என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

03 July, 2010

அசைவம் இருக்கு.. குடிக்கிறிய லே ?

பின் மதிய கடற்கரையோர வெயில் கார் கண்ணாடியை ஊடுருவி கன்னத்தை சுட்டது. கன்னியாகுமரி - மதுரை நாற்கர சாலை 120 கிலோ மீட்டர் வேகத்தில் பின்னோக்கி வழுக்கிக் கொண்டு சென்றது. ஆங்காங்கே இன்னும் ஆட்கள் சாலை செப்பணிகளை செய்து கொண்டிருந்தனர். மரங்களுக்கு பதிலாக விண்ட்மீல் எனப்படும் காற்றாலைகள் திரும்பிய பக்கம் எல்லாம் ரட்சததனமாக சுற்றிக் கொண்டிருந்தன. கன்னியாகுமரியில் கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது. எனவே அப்போது பசி தெரியவில்லை. ஆனால் கன்னியாகுமரியை விட்டு கிளம்பத் தயாராகி காரில் ஏறி அமர்ந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தவுடன் வயிறு என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. 'அய்யா... எனக்கு ஏதாச்சும் தருமம் பண்ணுங்க சாமி...' என்று வயிறு மூளையிடம் கெஞ்சுவதை உணர முடிந்தது. எனவே அன்னமிட உணவகம் ஏதும் தென்படுகிறதா என்று கண்கள் நாலாபக்கமும் அலை பாய்ந்தன. ஊருக்கு வெளியே நாற்கர சாலை பாய்ந்து செல்வதால் எந்த மகாராசனும் அன்ன சத்திரம் ஏதும் கட்டி வைத்திருக்கவில்லை. ...

என்ன பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வரிகளைப் போல் உள்ளதா?

அது ஒன்னுமில்லிங்க... போன வாரம் கோவையிலே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. தொடக்க விழா உள்ளிட்ட முதல் மூன்று நாட்கள் நிகழ்சிகளை கம்பிவடத் தொலைகாட்சியில் பார்த்தேன். கோவைக்குப் போய் கூட்டத்திலே அலைமோதி நேரில் பார்ப்பதை விட இப்படி பார்ப்பது ரொம்ப வசதியா இருந்தது. இன்னும் இரண்டு நாள் விடுமுறை இருந்தது. சரி... கன்னியாகுமரி வரைக்கும் போயிட்டு வரலாம் என்று காரை கிளப்பினேன். அப்படியே தமிழுக்கு வித்தான திரு வள்ளுவர் சிலையையும் பார்த்துவிட்டு வருவது இந்த நேரத்திற்கு பொருத்தமாக இருக்கும்னு கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். குழந்தைகளை கூட்டிகிட்டு கிளம்பிவிட்டேன்.

கடலோர விடுதியில் அறை எடுத்து தங்கினோம். அறையிலிருந்தபடியே காலை 6.24-க்கு சூரிய உதயம் பார்த்தோம். காலை குமரியம்மன் தரிசனம். சிற்றுண்டி முடித்து விவேகானந்தர் பாறைக்கு சென்றோம். அப்படியே அய்யன் வள்ளுவர் சிலைக்கும் சென்று வந்தோம். இப்போதான் முதல் தடவையா அந்த இடத்திற்கு போறேன். முன்பு ஒரு முறை போன போது வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த முறை அங்கு படகு போனது.

பிரமாண்டமாக வள்ளுவர் நிற்கிறார். அன்னாந்து பார்த்தால் மேகக் கூட்டங்களின் பின்னணியில் வள்ளுவர் நம் மீது சாய்ந்து விழுந்து விடுவரோ என்று ஒரு பிரமை ஏற்பட்டது. நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

காலை சிற்றுண்டியை தாமதமாக சாப்பிட்டதாலும், பார்த்த காட்சிகளை மனது அசை போட்டுக் கொண்டு இருந்ததாலும் அப்போது பசி தெரியவில்லை. எனவே அறையை காலி செய்து விட்டு மதியம் சுமார் 2.30 மணி அளவில் மதுரை வழியாக சேலம் கிளம்பினோம். இப்போது முதல் பத்தியை மீண்டும் வாசிக்கவும்.

நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்த போது அச்சாலையோரம் ஒருவர் தனது மிதி வண்டியில் கூடை ஒன்றை வைத்துக் கொண்டு அருகில் நுங்கு காய்களை கொட்டி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். பசி நேரத்தில் ஆபத்பாந்தவனாக அவர் தெரிந்தார். எனவே உடனே காரை படக்கென நிறுத்தி நுங்கு திங்க எல்லோரும் இறங்கினோம். அவர் ஒரு நுங்கு காயை எடுத்து மளமளவென கூரான அரிவாளால் சீவினார். எங்கள் கைகளில் பனைமர ஓலை ஒன்றை கோப்பை வடிவில் மடக்கி கொடுத்தார். பின் நுங்கு காயின் மூன்று கண்களில் இருந்த நுங்கை அரிவாளின் முனை கொண்டு சுரண்டி எடுத்து அந்த பனை ஓலையில் கொதகொதவென போட்டார். அடுத்து கூடையில் துணி சுற்றி வைத்திருந்த பானையில் இருந்து நீராக இருந்த ஒரு திரவத்தை ஊற்றினார். பிறகு ஒரு புன்முறுவலுடன் "இது பதனி லே.. இளசான நுங்கொட குடிச்சு பாரும்... அம்ம்புட்டு ருசியா இருக்குமில்லா .. " என்று எல்லோருக்கும் ஒரு டம்ளர் உற்றினார். சொன்னது போல ருசியாகத்தான் இருந்தது. நுங்கு 10 ரூபா. ஒரு டம்ளர் பதநீர் 10 ரூபா. பசி சற்றே தணிந்தது போல் இருந்தது.

பணம் கொடுத்த போது நுங்கு கடைக்காரர் அருகில் வந்து லேசாக காதில் குசுகுசுவென "அசைவம் இருக்குலே.. ஒரு டம்ளர் ஊத்தட்டுமா லே..." என்றார். நானும், "அதேன்னேலே அசைவம்?"... என்று கேட்டேன். அதற்கு அவர், "அட... இது கூட தெரியாதா? அசைம்ன்னா கள்ளுலே கள்ளு.." என்றார்.

"ஏலே... ஆளை விடு லே..." என்றவாறு காரை நோக்கி வேகமாக நடையை கட்டினேன்.

காலை சூரிய உதயம்
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

விவேகானந்தர்  பாறை
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

அய்யன் வள்ளுவர் சிலை
(விடுதி அறையிலிருந்து எடுத்த நிழற்படம்)

விவேகானந்தர் மண்டபத்திற்கு முன்பு என் மகன்

நான்...
(விரைவில் வள்ளுவராகும் அறிகுறிகள் தென்படுகிறதா?)

வள்ளுவர் சிலையை அடைந்தோம்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில் நான் வள்ளுவரின் காலை தொட்டு வணங்குகிறேன்  ..

வள்ளுவரின் காலடியில் என் மகன் வாஞ்சையுடன்..

கடல் காற்று ஆளைத் தள்ளுகிறது..

வள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை...   

02 July, 2010

எப்படியெல்லாம் ஆபத்து வருகிறது பார்த்தீர்களா ?

அண்மையில் ஒரு  செய்தியை வாசிக்க நேர்ந்தது.  ஒருவர் தனது மடிக்கணனியில் (லேப்டாப்) பணிகளை முடித்து விட்டு, இன்னும் விடுபட்டுப் போன பணிகளை செய்து முடிப்பதற்காக அதை அவர் தனது படுக்கை அறைக்கு எடுத்து செல்கிறார்.  அங்கு தனது மெத்தையின் மீது அம்மடிக் கனணியை வைத்துக் கொண்டு சில வேலைகளை செய்கிறார். தனக்கு வந்த மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கிறார். இரவு நேரம் என்பதால் தூக்கம் அவர் கண்களை தழுவியது.  அப்படியே தூங்கிப் போனார்.

அதிகாலை வேளையில் அவரது அறையில் இருந்து தீயும், புகையும் வெளியாவதைக் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரது அறையின் கதவை உடைத்து உள்   சென்றனர்.

அங்கு அவர் தீயில் கருகி இறந்து போயிருந்தார். காவல் துறை வந்து தீக்கான காரணத்தை ஆராய்ந்தது. எப்படி தீ பிடித்தது என்பது புரியாத  மர்மமாக இருந்தது. இது சில நாட்கள் நீடித்தது. பின் மெத்தையின் மீது வைக்கபட்டிருந்த மடிக் கனணி, மெத்தை ஆகியன நன்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவை அறையில் இருந்த மற்ற பொருட்களை காட்டிலும்  முற்றிலும் தீயால்  நாசமாகி இருந்தன. முடிவில் காவல் துறையின் புலனாய்வு முடிவு இவ்வாறு இருந்தது. அதாவது,-

தீயில் இறந்து போனவர்   மடிக்  கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பணியாற்றி இருக்கிறார். மடிக் கனணி மெத்தையில் நன்கு பொதிந்து விட்டிருந்தது. இதனால் மடிக் கணனியின் அடிபகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய விசிறிக்கு வெளிக் காற்று கிடைக்கவில்லை. மடிக் கனணி இயங்கும் போது உருவாகும் வெப்பம்/சூடு வெளி செல்ல வாய்ப்பில்லாமல் அது மென்மேலும் சூடாகியது. மடிக் கணணி சூடானால் சரியாக வேலை செய்யாது. அதன் இயக்கம் தடைபடும். இதனால் ஏற்பட்ட களைப்பால் அவர் அப்படியே தூங்கிப் போனார். சிறிது நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக அவரது பஞ்சு மெத்தை கருக ஆரம்பித்து தீப்பிடித்து, அது அருகில் படுத்திருந்த அவரையும் பற்றிக் கொண்டது.

எனவே மடிக் கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு பணி புரிய வேண்டாம். அது மடிக்கனணிக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லதல்ல.

இப்பதிவை நீங்கள் நேசிக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லவும்.

01 July, 2010

பாங்காக்கில் உள்ள Forum Asia அமைப்பு

Forum Asia - இது மனித உரிமை மற்றும் அதன் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் ஓர் பெரும் அமைப்பாகும். இதன் அலுவலகம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ளது.

எனது தாய்லாந்து சுற்றுப்பயணம் ஒரு சுற்றுலாவாக இருந்தாலும், ஆசியப் புகழ் பெற்ற இந்த Forum Asia அமைப்பை கண்டு வரும் வாய்ப்பையும் உள்ளடகியதாக இருந்தது. அமைப்பு நிருவாகிகளும் அழைப்பு விடுத்திருந்தனர்.

உலகின் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்களில் மூன்றாவது இடத்தில உள்ள பாங்காக் நகரில் அமைந்துள்ள Forum Asia என்ற இந்த அமைப்பு மனித உரிமை மீறல்களை சட்ட முறையில் தட்டிக் கேட்டு அதன் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல் பட்டு வருவதும் ஆசியா முழுவதிலும் உள்ளதுமான 41 மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்டதும் ஆகும். நமது நாட்டைப் பொறுத்தவரை வழக்குரைஞர் திரு ஹென்றி டிபென் அவர்களை நிருவாகத்  தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் 'மக்கள் கண்காணிப்பகம்' உள்ளிட்ட 6 அமைப்புகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இதில் பெருமைக்குரிய அம்சம் என்னவென்றால், திரு டிபென் அவர்கள் இந்த Forum Asia அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினராக உள்ளார்.

என்னுடன் மக்கள் கண்காணிப்பக மண்டல சட்ட அலுவலர் ஏ. அசோகன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க சட்ட ஆலோசகர்கள் வழக்குரைஞர் ஆர்.மோகன முரளி, கே. திருமுகம், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் எங்கள் தாய்லாந்து சுற்றுலா பயண அட்டவணையிலிருந்து ஒரு நாள் ஒதுக்கி மேற்படி அமைப்பை சென்று பார்வையிட்டு, அதன் நிருவாகிகளிடம் கலந்துரையாடிவிட்டு வந்தோம்.

எங்களை அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குனரும் நேபாள நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞருமான திரு. சூர்யா வரவேற்றார். அங்கு பயிற்சி பெற்று வரும் நமது தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜெயராமன் இதர நிருவாகிகளையும், பல நாடுகளிலிருந்து அங்கு வந்து தங்கி மனித உரிமை பயிற்சி பெறுனர்களையும் அறிமுகம் செய்து வைத்து அலுவலகத்தை சுற்றிக் காண்பித்தார்.

பிறகு இயக்குனர் திரு சூர்யாவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்துகளை அவர் விவாதித்தார். குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி அவர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும் மணிப்பூரில் இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம், அங்கு வாழும் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

தொடர்ந்து ஆசியா நாடுகளில் நிகழ்ந்து வரும் பல்வேறு மனித உரிமை மீறல்களை உறுப்பு அமைப்புகளின் தோழமையுடன் எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றிய தனது சிந்தனைகளை அவர் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அங்கிருந்த நூலகத்தையும், மனித உரிமை பரப்புரைக்காக வெளியிடப்பட்ட பதாகைகளையும் அவர் காட்டினார்.

இச்சந்திப்பின் முடிவில் உள்ளுறை பயிற்சி பெறுநர்கள் பேன்க், டெரிக், தினேஷ் கனால், மந்தா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து அன்புடன் எங்களை வழியனுப்பி வைத்தனர்.
 
பயணத்திற்கு கிளம்புகிறேன்... ரெடி ஜுட் .....

பாங்காக்கில் உள்ள இந்திய உணவகம் (கரம் மசாலா ரெஸ்டாரென்ட்) ஒன்றில் வயிறு நிறைந்தது ....

கப்பலில் கேண்டில் லைட் டின்னர்...
"காட்டுலே மேட்டுலே உழைச்சவன்  நான் .... ஆடிட பாடிட வேண்டாமா... " 

Forum Asia -வின் தெற்காசிய இயக்குனர் திரு சூர்யாவுடன் வழக்குரைஞர்கள்
மற்றும் நான்

தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெறுனர் திரு ஜெயராமனுடன் நாங்கள்
(இடமிருந்து வலமாக மூன்றாவது)

Forum Asia-வில் பயிற்சி பெறும் மற்றவர்களுடன் நாங்கள்..

Forum Asia-வில் பயிற்சி பெறும் மற்றவர்களுடன் நாங்கள்..

Forum Asia-வில் அமைந்திருக்கும் நூலகம்...

Forum Asia-வில் வைக்கப்பட்டுள்ள மனித உரிமை பரப்புரை பதாகைகள்...

இலங்கை நாட்டுப் பயணத்துடன் பயணம் இனிதாக நிறைவடைந்தது

29 June, 2010

மென்டோஸ் மிட்டாயும் கோகோ கோலாவும் கலந்தால் மரணம்

மென்டோஸ் மிட்டாய் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவர். கடந்த வாரம் பிரேசில் நாட்டில் ஒரு சிறுவன் இந்த மிட்டாயை சாப்பிட்டு விட்டு கோகோ கோலா அருந்திய சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனான். இதே மாதிரி மரணம் ஓராண்டுக்கு முன்பு பிரேசில் நாட்டில் மற்றொரு சிறுவனுக்கும் ஏற்பட்டது.  மென்டோஸ் மிட்டாயை கோகோ கோலா/ பெப்சி பானத்துடன் கலந்தால் என்ன நடக்கிறது என்பதை பின்வரும் ஒரு எளிய ஆனால் அதிர்ச்சிகரமான சோதனை விளக்குகிறது.

எனவே மென்டோஸ் (போலோ) மிட்டாய் சாப்பிட்ட உடன் கோகோ கோலா அல்லது பெப்சி பானம் அருந்த வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்.

இப்போது வேதனையை உண்டாக்கும் சோதனையை கவனிப்போம்.என்ன பயங்கரம்? இந்த சோதனை நமது வயிறுக்குள் நடந்தால் என்னவாகும்  என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது. 

இது சற்றே பழைய சங்கதியாக இருந்தாலும், தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த இரண்டு வகைகளையும் விரும்பி சாப்பிடுவதால் அவர்களுக்கு பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும். அதாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். அடுத்ததடுத்து வேண்டாம். 

மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Related Posts Plugin for WordPress, Blogger...