என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

23 September, 2011

Disc Bulge வலிக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு !

இந்த அனுபவத்தை சொன்னால், சம்பந்தப்பட்டவர்களுக்கு நலம் பயக்கும் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன். 

சில மாதங்களுக்கு முன்பு எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது  இடது கை சுண்டு விரல் முனை சற்று மரத்துள்ளதாக கூறினார். நான் ஏதாவது வண்டுகடி இருக்கும், ஓரிரு நாளில் சரியாகப் போய்விடும் என்று கூறினேன். ஆனால் அந்த இரண்டு தினங்கள் கழித்து, அந்த நண்பரை பார்க்கும் போது அவர் தனது மற்ற விரல்களும் மரத்து போனதாக உணர்வதாகவும், முன் கை வலிப்பதாக வும், சில சமயங்களில் மேல் முதுகு, கழுத்துப் பட்டை வலிப்பதாகவும் கூறினார். 

சரி.. எது வேறு ஏதோ ஒரு கோளாறு போல் தெரிகிறது என்று நினைத்து உடனடியாக ஒரு ஆர்த்தோ மருத்துவரிடம் போனோம். அவர் உடனடியாக ஒரு நுண்கதிர் (எக்ஸ்ரே) எடுத்து வரும்படி கூறினார். முதுகுத் தண்டில் எடுக்கப்பட்ட அந்த எக்ஸ்ரேவில் ஏதோ சில டிஸ்குகள் நரம்புகளை அழுத்துவது போல் தெரிகிறது. இதனால் கை விரல் மரத்து போய் உள்ளது. மேலும் வலி உள்ளது என்று கூறி வலி நிவாரணி மாத்திரைகளையும், மேலுக்கு தடவிக் கொள்ள ஆயின்மென்ட் ஒன்றையும் கொடுத்தார். கொஞ்சம் ஓய்வில் இருக்கச் சொன்னார். 

நண்பரும் அந்த மாத்திரைகளை உட்கொண்டு, பிதுக்கு மருந்தையும் தடவிக் கொண்டு வந்தார். இப்படி ஒரு வரம், 10  நாள் சென்றது. மாத்திரை வேலை செய்யும் வரை வலி தெரியவில்லை என்றும், அதன் பிறகு வலி உயிர் போகிறது என்றும், இடது கை முழுக்க வலிக்கிறது என்றும் கண்ணீர் விட்டு அழுவாத குறையாக கூற ஆரம்பித்தார் அந்நண்பர். 

குறிப்பாக தூங்கி விட்டு காலையில் எழும்போது கையை அசைக்கக் கூட முடியவில்லை என்றும், பயங்கர வலி ஏற்படுகிறது என்றும், அப்போது கையை அப்படியே  வெட்டிக் எடுத்துக் கொள்ளக் கூட தோன்றுகிறது என்று கூறினார். 

பிறகு மீண்டும் ஆர்த்தோவிடம் போனோம். கை விரல்கள் முழுவதும் மரத்து விட்டது என்றும், வலி தாங்க முடியவில்லை என்றும் கூறினோம். அவர் நிலை சற்று முற்றி விட்டது என்றும், உடனடியாக காந்தக் கதிர் படம் (அதாவது MRI Scan) எடுத்து வரும்படி கூறினார். 

நாங்களும் உடனடியாக ரூ. 5000/- கட்டி அந்த படம் எடுத்தோம். அதாவது Cervical Spine என்ற பகுதியில் படம் எடுக்கப்பட்டது. எங்களிடம் கொடுக்கப்பட்ட மூன்று படங்கள் மற்றும் அறிக்கையை நாம் ஆர்த்தோவிடம் கொடுத்தோம். அதைப் பார்த்து அவர் சற்றே அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த படத்தை எங்களிடம் சுட்டிக் கட்டி, அதில் முதுகு தண்டு வடத்தில் மேலிருந்து கீழாக  உள்ள பல தட்டுகளில் C4, C5, C6, C7, C8, D1 ஆகிய தட்டுகள் மூளையில் இருந்து தண்டு வடம் வழியாக உடல் முழுவதும் வியாபித்து கிளை கிளையாக செல்லுகின்ற நரம்பு கொத்துகளை நன்றாக அழுத்திக் (அதாவது கடித்துக் கொண்டுள்ள மாதிரி) கொண்டுள்ளதை காட்டினார். இதற்கு பெயர் Disc Bulge என்றும், இது Cervical Spasm, Cervical Spondylosis என்றும் விளக்கம் கூறினார். அறிக்கையில் "Circumferential disc bulge with postero central disc protrusion at C4/C5,  C5/C6 and C6/C7/D1 levels causing ventral thecal sac compression and anterior cord surface impingement. Discogenic canal stenosis noted at this level with residual AP canal diameter measuring 9 and 7 mm respectively என்று கண்டிருந்தது. 

நண்பரோ வலி தங்க முடியாமல் இடது கையை வலது கையால் அழுத்திப் பிடித்திருந்தார். அவரே உடனே, "டாக்டர் ஏதாவது சரி பண்ண முடியுமா, இல்லை சொந்த பந்தங்களுக்கு சொல்லி அனுப்பிடலாமா?" என்று பல்லை கடித்துக் கொண்டு, வேதனையுடன் கேட்டார். அதற்கு ஆர்த்தோ மருத்துவர், "கொஞ்சம் சிரியஸ்தான். ஒரு 21  நாளைக்கு படுத்தே இருக்க வேண்டும். எந்திரித்து நடக்க கூட கூடாது. அப்போ இந்த டிஸ்க் பல்ஜ் கொஞ்சம் கொஞ்சமாக செட்டிலாக வாய்ப்பு உள்ளது" என்று சற்று ஆறுதலாக சொன்னவர், அடுத்த நிமிடத்தில் "இப்படி கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுக்கறதல இந்த பெயின் நிச்சயம் சரியாக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை   அப்படி சரியாக  வில்லை என்றால் நானும் நீயுரோ டாக்டரும் சேர்ந்து முதுகுத் தண்டுவடத்தில் பிடரிக்கு கீழே  சர்ஜரி செய்ய வேண்டி இருக்கும்" என்று ஒரு அதிர்ச்சி குண்டையும் போட்டார். நண்பர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். எனக்கும் சற்று தருமசங்கடமானது. எனினும் நான் பின் வாங்கினால் நண்பர் மனதை விட்டு விடுவார் என்பதால் சற்றே சுதாரித்துக் கொண்டு, "கவலைப்படாதே .. எல்லாம் சரியாப் போய்டும்" என்று ஆறுதல் வார்த்தைகளை சொன்னேன். 

பிறகு நண்பர் வீட்டில் படுத்தே இருந்தார். இரவு நேரத்தில் வலி அதிகமாக இருந்தது. கழுத்தை கீழே வைக்க முடியவில்லை. மருத்துவர் தலையணை இல்லாமல் படுக்கச் சொல்லி உள்ளதால், அதுவும் கிடையாது. இப்படியாக பத்து நாட்கள் சென்றன. நான் தினமும் அவரை பார்த்து நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி வந்தேன். நண்பரும் நிறைய வலி, வேதனைகளை தனது வாழ்வில் பார்த்தவர் என்பதால் இந்த வலியையும் பொறுத்துக் கொண்டு வந்தார். மாத்திரை விழுங்கினால் வலி தெரிவதில்லை, தூக்கம் வருகிறது. ஆனால் மாத்திரையின் சக்தி 8 மணி நேரத்திற்கு பிறகு குறையும் போது வலி உயிர் போகிறது. குறிப்பாக தூங்கி எழுந்தவுடன் வலியால் கத்துவதை நான் என் கண்ணால் பார்த்து, அந்த வலியின் தாக்கத்தை என்னால் நன்கு உணர முடிந்தது. 

நானும் இது தொடர்பாக வெளியில் விசாரிக்க ஆரம்பித்தேன். அதாவது இப்படி டிஸ்க் பல்ஜ் நோயால் அவதிப்படுபவர்கள் பற்றி தெரிந்து கொண்டு அவர்களிடம் கேட்டேன். ஒருவரும் நல்ல மாதிரியாக சொல்லவில்லை. சிலர் கழுத்துப் பட்டி போட்டிருந்தார்கள். சிலர் ஒரு பக்கமாக இழுத்தவாறு நடந்தார்கள். சிலர் சர்ஜரி செய்தும் சரியாகவில்லை என்றார்கள். சிலர் கேரளா போய் வைத்தியம் பார்க்கச் சொன்னார்கள். 

இது எனக்கு ஒரு குளுவாக அமைந்தது. இப்படி அலோபதியில் வைத்தியம் பார்ப்பதை விட மாற்று முறை வைத்தியம் பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அந்த நேரம் எனது நண்பருக்கு நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். எனது நண்பருக்கு வேண்டிய மற்றொரு நண்பர் ஒருவருக்கு இப்படி C5,6,7,8 டிஸ்க் பிரச்சனை இருந்தது என்றும், அவர் எங்கோ மைசூர் பக்கம் சென்று சரி செய்து கொண்டு வந்தார் என்றும் எனக்கு சொல்லப்பட்டது. 

எனது உயிர் நண்பரை எப்படியாவது குணப்படுத்தியாக வேண்டும் என்ற அவாவில், நண்பரின் அந்த மற்றொரு நண்பரது முகவரி கேட்டு, அவரது வீட்டிற்கே சென்று விட்டேன். வந்த விஷயம் கேட்டவுடன், அவருக்கும் ஒரு தீ பற்றி விட்டது. உடனடியாக தனக்கு ஏற்ப்பட்ட கை விரல் மரப்பு, வலி ஆகிய வற்றை விளக்க ஆரம்பித்தார். எனது நண்பருக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் அவருக்கும் ஏற்பட்டுள்ளன. அலோபதியில் சரியாகாமல், அவர் மைசூர் சென்ற விவரத்தையும் சொன்னார். அதாவது, 

மைசூர் தாண்டி, சரவனபெலகுல போகும் சாலையில் கே.ஆர்.நகர் என்றொரு ஊர் வருகிறது.  அங்கு மூன்று தலைமுறையாக எலும்பு வைத்தியம் பார்க்கப் படுகிறது.டாக்டர் மெஹபூப் கான் Bone setter மருத்துவமனை என்றால் மைசூரில் யார் வேண்டுமாலும் சொல்லுவார்கள். உலகம் முழுக்க பிரபலமானவர். அவர்தான் இந்த டிஸ்க் பல்ஜ் நோய்க்கு சரியான மருத்துவர் என்று அந்நண்பர் கூறினார். மேலும், தான் அவரிடம் சென்றுதான் சிகிச்சை பெற்றதாகவும் (எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை சில பத்திகள் தாண்டி சொல்கிறேன்), ஆறு மாத காலமாக வலியால் அவதிப்பட்டு வந்த தனக்கு ஒரு நிமிடத்திலேயே சரி செய்து விட்டதாகவும், அது ஒரு மெடிக்கல் மிராக்கில் என்றுதான் சொல்ல வேண்டும் என்றும், உடனடியாக தனது வலி குறைந்து தனக்கு சரியாகி விட்டது என்றும் உணர்ச்சி பொங்க கூறினார். அவரை சந்திக்க வேண்டும் என்றால், அதிகாலை 4  மணிக்கு டோக்கன் தருவார்கள், அதை பெற்றுக் கொண்டால், முற்பகலுக்குள் அவரை பார்த்து விடலாம் என்றும், கூட்டம் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். 

நான் உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு விடை பெற்று, அடுத்த காரியங்களில் மளமளவென இறங்கினேன். முதற்கண் அந்த மைசூர் மருத்துவ மனை எண்ணுக்கு தொலைபேசி செய்தேன். மருத்துவரின் உதவியாளர் எடுத்தார். எனது நண்பருக்கு உள்ள பிரச்னை பற்றி சொன்னேன். அவர் இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சகஜம் என்ற பாணியில், "சார், கால் மரத்து போவதற்கு முன் வந்து விடுங்கள், லேட் செய்யாதீர்கள், டாக்டர் நாளை மறுநாள் மெக்கா போவதால் இன்றே கிளம்பி வந்து விடுங்கள்" என்று சொன்னார். 

நான் அடுத்து பரபரவென நண்பரின் வீட்டிற்க்கு சென்றேன். நடந்த விவரங்களை கூறினேன். நண்பரும் எப்படியாவது சரியானால் பரவாயில்லை என்று கிளம்ப தயாரானர். அவரால் உட்கார்ந்து பிரயாணம் செய்ய முடியாது. காரணம், தலையின் பாரம் முதுகு தண்டு வடத்தை அழுத்தக் கூடாது என்று ஏற்கனவே ஆர்த்தோ டாக்டர் சொல்லியுள்ளார். மேலும் அவரால் உள்ள படியாக உட்கார முடியவில்லை. உடனே வலி தோன்றுகிறது. 

எனவே அவருக்கு சொந்தமான குவாலிஸ்  காரில் சீட்டுகளை மடக்கி விட்டு அவர் படுக்கும் படி ஏற்பாடு செய்து விட்டு, துணைக்கு அவரது சிற்றப்பாவை அழைத்துக் கொண்டு, காரை ஓட்டுனர் ஓட்ட மாலை சுமார் 6  மணி அளவில் மைசூர் கிளம்பினோம். சேலத்திலிருந்து பண்ணாரி வழியாக மைசூர் அடைந் தோம். மைசூர் நகருக்குள் செல்வதற்கு முன்பாக பை-பாஸில் இடது புறமாக பாதை பிரிகிறது. அதில் சென்றால் கே.ஆர்.நகர் சென்று விடலாம். வழியை அப்படியே விசாரித்துக் கொண்டு சென்று கொண்டே இருந்தோம். சுமார் 12  மணி அளவில் கே.ஆர். நகர் அடைந்தோம். டாக்டர் மகபூப் கான் மருத்துவ மனை இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டோம். மைசூர் அடைவதற்கு முன்பாகவே யாரிடம் கேட்டாலும் அவரது முகவரி சொல்கிறார்கள்.  

மிக பிரமாண்டமான கட்டடமாக மருத்துவமனை இருக்கும் என்று நாங்கள் நினைத்ததற்கு மாறாக, ஒரு சிறிய வில்லை வீடு, அதற்கு மேல் முகப்பில் ஒரு பழைய பெயர் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் நோயாளிகள் அமர ஒரு தகர தட்டு வேயப்பட்ட கூடாரம்.  இது சற்று பெரியது. அவ்வளவுதான்.

நாங்கள் அருகிலேயே இருந்த ஒரு தாங்கும் விடுதியில் தங்கிக் கொண்டோம். அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் நான் எழுந்து டோக்கன் வாங்க சென்றேன். அப்போதே நிறைய பேர் வரிசையில் நின்று இருந்தனர். அப்போது தான் சேலத்தில் ௦எனது நண்பரின் நண்பர் சொன்னது உண்மைதான் என்பது எனக்கு புரிந்தது. எங்களுக்கு டோக்கன் எண். 63. காலை 11  மணி அளவில் திரும்ப சம்பந்தப்பட்ட பேசண்டுடன் வரும்படி டோக்கன் தருபவர் கூறினார். 

நான் டோக்கனுடன் தங்கும் விடுதி திரும்பி, அனைவோரும் தயாரானோம். அருகில் இருந்த ஓட்டல் ஒன்றில் சாம்பார் இட்லி சாப்பிட்டோம். நண்பரின் சிற்றப்பா ஒரு ஆலோசனையை கூறினார். அதாவது, தற்போது வலி நிவாரணி மாத்திரை எதையும் சாப்பிடாதே, ஆயின்மென்ட் தடவாதே என்றும், அப்போது தான் சிகிச்சையின் போது வலி உடனடியாக குணமாகிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார். இது சரியாகப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை சென்று காத்திருந்தோம். நண்பர் காரில் படுத்து இருந்தார். நல்ல கூட்டம். ஏகப்பட்ட கார்கள். விதம்விதமான எலும்பு வலிகளுடன் விதம் விதமான மக்கள். மருத்துவமனை வாயிலில் உள்ள மின்னணு பலகை உள்ளே நுழையும் நபருக்கான டோக்கன் எண்ணை கட்டிக் கொண்டிருந்தது. நம் டோக்கன் வருவதற்கு சற்று முன்பாக நண்பரை அழைத்து வர நான் காருக்கு சென்றேன். அப்போது அவர் வலியால் முனகிக் கொண்டிருந் தார். மாத்திரை சாப்பிடாததால் வலி அதிகம் ஆகி விட்டிருந்ததை உணர முடிந்தது. அவரை அழைத்துக்கொண்டு டாக்டர் உள்ள அறையின் கதவோரம் நின்று கொண் டோம். நமது எண் வந்தது. நான், எனது நண்பர், சிற்றப்பா அனைவரும் உள்ளே சென்றோம். 

டாக்டர் ஹிந்தி பட கதாநாயகன் மாதிரி இருந்தார். உள்ளே ஒரே ஒரு சோபா மட்டும் இருந்தது. அதில் டாக்டர் அமர்ந்து இருந்தார். அவரது அருகில் உதவியாளர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். மற்றபடி தரை முழுவதும் பாய் விரித்து போடப்பட்டிருந்தது. வந்தவர்கள் அமர சேர் ஏதும் இல்லை. எனது நண்பர் வணக்கம் தெரிவித்தார். நான் MRI  படங்களையும், அறிக்கையையும் கொடுத்தேன். மருத்துவர் அவற்றை வாசித்துப் பார்த்தார்.  பின் அந்த அறிக்கையில் தனது பேனாவால் C5/C6 என்று தட்டச்சு செய்யப் பட்டிருந்த இடத்தில் டிக் செய்தார். எங்களிடம் வேறு எந்த கேள்வியையும் அவர் கேட்கவில்லை. என்ன பிரச்சனை என்பதை நன்கு புரிந்து கொண்டவர் போல் சிகிச்சையை தொடங்கினர். தனக்கு முதுகு தெரியும்படி எனது நண்பரை பாயில் அமரச் சொன்னார்.  மருத்துவர் சோபாவில் அமர்ந்துள்ளார். நண்பரின் சட்டை மேல் பொத்தான்கள் இரண்டை கழட்டி விடச் சொன்னார். பின் இடது தோள்பட்டை மீது தனது விரல்களை ஒரு மாதிரியாக சுழற்றி குத்துவது போல் குத்தி பின் படக்கென இழுத்தார். நண்பருக்கு சற்று வலி ஏற்பட்டது. பின் அவ்வாறே வலது தோள்பட்டையின் மீதும் செய்தார். இது இந்தியன் திரைபடத்தில் கமலஹாசன் செய்யும் அதே வர்மக்கலையை ஒத்திருந்தது. அடுத்து உதவியாளர்கள் உடனே ஏதோ ஒரு எண்ணையை இரண்டு தோள்பட்டையின் மீதும் ஊற்றி பரபரவென தேய்த்து விட்டனர். நண்பரின் முகத்தில் திடீரென ஒரு பிரகாசம் ஏற்பட்டது.  ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. தனது இடது கை விரல்களை மடக்கி பார்த்துக் கொண்டார். நன்றாக கையை உயர்த்தி மடக்கினார். முகத்தில் ஒரு பின்முறுவல் எட்டிப்பார்த்தது. 

டாக்டர் 'next'  என்று அடுத்த நேயாளியை கூப்பிடும் போது, நண்பரின் சிற்றப்பா "இப்போ வலி இப்படி இருக்கு?"  என்று என் நண்பரிடம் கேட்டார். அவர் எங்கள் இருவரையும் ஒரு வித வியப்பு கலந்த சிந்தனையுடன் "வலி சுத்தமா இல்லை.. கை நல்ல இருக்கு... விரலுக்கு எல்லாம் ஏதோ புது ரத்தம் பாயர பீலிங் இருக்கு.. என்னால ரத்தம் ஓடுறதை உணர முடியுது.. மரத்து போன விரல் எல்லாம் இப்போ உணர்வு வந்தது போல இருக்கு.. நான் நல்லா ஆயிட்டேன்.." என்று சந்தோஷ மிகுதியில் துள்ளினார். கண்களில் நீர் பக்க வாட்டில் இருந்து வந்தது. ஆனந்த கண்ணீர் ! 

டாக்டரை பார்த்து  தனது இரண்டு கைகளையும் தூக்கி எனது நண்பர் நன்றியு டன்  வணக்கம் வைத்தார். அதை டாக்டர் ஒரு சிறிய சிரிப்புடன்  தலையசைத்து  ஏற்றுக் கொண்டார்.  பிறகு பீஸ் ஏதும் கேட்பார்கள் என்று நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போது ஒரு உதவியாளர் வந்து 15 நாட்களுக்கான மருந்து கொடுத்தார். தினமும் காலை மற்றும் இரவில் கை முழுவதும் தடவிக் கொள்ள மூன்று சிறிய புட்டிகளில் அடங்கிய ஒரு எண்ணெய். அதனுடன் அதிகாலை வெறும் வயற்றில் மோரில் கலந்து சாப்பிட ஒரு புட்டி கசாய மருந்து. இதன் விலை ரூ. 450/-. சிகிச்சைக்கு கட்டணம் ஏதும் இல்லை. 15  நாட்கள் கழித்து வந்து மீண்டும் இந்த மருந்தை மற்றொரு 15 நாட்களுக்கு வாங்கிக் கொள்ளும் படி அவர் கூறினார். மீண்டும் வருவதற்கு பதிலாக இப்போதே வாங்கிக் கொள்ளலாம் என்று கருதி மொத்தம் ரூ. 900/- கொடுத்து 30 நாட்களுக்கான மருந்து வாங்கிக் கொண்டோம். எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. கிளம்பும் போது அந்த உதவியாளர், கசாய மருந்தை உட்கொள்ளும் காலத்தில் மாமிசம், மது தவிர்க்க வேண்டும் என்றும், கையால் பாரம் எதையும் ஒரு மாதத்திற்கு தூக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.  சிகிச்சை நேரம் மொத்தம் 1  நிமிடம். 

மணி மதியம் 12. உடனே தாங்கும் விடுதியை காலி செய்து விட்டு காரில் சேலம் புறப்பட்டோம். எனது நண்பர் காரில் என்னோமோ செய்து கொண்டிரு தார். அருகில் சென்று பார்த்தால் படுப்பதற்கு வசதியாக மடக்கி விட்டிருத இருக்கைகளை நிமிர்த்தி வைத்து கொண்டிருதார். "என்னப்பா படுத்துக் கொண்டே வாயேன். அதுக்குள்ளே என்ன அவசரம்?" என்று நான் கேட்டேன். அதற்கு எனது நண்பர், "எனக்கு இப்போ கொஞ்சம் கூட வலி இல்லை. முன்பு கழுத்தை பின்புறமா தாழ்த்தினால் பளிச்சென்று ஒரு வலி வரும். இப்போ அந்த வலி சுத்தமாக இல்லை. இதுதான் நான் வெச்சிருந்த அடையாளம், வலி குணமாய்டிச்ச இல்லையா என்று கண்டுபிடிக்கிறதுக்கு... இப்போ அந்த வலி கொஞ்சம்கூட இல்லை. அதனாலே நான் பூரணமா குணமாய்ட்டேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் உட்கார்ந்தே வருகிறேன்" என்று திட்டவட்ட மான வார்த்தைகளில் கூறினார். மேலும் எனது மற்றொரு நண்பரின் நண்பர் சொன்ன அதே வார்த்தைகளை எனது இந்த நண்பரும் கூறினார். "மெடிக்கல் மிராக்கல்".

சந்தோசமாக நமது பயணத்தை சேலம் நோக்கி தொடங்கினோம். வழியில் சாமுண்டீஸ்வரி கோவில் சென்று தரிசனம் செய்து, அம்பாளுக்கு நன்றி சொன்னோம். மதிய உணவு முடித்து அப்படியே சேலம் வந்தடையும் போது இரவு மணி 12.

சுமார் 2  மாத காலமாக எனது நண்பர் அனுபவித்து வந்த கொடுமையான வலி 1  நிமிடத்தில் அவருக்கு சரியானது. இது வர்மக் கலையின் மர்மம் என்பதா? டாக்டரின் திறமை, அனுபவம் என்பதா? அல்லது  எனது நண்பரின் நல்ல நேரம் என்பதா? புரியாத புதிர் !

எனது நண்பர் 30௦ நாட்களுக்குண்டான மருந்தை உட்கொண்டு முடித்து  தற்போது பூரண நலமுடன் இருக்கிறார்.

(இந்தக் கட்டுரை எனது நண்பருக்கு வலி சரியான விதம் பற்றி தனிப்பட்ட முறையில் சொல்லப் பட்டுள்ளது. ஒரு மாற்றுத் தீர்வழியாக அவர் இந்த வைத்தியம் செய்து கொண்டுள்ளார். இப்படி பட்ட வலி வந்துள்ள எல்லோருக்கும் இந்த முறையிலேயே சரியாகி விடுமா என்றால் அது அவரவர் உடல் நிலையை பொருத்தது. எனவே எந்த சிகிச்சை முறையை நாடுவது என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிமுறை விருப்பத்தை சார்ந்தது.)


(குறிப்புகள் : இந்தக் கட்டுரையில் வரும்  'நான்' என்பது 'எனது நண்பர்'. 'எனது நண்பர்' என்பது 'நான்'. 'என் நண்பரின் சித்தப்பா' என்பது 'என்னுடைய சித்தப்பா' என்று பொருள்படும்.இது எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவம்.)

19 September, 2011

வக்கீல் தொழிலுக்கு வர 8 காரணங்கள்

ஒருவர் வழக்குரைஞர் தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் 8 காரணங்கள் உள்ளன.

1. அவர் தூக்கத்தை வெறுப்பவர்;

2. அவர் தனது வாழ்க்கையை குழந்தை பருவத்திலேயே அனுபவித்து இருப்பார்;


3. அவரால் டென்சன் இல்லாமல் வாழவே முடியாது;

 
4. அவர் கரடுமுரடான  வாழ்கையை விரும்புபவராக இருக்கலாம்;


5. அவர் பழிவாங்கும் எண்ணம் அதிகம் கொண்டவராக இருப்பார்;


6. அவர் கீதை சொல்லிய "காரியத்தை செய், பலனை எதிர்பார்க்காதே" என்பதை அதிகம் நம்புபவராக இருக்கலாம்;


7. அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்பாதவராக இருக்கலாம்;


8. ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் பணி புரிய அதிகம் விரும்புவார்;

18 September, 2011

மிகவும் வியப்பான நிழற்படம் !!!!

எனது நண்பர் ஒருவர் கீழே நாம் காணும் நிழற்படத்தை எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். மேலும் அதை சில நிமிடம் உற்றுப் பார்க்கும்படி எழுதி இருந்தார். நானும் அப்படி உற்று பார்த்தேன்.

என்னே வியப்பு !

அந்த வியப்பை நீங்களும் அடைய படத்தை உற்று பாருங்கள்.


எப்படி இப்படி? எனக்கு விளக்கம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...