என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

25 December, 2011

நுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

நுகர்வோருக்காக வழக்குரைஞர் அல்லாத ஒரு முகவரும் வழக்கு நடத்தலாம் - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

நுகர்வோர் ஒருவர் தனது வழக்கை தனது அதிகாரம் பெற்ற ஒரு முகவரை (ஏஜென்ட்) கொண்டு நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் நடத்தலாம் என்றும், அத்தகு முகவர் ஒரு வழக்குரைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மருத்துவ கவனக்குறைவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்காக அல்லது அவருக்கெதிராக இன்னொரு மருத்துவர் வழக்கு நடத்தலாம் என்றும் அண்மையில் உரிமையியல் மேல்முறையீடு ஒன்றில் நமது உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. 


மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் எழுந்த வழக்கு என்ன?

சேவைக் குறைபாடு தொடர்பாக சுற்றுலா நடத்துனர்கள் இருவர் மீது நுகர்வோர் ஒருவர் தெற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கிடுகிறார்.  அந்த நுகர்வோர் தனது வழக்கை நடத்த முகவர் ஒருவருக்கு அதிகாரம் அளித்திருந்தார். இப்புகார் நிலுவையில் இருக்கும் போது, எதிர் தரப்பினர்களான அச்சுற்றுலா நடத்துனர்கள் இடைநிலை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் புகார்தாரரான நுகர்வோருக்காக வழக்கு நடத்த அவரது முகவருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், காரணம் அந்த முகவர் ஒரு வழக்குரைஞராக தன்னை பதிவு செய்து கொள்ளாதவர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதை ஆராய்ந்த மும்பை மாவட்ட மன்றம், நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர் தன்னை ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொள்ளாத காரணத்தால், மாவட்ட மன்றத்தின் முன் தோன்றவோ, வாதுரைக்கவோ உரிமை பெற்றவர் அல்ல என்று தீர்ப்புரைத்தது.

ஆனால் இதே போன்ற பிரச்னை எழுந்த மற்றொரு புகாரில், நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர்கள் அவருக்காக நுகர்வோர் மன்றங்களில் புகார் தாக்கல் செய்ய, செயல்பட, தோன்ற, வாதிட உரிமை பெற்றவர்கள் என்று தீர்ப்புரைக்கப்பட்டது. 

மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு:

ப்பிரச்சனைகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக  மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டன. அது, நுகர்வோரின் அதிகாரம் பெற்ற முகவர்கள் தோன்றி நடத்தும் வழக்குகளுக்கு எல்லாம் தடையாணை  பிறப்பித்தது. அதே நேரத்தில் நுகர்வோர் மன்றங்களில் நுகர்வோரின் முகவர்கள் தோன்றுவதிலிருந்து தடை விதித்து மாவட்ட மன்றங்கள் பிறப்பித்த உறுத்துக்கட்டளைக்கு தடையாணை பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் நுகர்வோர் மன்றங்களில் அதிகாரம் பெற்ற முகவர்கள் தோன்றும் ஏராளமான வழக்குகள் அப்படியே நின்று போயின.


பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 
நீதிப்பேராணை (ரிட்) மனுக்கள் தாக்கல் :

மாநில ஆணையம் மேற்கண்டவாறு பிறப்பித்த தடையாணைகளுக்கு எதிராக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்களை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஈராயம் அனுமதித்து ஆணையிட்டன. அதில், "1986-ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட நுகர்வோர் மன்றங்கள், 'ஒரு உரிமையில் நீதிமன்றத்தின் அம்சங்களை கொண்டதாகும்' (trappings of a Civil Court) என்றும், ஆனால் அவை, "உரிமையியல் நடைமுறை சட்ட வகை முறைகளின் கீழ் உரிமையியல் நீதிமன்றங்கள் அல்ல (are not civil courts within the meaning of the provisions of the Code of Civil Procedure)' என்றும்" கருத்துரைத்தது.

இதன் அடிப்படையில், முடிவில் மாவட்ட மன்றம் அல்லது மாநில ஆணையத்தில் வழக்கிடும்   நுகர்வோர் ஒருவர் தனது வழக்குக்காக வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்றும், அவ்வாறு வழக்குரைஞர் அல்லாத முகவர் ஒருவர் நுகர்வோர் மன்றங்களில்/ஆணையங்களில் தோன்றுவது 1961 -இன் வழக்குரைஞர் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரண்பட்டதல்ல என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

மேலும் மற்றொரு முக்கிய கருத்தையும் பம்பாய் உயர் நீதிமன்றம் முன் வைத்தது.  அதாவது,  வருமான வரிச் சட்டம், விற்பனை வரிச் சட்டம், முற்றுரிமை  மட்டும் தடுப்பூட்டும்  வணிக  நடவடிக்கை (Monopolies and Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியன சம்பந்தப்பட்ட அதிகராமைப்புகளுக்கு முன் வழக்குரைஞர்கள் அல்லாதவர்களையும் தரப்பினர்களுக்காக பேச, வாதிட அனுமதி அளிக்கின்றன. அவர்களை சட்டத் தொழில் புரிபவர்களாக கூற முடியாது. அவ்வாறே 1986-ஆம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2000 -ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகள் மாவட்ட மன்றங்களில் நுகர்வோர்களுக்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் தோன்றுவதை அனுமதிக்கின்றன. அவ்வாறு தோன்றுவதை வழக்குரைஞர்கள் சட்டம் பிரிவு 33-க்கு முரண்பட்ட ஒன்று என்று கூற முடியாது என பம்பாய் உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

ஒருவேளை அத்தகு முகவர்கள், மாவட்ட மன்றம்/மாநில ஆணையத்தில்   ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களது வாதத்தை அந்த குறிப்பிட்ட வழக்கில் கேட்க மறுத்து அவை ஆணையிடலாம். அதற்கு அவற்றுக்கு அதிகாரம் உண்டு என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 

உச்ச நீதிமன்றத்தில் உரிமையியல் மேல்முறையீடு

னினும் இத்தீர்ப்பினால் குறையுற்ற எதிர் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீடுகள்  செய்தனர். அம்மேல் முறையீடுகளை ஆராய்ந்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய ஈராயம், அவற்றில் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அடங்கியுள்ளது என்பதால்,அவற்றை மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயத்தின் முன் முடிவுக்கு வைத்தது.

அம்மேல்முறையீடுகளை மாண்பமை நீதியரசர்கள்   தல்வீர் பண்டரி, முனைவர் முகுன்டகம் சர்மா மற்றும் அணில் ஆர்.தேவே ஆகியோர் அடங்கிய ஆயம் பல்வேறு முன் தீர்ப்பு நெறிகள், சட்ட திட்டங்கள்,  பல நாட்டு சட்ட நிலைப்பாடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு ஆராய்ந்தது. 

அது தனது தீர்ப்பில் பல்வேறு சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து, முற்றுப் புள்ளி வைத்தது. அது தனது தீர்ப்பில் பம்பாய் உயர் நீதிமன்றம் எடுத்த மேற்கண்ட முடிவுகள் யாவும் சரியான ஒன்றே என ஏற்றுக் கொண்டது. மாவட்ட மன்றங்கள் / மாநில ஆணையங்கள் ஆகியவற்றில் நுகர்வோர்களுக்காக அவரது அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை வாதிட அனுமதிக்கலாம், அம்முகவர்கள் சட்டத் தொழில் ஆற்றுபவர்களாக, வழக்குரைஞர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை என்ற கருத்தை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சரியென அங்கீகரித்தது.

மருத்துவரின் வழக்குக்கு மற்றொரு மருத்துவர் தோன்றி வாதிடலாம் 
பொறியாளருக்கு எதிரான வழக்கில் புகார்தாரருக்காக மற்றொரு பொறியாளர் வழக்கு நடத்தலாம் 

து தொடர்பாக உச்ச நீதிமன்றம் 'மகாராஷ்டிரா நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை' பரிசீலிக்கையில், பின்வரும் கருத்துகளை தெளிவுபடுத்தியது. அதாவது, "நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எழும் வழக்குகள் சிறிய அளவிலான இழப்பீட்டுக் கோரிக்கைகளை கொண்டவை. எல்லா வழக்குகளிலும் வழக்குரைஞர்களை நியமனம் செய்வது என்பது பொருளாதாரரீதியாக  சரி  வராது. அதே நேரத்தில் பல வழக்குகள் துறை சார்ந்த நிபுணர்களின் உதவி தேவைப்படுவதாக இருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் மருத்துவ கவனக் குறைவுக்காக மருத்துவமனை மீது வழக்கிடலாம்; அல்லது கட்டட வரைபடத்தை தவறாக வரைந்து கொடுத்தமைக்காக வரைகலைஞர் மீது வழக்கிடலாம்; அல்லது கட்டடத்தை தவறாக கட்டிக் கொடுத்தமைக்காக கட்டட ஒப்பந்தக்காரர் மீது வழக்கிடலாம். இப்படிப்பட்ட வழக்குகளில், மருத்துவர், வரைகலை நிபுணர், பொறியாளர் போன்ற தொழிலாற்றுனர்கள், ஒரு வழக்குரைஞரை விட பொருத்தமானவர்கள் ஆவர். எனவே, புகார்தாரர் மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவருக்கும் தங்கள் வழக்கை நடத்த அவர் வழக்குரைஞர் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் வல்லுனர்களாக இருக்கும் வேறு எவரையும் நியமனம் செய்யலாம், அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இந்நிலைப்பாடு வழக்கின் இரு தரப்பினரையும் சமமான நிலையில் வைக்கின்றது," உச்ச நீதிமன்றம் கூறியது.

விதிகள் வகுக்கும்படி தேசிய ஆணையத்திற்கு
உச்ச நீதிமன்றம் ஏவுரை 

மேலும் இது குறித்து விதிகளை வகுக்கும்படி தேசிய நுகர்வோர் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் சில ஆலோசனைகளை முன் வைத்தது. அவற்றின்படி அந்த முகவர் தனியொரு வழக்கு என்ற அடிப்படையில் தோன்ற வேண்டும். நுகர்வோருக்கும் முகவருக்கும் ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக, உறவினர், அண்டை வீட்டுக்காரர், தொழில் துணைவர் அல்லது நெருங்கிய நண்பர் போன்று), மேலும் வழக்குக்காக கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்று மாவட்ட மன்றத்தின் முன் அம்முகவர் விளம்புகை செய்ய வேண்டும், தரப்பினருக்காக தான் வழக்காட தகுதி பெற்றவர் என்பதை மாவட்ட மன்ற தலைவர் முன் காட்ட வேண்டும். இவ்வாறு பல்வேறு யோசனைகளை உச்ச நீதிமன்றம் முன் வைத்து அவற்றை விதிகளாக வகுப்பதற்கு பரிசீலனை செய்யும்படி தேசிய ஆணையத்திற்கு ஏவுரைத்தது.

முடிவு

முடிவில் முன் சொன்னபடி பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முழு நீள ஆங்கிலத் தீர்ப்புக்கு 
பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கவும் 


C.Venkatachalam Vs. Ajitkumar C.Shah and Ors.  - C.A.No. 868 of 2003 and Bar Council of India Vs. Sanjay R.Kothari and Ors. - C.A.No. 869 - 870 of 2003 - Supreme Court of India - Dalveer Bhandari, Dr. Mukundakam Sharma & Anil R. Dev, JJ. - Decided on 29-08-2011.


24 December, 2011

இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா?

இயக்கூர்திகள் சட்டம் (59/1988), பிரிவு 169 - உரிமையியல் நடைமுறை சட்டம், கட்டளை 38, விதி 5; கட்டளை 41, விதி 23-A. - 

வழக்கின் சங்கதிகள்படி, விபத்து ஏற்படுத்திய 'டிராக்டர் மற்றும் ட்ரைலர்'  வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்தை 'தீர்ப்பிற்கு முன் பற்றுகை' (Attachment before judgment) செய்யவும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா எனும் கேள்வி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன் எழுந்த போது, உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 38, விதி 5-இல் கண்ட வகைமுறைகள் (தீர்ப்பிற்கு முன் பற்றுகை செய்வது குறித்த நடைமுறைகளைக் கூறுவது), இயக்கூர்திகள் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நிலை நிறுத்தப்பட்டது.

எனவே, விபத்து வழக்குகளில் இழப்பீட்டிற்கான முடிவான தீர்வம் பகரப்படுவதற்கு முன்னதாக அத்தீர்வத் தொகையை பின்னிட்டு வசூலிப்பதற்கு உதவிகரமாக இருப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தை பற்றுகை (ஜப்தி) செய்யலாம். தீர்வத்திற்கு பிறகு அவ்வாகனத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

(Duvvuru Siva Kumar Reddy and etc. v. Malli Srinivasulu and etc.)


23 December, 2011

அணிலைப் போலவாவது வாழ்வோமே !


" ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....

அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...

ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....

காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்

நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .............."

இது அண்மையில் நான் படித்த, கவிஞர் சுஜா எழுதிய கவிதை. அப்படி ஒரு சிறு துரும்பெடுத்து போட்டதற்கே,  இராமாயணத்தில் அணிலுக்கு மிகச் சிறப்பானதொரு இடம் கிடைத்தது.

சீதையை மீட்க, கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டது. பாலவேலை நடந்த இடத்தில் இருந்த அணில், வானரங்களோடு சேர்ந்து பணிசெய்து ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று எண்ணியது. கடல் நீரில் மூழ்கி, கடற்கரை மணலில் புரண்டு எழுந்தது. ஈரவுடம்பில் ஒட்டிக் கொண்ட மணலை குரங்குகள் போட்ட பாறையில் உதிர்த்துவிட்டு வந்தது. (சில குறிப்புகளில் அது மிகச் சிறிய கூழாங் கற்களை தனது வாயில் கவ்வி கொண்டு வந்து இட்டது எனப்படுகிறது). இப்படி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த அணிலின் செயலை கவனித்தார் ராமன். அன்போடு அதன் முதுகில் தனது கைகளால் தடவிக் கொடுத்தார். அது அணிலின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகளாக விழுந்தன. அன்றுமுதல் அணில் ராமபிரானுக்கு மட்டுமல்ல, நமக்கும் அன்பிற்குரிய பிராணியாகிவிட்டது. 

இந்த ராமாயண குறுங்கதை சொல்லாமல் சொல்வது என்ன?

ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்பது அணிலின் விருப்பம். அதற்கு அவரது கருத்தைக் கவர வேண்டும். அருகில் பாலம் கட்டப்படுகிறது. ஆனால் அதற்காக பலம் வாய்ந்த வானரங்கள் பணி செய்கின்றன. சிறியவன், எளியவனாகிய தான் என்ன செய்து விட முடியும் என்று அணில் திகைத்தது. எனினும் தனது சக்திக்கு இயன்ற வரையில் செய்ய முடிவு செய்து அப்பாலம் கட்ட மணலை, (சிறு கூழாங் கற்களை) ஒட்டிக் கொண்டு வந்து உதிர்த்தது.    சிறிய உதவிதான். எனினும் அப்பாலத்தின் உருவாக்கத்தில் அணிலின் மணலும் சேர்ந்துள்ளது. அணில் காலத்தே செய்த உதவி ராமனின் மனதை ஈர்த்தது. அவர் அன்புடன் அணிலை தடவிக் கொடுத்து அதற்கு அருள் பாலித்தார். அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் அதற்கு ராமர் அணிவித்த தங்கப் பதக்கமாக இன்றும் காட்சி தருகிறது. இறைவனின் அருளைப் பெற்றதும்,   சமகாலத்தில் கண்ணெதிரே வாழ்வதுமான ஓர் உயிரினத்திற்கு இந்த சிறு அணிலும் ஒரு சான்று. முதுகில் மூன்று கோடுகள் உள்ள அணில்கள் ராமனின் அருளையும், அன்பையும் பெற்றவையாக போற்றப்படுகின்றன. அணில் 'பிள்ளை' என்று பாசமுடன் அழைக்கின்றோம்.

எளியவனின் சிறு உதவி என்றாலும் அது காலத்தே செய்யும் உதவியாக இருப்பின், மிகப் பெரியது. அதை போற்ற வேண்டும். மறந்து விடக் கூடாது. உதவி செய்தோருக்கு தக்க சமயத்தில் மறு உதவி செய்யவும் தயங்கக் கூடாது. 

ஆனால் இந்தக் காலத்தில் யார் இப்படிப்பட்ட கதை பற்றி கவலைப் படுகிறார்கள் ? கேட்டு கேட்டு உதவிகளை வலியப் பெற்று, பலன் அடைந்தவுடன், உடனடியாக அதை மறந்தும் விடுகிறர்கள். உதவி செய்தவரை எங்கோ பார்த்தது போல் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது. ஏறி வந்த ஏணியை எட்டித் தள்ளி விடுகிறார்கள். இன்னும் சில நேரங்களில் உதவி செய்தவனுக்கு சுயநலம் கருதி உபத்திரவம் செய்யவும் தயங்குவதில்லை. கொடுமையிலும் கொடுமை இதுவன்றோ..?

"வலியவனோ, எளியவனோ அவன் யாராக இருந்தாலும் எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும். வாங்கியாச்சுன்னா அவ்வளவுதான்.., நீ யாரோ.. நான் யாரோ.. " என்று சொல்லும் கூட்டம்தான் இந்த உலகில்  அதிகம் நடமாட்டம் செய்கிறது. 

இப்படி கூட சொல்லலாம்... 

அதாவது, இராமாயணத்தில் ராமர் ஒரு மானுட அவதாரம். அப்படி ஒரு மனிதன் ஒரு நெருக்கடியில், தேவையில் இருந்த போது அவருக்கு அணில் உதவியது. அத்துடன் குரங்கு, ஜடாயு போன்ற மற்ற உயிரினங்களும் உதவின. அப்படி மற்ற உயிரினங்களே உதவும் போது ஒரு மனிதன் துன்பத்தில், தேவையில் இருக்கையில், மற்றொரு சக மனிதன் அவனுக்கு பெரிய உதவி செய்யாது போனாலும் அணிலைப் போல சிறு துரும்பையாவது தூக்கிப் போடலாம். சில ஆறுதல் வார்த்தைகள் கூட போதும். அதே போன்று செய்த உதவிக்கு ராமன் அணிலுக்கு கொடுத்த அங்கீகாரம் மிகப் பெரியது. அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், இந்த மனிதப் பிறவியினர் செய் நன்றி மறக்காமலாவது இருந்தால் நன்று. 

செய் நன்றி கொன்றவருக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும்  உய்வில்லை !  

22 December, 2011

சீனாவில் ஒரு வினோத ஜந்து - படங்கள்

சீனாவில் ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வினோத ஜந்து (அல்லது விலங்கு) அங்கிருக்கும் வீடுகளில் நுழைந்து மக்களை பயமுறுத்தியது. மிரட்டும் பெரிய கண்கள், சிறிய உருவம், தலையில் முடி இல்லை என அது விசித்திரமாக  உள்ளது. அதன் முகத்தை பார்த்தால் மட்டும், அது குரங்கு இனத்தை சார்ந்ததாக தெரிகிறது. அதை பழத்தாசை காட்டி ஒருவர் லாவகமாக பிடித்து விட்டார். தற்போது அது குரங்கு இனத்தின் ஒரு வகையா என்பதை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வினோத 'ஏலியனின்' படங்களை பார்த்தால் உங்களுக்கு விவரம் புரியும்.20 December, 2011

"தட்கல்" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் !


பேருந்து கட்டண உயர்வின் எதிரொலியாக அனேகம் பேர் தொடர்வண்டியில் பிரயாணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதைய பேருந்து கட்டணத்தைக்  காட்டிலும் தொடர்வண்டி கட்டணம் மிகக் குறைவாக தெரிகிறது. எனவே கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்தாலொழிய பயணச் சீட்டோ, அமர இடமோ கிடைப்பதில்லை.

'தட்கல்' முறையில் பயணச் சீட்டு வேண்டுமெனில் இரண்டு நாட்களுக்கு  முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இது முன்பு இருந்த விதி. தற்போது கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல், பயணம் செய்வதற்கு முதல் நாளில்தான் தட்கல் பயணச் சீட்டு வழங்கப்படும் என்று தொடர்வண்டி நிருவாகம் அறிவித்துள்ளது. அதாவது தொடர்வண்டி கிளம்பும் தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக மட்டுமே தட்கல் சீட்டு வழங்கப்படும். சுருங்கச் சொன்னால் முன்பதிவானது, 48  மணி நேரங்களுக்கு முன்பு என்பது தற்போது 24  மணி நேரங்களுக்கு முன்பு என்று ஆக்கப் பட்டுள்ளது. 


ஒரு தொடர்வண்டி அதன் தொடக்க நிலையத்தில் இருந்து அடுத்தமாதம் இரண்டாம் தேதி புறப்படுகிறது என்றால், அதற்கான தட்கல் பயணச் சீட்டு வழங்கும் நேரம் அதற்கு முந்தைய தினமான 1-ஆம் தேதி காலை 8  மணிக்கு தொடங்குகிறது. முந்தைய நடைமுறைப்படி இரண்டு நாட்களுக்கு முன்பே தட்கல் சீட்டு பெறலாம் என்ற நிலை இருந்த போது, ஒரேடியாக அனைவரும் கணினியில் குவிந்து பதிவு செய்தனர். (அச்சமயம் தொடர்வண்டி நிருவாக இணையத்தளம் கூட சட்டென திறக்காமல் சண்டித்தனம் செய்யும்.) இதனால் விரைவில் எல்லா  சீட்டுகளும்  தீர்ந்து,  இடத்திற்கான மறு வாய்ப்புக்கு வழி இல்லாமல் போனது. தற்போது இந்த மறு வாய்ப்பு, தினம் தினம் பயணிகளுக்கு கிட்டியுள்ளது. இது பயணிகளுக்கு கிடைத்துள்ள உள்ளபடியான வசதி என்று எனக்குத் தோன்றுகிறது. (இதில் மாற்றுக் கருத்து ஏதும் இருந்தால் கருத்துரை இடலாம்.)

அதே நேரம் இங்கு மற்றொரு சங்கதியையும் அலச வேண்டியுள்ளது. அதாவது தட்கல் முறையில் பயணச் சீட்டு பெற்று, அதை இரத்து செய்தால் பயணக் கட்டணம் திரும்பத் தரப்படமாட்டது. இது தொடர்வண்டி நிருவாகத்தின் வணிகச் சுற்றறிக்கை கூறும் விதி. இதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உடன்பாடு இல்லை. 

சாதாரண முன்பதிவு சீட்டை இரத்து செய்தால் எப்படி கட்டணம் திரும்பத் தரப்படுகிறதோ, அவ்வாறே தட்கல் சீட்டுக்கும் தரப்படவேண்டும். காரணம் தட்கல் முன்பதிவு முறையில் முன்பதிவு செய்தவர் தனது பயணத்தை தள்ளி வைக்கிறார் அல்லது அவரால் அன்றைய தினம் பயணம் செய்ய இயலவில்லை என்றால், அவர் தனது தட்கல் பயணச் சீட்டை இரத்து செய்ய முன்வருவதில்லை. 'இரத்து செய்தால்தான் என்ன கிடைக்கப் போகிறது?' என்ற எண்ணத்தில் அப்படியே பேசாமல் இருந்து விடுவர். பெரும்பாலனோர் அதற்காக மெனக்கெடுவதில்லை.  அப்போது என்ன ஆகிறது? அவருக்கடுத்து காத்திருப்போருக்கு சீட்டு கிடைப்பதில்லை. இதனால் யாருக்கு என்ன பலன்? 
'தட்கல்' சீட்டை இரத்து செய்வோருக்கு, பயணக் கட்டணத்தை தொடர்வண்டி நிருவாகம் தர மறுப்பது நியாயமா?

எனவே சாதாரண பயண சீட்டை போல், தட்கல் முறை பயணச் சீட்டை இரத்து செய்தாலும், பயணக் கட்டணத்தை திரும்பத் தர தொடர்வண்டி நிருவாகம் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

என்ன சரிதானே?


15 December, 2011

படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா?

 • இது ஒரு அற்புத அனுபவம்.
 • நீங்கள் அறிவுசார் சூழலில் இருக்கிறீர்கள்.
 • மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
 • உலகம் உங்களை சுற்றி உள்ளது.
 • உலகம் முழுவதையும் சிக்கனமாக சுற்றி வர முடிகிறது.
 • உங்கள் ஆளுமையை வளர்க்கிறது.
 • மனதிற்கு உற்சாகம் தருகிறது.
 • சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது.
 • அறிவின் எல்லைகள் விரிவாகிறது.
 • உங்கள் வாயிற்படியில் இயற்கையை கொண்டு வருகிறது.
 • உங்களை சிரிக்க, சிந்திக்க, பகுத்தறிய வைக்கிறது.
 • இது உங்கள் வாழ்வையும் கண்ணோட்டத்தையும் மாற்ற வல்லது.
 • முழுமையை  நோக்கி  உங்களை கொண்டு செல்கிறது.
 • உருவாக்கும் திறனை தூண்டுகிறது.
 • உங்கள் எழுத்தார்வத்தை வளர்க்கிறது.
 • கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
 • வாழ்வின் இலட்சியங்களை அடைய உதவுகிறது.
 • 'கனவு' காண அழைப்பு விடுக்கிறது.
 • எல்லாம் தெரிந்தவராக மாற்றுகிறது.
 • உங்கள் பார்வையை தெளிவாக்குகிறது.
 • நீங்கள் படிப்பதால் உடனிருக்கும் மற்றவர்களும் படிக்கிறார்கள்.
 • உங்கள் தேடலுக்கு மன நிறைவு தருகிறது.
 • சிறந்ததை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
 • உங்களை வளர்த்திக் கொள்ள செய்கிறது.
 • மதி நுட்பத்தை மேம்படுத்துகிறது.
 • படிக்க ஆரம்பித்தால் பழக நண்பர்கள் கூட தேவையில்லை.
 • கல்வியறிவை வளர்த்துக்  கொள்ள உதவுகிறது.
 • பயனுள்ள பொழுதுபோக்கு.
 • படிப்பதற்கு தனிச் சிறப்பு கருவிகள் ஏதும் தேவையில்லை.
 • எழுச்சி தருவது.
 • கல்லாமையை களைகிறது.
 • எங்கும், எப்போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.
 • இது உங்களை துடிப்புள்ளவராக, அறிவாளியாக காட்டுகிறது.
 • உங்களைச் சுற்றி மற்றவர்களை இருக்கச் செய்கிறது.
 • மற்ற மகிழ்ச்சிகள் தோற்கையில், இது மன மகிழ்ச்சியை தருகிறது.
 • இது உங்களை சக்தியுள்ளவராக ஆக்குகிறது.
 • இது எதையும் ஏன், எவ்வாறு என்று அறிய வைக்கிறது.
 • இது உங்களை கனவெனும் வானில் சிறகடிக்க ஊக்குவிக்கிறது.
 • இது உங்கள் சுயமரியாதையை மேம்படுத்துகிறது.
 • இது தன்னம்பிக்கையையும், துணிவையும் வளர்க்கிறது.
 • இது மனதிற்கும், உடலுக்கும் களைப்பு நீங்க ஓய்வு தருகிறது.
 • இது தகவல் தெரிவிக்கும் கருவியாக உள்ளது.
 • இது உங்களை அறிவார்ந்த வழியில் மனநிறைவடைய செய்கிறது.
 • இது உங்களுக்கு உணர்வுபூர்வமான வலிமையை தருகிறது.
 • இது காலத்தைக் கடந்து பயணம் செய்விக்க வல்லது.
 • இன்று வரையிலான புள்ளி விவரங்களை அறியச் செய்கிறது.
 • அன்பு, பாசம் மற்றும் அறிவை பரப்புகிறது.
 • ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.
 • புத்தககங்களே உற்ற தோழர்கள். 
அனைத்தையும் அனுபவித்தே அறிய முடியாது.
அதற்கு வாழ்நாளும் போதாது.
அனுபவித்தவர்களும், அறிந்தவர்களும் தங்கள் 
எண்ண ஓட்டங்களை கொண்டு 
எழுதியதை படிப்பதன் வாயிலாக,
உலகத்தை, உங்களிரு 
உள்ளங்கைகளுக்குள் அடக்கி விடலாம்.எனவே
படியுங்கள்.. படியுங்கள்... படியுங்கள்..

11 December, 2011

முள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க !

கொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே மூட்டையாக கட்டி எடுத்து வந்து, பிறகு ஊருக்குள் மூஞ்சுக்கல் என்ற இடத்தின் வழியாக ஓடும் ஒரு ஓடை நீரில் போட்டு கழுவுகிறார்கள். 

அந்த ஓடை தண்ணீரில் அருகில் உள்ள விடுதிகளின் கழிவு நீரும் சேர்க்கிறது. அத்துடன் அங்கேயே துவைக்கவும் செய்கிறார்கள். 

பின்வரும் நிழற்படங்களில் நீங்கள் முள்ளங்கியை அவ்வாறு சுத்தம் செய்யும் விதத்தை காண்கிறீர்கள்.


முள்ளங்கியை மூட்டையுடன் தண்ணீரில் அலசுகிறார்கள். பிறகு ஒரு கூடையில் போட்டு...


மீண்டும் அலசுகிறார்கள்...

அங்கேயே துணி துவைக்கவும் செய்கிறார்கள்..


பக்கட்டில் நீர் பிடித்து....


முள்ளங்கி மீது ஊற்றுகிறார்கள் 


முள்ளங்கியை 'இந்த' தண்ணீரில் வெள்ளைவெளேரென ஆக்கி மூட்டை கட்டுகிறார்கள். 


"ஹைய்யா ... நான் பச்சையா கூட தின்பேனே" என்று ஆவேசப்படாமல் காய்கறிகளை, பழங்களை சுத்தமான தண்ணீரில் கழுவி சாப்பிடுங்கள், சமையுங்கள் ! 

படங்கள் உதவி : ஜோதி.10 December, 2011

எப்படி இருந்தவங்க எப்படி ஆய்ட்டாங்க பாத்தீங்களா?

திருமணத்திற்கு  முன்பு 
(அதாவது காதலிக்கும் போது என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

"அவனும் அவளும்" என்ன பேசினார்கள் ?


அவன் : உம்... காத்துக்கிட்டுருக்கிறது ரொம்ப கஷ்டம்.

அவள் : நீங்க என்னை விட்டுட்டு போயிடமாட்டீங்களே ?

அவன் : இல்லை.. இல்லை.. சத்தியமா இல்லை...

அவள் : நீங்க என்னை விரும்புறீங்களா?

அவன் : நிச்சயமா..

அவள் : நீங்க என்னை ஏமாத்திடுவீங்களா ?

அவன் : மாட்டேன் .. ஏன் இப்படி கேட்டுகிட்டே இருக்கே?

அவள் : நீங்க எனக்கு ஒரு முத்தம் தருவீங்களா?

அவன் : கண்டிப்பா..

அவள் : நீங்க என்னை அடிப்பீங்களா?

அவன் : சான்சே இல்லை.. நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது..

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : உம்..

அவள் : அன்பே....

--------------------------------------------------------------------------------------------

திருமணத்திற்கு பின்பு ...

"அவனும் அவளும்" என்ன பேசினார்கள் ?மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாக வாசித்துக் கொள்க !


கொஞ்சம் படிச்சிட்டு போங்க..! உங்க நல்லதுக்குதான் சொல்றேன்..!!


தொலைபேசியை இடது காதில் வைத்துப் பேசவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி அருந்தாதீர்கள்.

குளிர்ந்த நீருடன் (ஐஸ் வாட்டர்) மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.

மாலை 5 மணிக்கு பிறகு வயிறு புடைக்க உண்ண வேண்டாம்.

எண்ணெய் அதிகம் கலந்த உணவு வகைகளை கண்டிப்பாக குறைத்துக் கொள்ளவும்.

காலைப் பொழுதில் இயன்றவரை அதிகமாக நீர் அருந்தவும். இரவில் குறைத்துக் கொள்ளவும்.

காதொலிப்பானை (earphone/headphone) நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.

இரவு 10  மணிக்குள் படுக்கச் செல்வதும், காலை மணிக்குள் எழுந்து விடுவதும் நல்லது.

படுப்பதற்கு முன் மாத்திரை உட்கொண்டால், அதன் பின் உடனடியாக கீழே தலை சாய்த்து படுத்து விடாதீர்கள்.

உங்கள் செல்பேசியில் உள்ள பாட்டரி மின்சாரத்தின் அளவு கடைசிக் கோட்டில் இருக்கும் போது வரும் அழைப்புகளை எடுத்துப் பேச வேண்டாம். ஏனெனில் அச்சமயத்தில் உண்டாகும் கதிர் வீச்சு சாதாரண சமயத்தை விட 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.


09 December, 2011

பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க நீதிபதி கையாண்ட வைத்தியம்

"எங்கள் குடும்ப நீதிமன்றங்களுக்கு உப்புசப்பில்லாத ஏராளமான வெட்டி வழக்குகள் வருகின்றன" என்று கவலையுடன் கூறும் நீதிபதிகளுக்கு 'பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம்' முறை தீர்வு பற்றி கூறுகிறார் போபால் குற்றவியல் நடுவர் (மாஜிஸ்டிரேட்) திரு. கங்காசரண் தூபே. 

தம்பதிகள் ஏன் பிரிகிறார்கள் ?

இந்த நீதிபதி பிரிந்து போகவிருந்த ஒரு தம்பதியினரை பிரியாணி கொண்டும், மற்றொரு தம்பதியினரை ஐஸ்கிரீம் கொண்டும் சேர்த்து வைத்திருக்கிறார். இவர், தம்பதிகளுக்குள் தகராறு என்பது மிகச் சிறிய (ஒன்றுக்கும் பெறாத)  பிரச்சனைகளில் இருந்தே பூதாகரமாக கிளம்புகின்றன என்று தாம் நம்புவதாக கூறுகிறார். 

குடும்ப வழக்குகளை தீர்ப்பதில் குற்றவியல் நடுவர் கங்காசரண் தூபேவின் அணுகுமுறை மிகச் சாதாரணமானது, வெகு இயல்பானது. இவர் அண்மையில் தீர்த்து வைத்த மூன்று வழக்குகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். 

'பிரியாணி வழக்கு':

இந்த வழக்கில், தன்னை கொடுமை செய்த குற்றத்திற்காக விமான ஓட்டியாக இருக்கும் தனது கணவனை குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஓரளவு வசதி படைத்த 22 வயது பெண் ஒருவர் புகார் செய்கிறார். 2009-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டிருந்த இத்தம்பதியினர் திருமணம் முடிந்த சில வாரங்களுக்குள்ளாகவே பிரிந்து விட்டனர்.    

இந்த வழக்கு அண்மையில் குற்றவியல் நடுவர் தூபே தலைமை வகித்த மக்கள் மன்றத்தின் (லோக் அதாலத்) முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பெண் கொடுத்திருந்த புகாரை தூபே பரிசீலனை செய்தார். சுமார் 10 பக்கங்களில் இருந்த அப்புகாரில், கொடுமை, தாம்பத்திய உரிமைகளை தர மறுத்தல், வரதட்சணை கோரிக்கை என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அப்பெண் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளி இருந்தார். 

புகார் குறித்து தூபே விசாரிக்கும் போது, முதலிரவின் போது தனது கணவனுக்கு ஒரு பெண் நண்பரிடம் இருந்து தொலைபேசி வந்தது என்றும், அதை தான் ஆட்சேபணை செய்ததாகவும் அப்பெண் கூறினார். மேலும் தேனிலவுக்காக பாங்காக் செல்லும் வழியில் வேறு சில பெண் நண்பர்களிடம் இருந்து தந்து கணவனுக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும், எனவே பாதி வழியில் திரும்பி விட்டதாகவும், பின் தனது கணவன் அசாமில் உள்ள தனது பணியிடத்திற்கு சென்று விட்டதாகவும், தான் போபாலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் அப்பெண் கூறினார். தனது புகாரில் உள்ள வேறு சில விஷயங்கள் பற்றி தனக்கு சரியாகத் தெரியாது என்றும், ஆனால் அதில் உள்ள கையெழுத்து தன்னுடையதுதான் என்றும் அவர் மேலும் கூறினார். 

இந்த தம்பதியினர் இடையே உள்ள பிரச்சனை அற்பமானது என்பதை அறிந்த நீதிபதி தூபே, "உங்கள் கணவரை நீங்கள் எங்கு முதலில் சந்தித்து, என்ன சாப்பிட்டீர்கள்" என்று அப்பெண்ணிடம் வினவினார்.  மேலும் அவர்கள் இருவரையும் ஒரு நாள் மாலை வேளையில் அதே இடத்திற்கு சென்று, முன்பு சாப்பிட்ட அதே உணவை சேர்ந்து சாப்பிடும்படி ஆலோசனை வழங்கினார். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் அந்த நேரத்தில் 'கோழி பிரியாணி' சாப்பிட்டதாக ஒரே குரலாக கூறினார். 

இதை அடுத்து அத்தம்பதியினர் போபாலில் உள்ள புகழ் பெற்ற Bada Talaab - ஐ நோக்கி உள்ள Noor-us-Sabah  என்ற உணவகத்திற்கு சென்று, கோழி பிரியாணி  உண்டனர். இந்த இடம்தான் அவர்கள் தங்கள் திருமணதிற்கு முன் முதலில் சந்தித்த இடமாகும். அவர்களை நீதிமன்ற பணியாளர் ஒருவர் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

என்னே வியப்பு ! அடுத்த நாள் அப்பெண் நீதிமன்றத்திற்கு வந்து தான் தனது கணவர் மீது கொடுத்திருக்கும் வழக்கை திரும்பப் பெற விளைவதாக (வாபஸ்) கூறினார். மேலும் தங்கள் இல்வாழ்க்கை உறவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புவதாகவும் கூறினார். 

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005-இன் பிரிவு 28-ஆனது, வழக்குகளை முடிக்க தங்கள் சொந்த நடைமுறைகளை வகுத்துக் கொள்ள நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது என்று தனது சட்டப் படிப்பின் போது தங்க பதக்கம் வென்ற நீதிபதி தூபே கூறுகிறார். 

'ஐஸ் கிரீம்' வழக்கு:

இந்த வழக்கில் இளம் குழந்தைக்கு தாயாக உள்ள ஒரு பெண்ணின் வழக்குரைஞர்கள் அவரது கணவனுக்கு எதிராக சித்திரவதை, கொடுமை, துர்நடத்தை, மேலும் பல கடுமையான குற்றச்சாட்டுக்களை அதே குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் முன் வைக்கின்றனர்.  இதன் பொருட்டு அப்பெண்ணை நீதிபதி தூபே விசாரணை செய்தார். அப்போது அப்பெண்ணுக்கு ஐஸ்கிரீம் மீது கொள்ளைப் பிரியம் உள்ளதையும், அதை அவரது கணவர் வாங்கித் தர மறுப்பதையும் பெருங் குறையாக கூறினார். கணவரிடம் விசாரித்த போது, "தனது மனைவி குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்து வருவதால், அவர் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் அதனால் குழந்தைக்கும்  சளி பிடிக்க வாய்ப்பு உண்டு என்றும், எனவே தான் ஐஸ் கிரீம் வாங்கித் தரவில்லை என்றும்," அவர் தனது தரப்பு நியாயத்தை சொன்னார். 

இதற்கு நீதிபதி தூபே என்ன ஆணையிட்டார் தெரியுமா? "ஒரு வார காலத்திற்கு தினமும் மாலை வேளையில் கணவர் தனது மனைவியை நகரின் பல்வேறு ஐஸ்கிரீம் பார்லர்களுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்து, அதற்கான பில்களை நீதிமன்றத்தில் தாக்கல் வேண்டும்" என்று ஆணையிட்டார். 

ஏழு தினங்கள் சென்றன. கணவன் - மனைவி இருவருக்கிடையேயும் இருந்த கருத்து வேற்றுமை மறைந்து போனது. பல்வேறு பயங்கர குற்றச் சாட்டுகளை உள்ளடக்கிய தனது புகார் மனுவை மனைவி திரும்ப பெற்றுக் கொண்டார். விடயம் முடிந்தது.

'சந்நியாசி' வழக்கு :

ஒரு மனைவி முதலிரவின் போது "உங்களை திருமணம் செஞ்சுகிட்டதுக்கு பதிலா நான் பேசாம போலீஸ் வேலைக்கே போயிருக்கலாம்" என்று தனது கணவனிடம் கூறுகிறார். இதனால் மனமுடைந்த கணவன் சந்நியாசி ஆகி விடுகின்றார். சில ஆண்டுகளுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. பின் ஒரு நாள் மதுராவில் காவி உடை தரித்து அவர் சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. இவர்கள் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, தான் சம்சார வாழ்வைத் துறந்து விட்டதாகவும், சந்நியாசி ஆகி விட்டதாகவும்  கணவர் கூறினார். நிலையை ஆராய்ந்த நீதிபதி தூபே, முதலில் அவரை சம்சார வாழ்வை அனுபவிக்கும்படியும், அதற்கு நன்கு முடி வெட்டிக் கொண்டு, ஜீன்ஸ் பண்ட், டீ சர்ட் போட்டுக் கொண்டு வரும்படியும் கூறினார். இவ்வாறு வந்த அவரிடம், நீதிபதி தூபே தனது பைக்கை கொடுத்து, "உங்களை கட்டிக்கிட்டதுக்கு பதிலா போலீஸ் வேலையில் சேர்ந்து இருக்கலாம்" என்று கூறிய அவரது மனைவியுடன் உல்லாசமாக ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரும்படி கூறினார். பல ஆண்டுகள் பிரிந்து இருந்த அத்தம்பதி இந்த மோட்டார் பைக் ரவுண்டுக்கு பிறகு, தாங்கள் தாங்கள் குடும்ப வாழ்வை ஒரு புதிய உற்சாகத்துடன் தொடங்க விரும்புவதாக கூறினார், என்கிறார் நீதிபதி தூபே.

நீதிபதி தூபே முன் வைக்கும்  கேள்விகள் :

இவ்வாறு குடும்ப பிரச்சனைகளின் வேரைக் கண்டறிந்து அதை எளிய முறையில் தீர்த்து வைக்கும் நீதிபதி திரு. கங்காசரண் தூபே, "வழக்குரைஞர்களும் காவலர்களும் விரிவானதும் புனைவானதுமான குற்றப்பத்திரிக்கைகளை தயார் செய்து ஏன் குடும்பத்தை பிரிப்பவர்களாக செயல்பட வேண்டும்?" என்று கேட்கிறார். 

மேலும் "ஊழல், குற்ற நடத்தை போன்ற மிகக் கடுமையான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களுக்கும், நீதித்துறைக்கும் அதிக நேரமும் கவனமும் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் போது இப்படிப்பட்ட ஒன்றுக்கும் பெறாத அற்ப வழக்குகளை விசாரணை செய்வதில் அவை ஏன் தாங்கள் நேரத்தை செலவிட வேண்டும் ?" என்றும் அவர் வினவுகிறார். 

இப்படிப்பட்ட நீதிபதிகள் இன்றைய காலகட்டத்திற்கு இன்றியமையாதவர்கள். இத்தகு அணுகுமுறை குடும்ப வழக்குகளில் தரப்பினர்களின் மனதை மாற்றும்.

நிற்க:

வஞ்சக மனைவிகள் :

நீதிபதி தூபே அவர்களின் தீர்வு முறை உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட தம்பதியினரிடையே கொஞ்சமாவது அன்பு அல்லது பாசம் அல்லது மன்னிக்கும் தன்மை என்பது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த தீர்வு முறை வேலை செய்யும். மாறாக, எப்போது சமயம் கிடைக்கும், எப்போது கைவரிசையை காட்டி ஆதாயம் தேடலாம் என்று 'செட்டு' சேர்த்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கும் வஞ்சக, மோசடி மனைவிகளுக்கு இந்த அணுகுமுறை வேலை செய்யுமா? நிச்சயம் செய்யாது.

அச்சுறுத்தும் மனைவிகள் :

இ.த.ச. பிரிவு 498ஏ அல்லது குடும்ப வன்முறை சட்டம் அல்லது வேறு குற்ற சட்டப் பிரிவுகளை முன்னிறுத்தி, கணவனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி, நிறைய தொந்தரவுகளை கொடுத்து, வலுக்கட்டாயப்படுத்தி, அவமானப்படுத்தி ஒரு பெருந்தொகையுடன் பரஸ்பர மணமுறிவு எனும் சமரசத்திற்கு இழுக்கும் மனைவிகளிடம் இந்த வைத்தியம் பலிக்காது. 

காரணங்களை புனையும் ஏமாற்று மனைவிகள் :

இ.த.ச. பிரிவு 498ஏ -இன்படி ஒரு புகார் இருக்க வேண்டுமா? அதற்கு இதெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் உள்ளது. இவற்றை கொண்டு குடும்ப வன்முறை சட்டத்திலும் புகார் செய்யலாம். ஆரம்பத்தில் 5  வகையான உரிமையியல் தீர்வழிகளை கொடுக்கும் சட்டமாக இருந்த இச் சட்டம் இப்போது மெல்ல மெல்ல முற்றிலும் குற்றவியல் நடவடிக்கை சட்டமாக மாறி வருகிறது. இச்சட்டப் பிரிவு அல்லது சட்டத்திற்கு பொருந்தும் வகையில் காரணங்களை ஜோடிப்பது ஒரு "குடும்ப பெண்ணுக்கு" மிக எளிது. உடனே சட்டமானது, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாய்ந்து விடும். இப்படி பாய வைத்து, வாழ்க்கை பொருளுதவித் தொகை அல்லது நிரந்திர பிரிமனைப் பணம் என்ற பெயரில் பணம் பறிக்கும் மனைவிகளிடம் மேற்கண்டவாறான பஞ்சாயத்துகள் எடுபடுமா? 

திட்டமிடும் சதிகார மனைவிகள் :

முன்னரே திட்டமிடும் இத்தகு மனைவிகள் முதலில் ஆலோசனைக்கு தேடுவது ஒரு நல்ல, தேர்ந்த குடும்ப வழக்கு வழக்குரைஞர். அவரது ஆலோசனைபடி காரணங்களை சோடித்தல். இதற்கு நடுவே கணவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பட்டியல் தயாரித்து அவர்களில் தனக்கு தோதானவர்களிடம் உறவாடல். இவர்களை வழக்கிட்ட பிறகு மெல்ல ஒவ்வொரு சீட்டாக களமிறக்க மனைவிக்கு உதவும். மொத்த நடவடிக்கைக்கும் ஒரு மிகப் பெரிய மாஸ்டர் பிளான். அதற்கு சதி.

கபட நாடகம் ஆடும் மனைவிகள் :

இவ்வாறு ஏமாற்ற நினைக்கும் மனைவிகள் திடீரென வீட்டை விட்டு ஓடிப் போவர்கள் அல்லது ஏதோ காரணம் ஒன்றை சொல்லி பெற்றோர் வீட்டில் போய் அமர்ந்து கொண்டு புகார் அல்லது வழக்கு போடுவார்கள். இதற்கு முன் இவர்களது நடவடிக்கைகள் பலவும் விசித்திரமாக இருக்கும். இயல்பானதாக இருக்காது. அடிக்கடி செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருப்பார்கள். ஏதோ காரணம் சொல்லி விட்டு வெளியே சென்று விட்டு வருவார்கள். அதாவது தனது பிந்தைய திட்டத்திற்கு அடித்தளம் இடுகிறார்கள் என்று பொருள். கணவனை தவறு செய்யத் தூண்டுவார்கள். கோபமூட்டுவர்கள், பேச வைப்பார்கள். "இதெல்லாம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லி விட்டு, புகாரில் "அவர் அப்படி செய்யச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று கதை அளந்து வைத்திருப்பார்கள். 

தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு கபட நாடகம் ஆடுவார்கள். இன்று நிழற்படம் எடுப்பதும், உரையாடல்களை பதிவு செய்வதும் செல்பேசி காரணமாக மிக எளிதாகிவிட்டது. எனவே கணவன் அறியாமல் எல்லாம் பதிவாகிக் கொண்டிருக்கும், கஷ்ட காலம். (ஆனால் வழக்கு நடந்தால் மனைவி மாட்டிக் கொள்வர் என்பது வேறு விஷயம் !). 

எனவே மனைவின் நடவடிக்கைகள் விசித்திரமானதாக, விபரீதமானதாக இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்று. 

பிரிவு 498A, உச்ச நீதிமன்றம், இந்திய சட்ட ஆணையம் :

இ.த.ச. பிரிவு 498A -இன் கீழான புகார்களில் உண்மை இருப்பதில்லை, அதை  மனைவிமார்கள் உள்நோக்கம் கருதி  தவறாக பயன்படுத்துகின்றனர் என்று நமது மாண்பமை உச்ச நீதிமன்றம் Preeti Gupta v. State of Jharkhand (decided on August 13, 2010) and Ramgopal v. State of M.P. (Order dated July 30, 2010) என்ற இரு வழக்குகளில் கருத்துரைத்தது. மேலும் இந்த சட்டப் பிரிவின் கீழான புகார் மனுக்களை  தரப்பினர்கள் சமரசம் செய்து கொள்ளும் வழக்காக (Compoundable) ஆக்க வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத்திற்கும் பரிந்துரை செய்தது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டம் மற்றும் நீதிக்கான அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் மக்களவையில் நேற்று எழுத்துப் பூர்வமான பதில் அளிக்கையில், மேற்கண்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகளை இந்திய சட்ட ஆணையம் பரிசீலித்துள்ளது என்றும், அது பெற்ற தகவலின்படி, இரு இலட்சத்திற்கும் மேலான பிரிவு 498A -வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், கடந்த 31-10௦-2011-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பிரிவு 498A - தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டன என்றும், அதன் அடிப்படையில் சட்ட ஆணையம் அறிக்கை தயாரிக்கும் என்றும், அதில் பிரிவு 498A -கீழான குற்றத்தை 'சமரசம்' செய்து கொள்ளும் குற்றமாக ஆக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கியுரைக்கும் என்றும் கூறினார். மேலும் அந்த அறிக்கையானது பிரிவு 498A -தொடர்பான இதர சங்கதிகளை அதாவது அதை பிணைவிடு குற்றமாக ஆக்குதல், கைது செய்யும் நடைமுறை, சமரசத் தீர்வு போன்றவற்றையும் விளக்கும் என்றும் அவர் தனது பதிலில் கூறினார்.

முடிவாக:

கடந்த மாதம் ஆண்கள் தினம் வந்தது. அதற்காக சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். அதில் பேசப்பட்ட பல்வேறு விடயங்களில் ஒரு விடயம் பரிசீலனைக்குரியது. அதாவது  பிரிவு 498A -இன் கீழ் வழக்கிடும் மனைவிகள் கணவனுக்கு எதிராக குற்றத்தை மெய்ப்பிக்கத் தவறினால், கணவன் மீது பொய் வழக்கிட்ட குற்றத்திற்காக அம்மனைவிக்கும், அவரது பெற்றோருக்கும் பாதி சிறைத் தண்டனையாவது நீதிமன்றம் அதே நடவடிக்கையில் வழங்க வேண்டும் என்றும், அப்போதுதான் கணவனையும், அவரது குடும்பத்தினரையும் குற்றவியல் வழக்கு கொண்டு இம்சை செய்து பெருந் தொகை பறிக்க திட்டமிடும் மனைவிகள் திருந்துவர், பொய் வழக்கிட தயக்கம் காட்டுவார் என்றும் பேசப்பட்டது. 

இது நடக்குமா என்பது ஒரு புறம். அதே நேரம் குறைந்தபட்சம்  பிரிவு 498A -இன் வகைமுறைகளை மனைவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பொருந்தும் வண்ணம் மாற்ற வேண்டும். அதாவது அப்பிரிவில் வரும் 'கணவன் அல்லது அவரது உறவினர்' என்பதை 'இல்வாழ்க்கை துணை அல்லது அவரது உறவினர்' என்று மாற்றினால் அதுவே கூட போதுமானது. இந்த மாற்றத்தை பெண்கள் தொடர்பான அத்தகு எல்லா சட்டங்களிலும் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சட்டத்தின் முன் கணவனும் மனைவியும் சமம் என்பது நிலை நிறுத்தப்படும்.

03 December, 2011

"தமிழ் கம்ப்யூட்டர்" இதழுக்கு நன்றி ! - வலைப்பதிவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

இந்த வலைப்பதிவின் வாயிலாக நான் 100 பதிவுகளை எழுதி முடித்தமைக்கு வாழ்த்துகளை வேண்டி "இது என் 100-வது பதிவு ! வாழ்த்துகளை வேண்டுகிறேன் !!" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், "வலைப்பதிவில் எழுதுவதால் ஒரு வலைப்பதிவாளருக்கு  என்ன பயன்?" என்ற தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அதை சென்னையிலிருந்து மாதமொருமுறை வெளிவரும் "தமிழ் கம்ப்யூட்டர்" என்ற இதழ் பிரசுரம் செய்துள்ளது. மேலும் நான் எழுதிய "அடேங்கப்பா எவ்வளவு பெரிய 1  GB ?"  என்ற குறுங்கட்டுரையை பெட்டி செய்தியாக இந்த பிரபல இதழ் வெளியிட்டுள்ளது.

கணினி, வலைத்தளம், மென் மற்றும் வன் பொருள் தொடர்பான பல்வேறு பயன் மிகு செய்திகள், தகவல்கள், கட்டுரைகளை வெளியிட்டு வரும் "தமிழ் கம்ப்யூட்டர்"  இதழுக்கு எனது கட்டுரையை வெளியிட்டமைக்காக என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பயன் தரும் இந்த இதழுக்கு சந்தாதாரராக சேர பின்வரும் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் கம்ப்யூட்டர்,
37, அசீஸ்முல்க் இரண்டாம் தெரு,
அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை - 600 006.

நன்றி ! நன்றி !! நன்றி !!!

28 November, 2011

இதைப் படிங்க.. மனசு விட்டு சிரிங்க..

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்;
ஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
_____________________________________________

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான்வாழ்க்கை.
_____________________________________________

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
_____________________________________________

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,  
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!
_____________________________________________

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், 
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!! 
______________________________________________

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும். ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??  
நல்லா யோசிக்கனும்...!!
______________________________________________

ஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர்ஆகலாம்.  ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா 
பிரசிடன்ட் ஆகமுடியுமா?
______________________________________________

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.                                
______________________________________________

வாழை மரம் தார் போடும், 
ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது! 
(ஹலோ! ஹலோ!!!!)                                 
______________________________________________

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,  
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் 
புடுங்கமுடியுமா?
______________________________________________

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், 
கழித்தல் கணக்கு போடும்போது, 
கடன் வாங்கித்தான் ஆகனும்.
______________________________________________

கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?
______________________________________________

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
______________________________________________

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால் விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
______________________________________________

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் 
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.
(ஹலோ.. ஹலோ..  என்ன சார் இப்படியெல்லாம் ?)
______________________________________________

இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, 
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
______________________________________________

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் 
போட்டு பேச முடியாது.
______________________________________________

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் 
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,  
Rewind பண்ண முடியாது.    
______________________________________________

"தீவிரமாக யோசிப்போர் சங்கம்" 
(எங்களுக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது)
 நன்றி : திரு. ரமேஷ் 

____________________________________________________________________________________

Related Posts Plugin for WordPress, Blogger...