என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

22 June, 2010

"ராவணன்" - பழைய பானையில் புதிய கள்

சட்டத் தேர்வுகள் எழுதி முடித்து விட்டு எனது மகள் ஊர் திரும்பி இருந்தார். வந்தவுடன் ஏதாவது திரைப்படம் போகலாம் என்று சொன்னார். அத்துடன் 'ராவணன்' படத்திற்கு போகலாம் என்றும்  சொன்னார். (படம் பார்க்க எனக்கும் ஒரு சாக்கு ஏற்பட்டு விட்டது). எனவே எல்லோரும் கிளம்பி விட்டோம்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு யாருக்கு நன்மை ஏற்பட்டு இருந்தாலும் மணி ரத்தினம் சாருக்கு ஏற்பட்டு நன்மை மிகவும் அளப்பரியது. கதைக் களம் பூராவும் ஓஹேனக்கல், கர்நாடக காட்டுப் பகுதிகள் என சந்தன வாசம் வீசுது. படப் பிடிப்பு பிரமாண்டம். ஆனா கதை ராமாயணப் பழசு. பழசு என்ன பழசு... ராமாயணமேதான்.

ராமர் - பிருதிவிராஜ்
சீதை - ஐஸ்வர்யா ராய்
அனுமார் - கார்த்திக்
ராவணன் - விக்ரம்
சூர்பனகை - பிரியாமணி

இன்னும் கும்பகர்ணன், விபிஷணன் போன்ற ராமாயண கதா பத்திரங்களுக்கும் நடிகர்கள் உண்டு.

சீதையை (ஐஸ்வர்யா ராய்) ராவணன் (விக்ரம்) கடத்திக் கொண்டு போவதும், அதை அனுமார் (கார்த்திக்) போட்டுத்தரும் பாதையில் பிருதிவிராஜ் (ராமர்) அண்ட் பார்ட்டி சென்று மீட்பதும், முடிவில் ராவணன் வதம் செய்யப்படுவதும் கதை. சீதையை கடத்திக் கொண்டு போக ஒரு சிறிய பிளாஷ் பேக். அதாவது விக்ரமின் (ராவணனின்) மாற்றான் தங்கை பிரியாமணியின் (சூர்பனகையின்) கற்பு பிருதிவிராஜ் (ராமர்) பார்டியால் சூறையாடப்படுவது.


திருமணதிற்கு பிறகு இன்னும் சிகப்பாக (வெள்ளையாக) தெரிகிறார் ஐஸ்வர்யா ராய். உயர்ந்த, பகட்டான ஆடைகளுடன் பார்த்துப் பழகிய கண்களுக்கு, அவரை படம் முழுக்க கிழிந்த, அழுக்கான உடைகளுடன் பார்க்க சங்கடமாக உள்ளது. இவர் ஒரு புறம் என்றால், மறுபுறம் நடிப்பில் அடுத்த சிவாஜி கணேசன் ஆகி விடுவர் போல் உள்ளார் விக்ரம். அவரது புஜங்கள், கண்கள் என எல்லாம் பேசுகிறது. ஒரு கட்டத்தில் தனது கணவன் பிருதிவிராஜ் மீது ஐஸ்வர்யா ராய் கொண்டுள்ள காதல் தெரிந்து விக்ரம் பொறமை கொண்டு பேசும் வசனக் காட்சிகள் கவிதை. பிருதிவிராஜ்க்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால் கிளைமாக்சில் அவர் செய்யும் தந்திரம் படம் முழுவதும் சுருங்கி அமர்ந்திருந்த நம்மை நிமிர வைக்கிறது. ஓரளவு தப்பித்துக்கொண்டார் மணி ரத்தினம்.


ராவணன் விக்ரமை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஐஸ்வர்யாராயை மட்டும் மீட்டுக் கொண்டு வந்த பிறகு பிருதிவிராஜ் ஒரு முக்கியமான கேள்வியை ஐஸ்வர்யாராயிடம் கேட்கிறார். "14 நாள் அவன் உன்னை வச்சிக்கிட்டு இருந்தானே ... அப்போ உன்னை அவன் தொடலே" என்று ஐஸ்வர்யாராயை ராமர் சந்தேகப்பட்டது போல இந்த எஸ்.பி. பிருதிவிராஜும் சந்தேகப்படுகிறார். அதற்கு 'இல்லை' என்று ஐஸ்வர்யா மறுக்கிறார். இந்நிலையில் அதற்காக அக்கினிப் பிரவசம் செய்யச் சொல்லப் போகிறாரோ என்று நினைத்தால், lie detector-ரைக் கொண்டு சோதனை செய்ய இருப்பதாகச் சொல்கிறார். தன்னைப் பற்றி தவறாக விக்ரம் ஏதாவது போட்டுக் கொடுத்துள்ளாரோ என்று அறிய அவரை மீண்டும் சந்திக்க ஐஸ்வர்யா ராய் வரும் போது, அவரைப் பின் தொடர்ந்து வந்து விக்ரமை போட்டுத் தள்ளுகிறார் பிருதிவிராஜ். கதை ஒரு பெண்ணாசையற்ற ஆனால்  பின் பெண் அருகாமை உணர்ந்த விக்ரமின் முடிவுடன் முடிகிறது. ரசிகர்களுக்கு ராவணன் விக்ரம் நல்லவராக காட்சி அளிக்கிறார்.


நேற்று நாங்கள் படம் பார்க்கச் சென்று இருந்த போது, சேலத்தில் வாழும் திருநங்கைகள் நிறைய பேர் (சுமார் 30-க்கும் அதிகமானவர்கள்) நவீன உடைகள் உடுத்தி, வெகு அலங்காரத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர். இவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்தப் படத்திற்கு வந்திருந்தது சற்று வியப்பை தந்தது. படம் போட்ட பிறகுதான் இவர்கள் வந்திருந்ததற்க்கு ஒரு காரணம் புரிந்தது. இவர்கள் வேடத்தில் ராவணனின் நண்பராக ஒரு நடிகர் நன்றாகச் செய்திருந்தார். அதற்க்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இவர்கள் வந்திருந்தது புலனானது.
 
ஒரே கதைக் களம் என்பதால் போரடிக்கிறது. பின்னணி இசையில் அடிக்கடி ஒப்பாரி பாடல் மெலிதாக வருவதால் வசனங்களை சரியாக கேட்க முடியவில்லை. பாடல்கள் இரண்டு நன்று. "தேக்கு மரக் காடு பெருசுதான்... தீக்குச்சி ஒன்று சிறிசுதான்.." என்ற பாடல் அனேக செல்லிடபேசியின் அழைப்பு மணிப் பாடலாக இன்று உள்ளது. இன்னொரு பாடலில்  "தடா... புடா.. கஜா.. பூஜா.." என்று ஏதோ வரிகள் வருகின்றன. பொருள் தெரியவில்லை. இறுதியில் தொங்கு மரப்பாலத்தின் (அதாவது ராமர் பாலமாம்) மீது நடக்கும் சண்டை காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.
 

தெரிந்த கதை. எனவே சுவாரஸ்யம் ஒன்றுமில்லை. இன்றைய வெற்றிகரமான திரைக்கதை எப்படி இருக்க வேண்டுமென்றால், கதைக்குள் கதையாக மூன்று கதை இருக்க வேண்டும். சிறிய வில்லன், பெரிய வில்லன் என இரண்டு வில்லன்கள் வேண்டும். களம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். வசனம் சாதரணமாக கேட்டாலும் சட்டென புரியும் படி இருக்க வேண்டும். இது எல்லாமே ராவணனில் மிஸ்ஸிங். (வேறு வழியில்லை)

மணி ரத்தினம் சார்.. கதைக்கு பஞ்சமா என்ன? என்கிட்டே 10 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பம் வர்ற மாதிரி சுமார் 100 கதை உள்ளன. ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்களேன்..

ராவணன் - இருக்கும் ஒரு தலை வலிக்கிறது.

21 June, 2010

சுவிஸ் வங்கியில் உள்ள 70 இலட்சம் கோடி ரூபாய் பணம்

சுவிஸ் வங்கியில் நமது இந்தியர்களின் பணம் ரூபாய் 70,00,000 கோடி உள்ளது. அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இல்லை? ஆனால் இந்தத் தகவல் உண்மைதான். இன்னும் சில அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வருமாறு:-

1. சற்றே எண்ணிப் பாருங்கள்... சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்பு பணத்தின் பிறப்பிடமாக இந்தியா   உள்ளது.
 
2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப்பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் பிற நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவில்லை. மேலும் இது குறித்து எதிர் கட்சியினரும் எந்த ஆர்வமும் கட்டவில்லை. காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும்.

5. இந்தப் பணம் நமது நாட்டைச் சேர்ந்தது. இவ்வளவு பெரிய தொகையில் இருந்து நமது நாடு அது தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பி செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.

6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற 69 வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் 'கர்ம வினை' என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடு பலன்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை யாவும் நமது இந்தியர்கள் வாசித்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் பாவம் அவர்கள் என்ன செய்து விட முடியும்? அன்றாட பிழைப்பை ஒட்டி சொந்த செலவுக்கு சம்பாதிக்கவே அவர்களுக்கு நேரமில்லை. இந்நிலையில் அவர்கள் இதற்காக வருத்தப்பட்டு ஒரு பெரு மூச்சு மட்டுமே விட முடியும். எனினும் "இதுவும் ஒரு விடுதலை போராட்டமே". ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். இதற்காக நாம் இந்தியர் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும்.

10. நமது இந்திய தாய் மண்ணிற்கு செய்யும் சேவையாக, இந்தப் போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை உறுதி செய்ய, இங்கு நீங்கள் வாசித்த பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் அனுப்பி வைத்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சிரமம் பார்க்காமல் இப்போதே ஆரம்பிக்கவும்.

நமது பணத்திற்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதா? அதை ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது. இந்தியா ஒரு ஏழை நாடு என்று  எவன் சொன்னது?

20 June, 2010

உண்மையான கடற்கன்னியை காண வாருங்கள்

கடற் கன்னியை நாம் கதைகளில் அறிவோம். அது ஒரு கற்பனை வடிவம் என்றே நாம் இதுகாறும்  பெரும்பாலும் நினைத்திருந்தோம். ஆனால் கடற்கன்னி இருப்பது உண்மைதான் என்பதை அண்மையில் எனக்கு எனது சட்டக் கல்லூரி தோழர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் திரு எம். ஜெயக்குமார் அனுப்பிய மின் அஞ்சல் மூலம் தெரிய வந்தது.

கடந்த வாரம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்தநிலையில் ஒருகடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது இங்கிருந்தஉல்லாசப்பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாகவெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலா நிறுவனங்கள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.


கடற்கன்னி அழகாக இருப்பாள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அகோரமாக உள்ளது!

Related Posts Plugin for WordPress, Blogger...