என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

21 May, 2010

25 ஆண்டுகளுக்கு முந்தைய வகுப்புத் தோழர்கள் ஒன்று சேர்ந்து செய்த செயல்

திரு கல்யாணசுந்தரம் எனது பள்ளித் தோழர். நானும் அவரும் இப்பால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு (1983-85) சேலம், கோட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் +2 படித்தோம். அதற்குப் பின் என் விதிப்படி நான் சட்டம் படிக்க வந்து ஒரு வழக்குரைஞராகி விட்டேன். அவர் பட்டப் படிப்பு முடித்து சேலம் ஆண்டர்சன் பள்ளியில் மேலாளர் பதவியில் அமர்ந்து விட்டார்.

என் மகன் பிருத்விராஜனை 6-ஆம் வகுப்பில் சேர்க்க கடந்த 2005-ஆம் ஆண்டில் ஆண்டர்சன் பள்ளிக்கு சென்றிருந்த பொழுது எனது பள்ளித் தோழர் கல்யாணசுந்தரத்தை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளி வாழ்க்கையின் பசுமை நினைவுகள் திரும்ப மலர்ந்தன.

எனது மகனை மேற்படி பள்ளியில் சேர்த்து விட்டபடியால் நானும் கல்யாணசுந்தரமும் சந்திப்பதும் இயல்பாக அடிக்கடி நிகழ்ந்தது. நிறைய பேசினோம். பள்ளி வாழ்க்கையின் பெருமைகளை இன்றைய கடும் பொறுப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டோம்.

இந்த நிலையில் தோழர் கல்யாணசுந்தரம் ஒரு யோசனையை முன் வைத்தார். அதாவது நானும் அவரும் சந்தித்ததை போல வகுப்புத் தோழர்கள் மற்றவர்களையும் தேடிக் கண்டுபிடித்து சந்திக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக நின்று, ஒற்றுமையாக சமூக நலப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் கூறினார். இது ஒரு அருமையான யோசனையாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள் மீண்டும் சேர்ந்து பார்த்து பேசி மகிழ்வது என்பது நினைக்கவே பிரம்மாண்டமாக இருந்தது.

இதற்க்கான முயற்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டில் நானும் அவரும் இறங்கினோம். உடனடியாக தோழர்கள் திரு. ரங்கநாதன் (ஜவுளி உற்பத்தியாளர்), திரு. காளியப்பன் (வணிகர்), திரு. விசுவநாதன் (பள்ளி ஆசிரியர்), திரு. முருகைய்யன் (வழக்குரைஞர்), திரு. சரவணன் (வீட்டு மின் இணைப்பு ஒப்பந்தக்காரர்) ஆகியோரது முகவரி கிடைத்து அவர்கள் முகம் பார்த்தோம். இளமை மறையத் தொடங்கி மத்திய வாழ்வின் சுவடு (எங்களை போலவே) அவர்களிடம் தெரிந்தது.

நமது எண்ணத்தை அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களும் உற்சாகமடைந்தனர். மற்றவர்களையும் ஓரளவு தேடிக் கண்டுபிடித்தோம். அவர்களில் திருவாளர்கள் ஜெயராமன், விஸ்வநாதன் ஆகியோர் மருத்துவர்களாக உள்ளனர். திரு ஈஸ்வரன் பொறியாளராகி தற்போது தூத்துக்குடியில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். திரு. முரளி சேலம் ஆவின் பல் பண்ணையில் கனணி இயக்குபவராக பணியாற்றுகிறார். எல்லோருக்கும் திருமணம் ஆகி பெரிய குடும்பியாக இருந்தனர்.

இவ்வாறு சேர்ந்த நாங்கள் அடிக்கடி கூட்டம் போட்டோம். அப்போது எங்களுக்கு +2 - வில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு முதற்கண் பாராட்டும், மரியாதையும் செய்ய வேண்டும்; அதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் சுமார் 25 பேர் சேர்ந்து இருந்தோம். எல்லோரும் தலைக்கு கொஞ்சம் பணம் போட்டோம். பெருந் தொகை சேர்ந்தது. அதை வைத்துக்கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளில் முனைந்து இறங்கினோம்.


நாங்கள் அனைவரும் +2 - வில் முதல் குரூப் எடுத்து படித்தவர்கள். எங்களுக்கு ஆங்கிலத்தை திரு செல்வராசு அவர்களும், தமிழை புலவரைய்யா திரு கிருஷ்ணராஜ் அவர்களும், கணிதத்தை திரு ராஜாமணி அவர்களும், இயற்பியலை திரு. ராஜாராம் அவர்களும், வேதியியலை திரு மரிய ஜோசப் அவர்களும், விலங்கியியலை திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், தாவரவியலை திரு வெங்கடேசன் அவர்களும் எங்களுக்கு போதித்தனர். இவர்கள் தங்கள் ஆசிரியர் பணியை நன் முறையில் நிறைவு செய்து ஓய்வு பெற்று இருந்தனர். கணித ஆசிரியர் ராஜாமணி இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் வைத்தியர் கிருஷ்ணராஜுக்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டில் படுத்தபடியாக இருந்தார். மற்றவர்களை தேடிக் கண்டுபிடித்து இந்த விழாவைப் பற்றி சொன்னதும் மிகவும் அக மகிழ்ந்தனர்.

இப்படி பாடம் கற்றுக்கொடுத்த ஆசரியர்களுக்கு பாராட்டு செய்து பரிசு தரும் பாச விழா சேலம் கோட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 125 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை என்றும், அந்த பேறும் பாக்கியமும் தங்களுக்கு எங்கள் வாயிலாக கிடைத்துள்ளதாகவும் கூறி பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுக்கும் பெருமையாக இருந்தது.

சேலம் கணேஷ் மகாலில் இம்மாதம் 1-ஆம் தேதியில் (மே தினம் - உழைப்பவர் தினம்) மேற்படி பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். அளித்த ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். நாங்களும் எங்கள் குடும்பத்தினருடன் குழுமினோம். ஒவ்வொருவரும் தங்களது இன்றைய நிலை குறித்தும், வாழ்வின் திருப்பு முனையாக இருந்த +2 படிப்பில் எங்கள் ஆசிரியர்கள் எங்களை நெறிப்படுத்தி எவ்வாறு வழிகாட்டி ஊக்கப்படுத்தினார் (அதாவது படி.. படி.. என்று அடி மேல் அடி கொடுத்து எவ்வாறு பாடாய் படுத்தினர்) என்பது குறித்தும் பேசினோம். ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். அவர்களுக்கு பொன்னாடையும், சந்தனமாலையும் அணிவித்து, கேடயம் கொடுத்து, நினைவு பரிசு வழங்கினோம். நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன்.


விழா இனிதே நிறைவடைந்தது. அனைவரின் மனமும்தான் !
ஆசிரியர்களுடன் ஒரு அசத்தல் நிழற்படம்


நண்பர் கல்யாணசுந்தரம் பாராட்டுரை நிகழ்த்துகிறார்

இயற்பியல் ஆசிரியர் திரு ராஜாராமுக்கு தோழர் ரங்கநாதன் கேடயம் வழங்குகிறார்.

நான் நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்


தாவரவியல் ஆசிரியர் திரு வெங்கடேசனுக்கு தோழர் கேடயம் வழங்குகிறார்

விலங்கியியல் ஆசிரியர் திரு ராமகிரிஷ்ணனுக்கு தோழர் விஸ்வநாதன் கேடயம் வழங்குகிறார்

வேதியியல் ஆசிரியர் திரு மரிய ஜோசப்புக்கு தோழர் ஈஸ்வரன் கேடயம் வழங்குகிறார்

ஆங்கில ஆசிரியர் திரு செல்வராசு அவர்களுக்கு பி.ஆர். ஜெயராஜன் ஆகிய நான் கேடயம் வழங்குகிறேன்.

ஆங்கில ஆசிரியர் திரு செல்வராசு அவர்களுக்கு தோழர் ராமசந்திரன் நினைவு பரிசு வழங்குகிறார்.

20 May, 2010

தீர்ப்பு - விமான விபத்தும் இல்லை; மரணமும் நிகழவில்லை (Judgment - No Aircrash No Death)

'தீர்ப்பு - விமான விபத்தும் இல்லை; மரணமும் நிகழவில்லை' (Judgment - No Aircrash No Death)
இது நான் கடந்த இரு தினங்களுக்கு முன் வாசித்த புத்தகம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து விட்டார் என்பது நாம் பொதுவாக அறிந்த சங்கதி. இருந்தாலும் இன்றளவும் அவரது மரணத்தில் ஏகப்பட்ட மர்மம் நிலவுகிறது. அவர் சாகவில்லை என்றும், அவர் எங்கோ உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கூட இன்றும் நம்பப்படுகிறது. அப்படியே இந்த புத்தகமும் கூறுகிறது.
இதன் ஆசிரியர் இராணுவ தளபதி மான்வதி ஆர்யா, சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் மரணமடையவில்லை என்று ஆதாரபூர்வமாக இதில் விளக்க முற்படுகிறார். இதற்காக நிறைய ஆவணங்களை, புத்தகங்களை, ஆய்வு ஏடுகளை ஆராய்ந்து கோவையாக எழுதி உள்ளார்.
1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதியில் ஜப்பான் வானொலியில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அதாவது 'திரு.சுபாஷ் சந்திர போஸ் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் டோக்யோ சென்ற போது டைஹோகு விமானதளம் அருகே (தைவான் அருகே) அவரது விமானம் நொறுங்கி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் 18-ஆம் தேதியில் ஜப்பான் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருடன் சென்ற இராணுவ படை தளபதி துனமாசா ஷிடேய் சம்பவ இடத்திலேயே மாண்டார். மேலும் மற்றொரு தளபதி ஹபிபுர் ரஹிமான் உள்ளிட்ட நால்வருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன' என்று அந்த அறிவிப்பு துக்கம் தொனிக்க வாசிக்கப்பட்டது.
ஆனால் தைவான் அரசாங்கம் இதற்க்கு முரணாக ஒரு கருத்தைக் கூறியது. 1945, ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்றோ அதற்க்கு அண்மையிலோ அப்படி எந்த ஒரு விமான விபத்தும் தங்கள் நாட்டுக்கு அருகில் நடக்கவில்லை என்று கூறி அதற்கான சான்று ஆதாரங்களை வெளியிட்டது. மேலும் 1945, ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தைபே-யில் உள்ள தகன பதிவேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பெயரோ அல்லது அவருடன் அதே விமானத்தில் சென்று இறந்துபோனதாக சொல்லப்பட்ட இராணவ படை தளபதி உள்ளிட்ட மற்ற இரு விமானிகளின் பெயர்களோ இல்லை. இதுவும் சான்றுபூர்வமாக உள்ளதை இராணுவ தளபதி மான்வதி ஆர்யா இப்புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் டோக்கியோவில் உள்ள ரன்கொஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள இறந்து போனதாக கூறப்படும் சுபாஷ் சந்திர போசின் சாம்பல் கூட அவரது இல்லை என்பதை அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது என்றும் இப்புத்தக ஆசிரியர் கூறுகிறார்.

இப்படி சுபாஷ் சந்திர போசின் விமான விபத்து, அவரது மரணம் பற்றிய எந்த ஒரு சங்கதியும், சான்று ஆதாரமும் ஒரு நேர்கோட்டில் இல்லாததை இதன் ஆசிரியர் இராணுவ தளபதி மான்வதி ஆர்யா படம் பிடித்து காட்டுகிறார். முடிவில் நேதாஜி விமான விபத்தில் மரணமடையவில்லை என்பதை தனது தீர்ப்புரையாக நிலை நிறுத்துகிறார்.

சட்டப் பார்வையின் மதிப்புரைக்கு அனுப்பப்பட்ட இந்த அருமையான ஆய்வு புத்தகத்தை பின்வரும் பதிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதன் விலை - ரூ. 250/-

LOTUS PRESS,
4263/3, Ansari Road, Darya Ganj,
New Delhi - 110002.
Ph. 32903912, 23280047

19 May, 2010

தாய்லாந்தில் அழகுப் பெண்களின் நடன நிகழ்ச்சி

அண்மையில் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தேன். பரபரப்பான நாடு. உலக மக்கள் அடிக்கடி வரவேண்டும் என்று விரும்பும் ஒரு கடல் நகரம். சுற்றுலாவை முக்கிய வருமானமாக கொண்ட இந்த நாட்டில் கோரல் ஐலேன்ட், புகிட் ஐலேன்ட், பட்டய கேளிக்கை நகரம் ஆகிய இடங்கள் மனதை கொள்ளை கொள்பவை. பர்ஸ்ஸெய்யும் சேர்த்துதான். எனினும் உற்சாகத்திற்கு பஞ்சமில்லை.

அந்த வகையில் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா வருபவர்கள் பட்டாயா நகரில் (Pattaya City) தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்து வரும் ஒரு நடன நிகழ்ச்சியை காண தவறுவதில்லை. அதன் பெயர் 'அல்கார்ட்ஸ் ஷோ' (Alcartz Show). மிக மிக அழகான பெண்கள் மிக மிக அற்புதமாக நடனமாடுகிறார்கள். அருமையான அரங்க வடிவமைப்பு. ஒவ்வொரு நடன காட்சி முடிந்ததும் அரங்க வடிவமைப்பும் மாறுகிறது. அந்த கால ஆர்.எஸ். மனோகர் தனது நாடக பின்னணி காட்சிகளை கதைக்கு தக்கவாறு மாற்றிக்கொண்டே இருப்பார். அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வண்ணம் இந்த 'அல்கார்ட்ஸ் ஷோ' மேடை பின்னணி கட்சிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். நிறைய மெனக்கெட்டு இருப்பது நன்றாகவே தெரிந்தது.
நாடக கலையின் தந்தை பம்மல் கே. சம்பந்தம் நாடக பின்னணி காட்சிகளை மாற்றுவது குறித்து எழுதும்போது 'பொருமுகலெனினி'  (பின்னணி காட்சிக்கான திரையை மேடையின் ஒருபுறமாக இழுத்துக் வந்து நிறுத்துதல்), 'இருமுகலெனினி' (பின்னணி காட்சிக்கான திரையை மேடையின் இருபுறத்தில் இருந்தும் சரிபாதியாக இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துதல்), 'கரந்துவரலெனினி' (மேல் இருந்து கீழாக இருந்கும் பின்னணி காட்சி திரை) ஆகிய இம்மூன்றும் நவீனகால அறிவியல் தொழில் நுட்பத்துடன் பயன்படுத்தி இருந்தார்கள். அத்துடன் தோட்டத்தில் நடனம் என்றால் மரம், செடி, கொடி, புல் என ஒரு நிஜ தோட்டமே கண் முன் தெரிகிறது. கோவிலில் நடனம் என்றால் உண்மையான கோவிலேயே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதுவும் ஐந்து நிமிடத்திற்குள். மிக அருமையாக இருந்தது போங்கள்...

வண்ணமயமான ஒளியில் கண்ணை பறிக்கும் அலங்கார உடையுடன் (!) அப்பெண்கள் ஆடும் நடனம் இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

நடனம் முடிந்த பிறகு வெளியில் வந்தால் அந்த நடன மங்கையருடன் பார்வையாளர்கள் நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம். கொடுத்த 'பாத்தை' (பாத் - தாய்லாந்த் பணம்) அவர்கள் வாங்கிக் கொண்டு கட்டியணைத்தபடி 'போஸ்' கொடுகிறார்கள். நிறைய பேர் அப்படி நிழற்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கும் நல்ல கலெக்சன்.

மிக மன நிறைவுடன் வெளியில் வரும் போது, எங்கள் வழிகாட்டி ஒரு முக்கியமான அத்துடன் வியப்பும் அதிர்ச்சியும் கலந்த சங்கதி ஒன்றை சொன்னார். அதாவது அந்த நடன மங்கையர்கள் யாரும் பெண்களே அல்ல. அவர்கள் அனைவரும் 'Lady boys' என்றார். அதாவது 'திருநங்கைகள்'. ஆனால் பெண்களே பொறமை கொள்ளும் பேரழகுடன் இருந்த அவர்களை திருநங்கைகள் என்று நம்ப மனம் மறுக்கிறது. இருப்பினும் அதுதான் உண்மை என்பதை தாய்லாந்த்தின் அதிகாரபூர்வ சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தை படித்து பார்த்த போது தெளிவானது.

16 May, 2010

சர்பாசி சட்டம் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இட்டுள்ள தடை - ஒரு முக்கிய வழக்கு.சர்பாசி ஆக்ட் - இது வங்கிகள் கொடுத்த கடனை நீதிமன்றங்களை  நாடாமல்   அவ் வங்கிகளே வசூல் செய்து கொள்ள  அதிகாரம் தருகிறது. பிரச்சனை எழுந்தால்  'வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயத்தின்' உதவியையும் நடலாம்.

SARFASI ACT - இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act அதாவது 'நீதிச் சொத்தை பத்திரப்படுத்தலும்  மறு கட்டமைத்தலும் மற்றும் பிணைய நலனை வலியுறுத்தி செயல்படுத்தல்'. அப்பாடா... ரொம்ப பெரிய சட்டம்தான். இல்லியா பின்னே.? வங்கி கொடுத்த கடனை வசூலிக்க இந்த சட்டம் இயற்றப்பட்ட 2002-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அதற்கு கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் (கோர்ட் பீஸ்) கட்டி, பிணயமாக (ஜாமீனாக) கொடுக்கப்பட்ட சொத்தை பற்றுகை (ஜப்தி) செய்ய ஆயிரத்தெட்டு சட்ட நடைமுறைகளை பின்பற்றி வங்கி வழக்கை நடத்தி தீர்ப்பு வாங்க வேண்டும்.

இப்போ இந்த சர்பாசி சட்டம் வந்ததற்கு பிறகு இந்த சுற்றி வளைக்கும் நடைமுறை எல்லாம் சுருங்கி போச்சு. இந்த சட்டம் வங்கி கொடுத்த கடனை அதுவாகவே வசூல் செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ்  'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debt Recovery Tribunal) ஒன்றும்   'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debt Recovery Appellate Tribunal) ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது . இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை அதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலை வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்கள் கண்டபடி எதிர்வாதம் (டிபென்ஸ்) எடுக்கவும் முடியாது. அந்த வகையில் பின்வரும் முக்கிய வழக்கு சுட்டிக்கட்டத்தக்கது.

அதாவது 'சுமதி - எதிர்- செங்கோட்டையன் மற்றும் பலர்' என்ற வழக்கில் செங்கோட்டையன் வகையறா பஞ்சாப் நேஷனல் பேங்க் என்ற வங்கியில் கடன் பெற்று இருந்தனர். அதை கட்ட முடியவில்லை. எனவே அவ்வங்கி சர்பாசி சட்டத்தின் கீழ் அவர்களது பிணைய சொத்தை பற்றுகை செய்து கடனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோவையில் உள்ள வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் மேற்படி செங்கோட்டையன் வகையறாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. பிணைய சொத்தை ஏலத்தில் விற்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதை தவிர்க்க அவர்கள் மேல் முறையீடு, நீதிப்பேராணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கிடை யில் வங்கி தனது ஏல நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள ஆரம்பித்தது. இதை நிறுத்த எதாவது செய்ய முடியுமா என்று மேற்படி செங்கோட்டையன் வகையறா மிகவும் தீவிரமாக சிந்தித்தது. முடிவில் செங்கோட்டையன் தனது மகள் சுமதியை விட்டு சம்பந்தப்பட்ட பிணைய சொத்திலிருந்து பாகப் பிரிவினை கோரி தங்கள் மீதும் மேற்படி வங்கியின் மீதும் வழக்கிட வைத்தனர். குறிப்பாக அப்பாகப்பிரிவினை வழக்கு முடிவாக முடியும் வரை வங்கியானது பிணைய சொத்தை ஏலத்திற்கு கொண்டு வரக் கூடாது என்று இடைக்கால உறுத்துக்கட்டளை (இண்டரிம் இஞ்சன்சன்) கோரி தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இம்மனு கீழமை மற்றும் முதல் மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் தோற்றுப் போனது. எனவே இதை எதிர்த்து சுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் சீராய்வு மனு (சிவில் ரிவிசன் பெட்டிசன்) தாக்கல் செய்தார்.

இதை ஆராய்ந்த மாண்பமை நீதியரசர் எம். ஜெயபால் சர்பாசி சட்டம், 2002-இன் 34-ஆம் பிரிவின் வாயிலாக கூறியுள்ள தடையை தனது தீர்ப்புரையில் சுட்டிக்காட்டினர். அதாவது மேற்படி பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் ஏதும் வழங்குவதிலிருந்து உரிமையியல் நீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பஞ்சாப் நேசனல் வங்கி பிணைய சொத்தை ஏலத்திற்கு கொண்டு வருவதிலிருந்து அதை தடுத்து நிறுத்த சுமதி கோரியபடி இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்க முடியாது என்று மாண்பமை நீதியரசர் எம். ஜெயபால் தெளிவுபடுத்தினர். முடிவில் சுமதியின் உரிமையியல் சீராய்வு மனுவை (சிவில் ரிவிசன் பெட்டிசன்) தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

இத்தீர்ப்பில் மற்றொரு சட்ட நிலைபாட்டையும் அவர் தெளிவுபடுத்தினர். அதாவது சுமதிக்கு உள்ளபடியே வங்கியின் சட்ட நடவடிக்கைளில் குறை ஏதும் இருந்தால் அல்லது அது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி அவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். ஆனால் சுமதி அவ்வாறு செய்யவில்லை. எனவே சுமதியின் மனுவில் நற்கூறுகள் இல்லை.

[Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) (SARFAESI Act), Section 34 - Code of Civil Procedure, 1908 (5 of 1908), Section 9, Order 39, Rules 1 and 2 - Plaintiff sought for interim injunction to restrain Bank from auctioning properties enforcing SARFAESI Act, pending partition Suit - In view of specific bar under Section 34, Trial Court has no authority to entertain Application for interim injunction against Secured Creditors who had already initiated proceedings - Concurrent findings of court rejecting Injunction Application, held, proper.

Alternative Remedy - Injunction Application to stall auction sale overlooking provisions of SARFAESI Act, held, not maintainable.]

Sumathi vs. Sengottiyan and others - Madras High Court - M.Jayapal, J. C.R.P. (PD) No. 1591 of 2009 and M.P. No. 1 of 2009 - decided on 05-0202010 - Citation : 2010 (3) CTC 53

Related Posts Plugin for WordPress, Blogger...