டான். அதற்கு அந்தப் பேய், "ஒன்றும் தர வேண்டியதில்லை. நரகம் டூ நரகம் பிரீ" என்றது!
_______________________________________________________________________
கணவன் : கண்ணே.. உனக்கு மனைவி என்பதன் அர்த்தம் தெரியுமா?
மாணவி என்பவள் எந்த மேட்டரும் இல்லாமல் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவள்.
மனைவி : கண்ணாளா.. மனைவி என்பதற்கு அது பொருள் அல்ல. மனைவி என்பவள் ஒரு முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்.
_______________________________________________________________________
மனைவி : நான் ஒரு நியூஸ் பேப்பராக மாற விரும்புகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்கலாம் பாருங்கள்.. 
கணவன் : நானும் அப்படியே விரும்புகிறேன்.  தினமும் ஒரு புதிய நியூஸ் பேப்பர் கிடைக்கும் இல்லையா?
_______________________________________________________________________
மருத்துவர் : உங்கள் கணவருக்கு அமைதியும் நல்ல ஓய்வும் தேவை. நான் சில தூக்க மாத்திரைகளை எழுதி தருகிறேன்.
மனைவி : நான் அந்த மாத்திரைகளை எப்பொழுது அவருக்கு தர வேண்டும்?
மருத்துவர் : அந்த மாத்திரைகள் உங்களுக்கு......!
_______________________________________________________________________

06 December, 2010

இந்திய வழக்குரைஞர் பெருமன்றத்தின் நிபந்தனை தளர்வு !


சட்ட மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி !

அதாகப்பட்டது என்னவென்றால்..

அண்மையில் நமது இந்திய வழக்குரைஞர் பெருமன்றம் (Bar Council of India) சட்ட மாணவர்களுக்கு ஒரு சோதனை வைத்தது. அதன்படி சட்டகல்வியில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக 'வக்கீல் தொழில்' பார்க்க முடியாது. அவர்கள் அதற்கு முன்னதாக   'அனைத்திந்திய வழக்குரைஞர்  தேர்வு' (All India Bar Exam)  எழுத வேண்டும். அதிலும் தேர்ச்சி அடைந்த பிறகுதான் நீதிமன்றத்திற்கு சென்று சட்டத் தொழில் செய்ய முடியும்.

இப்போது இதில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய வழக்குரைஞர் பெருமன்றம் தனது நிபந்தனையை சற்றே தளர்த்திக் கொண்டுள்ளது. அதன்படி சட்டக் கல்வியில் தேர்ச்சி அடைத்த மாணவர்கள் இந்திய வழக்குரைஞர் பெருமன்றத்தின் தேர்வை எழுது முன்  மாநில வழக்குரைஞர்  பெருமன்றத்திடம்  (State Bar Council) ஒரு பொறுப்பேற்ப்பு கடிதத்தை கொடுத்து விட்டு சட்டத் தொழிலை தொடங்கலாம். நீதிமன்றத்திற்கு சென்று வாதாடலாம் என்பதே அது. இந்திய வழக்குரைஞர் பெருமன்றத்தின் தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தான் சட்டத் தொழில் ஆற்ற முடியும் என்ற நிபந்தனை இந்த அளவில் தளர்த்தப்பட்டுள்ளது. சட்டத் தொழில் செய்து கொண்டே இந்த தேர்வை எழுதி முடிக்கலாம். இவ்வாறு தொழிலற்ற செல்பவர்கள் வழக்குரைஞர்களுக்கான கருப்பு அங்கியை உடுத்திக் கொள்ளலாம்.

இத்தேர்வு நேற்று நடைபெறுவதாக இருந்தது. தற்போது இது அடுத்த ஆண்டு (2011) மார்ச் 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் கொடுத்த சட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி வழக்காட இந்திய வழக்குரைஞர் பெருமன்றம்  அனுமதி கொடுத்துள்ளது.

28 October, 2010

நட்பு எப்படி உடைகிறது ?


இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.

எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.

காலம் செல்லசெல்ல "நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்.. அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும்.

மேலும் சிறிது காலம்  செல்லும்போது  இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும். அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்.. பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.

இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது.

இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால், நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.

ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.

எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். 

நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்: 

1 . ஆனால் நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.

2 . மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.

3. நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.

4. ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்.

5. நண்பர் உதவவில்லையானால்  "அவருக்கு என்ன  சூழ்நிலையோ,  கஷ்டமோ  தெரியவில்லை ?" என்று நினைக்கப் பழகுங்கள். 

6. உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால்,  அதை  ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.

7. நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக  நில்லுங்கள். நல் ஆலோசனை நல்குங்கள்.

8 . நண்பர் தன் கஷ்டத்தை முதலில்  சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு  நன்று  அல்ல.

9 . அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.

10 . அவ்வாறே  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.

வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!

17 September, 2010

சுய மதிப்பீட்டுக்கு வழி

கடை வீதியில் இருக்கும் ஒரு பொதுத் தொலைபேசியில்  ஒரு  சிறுவன் நாணயம் போட்டு சில எங்களை சுழற்றினான். மறு முனையில் ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது. உடனே அவன் பேச ஆரம்பித்தான். இந்த உரையாடலை அருகில் இருந்த கடை உரிமையாளர் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

சிறுவன் : அம்மா, நான் உங்கள் வீட்டு புல்வெளியை (lawn) வெட்டி அழகு படுத்தும்  பணியை எனக்கு  கொடுப்பீர்களா?

பெண்மணி : அந்தப் பணியை செய்ய ஏற்கனவே ஒரு ஆளை வைத்து இருக்கிறேனே...

சிறுவன் : அம்மா, அந்த ஆளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியில் பாதியை மட்டும் எனக்கு கொடுத்தல் போதும். நான் நன்றாக புல்லை வெட்டி சீர் செய்து விடுவேன்..

பெண்மணி : இப்போது புல்லை வெட்டிக்கொண்டிருக்கும் ஆள் செய்யும் பணியில் எனக்கு முழு மன நிறைவு உள்ளது. எனவே எனக்கு இப்போது  வேறு ஆள் தேவையில்லை.

சிறுவன் : (கெஞ்சும் குரலில்) புல்லை வெட்டுவதுடன் நான் உங்கள் வீட்டு தரையையும் படிக்கட்டுகளையும் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கு நீங்கள் கூலி ஏதும் தரவேண்டாம்.

பெண்மணி : வேண்டாம் தம்பி. இங்கே ஏற்கனவே ஒரு நல்ல ஆள் இருக்கிறான்.

இதை கேட்டு  விட்டு முகத்தில் ஒரு மெல்லிய   புன்சிரிப்புடன்  அச்சிறுவன் தொலைபேசி இணைப்பை மெல்லமாக துண்டித்துக் கொண்டான்.

இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அச்சிறுவன் மீது பரிதாபப்பட்டு, "தம்பி உன் தொலைபேசி உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.  உன் அணுகுமுறையும் நேர்மறை சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உனக்கு என் கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், "வேண்டாம் அய்யா. உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.
ஆனால் அந்த கடைக்காரர் விடவில்லை. "தம்பி நீ வேலை வேண்டும் என்பதற்காக தொலைபேசியில் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாயே? " என்று அவர் கேட்டார்.

அதற்கு அச்சிறுவன், "உண்மைதான் அய்யா. ஆனால் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை எவ்வளவு நன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என்று பரிசோதனை செய்து கொண்டிருதேன்" என்றான்.

"நீ சொல்வது எனக்கு சரிவர விளங்கவில்லையே?" என்று அக்கடைக்காரர் சற்றே புருவத்தை உயர்த்தி வியப்புடன்  கேட்டார்.

அதற்கு அவன், "நான் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த  அந்தப் பெண்மணியிடம் ஏற்கனவே புல் வெட்டும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆளே நான்தான்" என்றான்.

இதுதான் "சுய மதிப்பீடு" என்பது.

கனவுக்கும் இலட்சியத்திற்கும் உள்ள வேறுபாடு யாதெனில் -
கனவு காண ஆழ்ந்த நித்திரை வேண்டும்!
ஆனால் இலட்சியத்தை அடைய நித்திரை இல்லாத முயற்சி வேண்டும்!!

வாழ்க.

29 August, 2010

லீகலும் லாஜிகலும்

ஒரு இளம் சட்ட மாணவர் தனது சட்டத் தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். எனவே முகம் வாட்டமடைந்து இருந்தார்.  எனினும் தனது விடைத் தாளை திருத்தி மதிப்பெண் இட்ட பேராசிரியரை 'கலாய்க்க' நினைத்தார். அவரது பேராசிரியர் சட்டத்தை கரைத்துக் குடித்து சட்ட அறிவுப் பிழம்பாக இருப்பவர்.

மாணவன் அவரிடம் சென்று, "அய்யா உங்களுக்கு சட்டத்தில் எல்லாம் தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லாவிட்டால் உங்களிடம் குப்பை கொட்ட முடியுமா?" என்று எகத்தாளமாக கேட்டார். இதனால் சற்று கடுப்படைந்த அம்மாணவர், "அப்படியானால் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு உங்களால் சரியான பதில் சொல்ல முடியுமா?" என்று சவால் விடும் பாணியில் கை கட்டை விரலை சொடுக்கு போட்டு கேட்டான்.

பேராசிரியரும் சளைக்காமல் "கேட்டுத்தான் பாரேன்" என்று பதிலுக்கு சொடுக்கு போட்டார். அம்மாணவர் கேள்வி கேட்பதற்கு முன் "நீங்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் என்னை நீங்கள் பாஸ் மார்க் போட்டு தேர்ச்சியடையச் செய்யவேண்டும்" என்று பேராசிரியருக்கு  ஒரு நிபந்தனை விதித்தான். இதற்கு பேராசிரியர் ஒப்புக்  கொண்டார்.

மாணவர் கேட்ட கேள்வி இதுதான்:

லீகலாக இருக்கும் ஆனால் அது லாஜிகலாக இருக்கக் கூடாது, லாஜிகலாக இருக்கும் அது லீகலாக இருக்கக் கூடாது, லீகலாகவும் லாஜிகலகவும் இருக்கக்  கூடாது   - அது எது? (What is legal but not logical, logical but not legal, and neither logical nor legal?)

65 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அப்பேராசிரியரின் முன் நெற்றி இந்த குழப்பமான கேள்வியால் சுருக்கமடைந்தது. அவரால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. எனவே தனது தோல்வியை ஒப்புக் கொண்டு அம்மாணவனுக்கு  "பாஸ் மார்க்" போட்டார். மாணவருக்கு மகிழ்ச்சி. 

ஆனால்  மாணவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்பேராசிரியருக்கு நெஞ்சை   நெருடிக் கொண்டிருந்தது. எனவே தனது வகுப்பில் இருக்கும் சில அதிபுத்திசாலி மாணவர்களிடம் நடந்ததை சொல்லி இந்தக் கேள்வியை  முன் வைத்தார். அவர்களும் தங்கள் மூளையை கசக்கிப்  பார்த்தார்கள். "ஹு..ஹு...ம்" சரியான பதில் தோன்றவில்லை.

இருப்பினும் பேராசிரியரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்த ஞானப் பழமான மாணவர் ஒருவர் முகத்தில் மட்டும்  40   வாட்ஸ் சி.எப்.எல். பல்ப் ஒளி  தெரிந்தது. அவர் உடனே எழுந்து நின்று தனக்கு அக்கேள்விக்கு விடை தெரியும் என்று ஏற்கனவே வெற்றி பெற்று விட்ட உற்சாகத்துடன் குரல் கொடுத்தார்.  அனைவரும் ஆவலாக அவரைப் பார்த்தனர்.

அவர் பின்வருமாறு பதில் சொன்னார்:-

"அய்யா, 65 வயதான நீங்கள் 32 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பது - லீகல்; ஆனால் லாஜிகல் அல்ல (legal but not logical).
32  வயதாகும் உங்க மனைவி 22 வயதாகும் உங்க மாணவரை காதலிப்பது - லாஜிகல்; ஆனால் லீகல் அல்ல (logical but not legal).
தேர்வில் தோல்வி அடைந்த அந்த மாணவருக்கு நீங்கள் பாஸ் மார்க் போட்டு இருப்பது - லீகலும்  அல்ல லாஜிகலும் அல்ல (neither logical nor legal)" என்றார்.

அடிமடியிலேயே கையை வைத்து விட்டானே என்று அப்பேராசிரியர் மீண்டும் தன் முன் நெற்றியை சுருக்கினார்.

இது எப்பிடிய்... ?


15 August, 2010

கொடிக்கு குடை

அனைவருக்கும் முதலில் என் சுதந்திர   தின  நல் வாழ்த்துகளை அன்புடன்  தெரிவித்துக்  கொள்கிறேன்.
இன்று அதிகாலை முதல் எங்கள் சேலம் மாவட்டத்தில் விடாது  மழை  கொட்டித் தீர்த்தது. எனவே எங்கள் சேலம் வழக்குரைஞர்கள்  சங்கத்தில் வழக்கம் போல் காலை 8  மணிக்கு தேசியக் கொடி ஏற்றுவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே கொடி ஏற்றிய பிறகு உண்ணும் காலை சிற்றுண்டியை (சூடான கேசரி, நெய் பொங்கல், வடை, பொடி  தோசை, இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி மற்றும் கொத்துமல்லி சட்னி, டிகிரி காபி சகிதம்) நான் உள்ளிட்ட வந்திருந்த வழக்குரைஞர்கள் அனைவரும் மெல்ல முடித்துக்கொண்டோம்.

பிறகு மணி சுமார் 8.40 அளவில் மழை சற்றே விட்டது. எனவே நமது தேசியக் கொடியை தயார் செய்து, அதை கொடிக்  கம்பத்தில் ஏற்றுவதற்கு ஏதுவாக மடித்து கம்பத்தில் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டி முடித்த பின் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. நமது தேசியக் கொடி நனையக்கூடாது என்பதற்காக  அதற்க்கு குடை பிடிக்கப்பட்டது.

பின் சுமார் 9.00 மணி அளவில் மழை நின்றது. அந்த நேரத்தை பயன்படுத்தி தேசியக்கொடியை நேற்று முன் தினம் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட எங்கள் சங்கத் தலைவர் திரு ஜி.பொன்னுசாமி ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளையும், செய்தியையும் கூறினார்.

அவர் தனது உரையில் "அந்நிய நாட்டு வழக்குரைஞர்கள் நமது இந்தியாவில் அலுவலகம் அமைத்து சட்டத் தொழிலற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அனுமதித்தால் நமது இந்திய வழக்குரைஞர்களின் தொழில் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும்" கூறினார். மேலும் ஒரு குறுந் தகவலையும் அவர் சொன் னார்.அதாவது "மனிதர்களுக்கும் பட்டாம்பூச்சிக்கும் மட்டுமே ஒரு சக்தி உண்டு என்றும், அது நிறங்களை கண்டறியும் சக்தி என்றும்" அவர் குறிப்பிட்டார்.

பிறகு சட்டதொழிலில் பொன் விழா கண்ட மூத்த வழக்குரைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இத்துடன் சுதந்திர தின விழா இனிதே நிறைவு பெற்றது.

இதில் சங்கத்தின் உப தலைவர்  வழக்குரைஞர் திரு எஸ்.டி.மணிவாசகம், செயலாளர் திரு விவேகானந்தன், பொருளாளர் திரு சுந்தரேஸ்வரன், துணை செயலாளர் திரு ஸ்ரீதர், நூலகர் திரு அருண் உள்ளிட்ட சங்க நிருவாகிகள் மற்றும் வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.  மழையின் காரணமாக வழக்குரைஞர்கள் கூட்டம் குறைவாகவே குழுமி இருந்தது. மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. இந்த பதிவை எழுதும் பொது காலை நேரம் 11.30. அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. 
 
சுதந்திரத்தை மழையும் கொண்டாடுகிறது போலும் !

11 August, 2010

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள் !

எங்கள் சேலம் மாநகரிலே ஆடிப் பண்டிகை வெகு சிறப்பாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. அதே போன்று எங்கள் சேலம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் பண்டிகையும் வந்து விட்டது. தேர்தலில் நிற்கும் வழக்குரைஞர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒவ்வொரு வழக்குரைஞர் அலுவலகத்திற்கும் சென்று ஓட்டு கேட்பது, என்னை தேர்ந்தெடுத்தால் நான் இன்னது செய்வேன், இன்னதை நடக்க விடாமல் தடுப்பேன் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அமர்களப்படுத்தினர். மாலையில் தேர்தல் வியூகம் வகுத்தல், திட்டமிடுதல் என உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

முடிவில் கடந்த வாரம் தேர்தல் தினமும் வந்தது. சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வழக்குரைஞர்கள் வரிசையாக நின்று ஓட்டு போட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் தலைவராக வழக்குரைஞரும் எனது நல்ல நண்பருமான திரு ஜி. பொன்னுசாமி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பெரு மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 

அடுத்ததாக செயலாளர் பதவிக்கு வழக்குரைஞர் திரு விவேகானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட மிக அதிக ஓட்டுகளை இவர் பெற்று இருந்தார். காரணம் சென்ற கால கட்டத்திலும் இவரே செயலாளர் பதவியில் இருந்தார். அப்போது வழக்குரைஞர்கள் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வந்தது. அச்சமயத்தில் இவர் அதை நல்ல முறையில் முன்னெடுத்து அரவணைத்து சென்றார். மேலும் சட்டத்தின் ஒரு துறையில் வல்லுனர்களாக இருப்பவர்களை சங்கத்திற்கு அழைத்து வந்து அத்துறை பற்றி விரிவுரை ஆற்ற செய்தார். மூத்த வழக்குரைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் பணியை பாங்குடன் செய்தார். வழக்குரைஞர்களுக்கான கூட்டு (விபத்து) காப்பீட்டு திட்டம், வருமான வரி அட்டைக்கு (பான் கார்டு) ஏற்பாடு செய்தார், சேலம் வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு என ஒரு வலைத்தளம் உருவாக்க ஆலோசனை சொல்லி அதை நிறைவேற்றினார் - இப்படி பல்வேறு நலப்பணிகளை செய்து நல்ல பெயர் ஈட்டுக் கொண்டார். அதுவே இவர் இந்த முறையும் வெற்றி பெற வழி வகுத்தது என்றால் அதில் மிகை ஒன்றும் இல்லை. வெற்றிச் செய்திக்குப் பிறகு இவரை "சட்டப் பார்வை"  வலைப்பதிவு  சார்பாக தொடர்பு கொண்டு பேட்டி எடுத்த போது, இவர் சொன்னது "விட்டுப் போன பணிகளை தொடர்ந்து நிறைவேற்றவே நான் மீண்டும் போட்டியிட்டேன். தற்போது வெற்றியும் பெற்றுள்ளேன். எனவே அப்பணிகளை நிறைவேற்ற முனைந்து பாடுபடுவேன்.. குறிப்பாக சேலம் வழக்குரைஞர்களுக்கு தனியறை (சேம்பர்) கட்டித் தருவதற்க்கான ஏற்பாடுகளுக்கு ஆவன செய்வேன்" என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வழக்குரைஞர் திரு சுந்தரேஸ்வரன் அமோக வெற்றி பெற்றார். தேர்தலில் ஜெயிக்க கடினமாக உழைத்தார். இவர் முன்பு எங்கள் சங்கத்தில் நூலகர் பதவியில் இருந்தார்.

துணைத்தலைவர் பதவிக்கு வழக்குரைஞர் திரு எஸ்.டி. மணிவாசகம், துணை செயலாளர் பதிவிக்கு வழக்குரைஞர் திரு ஸ்ரீதர் ஆகியோர் தேர்வானார்கள். நிருவாகக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எங்கள் அலுவலக இளம் வழக்குரைஞர் திரு சிங்காரவேலு அமோக வெற்றி பெற்றார்.

பெற்ற பதவியைக் கொண்டு உற்ற நற் பணிகளை ஆற்ற என் நல் வாழ்த்துகளை வெற்றி பெற்றோர் அனைவருக்கும் தெரிவித்தேன் !

சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நண்பர் திரு ஜி. பொன்னுசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் !

செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நண்பர் திரு விவேகாநந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள் !

பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நண்பர் திரு சுந்தரேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள் !


21 July, 2010

வரம் வேண்டும் வழக்குரைஞர் !

கஷ்டம் வருகிற போதுதான் கடவுளின் ஞாபகம் வரும் என்று வேதனை கலந்த வேடிக்கையுடன் சொல்வதுண்டு. அதற்காக கோவில் சென்று கடவுளிடம் நமது கஷ்டங்களை அப்பீல் செய்து, இனி 'எல்லாம் அவன் செயல்' என்று 'அவனிடம்' விட்டுவிடுகிறோம். எல்லோரையும் ஏதோ ஒரு கஷ்டம், துன்பம் மனதை வாட்டிக் கொண்டேதான் இருக்கிறது. 'அப்பாடா ... பிரச்சனை முடிந்தது' என்றும் 'இனி நன்றாக வாழலாம்' என்றும் நிம்மதி பெருமூச்சு விட நேரம் இருக்காது..... அதற்குள் இன்னொரு பிரச்சனை எழுந்து விடும்.

அறிஞன் ஒருவன் சொன்னான், "யாருக்கு நிறைய பிரச்சனை இருக்கிறதோ, அவன் உள்ளபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்" என்று. இது உண்மைதான். எனவே வாழ்ந்து கொண்டிருக்கிறவன் வாழ்வில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அதை லாவகமாக சமாளித்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் நாமாக பிரச்சனையை வலிய தேடிக் கொள்ளக் கூடாது.

பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் எது என்று கேட்டல், "சரியாக புரிந்து கொள்ளாமை" அல்லது "தவறாக புரிந்து கொள்ளல்" என்று சொல்லலாம். இது எப்படி என்று கேட்டல், நமது வாழ்வின் நிகழ்வுகளை, தொடர்புகளை, போக்குகளை "அரைகுறையாக புரிந்து கொள்ளல்" . எனவே எதையும் முழுமையாக புரிந்து கொள்ளும் முன் ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அது நிச்சயம் நம்மை பிரச்சனையில் கொண்டு சென்று விட்டு விடும். அதுவே நம்மை சார்ந்த, நம்மை நேசித்த, நம்மை நம்பிய, நமக்கு உதவிய மற்றொருவருக்கும் பிரச்சனையாக முடிந்து விடக் கூடும். சில சமயம் நாம் சரியாகப் புரிந்து கொண்டிருந்தும் நம்முடன் தொடர்பு கொண்டவர் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் அவர்   நமக்கு எதிராக தவறாக முடிவு எடுத்து விடும் அபாயமும் ஏற்பட்டு விடுவதுண்டு.

அதற்காகத்தான் சிந்தனை, ஆராய்ச்சி என்ற இரு கருவிகள் நமக்கு உற்ற துணையாக உள்ளன. அதன் முடிவு நல்ல முடிவாக அமைய ஆண்டவனின் அருளும் வேண்டும். அந்த அருளைப் பெற, கஷ்டம் வருவதற்கு முன்பாகவே அவருக்கு "சல்யுட்" அடித்து விடுவது நல்லது. அப்படி அடித்து பாருங்கள்.... ! வரவிருக்கும் கஷ்டம் கூட வழியிலேயே காணமல் போய் விடும்.

இங்கு நான் கூறும் கடவுள் அவரவர்  மதத்தின்படி வணக்கும் கடவுள். வேறு வகையில் சொன்னால் நமக்கும் மேலே ஒரு சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் நம்பினால், அதுவே கடவுள்.

அண்மையில் நானும் எனது நண்பர் வழக்குரைஞர் திரு இரா.  மோகனமுரளி அவர்களும் ஒரு ரம்யமான காலைப் பொழுதில் சேலத்தில் சீலநாய்க்கன்பட்டி புறவழி சாலைக்கு அருகே ஒரு குன்று மீது அழகாக நின்று அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு பாலமுருகன் கோவிலுக்கு சென்றோம். கூட்டம் அதிகமில்லை. கந்தர் சஷ்டி கவசம் மெல்லிய ஒலியில் பக்தி மணம் பரப்பிக் கொண்டிருந்தது. விபூதி வாசனை முருகனின் பெருமையை எடுத்துச் சொன்னது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். வழக்குரைகளின் வாழ்வில் அவர்களை மற்றவர்கள் எளிதாக தவறாக புரிந்து கொண்டு விடுவதுண்டு. குறை கண்டுபிடிப்பதும், குறை சொல்வதும் வழக்குரைஞர்களின் வாழ்வோடு ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். அதே போல மற்றவர்களால் குறை சொல்லப்படுவதற்கும் ஆளாவோம். வழக்குரைஞர்கள் தங்கள் சட்டத் தொழிலையையும், வாழ்வையும் பிரித்து பார்க்கத் தெரியாதவர்களாக இருந்தால், இன்னும் சிக்கல்.

எனவே தோன்றிய   குறைகள் மறையவும், குறைகள் ஏதும் வராமலிருக்கவும்  மனமுருக 'முருகா ... முருகா..' என்று வேண்டி வணங்கினோம். ஆனால் எந்தக் குறையை எந்த சட்டப் பிரிவின் கீழ் மனு செய்வது என்று சட்டென தெரியவில்லை. எனவே லார்ட் முருகன் தனது உள்ளார்ந்த அதிகாரங்களை (Inherent Powers) செலுத்தி தக்க பரிகாரம் வழங்க உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 151 -இன் கீழ் மனு (Petition under section 151 CPC) செய்வதைப் போல பொதுவாக மனு செய்தோம்.

வரம்  தரும் தேவதைகள் தவறாக ஏதும் செயல்பட்டு துஷ்டத்தனம் செய்தால், அதை கண்காணித்து சீர் செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுபு 227 - இன் (Article 227) கீழ் மனு செய்வதைப் போல முன்னதாகவே ஒரு வணக்கம் வைத்தோம். எவ்வித எதேச்சதிகரத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஆர்டிகிள் 226 -இன் கீழும் சில கோரிக்கைகளை வைத்து பெரும் வரங்களை (Writs) பெற்றோம். ஆனால் ஆர்டிகிள் 32 உச்ச நீதிமன்றத்திற்கு உரியது (அதாவது லார்ட் முருகனின் அப்பா சிவபெருமான் கோவில்) என்பதால் இங்கு அதன்படி மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை. அவசர கால நிவாரணங்களுக்கு கூடவே ஒரு எமர்ஜன்ட் பெடிசனையும் (முருகனின் பெயரில் அர்ச்சனை) தாக்கல் செய்தோம். உரிய நீதிமன்ற கட்டணம் செலுத்தி விட்டோம் (அர்ச்சனை தட்டில் மற்றும் உண்டியலில் காசு). எல்லா பரிகாரங்களையும் பெற்று (Petition allowed... Decreed as prayed for with costs... ) மனநிறைவுடன் அலுவலகம் திரும்பினோம்.

குன்றின் மீது அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் கோவில்
(Lord Balamurugan Temple, Salem)

நெருக்கடி மிக்க சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை
(குன்றின் மீது இருந்து எடுத்த படம்)

பாலமுருகன் கோவில் அமைந்துள்ள குன்றுக்கு வரும் மலைப்பாதை

குன்றின் மீதிருந்து  பார்க்கும் போது குட்டியாக தெரியும் பெரிய கட்டடங்கள்

முருகனின் அருளும் வரமும் பெற்ற நிலையில் நானும் (இடது) நண்பர் வழக்குரைஞர்  திரு இரா.மோகனமுரளியும் (வலது)

என் வீட்டு குட்டி  பாலமுருகன் (என் மகன்)

17 July, 2010

100 சதவீதத்திற்கு மேல் பெற முடியுமா?

100 சதவீதம் என்பதே ஒரு முழுமையான, நிறைவான நிலையை குறிப்பதாகும். அதற்கும் மேல் ஒரு சதவீதம் அதிகம் என்றாலும் (அதாவது 101 சதவீதம் என்று வைத்துக் கொள்வேமே) அது நிச்சயம் 100 சதவீதம் என்பது உறுதி என்ற நிலையை காட்டுவதாகும்.

நாம் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ள தயங்கும் போது அவர் "சார்.. நீங்க கொஞ்சம் கூட என் மேல சந்தேகப்பட வேண்டியதில்லை.. என்னை நீங்க 100 பெர்சென்ட் நம்பலாம்.. அதுக்கு மேல கூட நம்பலாம்" என்று அடித்துப் பேசுவதை நாம் பல சமயங்களில் கேட்டுள்ளோம்.

இன்னும் சில சூழல்களில் "நான் சொல்றது 101 பெர்சென்ட் உண்மை சார்" என்று ஆணித்தரமாக பலர் சொல்வதையும் நாம் கேட்டிருப்போம்.

சோகத்தை தவிர நமக்கு எதுவும் 101 சதவீதம் கிடைத்தால் அது மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்? அப்படி ஒரு விடயத்தில் 100 சதவீதத்திற்கும் மேல் 101 சதவீதம் வெற்றி பெறுவது, மகிழ்ச்சியடைவது, நிறைவடைவது எப்படி என்பதற்கு ஒரு சூத்திரம் உள்ளது. அதைப் பார்ப்போமா?

இப்போது A B C D ..... என்ற ஆங்கில எழுத்துகளை எடுத்துக்கொண்டு அதற்கு முறையே பின்வருமாறு வரிசையாக எண்கள் கொடுப்போம்.

A B C D E F G H I J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z

இதற்கான எண்கள் வருமாறு

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

இப்போது பின்வரும் ஆங்கில பதங்களுக்கான எண்கள் வருமாறு..

H-A-R-D-W-O- R- K (கடின உழைப்பு)
8+1+18+4+23+ 15+18+11 = 98%

அத்துடன் சேர்க்க

K-N-O-W-L-E- D-G-E (அறிவு)
11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

எனினும் பின்வருவது வேண்டும்

A-T-T-I-T-U- D-E (மனப்பான்மை)
1+20+20+9+20+ 21+4+5 = 100%

கடின உழைப்பும் அறிவும் 100 சதவீதத்திற்கு அருகே நம்மை கொண்டு செல்கிறது. எனினும் நல்ல மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் நிச்சயம் 100 சதவீதம் உறுதி. அது சரி .. 101 சதவீதம்  பெறுவது எப்படி என்பதை நீங்கள் இன்னும் சொல்லவே இல்லையே, என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது மிகவும் எளிது. அதாவது இந்த மூன்றையும் நாம் கைக்கொண்டால் நமக்கு கடவுளின் அன்பும், அனுகிரகமும் நிச்சயம் கிடைக்கும். இப்போது 'கடவுளின் அன்பு' (God of Love) என்பதற்கு எண்கள் போட்டுப் பார்ப்போமா?

L-O-V-E-O-F- G-O-D
12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

இப்போது 101 சதவீதம் வந்து விட்டதா? எனவே நம் எல்லோருடைய வாழ்விலும் 101 சதவீதம் பெறுதல் மிக அவசியம். அதற்கு கடின உழைப்பு, அறிவு, இது மட்டுமில்லாமல் மனப்பான்மை (அதாவது உண்மையுடன் இருத்தல், நேர்மையாக செயல்படல், நம்பிக்கையை மீறாதிருத்தல் போன்ற நல்ல மன நிலைகளும், சிந்தனை போக்குகளும்) ஆகியன இருந்தால் கடவுளின் அன்புக்கு தானாக பாத்திரமாவோம். கடவுளின் அன்பு கிடைத்து விட்டால் சோதனைகளும், வேதனைகளும் சாதனைகள் தானே?

சிந்தனைக்கு இன்னும் சில வேடிக்கையான கணக்கு விளையாட்டுகளையும் கவனிப்போம்.

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

இவை மட்டும்தானா? இன்னொரு பெருக்கலையும் கவனியுங்கள்.

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

எப்படி நன்றாக இருந்ததா? வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த கணித விளையாட்டை காண்பிக்கவும்.  

வாழ்த்துகள்  !

13 July, 2010

"என்னா.. பண்ணான் இவன்..?" - வலைப்பதிவாளர்களுக்கு போட்டி

"என்னா.. பண்ணான் இவன்..?"

இது ஒரு அருமையான தலைப்பு.

இப்போது வலைப்பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு போட்டி வைக்கப் போகின்றேன்.

"என்னா..... பண்ணான் இவன்..?" என்ற மேற்படி தலைப்பிற்கு பொருத்தமாக உங்கள் சிந்தனைகளை சிறகடித்து பறக்க விடுங்கள். அவை கவிதையாக இருக்கலாம்.குட்டிக் கதையாக இருக்கலாம். இல்லை அனுபவப் பகிர்வாக இருக்கலாம். உங்கள் சிந்தனைகளை விமர்சனப் பெட்டியில் இடுங்கள்.

சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் சிந்தனையின் சொந்தக்காரருக்கு "வலைப்பதிவு வல்லவர், 2010 " என்ற விருது வழங்கப்படும்.
 
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
சட்டப்பார்வை.

12 July, 2010

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க ! இது என்னுடைய 50-வது பதிவு !!

இந்தியாவில் விரைவில் வணிக நீதிமன்றங்கள் !

மைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் விரைவில் வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படவிருக்கின்றன என்றும், இதற்கான சட்ட முன்வடிவை வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சட்டமாக்க உத்தேசிக்கப்பட்ட சட்ட முன்வடிவில் ரூபாய் 5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வணிக நடவடிக்கைளுக்கு தனியாக  வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப்பட்டுள்ளது. இதனால் கீழமை  நீதிமன்றங்களின் பணிப்பளு, வழக்குகளின் தேக்க நிலை அப்படியேதான் இருக்கும். அதை கீழமை உரிமையியல்  நீதிமன்றங்களில் உள்ள வணிக வழக்குகளுக்கும் பொருந்தும் வண்ணம் செய்ய வேண்டும். இதற்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். அப்படி கீழமை  நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் வண்ணம் செய்து விட்டால் நிறைய பலன்கள் விளையும்.

இந்தியாவில் வணிக நீதிமன்றங்கள் கீழமை நீதிமன்ற பண வரம்பு அளவில் அமைக்கப் பெற்றால் அது வழக்கமான உரிமையியல் நீதிமன்றங்களின் பணிப்பளுவை வெகுவாகக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உரிமையியல் நீதிமன்றங்களில் முக்கியமாக இரண்டு வகையான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒன்று, சொத்து குறித்து எழும் வழக்குகள். மற்றொன்று பணம் வசூலித்தல் தொடர்பான வழக்குகள். அதாவது கடனுறுதி சீட்டின் உள்ளிட்ட மாற்று முறையாவணங்களின் அடிப்படையில் கொடுத்த கடனை வசூலிக்க தொடரப்படும் வழக்குகள் இன்றைய உரிமையியல் நீதிமன்றங்களின் கோப்புகளை பெரிதும் ஆக்கரமித்து உள்ளன. மேலும் மேலும் வணிக நடவடிக்கைளில் எழும் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் பாக்கி நிற்கும் தொகைகளை வசூலிக்கவும், மேலும் வணிக நடவடிக்கை தொடர்பாக உறுத்துக் கட்டளை கோரும் வழக்குகள், கூட்டாண்மை தொடர்பான வழக்குகள், வணிக நடவடிக்கையில் இழப்பீடு கோரும் வழக்குகள் ஆகிய வணிக வழக்குகளும் உரிமையியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.

தற்போது சட்ட அமைச்சர் மொய்லி தனது அறிக்கையில் சொன்னவாறு வணிக நீதிமன்றங்கள் அமிக்கபட்டும், அதற்க்கு கீழமை நீதிமன்ற பணவரம்பு பொருந்தும் வண்ணமும் செய்தால்,  உரிமையியல் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வணிக வழக்குகள் வணிக நீதிமன்றங்களுக்கு மாற்றப்படலாம். வணிக நடவடிக்கை சார்ந்த புதிய வழக்குகள் இந்நீதிமன்றகளில் தாக்கல் செய்ய வழிவகை பிறக்கும். இதனால் உரிமையியல் நீதிமன்றங்களில் தேக்கியுள்ள வழக்குகள் பாதியாக குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. அந்நீதிமன்றங்கள் பாகப்பிரிவினை, உறுத்துக் கட்டளை, குறித்த வகை நிவாரணம் போன்ற பிற தனி உரிமை வழக்குகளில் கவனம் செலுத்தி தீர்ப்பு வழங்கலாம். வழக்குகளும் விரைவில் தீர்வு காணப்படும்.

எனவே இவ்வாறு வணிக நீதிமன்றகள் அமைப்பது வரவேற்ப்புக்குரிய விடயம்தான் என்றாலும், அதை கிணற்றில் போட்ட கல்லாக்கி விடக்கூடாது. ஏனென்றால், காசோலை மோசடி தொடர்பான வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் அமைப்பது என முன்பு ஒரு முறை முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. அவ்வாறு கொண்டு வந்து இருந்தால், குற்றவியல் நீதிமன்றங்கள் சற்றே நிம்மதிப் பெரு மூச்சு விட்டு இருக்கும். அங்கு காசோலை மோசடி வழக்காடிகளின் கூட்டம் குறைந்திருக்கும். குற்றவியல் நீதிமன்றங்கள் தூய குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்தி வழக்குகளை விரைவில் முடித்து இருக்கலாம். எனவே வணிக நீதிமன்றங்களை ஏட்டளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் கொண்டு வர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயல வேண்டும்.

மொய்லியின் அறிக்கையில் உள்ள மற்றொரு முக்கிய விடயம் :

சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியின் அறிக்கையில் மற்றொரு வரவேற்கத்தக்க அம்சமும் உள்ளது. அது சட்டக் கல்வி தொடர்பானது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் 933 சட்டக் கல்லூரிகள் உள்ளன. சட்டக் கல்லூரிகளின் பாடத் திட்டங்களை மேம்படுத்தவும், சட்டக்கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும் முன்னரிமை வழங்கப்படும். ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குரைஞர்கள் உள்ள இந்தியாவில் சட்டக் கல்வி முறை மாற்றியமைக்கப்படும். அவற்றின் திறனை அதிகரிப்பதுடன், குறைந்தபட்சம் மாநிலத்திற்கு ஒன்று வீதம் தேசிய அளவிலான சட்டக் கல்வி நிறுவனங்கள் (லா ஸ்கூல்) அதிகரிக்கப்படும்."

நமது தமிழகத்தில் தேசிய சட்டக் கல்வி நிறுவனம் இல்லை. ஆனால் அதற்கு இணையாக முனைவர் அம்பேத்கர் சீர்மிகு சட்டப் பள்ளி சென்னையில் இயங்கி வருகிறது. இது கூட இல்லாமல் எத்தனையோ மாநிலங்கள் நமது இந்தியாவில் உள்ளன. எனவே மாநிலந்தோறும் ஒரு தேசிய சட்டப் பள்ளியை அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
 

இது என்னுடைய 50-வது பதிவு:

வலைப்பதிவில் எழுதத்தொடங்கி மெல்லமெல்ல இன்று 50-வது பதிவை எட்டிவிட்டேன். அதற்கு உங்கள் தோழமையும், ஆதரவும், பின்னூட்டங்களும், ஓட்டுகளும்தான் காரணம் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உங்களிடம் நிறைய பகிர்ந்து கொண்டு உள்ளேன். சட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு தொடர்பாக எனக்கு தெரிந்ததை, அறிந்ததை நான் இந்த வலைப்பதிவு மூலம் உங்களிடம் சொல்லி உள்ளேன். இன்னும் சொல்லப் போகின்றேன். மானுடம் எடுத்தது தேவைப்படுவோருக்கு தெரிந்ததை அறிந்து, இருப்பதை கொண்டு உதவி செய்வது என்று நான் நம்புகிறேன். ஒரு பதிவை எழுத குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகிறது. இந்த வலைப்பதிவில் எழுதுவதால் எனக்கு வருமானம் ஏதும் இல்லை. ஆனால் யாருக்கேனும் பயனாகும், யாருடைய கருத்தையாவது கவரும், யாரையேனும் சிந்தக்கத் தூண்டும், அறிவிக்கச் செய்யும், மகிழ்விக்கச் செய்யும் என்ற உளப்பூர்வமான உவகை உணர்வுடன் எழுதி வருகின்றேன். என்னுடைய எழுத்தில் வலிமையும், பலிதமும் கூட, இப்பணி மேலும் சிறப்புடன் தொடர உங்கள் வாழ்த்துகளை வேண்டி நிற்கின்றேன்.

08 July, 2010

மாவட்ட நீதிபதி தேர்வு எழுதுவோரின் கனிவான கவனத்திற்கு...


மாவட்ட நீதிபதி தேர்வு:

மாவட்ட நீதிபதி பதவிக்கு (புகு நிலை) தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தேர்வு வைத்துள்ளது. மொத்தம் 17 இடங்கள். அவற்றில் 5 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் வழக்குரைஞராக சட்டத் தொழில் புரிந்து வருபவர்கள் இதற்க்கான தேர்வை எழுதலாம். இதை சென்னை உயர் நீதிமன்றம் நடத்துகிறது. எழுத்துத் தேர்வும் வாய்மொழித் தேர்வும் (நேர்காணல்) நடத்தப்படும். இதற்கான விண்ணப்பப்படிவ மாதிரியை அண்மையில் தமிழக அரசு எல்லா செய்தித் தாள்களிலும் விளம்பரப்படுத்தியுள்ளது.

மேலும் http://www.tn.gov.in/departments/public/DJ_Advt_Notification_160710.pdf  என்ற வலைதளத்திலும் காணலாம்.


முக்கிய நாட்கள்:

விண்ணப்பப்படிவதுடன் சட்டத் தொழில் அனுப சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்கள் சென்று சேர வேண்டிய இறுதி நாள் : 16-07-2010. தேர்வு நடக்கும் நாள் : 01-08-2010. சென்னையில் தேர்வு நடத்தப்படும். தேர்வு இடம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கட்டணம் ரூபாய் 250/-. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Secretary to Government of Tamil Nadu, Pubilc (Special A) Department, Secretariat, Chennai 600 009.

சம்பளம்:

Rs. 16750-400-19150-450-20500 (Pre revised scale)

வயது வரம்பு:

45 வயதை நிறைவு செய்து இருக்கக் கூடாது. SC/ST-க்கு 48 வயது. (01-07-2010 அன்று)


தேர்வுகள் :
 
3 மணி நேர கால அளவு கொண்ட தேர்வு நடத்தப்படுகிறது. அதில்

Law Paper - I (Civil)
Law Paper - II (Criminal)
Law Paper - III (General)

என்ற 3 பகுதிகள் உள்ளன. மேற்கண்ட ஒவ்வொரு பகுதிக்கும் தலா 25 மதிப்பெண்கள். மொத்தம் 75 மதிப்பெண்கள். மீதமிருக்கும் 25 மதிப்பெண்கள் வாய்மொழி தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் எந்த வடிவில் இருக்கலாம்? எப்படி கேள்விகள் வரலாம்?

வினாத்தாள் எந்த வடிவில் இருக்கலாம் என்பதற்கு எந்த மாதிரியையும் தமிழக அரசோ, சென்னை உயர் நீதிமன்றமோ தெரிவிக்கவில்லை. எனினும் ஊகிக்க முடிந்தது என்னவென்றால்,-

1 . ஒவ்வொரு பகுதிக்கும் 25 மதிப்பெண்கள் மட்டுமே என்பதால் 25 வினாக்கள் கேட்டு அதற்கு 3 வரிகளில் விடையளித்தால் தலா ஒரு மதிப்பெண் கொடுக்கப்படலாம். அல்லது 5 வினாக்கள் கேட்டு அதற்கு தலா 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படலாம்.

2 . Law Paper I - இது உரிமையியல் சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் உரிமையியல் நடைமுறை சட்டம், கால வரையறை சட்டம், சொத்துரிமை மாற்றுச் சட்டம், வசதியுரிமை சட்டம், குறித்த வகை நிவாரண சட்டம், நீதிமன்ற முத்திரை மற்றும் வழக்கு மதிப்பீடு சட்டம், உரிமையியல் நீதிமன்ற நடைமுறை விதிகள் போன்ற உரிமையியல் வழக்கு தொடர்பான சட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

3. Law Paper II - இது குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இதர குற்றவியல் சட்டங்களிலிருந்து (Minor Criminal Acts) கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

4. Law Paper III - இது பொதுவான சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் இதில் இந்திய அரசியலைமைப்பு சட்டம், வாதுரை சட்டம், இசைவுத் தீர்ப்பு மற்றும் சமரச முறை சட்டம், மனித உரிமை பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போன்ற பொதுவான சட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

5. விடையில் சரியான சட்டப் பிரிவை குறிப்பிட்டு எழுதுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தருவதாக அமையும்.

6 . பிரச்சனைகள் வடிவிலும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு.

7. வாய்மொழித் தேர்வானது, கேள்வி கேட்பதற்காக அமரும் நீதியரசரின் சிந்தனையை பொருத்தது.

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்திருக்கும் இந்தத் தேர்வை நன்முறையில் எழுதி, வாய்மொழித் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துகள்!

07 July, 2010

அவள் குழந்தைகளை செய்கிறாள் !


இந்த நிழற்படங்களை பார்த்தால் எனக்கு ஏற்பட்ட வியப்பை போலவே உங்களுக்கும் ஏற்படக்கூடும் !
தத்ரூபமாக உள்ள இந்த பிஞ்சுக் குழந்தைகள் Marzipan-இல் செய்யப்பட்டது. அதென்ன Marizipan என்று கேட்கிறீர்களா? Marchpane என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததே Marzipan ஆகும். இது தின்பதற்குரிய ஒரு பண்டம். அதாவது வாதுமைக் கொட்டையும் (Almond) வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம். வாதுமைக் கோட்டை வெல்லமிட்டைமைத்த மாவு என்று சொல்லலாம். சுருங்கச் சொன்னால் 'வாதுமை பண்ணியம்' (நன்றி : ஆங்கில - தமிழ் அகராதி, டாக்டர் ஆ. சிதம்பரநாதச் செட்டியார், சென்னை பல்கலைக்கழகம், பக்கம் 619).

மேற்கண்ட படத்தில் உள்ள அம்மையார் இந்த வாதுமைப் பண்ணியதுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து இந்தக் குழந்தைகளை உருவாக்கி உள்ளார். (குழந்தைக்கு கரு வேண்டும் என்பதால் வெள்ளைக் கருவை சேர்த்து விட்டார் போலும்). ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு வேண்டிய அனைத்து அடையாளங்களும், முக பாவத்துடன் இந்த பொம்மையில் உள்ளன. அவ்வளவு அழகாக உள்ளன. 

உண்மைக் குழந்தையாக தெரியும் இந்த பொம்மைக் குழந்தைகளை உருவாக்கிய கலையார்வம் கொண்ட அத்தாயுள்ளத்திற்கு அனைவரும் ஒரு 'O' போடுவோம்.

03 July, 2010

அசைவம் இருக்கு.. குடிக்கிறிய லே ?

பின் மதிய கடற்கரையோர வெயில் கார் கண்ணாடியை ஊடுருவி கன்னத்தை சுட்டது. கன்னியாகுமரி - மதுரை நாற்கர சாலை 120 கிலோ மீட்டர் வேகத்தில் பின்னோக்கி வழுக்கிக் கொண்டு சென்றது. ஆங்காங்கே இன்னும் ஆட்கள் சாலை செப்பணிகளை செய்து கொண்டிருந்தனர். மரங்களுக்கு பதிலாக விண்ட்மீல் எனப்படும் காற்றாலைகள் திரும்பிய பக்கம் எல்லாம் ரட்சததனமாக சுற்றிக் கொண்டிருந்தன. கன்னியாகுமரியில் கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது. எனவே அப்போது பசி தெரியவில்லை. ஆனால் கன்னியாகுமரியை விட்டு கிளம்பத் தயாராகி காரில் ஏறி அமர்ந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தவுடன் வயிறு என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. 'அய்யா... எனக்கு ஏதாச்சும் தருமம் பண்ணுங்க சாமி...' என்று வயிறு மூளையிடம் கெஞ்சுவதை உணர முடிந்தது. எனவே அன்னமிட உணவகம் ஏதும் தென்படுகிறதா என்று கண்கள் நாலாபக்கமும் அலை பாய்ந்தன. ஊருக்கு வெளியே நாற்கர சாலை பாய்ந்து செல்வதால் எந்த மகாராசனும் அன்ன சத்திரம் ஏதும் கட்டி வைத்திருக்கவில்லை. ...

என்ன பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வரிகளைப் போல் உள்ளதா?

அது ஒன்னுமில்லிங்க... போன வாரம் கோவையிலே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. தொடக்க விழா உள்ளிட்ட முதல் மூன்று நாட்கள் நிகழ்சிகளை கம்பிவடத் தொலைகாட்சியில் பார்த்தேன். கோவைக்குப் போய் கூட்டத்திலே அலைமோதி நேரில் பார்ப்பதை விட இப்படி பார்ப்பது ரொம்ப வசதியா இருந்தது. இன்னும் இரண்டு நாள் விடுமுறை இருந்தது. சரி... கன்னியாகுமரி வரைக்கும் போயிட்டு வரலாம் என்று காரை கிளப்பினேன். அப்படியே தமிழுக்கு வித்தான திரு வள்ளுவர் சிலையையும் பார்த்துவிட்டு வருவது இந்த நேரத்திற்கு பொருத்தமாக இருக்கும்னு கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். குழந்தைகளை கூட்டிகிட்டு கிளம்பிவிட்டேன்.

கடலோர விடுதியில் அறை எடுத்து தங்கினோம். அறையிலிருந்தபடியே காலை 6.24-க்கு சூரிய உதயம் பார்த்தோம். காலை குமரியம்மன் தரிசனம். சிற்றுண்டி முடித்து விவேகானந்தர் பாறைக்கு சென்றோம். அப்படியே அய்யன் வள்ளுவர் சிலைக்கும் சென்று வந்தோம். இப்போதான் முதல் தடவையா அந்த இடத்திற்கு போறேன். முன்பு ஒரு முறை போன போது வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த முறை அங்கு படகு போனது.

பிரமாண்டமாக வள்ளுவர் நிற்கிறார். அன்னாந்து பார்த்தால் மேகக் கூட்டங்களின் பின்னணியில் வள்ளுவர் நம் மீது சாய்ந்து விழுந்து விடுவரோ என்று ஒரு பிரமை ஏற்பட்டது. நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

காலை சிற்றுண்டியை தாமதமாக சாப்பிட்டதாலும், பார்த்த காட்சிகளை மனது அசை போட்டுக் கொண்டு இருந்ததாலும் அப்போது பசி தெரியவில்லை. எனவே அறையை காலி செய்து விட்டு மதியம் சுமார் 2.30 மணி அளவில் மதுரை வழியாக சேலம் கிளம்பினோம். இப்போது முதல் பத்தியை மீண்டும் வாசிக்கவும்.

நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்த போது அச்சாலையோரம் ஒருவர் தனது மிதி வண்டியில் கூடை ஒன்றை வைத்துக் கொண்டு அருகில் நுங்கு காய்களை கொட்டி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். பசி நேரத்தில் ஆபத்பாந்தவனாக அவர் தெரிந்தார். எனவே உடனே காரை படக்கென நிறுத்தி நுங்கு திங்க எல்லோரும் இறங்கினோம். அவர் ஒரு நுங்கு காயை எடுத்து மளமளவென கூரான அரிவாளால் சீவினார். எங்கள் கைகளில் பனைமர ஓலை ஒன்றை கோப்பை வடிவில் மடக்கி கொடுத்தார். பின் நுங்கு காயின் மூன்று கண்களில் இருந்த நுங்கை அரிவாளின் முனை கொண்டு சுரண்டி எடுத்து அந்த பனை ஓலையில் கொதகொதவென போட்டார். அடுத்து கூடையில் துணி சுற்றி வைத்திருந்த பானையில் இருந்து நீராக இருந்த ஒரு திரவத்தை ஊற்றினார். பிறகு ஒரு புன்முறுவலுடன் "இது பதனி லே.. இளசான நுங்கொட குடிச்சு பாரும்... அம்ம்புட்டு ருசியா இருக்குமில்லா .. " என்று எல்லோருக்கும் ஒரு டம்ளர் உற்றினார். சொன்னது போல ருசியாகத்தான் இருந்தது. நுங்கு 10 ரூபா. ஒரு டம்ளர் பதநீர் 10 ரூபா. பசி சற்றே தணிந்தது போல் இருந்தது.

பணம் கொடுத்த போது நுங்கு கடைக்காரர் அருகில் வந்து லேசாக காதில் குசுகுசுவென "அசைவம் இருக்குலே.. ஒரு டம்ளர் ஊத்தட்டுமா லே..." என்றார். நானும், "அதேன்னேலே அசைவம்?"... என்று கேட்டேன். அதற்கு அவர், "அட... இது கூட தெரியாதா? அசைம்ன்னா கள்ளுலே கள்ளு.." என்றார்.

"ஏலே... ஆளை விடு லே..." என்றவாறு காரை நோக்கி வேகமாக நடையை கட்டினேன்.

காலை சூரிய உதயம்
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

விவேகானந்தர்  பாறை
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

அய்யன் வள்ளுவர் சிலை
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

விவேகானந்தர் மண்டபத்திற்கு முன்பு என் மகன்

நான்...
(விரைவில் வள்ளுவராகும் அறிகுறிகள் தென்படுகிறதா?)

வள்ளுவர் சிலையை அடைந்தோம்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில் நான் வள்ளுவரின் காலை தொட்டு வணங்குகிறேன்  ..

வள்ளுவரின் காலடியில் என் மகன் வாஞ்சையுடன்..

கடல் காற்று ஆளைத் தள்ளுகிறது..

வள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை...   

02 July, 2010

எப்படியெல்லாம் ஆபத்து வருகிறது பார்த்தீர்களா ?

அண்மையில் ஒரு  செய்தியை வாசிக்க நேர்ந்தது.  ஒருவர் தனது மடிக்கணனியில் (லேப்டாப்) பணிகளை முடித்து விட்டு, இன்னும் விடுபட்டுப் போன பணிகளை செய்து முடிப்பதற்காக அதை அவர் தனது படுக்கை அறைக்கு எடுத்து செல்கிறார்.  அங்கு தனது மெத்தையின் மீது அம்மடிக் கனணியை வைத்துக் கொண்டு சில வேலைகளை செய்கிறார். தனக்கு வந்த மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கிறார். இரவு நேரம் என்பதால் தூக்கம் அவர் கண்களை தழுவியது.  அப்படியே தூங்கிப் போனார்.

அதிகாலை வேளையில் அவரது அறையில் இருந்து தீயும், புகையும் வெளியாவதைக் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரது அறையின் கதவை உடைத்து உள்   சென்றனர்.

அங்கு அவர் தீயில் கருகி இறந்து போயிருந்தார். காவல் துறை வந்து தீக்கான காரணத்தை ஆராய்ந்தது. எப்படி தீ பிடித்தது என்பது புரியாத  மர்மமாக இருந்தது. இது சில நாட்கள் நீடித்தது. பின் மெத்தையின் மீது வைக்கபட்டிருந்த மடிக் கனணி, மெத்தை ஆகியன நன்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவை அறையில் இருந்த மற்ற பொருட்களை காட்டிலும்  முற்றிலும் தீயால்  நாசமாகி இருந்தன. முடிவில் காவல் துறையின் புலனாய்வு முடிவு இவ்வாறு இருந்தது. அதாவது,-

தீயில் இறந்து போனவர்   மடிக்  கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பணியாற்றி இருக்கிறார். மடிக் கனணி மெத்தையில் நன்கு பொதிந்து விட்டிருந்தது. இதனால் மடிக் கணனியின் அடிபகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய விசிறிக்கு வெளிக் காற்று கிடைக்கவில்லை. மடிக் கனணி இயங்கும் போது உருவாகும் வெப்பம்/சூடு வெளி செல்ல வாய்ப்பில்லாமல் அது மென்மேலும் சூடாகியது. மடிக் கணணி சூடானால் சரியாக வேலை செய்யாது. அதன் இயக்கம் தடைபடும். இதனால் ஏற்பட்ட களைப்பால் அவர் அப்படியே தூங்கிப் போனார். சிறிது நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக அவரது பஞ்சு மெத்தை கருக ஆரம்பித்து தீப்பிடித்து, அது அருகில் படுத்திருந்த அவரையும் பற்றிக் கொண்டது.

எனவே மடிக் கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு பணி புரிய வேண்டாம். அது மடிக்கனணிக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லதல்ல.

இப்பதிவை நீங்கள் நேசிக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லவும்.

01 July, 2010

பாங்காக்கில் உள்ள Forum Asia அமைப்பு

Forum Asia - இது மனித உரிமை மற்றும் அதன் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் ஓர் பெரும் அமைப்பாகும். இதன் அலுவலகம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ளது.

எனது தாய்லாந்து சுற்றுப்பயணம் ஒரு சுற்றுலாவாக இருந்தாலும், ஆசியப் புகழ் பெற்ற இந்த Forum Asia அமைப்பை கண்டு வரும் வாய்ப்பையும் உள்ளடகியதாக இருந்தது. அமைப்பு நிருவாகிகளும் அழைப்பு விடுத்திருந்தனர்.

உலகின் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்களில் மூன்றாவது இடத்தில உள்ள பாங்காக் நகரில் அமைந்துள்ள Forum Asia என்ற இந்த அமைப்பு மனித உரிமை மீறல்களை சட்ட முறையில் தட்டிக் கேட்டு அதன் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல் பட்டு வருவதும் ஆசியா முழுவதிலும் உள்ளதுமான 41 மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்டதும் ஆகும். நமது நாட்டைப் பொறுத்தவரை வழக்குரைஞர் திரு ஹென்றி டிபென் அவர்களை நிருவாகத்  தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் 'மக்கள் கண்காணிப்பகம்' உள்ளிட்ட 6 அமைப்புகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இதில் பெருமைக்குரிய அம்சம் என்னவென்றால், திரு டிபென் அவர்கள் இந்த Forum Asia அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினராக உள்ளார்.

என்னுடன் மக்கள் கண்காணிப்பக மண்டல சட்ட அலுவலர் ஏ. அசோகன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க சட்ட ஆலோசகர்கள் வழக்குரைஞர் ஆர்.மோகன முரளி, கே. திருமுகம், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் எங்கள் தாய்லாந்து சுற்றுலா பயண அட்டவணையிலிருந்து ஒரு நாள் ஒதுக்கி மேற்படி அமைப்பை சென்று பார்வையிட்டு, அதன் நிருவாகிகளிடம் கலந்துரையாடிவிட்டு வந்தோம்.

எங்களை அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குனரும் நேபாள நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞருமான திரு. சூர்யா வரவேற்றார். அங்கு பயிற்சி பெற்று வரும் நமது தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜெயராமன் இதர நிருவாகிகளையும், பல நாடுகளிலிருந்து அங்கு வந்து தங்கி மனித உரிமை பயிற்சி பெறுனர்களையும் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தை சுற்றிக் காண்பித்தார்.

பிறகு இயக்குனர் திரு சூர்யாவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்துகளை அவர் விவாதித்தார். குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி அவர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும் மணிப்பூரில் இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம், அங்கு வாழும் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

தொடர்ந்து ஆசியா நாடுகளில் நிகழ்ந்து வரும் பல்வேறு மனித உரிமை மீறல்களை உறுப்பு அமைப்புகளின் தோழமையுடன் எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றிய தனது சிந்தனைகளை அவர் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அங்கிருந்த நூலகத்தையும், மனித உரிமை பரப்புரைக்காக வெளியிடப்பட்ட பதாகைகளையும் அவர் காட்டினார்.

இச்சந்திப்பின் முடிவில் உள்ளுறை பயிற்சி பெறுநர்கள் பேன்க், டெரிக், தினேஷ் கனால், மந்தா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து அன்புடன் எங்களை வழியனுப்பி வைத்தனர்.
 
பயணத்திற்கு கிளம்புகிறேன்... ரெடி ஜுட் .....

பாங்காக்கில் உள்ள இந்திய உணவகம் (கரம் மசாலா ரெஸ்டாரென்ட்) ஒன்றில் வயிறு நிறைந்தது ....

கப்பலில் கேண்டில் லைட் டின்னர்...
"காட்டுலே மேட்டுலே உழைச்சவன்  நான் .... ஆடிட பாடிட வேண்டாமா... " 

Forum Asia -வின் தெற்காசிய இயக்குனர் திரு சூர்யாவுடன் வழக்குரைஞர்கள்
மற்றும் நான்

தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெறுனர் திரு ஜெயராமனுடன் நாங்கள்
(இடமிருந்து வலமாக மூன்றாவது)

Forum Asia-வில் பயிற்சி பெறும் மற்றவர்களுடன் நாங்கள்..

Forum Asia-வில் பயிற்சி பெறும் மற்றவர்களுடன் நாங்கள்..

Forum Asia-வில் அமைந்திருக்கும் நூலகம்...

Forum Asia-வில் வைக்கப்பட்டுள்ள மனித உரிமை பரப்புரை பதாகைகள்...

இலங்கை நாட்டுப் பயணத்துடன் பயணம் இனிதாக நிறைவடைந்தது

Related Posts Plugin for WordPress, Blogger...