என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

20 November, 2011

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்"

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்"

ஏன் இந்த பேச்சு வழக்கு வந்தது?

கூத்தாடி என்பவர், கூத்தாடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதிப்பவர்.  ஊர்ஊராக சென்று தனது கூத்தாட்டத்தை காண்பித்து அந்த ஊர் மக்களை மகிழ்வித்து பணம் ஈட்டுபவர். ஒரே ஊரில் நீண்ட நாள் தனது வித்தையை காட்ட முடியாது. மக்களுக்கு அலுப்பு தட்டி விடும். பணமும் வராது; பயனும் இராது. அவனது வித்தையை தெரிந்த மக்களுக்கு சலிப்பாகி விடும்.

ஆனால் ஒரே ஊர் ஏதோ பிரச்சனை காரணமாக ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு மிகவும் வசதியாகி விடும். ரெண்டுபட்ட மக்களிடையே மாற்றிமாற்றி தனது வித்தையை காட்டி பிழைக்கலாம். அந்த நேரத்திற்கு அவர்களுக்கு உள்ள பிரச்சனை அடிப்படையில் தனது கூத்தாட்டத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். இரண்டு தரப்பினரில் எந்த தரப்பு மக்களுக்கு தனது கூத்தாட்டத்தை அவர் காண்பிக்கின்றரோ அந்த தரப்பு மக்களை உயர்த்தியும், அவர்களது செயல்களை நியாயப்படுத்தியும், மற்றொரு தரப்பு மக்களின் செயலை மட்டம் தட்டியும் வசனம் பேசி, நடித்து, பாட்டு பாடி கவரலாம். மாற்றிமாற்றி 'சீன்' போடலாம்.

இப்படி ரெண்டு பக்கமும் கூத்தாட கூத்தாட அவனுக்கு வருமானமும் கூடிக் கொண்டே போகும். மக்களும், "என்னமா அவுகளைப் பத்தி நக்கல் பண்ணி பாட்டு பாடுறான் பாரு" என்று ஆமோதித்து, வரவேற்றுக் கொண்டிருப்பார்கள், விவரம் தெரியாமல்.

சில சமயம் மற்றொரு தரப்பினர் 'இதை செய்வார்கள்.. அதை செய்வார்கள்' என்று பயமுறுத்தியும் பாடுவான். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சவாலும் விடுவான். கூத்தாடியை சட்டென புரிந்து கொள்ள முடியாது. அவன் நேரத்துக்கு தக்க வேஷம் கட்டி, வசனம் பேசுபவன். ரெண்டுபட்ட ஊரை ரெண்டாகவே வைத்து, அவன் தனது பிழைப்புக்கு வழி செய்து கொண்டிருக்கிறான் என்பதுதான் நிதர்சனம். அந்த மக்கள் சமாதானம் ஆனாலும், அதற்கும் விடமாட்டன்.  சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்படி தூண்டுவான். இதனால் இரு தரப்பினருக்கும் நிறைய இழப்பு ஏற்படும். காலம் முழுக்க நீங்கா மனவருத்தம் ஏற்படும். 'நாம் ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்றோ.. இவனால்தான் தாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம் என்றோ.. ரெண்டுபட்ட மக்கள் ஒருக்கணம் ஒற்றுமையாக சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே போதும், கூத்தாடியின் வேஷம் களைந்து விடும். அவனது ஆட்டம் முடிவடைந்து  விடும். இங்கே இவ்வளவுதான் தனது பப்பு வேகும் என்று எண்ணி உடனே தனது படுதாவை தூக்கி கொண்டு வேறு ஊருக்கு ஓடி விடுவான். இதனால்தான் 'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்று பேச்சு வழக்கு தோன்றியது என்று சொல்லலாம்.

இது ஒரு பொதுவான நிலைப்பாடு. விதிவிலக்குகளைப் பற்றி பேசவில்லை.

நாம் மேலே கண்ட அத்தகு கூத்தாடியை அதே பெயர் கொண்டு அழைப்பதை விட இன்னொரு பெயராலும் அழைக்கலாம். அது 'அனுகூல சத்துரு' எனப்படும். நல்லது செய்வதாகக் கூறி ஒட்டிக் கொண்டு, அவனது பிழைப்பை ஓட்டிக் கொள்வான். நட்பாக பழகி தனது இடத்தை இரண்டு பக்கமும் நிலையாக தக்க வைத்துக் கொள்வான். இரு தரப்பு பிரச்சனைகளில் உண்மையான எதிரியே இப்படிப்பட்ட அனுகூல சத்துருக்கள்தாம். அவன் யாருக்கும் அனுகூலம் செய்வதில்லை. அனுகூலம் செய்வதாக சொல்லி அவன் தனக்கு அனுகூலம் தேடிக் கொள்வான். அவன் செய்வது அனுகூலம் என்று நம்பினால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பிரச்சனைக்குரிய இரு தரப்பினரில் யாராவது விட்டுக் கொடுத்தலொழிய பிரச்சனை முடியாது. யாரும்  விட்டுக் கொடுப்பதில்லை என்றால் பிரச்சனை பெரிதாகும். அப்படி பெரிதானால் இந்த அனுகூல சத்துருக்கு இன்னும் கொண்டாட்டம்.  பிரச்சனை வேறு வகையில் மேலும் பெரிதானால் 'நமக்கெதுக்கு ரிஸ்க்' என்று அப்படியே போட்டது போட்டபடியும்  ஓடி விடுவான்.

இந்த அனுகூல சத்துருக்கள் பிரச்னை தோன்றக் கூடிய இடங்களில் எல்லாம் இருப்பார்கள். அல்லது சும்மா இருந்தாலும் கோள்மூட்டி பிரச்சனைகளை தோற்றுவிப்பார்கள். அதற்கு இரு தரப்பிலும் ஆரம்பத்திலிருந்தே மிக நம்பிக்கைக்கு உரிய நபராக பழகுவார்கள். பின் ஒருவரை மற்றொருவருக்கு எதிராக குழி தோண்ட வைப்பான். உண்மையில் அந்த இரு தரப்பினரும் தங்களுக்காக குழி தோண்ட வைக்கின்றான் இவன்.

இரு தரப்பினருக்கும் விவரம் தெரியும் போது இந்த 'அனுகூல சத்துரு' ஒரு மிகப் பெரிய 'நம்பிக்கை துரோகி', 'கூட இருந்து குழி பறிப்பவன்' என்பது புலனாகும்.

இப்படிப்பட்ட கூத்தாடிகள், அனுகூல சத்துருக்கள், நம்பிக்கை துரோகிகள் புதிதாக எங்கிருந்தும் முளைப்பதில்லை. இவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருந்து கொண்டு நமது செயல்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். எப்போது ஏமாறுவார்கள், எப்போது சண்டை மூட்டி விடலாம் என்று காத்திருப்பார்கள். ஒரு குடும்பத்தில், நட்பு வட்டத்தில், தொழிலில் இப்படிப்பட்டவர்களை சாதாரணமாக காணலாம். இதில் மிகவும் சிரமமானது இவர்களை அடையாளம் கண்டு கொள்வது. அவ்வளவு அருமையாக நடிப்பார்கள், முதலைக் கண்ணீர் கூட வடிப்பார்கள். கண்டறிவது கடினம். ஆனால் அப்படியும் கண்டு கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி உள்ளது. இப்படிப்பட்ட துரோகிகள் நமது குடும்ப விவகாரங்களில், பிரச்சனைகளில் திடீரென அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். நமது நம்பிக்கைக்குரிய மற்றவர்களை சந்தேகம் கொள்ள வைப்பார்கள். அதற்கு ஏதோ சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசுவார்கள். உண்மையில் அவன் எதிர் தரப்பினரின் கையாளாக அப்போது செயல்பட்டுக் கொண்டிருப்பான். நம்மிடமிருந்து விவரங்களை கேட்டறிந்து எதை சொன்னால் பிரச்சனை முடிவுக்கு வருமோ அதைச் சொல்லாமல் இதர விவரங்களை சொல்லி பிரச்னையை மேலும் பெரிதாக்குவன். விவரங்கள் எப்படி தெரிகின்றன என்று கேட்டால் ஏதோ ஞானோதயத்தில் தெரிந்தது போல் பாவனை காட்டி  பேசுவான். செய்வதெல்லாம் பித்தலாட்டம், ஆனால் மிகவும் தெரிந்தது போல் கட்டி ஏமாற்றுவான். இப்படி மாற்றி மாற்றி நல்லவனாக நடித்து, பிழைப்பை ஓட்டிக் கொள்வான். எந்தப் பக்கம் ஒட்டினால் நிறைய பலன் கிடைக்கும் என்பதை கணித்து அந்தப் பக்கம் நன்றாக ஒட்டிக் கொள்வான். எதிர் தரப்பினரை மறைமுகமாக மிரட்டவும் செய்வான். அந்த எதிர் தரப்பினர் அவனுக்கு ஆதியில் பல நன்மைகள் செய்திருந்தாலும், அதை முற்றிலும் மறந்து நன்றி கெட்டதனத்தின் மொத்த உருவமாக நிற்பான். இவன் ஒரு தரப்பினருக்கு தந்திரமாக சொல்லிக் கொடுக்கும் திட்டங்கள் யாவும் பெரிதும் 'பேக் பயர்' ஆகிவிடும். 'கெடுவான் கேடு நினைப்பான்' என்பதை இவனை ஆதரவாக சார்ந்து நிற்கும் தரப்பினர் விரைவில் புரிந்து கொண்டால் நிம்மதியும் சாந்தியும் கிட்டும்.

இப்படிப்பட்டவரின் லீலைகளை இன்னும் நிறைய சொல்லலாம்.

எனவே  பிரச்சனைகளின் போது 'சம்மன்' இல்லாமல் வாஞ்சையாக 'ஆஜராகும்' இப்படிப்பட்ட பேர்வழிகளிடம் இருந்து கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே) எட்டி இருங்கள். இல்லாவிட்டால் தங்கள் சுயநலத்திற்காக மொத்த வாழ்வையே கெடுத்து விடுவார்கள் ! அடையாளம் கண்டு கொண்டால் அவனை ஒரு அற்பபதராக, ஒரு புழுவாக கருதி, 'சீ... நீ இவ்வளவுதானா?...' என்று அவனை மன்னித்து விடுங்கள். அவன் வேறு இடம் போய் விடுவான்.


சில தினங்களுக்கு முன் ஒரு பதிவர் 'துரோகம்' பற்றி மிகச் சிறப்பாக எழுதி இருந்ததை வாசித்தேன். அதை அவரது அனுமதியுடன் இங்கு மேற்கோளாக சுட்டிக் காட்டினால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

தலைப்பு : ஒரு துரோகத்தின் முன்னால் 


ரு துரோகத்தின் முன்னால்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதைப் பற்றிச் சில குறிப்புகள்...

சற்றும் எதிர்பாராத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
துரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம்

ஒருவேளை
வெகு அருகிலேயே
ஒரு திருடனைப் போல
ஓடி ஒளிந்துகொண்டிருக்கலாம்

அதன் முன்பு
கண்ணீர்விட்டோ
அழுது புலம்பியோ
ஒரு துளி இரக்கத்தைப்
பெற்றுவிடலாமென்று
நினைத்துவிடாதீர்கள்

அது
அன்பை... காத்திருப்பை
தியாகத்தை... துயரத்தை
ஒருபோதும்
ஏறிட்டுப் பார்க்காது

மூக்கு நுனியில்
நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும்
உங்களின் பெருங்கோபம்
நியாயமானதென்றாலும்
மற்றவர் முன்னிலையில் அதனை
அடையாளம் காட்டியோ
சத்தம் போட்டோ
பேசிட வேண்டாம்

உங்களைக் குற்றவாளியாக்கிப் பார்த்திட
ஓராயிரம் பொய்களைப்
புனைந்து வந்திருக்கும் அது

சற்றும் பொருட்படுத்தாது
விட்டுவிடுங்கள் அல்லது
புன்னகை ஒன்றை ஏற்றி
வாசல் வரை சென்று
வழியனுப்பிப் பாருங்கள்
தலைகுனிந்தவாறு
விடைபெறாமலேயே
சென்றுவிடக்கூடும்

அதிகம் கடினம் என்றாலும்
பெருங்கருணைகொண்டு
மன்னித்துவிடுங்கள்.
அடுத்த நிமிடமே
அது இறந்துவிடும்!
6 comments:

வலிபோக்கன் said...

நீங்கள் சொல்வ.என் அனுபவத்தில் கண்ட உண்மை

Advocate P.R.Jayarajan said...

@ வலிபோக்கன்

//நீங்கள் சொல்வ.என் அனுபவத்தில் கண்ட உண்மை//

வாழ்வில் மறக்க முடியாத வலி ஏற்பட்டு இருக்குமே ?

மறுமொழிக்கு என் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

இப்படிப்பட்ட கூத்தாடிகள், அனுகூல சத்துருக்கள், நம்பிக்கை துரோகிகள் புதிதாக எங்கிருந்தும் முளைப்பதில்லை. இவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருந்து கொண்டு நமது செயல்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். /

அனுபவப் பகிர்வுக்கு நன்றி..

நாரதர் பெயரைச்சொல்லாமா!
அவர்கலகம் நன்மையில் அல்லவா முடியும்.

இவர்கள் கலகம் பெரும் இழப்புகளைச்சந்தித்த பிற்கு..காலம் கடந்தல்லவா புரிகிறது !!-

Advocate P.R.Jayarajan said...

அது பொது நலனுக்கான கலகம்;
இது சுய நலனுக்கான துரோகம்.

பின்னூட்டத்திற்கு நன்றி !

ரமேஷ் வெங்கடபதி said...

துரோகத்தின் வலியை அனுபவிக்காதவர் வெகுசிலரே! துரோகிகளை அத்தருணத்தில் நாம் ஒன்றும் செய்ய முடியாது! அது ஏறக்குறைய நம்மை செயலிழக்கச் செய்துவிடும் வலிமை கொண்டது! வலி குறைந்து வடுவாகி விடுகிறது, காலப் போக்கில்..!

Advocate P.R.Jayarajan said...

சரியாகச் சொன்னீர்கள்..

துரோகத்தால் அடிபட்டவன் மீண்டு வருவதே, துரோகிகளுக்கு கற்பிக்கும் பாடமாகும். அவர்களை அவர்களது தீவினை பார்த்துக்கொள்ளும்.

Related Posts Plugin for WordPress, Blogger...