என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

17 July, 2010

100 சதவீதத்திற்கு மேல் பெற முடியுமா?

100 சதவீதம் என்பதே ஒரு முழுமையான, நிறைவான நிலையை குறிப்பதாகும். அதற்கும் மேல் ஒரு சதவீதம் அதிகம் என்றாலும் (அதாவது 101 சதவீதம் என்று வைத்துக் கொள்வேமே) அது நிச்சயம் 100 சதவீதம் என்பது உறுதி என்ற நிலையை காட்டுவதாகும்.

நாம் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ள தயங்கும் போது அவர் "சார்.. நீங்க கொஞ்சம் கூட என் மேல சந்தேகப்பட வேண்டியதில்லை.. என்னை நீங்க 100 பெர்சென்ட் நம்பலாம்.. அதுக்கு மேல கூட நம்பலாம்" என்று அடித்துப் பேசுவதை நாம் பல சமயங்களில் கேட்டுள்ளோம்.

இன்னும் சில சூழல்களில் "நான் சொல்றது 101 பெர்சென்ட் உண்மை சார்" என்று ஆணித்தரமாக பலர் சொல்வதையும் நாம் கேட்டிருப்போம்.

சோகத்தை தவிர நமக்கு எதுவும் 101 சதவீதம் கிடைத்தால் அது மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்? அப்படி ஒரு விடயத்தில் 100 சதவீதத்திற்கும் மேல் 101 சதவீதம் வெற்றி பெறுவது, மகிழ்ச்சியடைவது, நிறைவடைவது எப்படி என்பதற்கு ஒரு சூத்திரம் உள்ளது. அதைப் பார்ப்போமா?

இப்போது A B C D ..... என்ற ஆங்கில எழுத்துகளை எடுத்துக்கொண்டு அதற்கு முறையே பின்வருமாறு வரிசையாக எண்கள் கொடுப்போம்.

A B C D E F G H I J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z

இதற்கான எண்கள் வருமாறு

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

இப்போது பின்வரும் ஆங்கில பதங்களுக்கான எண்கள் வருமாறு..

H-A-R-D-W-O- R- K (கடின உழைப்பு)
8+1+18+4+23+ 15+18+11 = 98%

அத்துடன் சேர்க்க

K-N-O-W-L-E- D-G-E (அறிவு)
11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

எனினும் பின்வருவது வேண்டும்

A-T-T-I-T-U- D-E (மனப்பான்மை)
1+20+20+9+20+ 21+4+5 = 100%

கடின உழைப்பும் அறிவும் 100 சதவீதத்திற்கு அருகே நம்மை கொண்டு செல்கிறது. எனினும் நல்ல மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் நிச்சயம் 100 சதவீதம் உறுதி. அது சரி .. 101 சதவீதம்  பெறுவது எப்படி என்பதை நீங்கள் இன்னும் சொல்லவே இல்லையே, என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது மிகவும் எளிது. அதாவது இந்த மூன்றையும் நாம் கைக்கொண்டால் நமக்கு கடவுளின் அன்பும், அனுகிரகமும் நிச்சயம் கிடைக்கும். இப்போது 'கடவுளின் அன்பு' (God of Love) என்பதற்கு எண்கள் போட்டுப் பார்ப்போமா?

L-O-V-E-O-F- G-O-D
12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

இப்போது 101 சதவீதம் வந்து விட்டதா? எனவே நம் எல்லோருடைய வாழ்விலும் 101 சதவீதம் பெறுதல் மிக அவசியம். அதற்கு கடின உழைப்பு, அறிவு, இது மட்டுமில்லாமல் மனப்பான்மை (அதாவது உண்மையுடன் இருத்தல், நேர்மையாக செயல்படல், நம்பிக்கையை மீறாதிருத்தல் போன்ற நல்ல மன நிலைகளும், சிந்தனை போக்குகளும்) ஆகியன இருந்தால் கடவுளின் அன்புக்கு தானாக பாத்திரமாவோம். கடவுளின் அன்பு கிடைத்து விட்டால் சோதனைகளும், வேதனைகளும் சாதனைகள் தானே?

சிந்தனைக்கு இன்னும் சில வேடிக்கையான கணக்கு விளையாட்டுகளையும் கவனிப்போம்.

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

இவை மட்டும்தானா? இன்னொரு பெருக்கலையும் கவனியுங்கள்.

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

எப்படி நன்றாக இருந்ததா? வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த கணித விளையாட்டை காண்பிக்கவும்.  

வாழ்த்துகள்  !

13 July, 2010

"என்னா.. பண்ணான் இவன்..?" - வலைப்பதிவாளர்களுக்கு போட்டி

"என்னா.. பண்ணான் இவன்..?"

இது ஒரு அருமையான தலைப்பு.

இப்போது வலைப்பதிவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு போட்டி வைக்கப் போகின்றேன்.

"என்னா..... பண்ணான் இவன்..?" என்ற மேற்படி தலைப்பிற்கு பொருத்தமாக உங்கள் சிந்தனைகளை சிறகடித்து பறக்க விடுங்கள். அவை கவிதையாக இருக்கலாம்.குட்டிக் கதையாக இருக்கலாம். இல்லை அனுபவப் பகிர்வாக இருக்கலாம். உங்கள் சிந்தனைகளை விமர்சனப் பெட்டியில் இடுங்கள்.

சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் சிந்தனையின் சொந்தக்காரருக்கு "வலைப்பதிவு வல்லவர், 2010 " என்ற விருது வழங்கப்படும்.
 
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
சட்டப்பார்வை.

12 July, 2010

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க ! இது என்னுடைய 50-வது பதிவு !!

இந்தியாவில் விரைவில் வணிக நீதிமன்றங்கள் !

மைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் விரைவில் வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படவிருக்கின்றன என்றும், இதற்கான சட்ட முன்வடிவை வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சட்டமாக்க உத்தேசிக்கப்பட்ட சட்ட முன்வடிவில் ரூபாய் 5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வணிக நடவடிக்கைளுக்கு தனியாக  வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப்பட்டுள்ளது. இதனால் கீழமை  நீதிமன்றங்களின் பணிப்பளு, வழக்குகளின் தேக்க நிலை அப்படியேதான் இருக்கும். அதை கீழமை உரிமையியல்  நீதிமன்றங்களில் உள்ள வணிக வழக்குகளுக்கும் பொருந்தும் வண்ணம் செய்ய வேண்டும். இதற்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். அப்படி கீழமை  நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் வண்ணம் செய்து விட்டால் நிறைய பலன்கள் விளையும்.

இந்தியாவில் வணிக நீதிமன்றங்கள் கீழமை நீதிமன்ற பண வரம்பு அளவில் அமைக்கப் பெற்றால் அது வழக்கமான உரிமையியல் நீதிமன்றங்களின் பணிப்பளுவை வெகுவாகக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உரிமையியல் நீதிமன்றங்களில் முக்கியமாக இரண்டு வகையான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒன்று, சொத்து குறித்து எழும் வழக்குகள். மற்றொன்று பணம் வசூலித்தல் தொடர்பான வழக்குகள். அதாவது கடனுறுதி சீட்டின் உள்ளிட்ட மாற்று முறையாவணங்களின் அடிப்படையில் கொடுத்த கடனை வசூலிக்க தொடரப்படும் வழக்குகள் இன்றைய உரிமையியல் நீதிமன்றங்களின் கோப்புகளை பெரிதும் ஆக்கரமித்து உள்ளன. மேலும் மேலும் வணிக நடவடிக்கைளில் எழும் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் பாக்கி நிற்கும் தொகைகளை வசூலிக்கவும், மேலும் வணிக நடவடிக்கை தொடர்பாக உறுத்துக் கட்டளை கோரும் வழக்குகள், கூட்டாண்மை தொடர்பான வழக்குகள், வணிக நடவடிக்கையில் இழப்பீடு கோரும் வழக்குகள் ஆகிய வணிக வழக்குகளும் உரிமையியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.

தற்போது சட்ட அமைச்சர் மொய்லி தனது அறிக்கையில் சொன்னவாறு வணிக நீதிமன்றங்கள் அமிக்கபட்டும், அதற்க்கு கீழமை நீதிமன்ற பணவரம்பு பொருந்தும் வண்ணமும் செய்தால்,  உரிமையியல் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வணிக வழக்குகள் வணிக நீதிமன்றங்களுக்கு மாற்றப்படலாம். வணிக நடவடிக்கை சார்ந்த புதிய வழக்குகள் இந்நீதிமன்றகளில் தாக்கல் செய்ய வழிவகை பிறக்கும். இதனால் உரிமையியல் நீதிமன்றங்களில் தேக்கியுள்ள வழக்குகள் பாதியாக குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. அந்நீதிமன்றங்கள் பாகப்பிரிவினை, உறுத்துக் கட்டளை, குறித்த வகை நிவாரணம் போன்ற பிற தனி உரிமை வழக்குகளில் கவனம் செலுத்தி தீர்ப்பு வழங்கலாம். வழக்குகளும் விரைவில் தீர்வு காணப்படும்.

எனவே இவ்வாறு வணிக நீதிமன்றகள் அமைப்பது வரவேற்ப்புக்குரிய விடயம்தான் என்றாலும், அதை கிணற்றில் போட்ட கல்லாக்கி விடக்கூடாது. ஏனென்றால், காசோலை மோசடி தொடர்பான வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் அமைப்பது என முன்பு ஒரு முறை முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. அவ்வாறு கொண்டு வந்து இருந்தால், குற்றவியல் நீதிமன்றங்கள் சற்றே நிம்மதிப் பெரு மூச்சு விட்டு இருக்கும். அங்கு காசோலை மோசடி வழக்காடிகளின் கூட்டம் குறைந்திருக்கும். குற்றவியல் நீதிமன்றங்கள் தூய குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்தி வழக்குகளை விரைவில் முடித்து இருக்கலாம். எனவே வணிக நீதிமன்றங்களை ஏட்டளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் கொண்டு வர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயல வேண்டும்.

மொய்லியின் அறிக்கையில் உள்ள மற்றொரு முக்கிய விடயம் :

சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியின் அறிக்கையில் மற்றொரு வரவேற்கத்தக்க அம்சமும் உள்ளது. அது சட்டக் கல்வி தொடர்பானது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் 933 சட்டக் கல்லூரிகள் உள்ளன. சட்டக் கல்லூரிகளின் பாடத் திட்டங்களை மேம்படுத்தவும், சட்டக்கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரவும் முன்னரிமை வழங்கப்படும். ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குரைஞர்கள் உள்ள இந்தியாவில் சட்டக் கல்வி முறை மாற்றியமைக்கப்படும். அவற்றின் திறனை அதிகரிப்பதுடன், குறைந்தபட்சம் மாநிலத்திற்கு ஒன்று வீதம் தேசிய அளவிலான சட்டக் கல்வி நிறுவனங்கள் (லா ஸ்கூல்) அதிகரிக்கப்படும்."

நமது தமிழகத்தில் தேசிய சட்டக் கல்வி நிறுவனம் இல்லை. ஆனால் அதற்கு இணையாக முனைவர் அம்பேத்கர் சீர்மிகு சட்டப் பள்ளி சென்னையில் இயங்கி வருகிறது. இது கூட இல்லாமல் எத்தனையோ மாநிலங்கள் நமது இந்தியாவில் உள்ளன. எனவே மாநிலந்தோறும் ஒரு தேசிய சட்டப் பள்ளியை அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
 

இது என்னுடைய 50-வது பதிவு:

வலைப்பதிவில் எழுதத்தொடங்கி மெல்லமெல்ல இன்று 50-வது பதிவை எட்டிவிட்டேன். அதற்கு உங்கள் தோழமையும், ஆதரவும், பின்னூட்டங்களும், ஓட்டுகளும்தான் காரணம் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உங்களிடம் நிறைய பகிர்ந்து கொண்டு உள்ளேன். சட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு தொடர்பாக எனக்கு தெரிந்ததை, அறிந்ததை நான் இந்த வலைப்பதிவு மூலம் உங்களிடம் சொல்லி உள்ளேன். இன்னும் சொல்லப் போகின்றேன். மானுடம் எடுத்தது தேவைப்படுவோருக்கு தெரிந்ததை அறிந்து, இருப்பதை கொண்டு உதவி செய்வது என்று நான் நம்புகிறேன். ஒரு பதிவை எழுத குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகிறது. இந்த வலைப்பதிவில் எழுதுவதால் எனக்கு வருமானம் ஏதும் இல்லை. ஆனால் யாருக்கேனும் பயனாகும், யாருடைய கருத்தையாவது கவரும், யாரையேனும் சிந்தக்கத் தூண்டும், அறிவிக்கச் செய்யும், மகிழ்விக்கச் செய்யும் என்ற உளப்பூர்வமான உவகை உணர்வுடன் எழுதி வருகின்றேன். என்னுடைய எழுத்தில் வலிமையும், பலிதமும் கூட, இப்பணி மேலும் சிறப்புடன் தொடர உங்கள் வாழ்த்துகளை வேண்டி நிற்கின்றேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...