என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

05 November, 2011

எப்படி இருந்தாலும்.......

மக்கள் பலசமயங்களில் நியாயமில்லதவர்களாக, 
தவறானவர்களாக, சுயநலம் கொண்டவர்களாக உள்ளனர்.
எப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.

நீங்கள் இரக்க குணம் படைத்தவராக இருப்பின்,
மக்கள் உங்களை தன்னலம் கொண்டவர் என்றும்,
உள்நோக்கம் கொண்டவர் என்றும் குறை கூறுவார்;
எப்படி இருந்தாலும், இரக்கத்துடனே இரு.

நீங்கள் வெற்றிகரமானவராக இருப்பின்,
நீங்கள் சில தவறான நண்பர்களையும்,
சில சரியான நண்பர்களையும் வெற்றி காண்பீர்கள்; 
எப்படி இருந்தாலும், வெற்றி பெறு.

நீங்கள் நேர்மையானவராக,
வெளிப்படையானவராக இருப்பின், 
மக்கள் உங்களை ஏமாற்றக் கூடும்; 
எப்படி இருந்தாலும், நேர்மையானவராக, 
வெளிப்படையானவராக இரு.

நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை, 
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்; 
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.

நீங்கள் பிரச்சனையற்றவராக,
மகிழ்ச்சியானவராக இருப்பதாக தெரிந்தால்,
அது மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும்;
எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியாக இரு.

இன்று நீங்கள் செய்யும் நல்லதை,
மக்கள் நாளை மறந்து விடுவர்; 
எப்படி இருந்தாலும், நல்லது செய். 
எப்படி இருந்தாலும், உன்னால் முடிந்த சிறந்தது 
எதுவோ அதை உலகிற்கு கொடு.

இறுதி பகுப்பாய்வு முடிவு என்பது
உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேதான்  உள்ளது;
அது எப்படி இருந்தாலும் உங்களுக்கும் 
அந்த மற்றவர்களுக்கும் இடையே இல்லை 
என்பதை அறியுங்கள். 

- அன்னை தெரசா.பாட்டில் மாறிப்போச்சு; பொண்ணுக்கு புண்ணாச்சு.

மேற்கு வங்கத்தில் உள்ளது முர்ஷிடபாத் மாவட்டம். இங்குள்ள லால்பாக் எனும் ஊரில் அரசு உட்கோட்ட மருத்துவமனை உள்ளது. இதில் சிக்ஹா பீவி எனும் பெண்மணி பிரசவத்திற்காக அக்டோபர் 31-ஆம் தேதி பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். இரண்டு தினங்களில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவமனை நிருவாகம் கூறியது. அதே நேரத்தில் குழந்தை உயிருடன் பிறந்தாக சிக்ஹா பீவியின் உறவினர்கள் கூறினர்.

இதற்கிடையில்தான் அந்த பயங்கரம் நடந்தது. குழந்தை பெற்ற அப்பெண்மணியின் உள்ளுறுப்பை கிருமி நாசினி கரைசல் (டெட்டால், சவாலான் போன்று) கொண்டு கழுவுவதற்கு பதிலாக, அசிட் ஊற்றி கழுவி உள்ளனர், மருத்துவமனை பணியாளர்கள். 
இதனால் அவளது உள்ளுறுப்பு முழுவதும் வெந்து போனது. அத்துடன் வெளிக் காயங்களும் ஏற்பட்டன. 
உறவினர்கள் கொதித்துப் போயினர். எனவே இது குறித்து விசாரிக்க உடனடியாக மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பிரேந்திரா குமார், மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார். அக்குழு, இந்த சம்பவம் உட்கருத்துடன், வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்றும், அப்பெண்மணியை கழுவிய பணியாளர்கள் தவறுதலாக அசிட் ஊற்றி கழுவி உள்ளனர் என்றும், கிருமி நாசினியின் நிறமும், ஆசிடின் நிறமும் ஒன்றாக இருந்த காரணத்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றும், இந்த பாட்டில்கள் மாறிவிட்டன என்றும், மருத்துவமனையை பெருக்குபவர்தான்  தவறுதலாக அந்த இடத்தில் ஆசிட் பாட்டிலை வைத்திருக்க வேண்டும் என்றும், மேலும் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளனர்.
ஆசிட் உடம்பிலே பட்டாலே தாங்காது. உள்ளுறுப்பிலே பட்ட எவ்வளவு வேதனை ?

03 November, 2011

வெளியில் இணையதளம் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை !

அண்மையில் பேஸ் புக் தளத்தில் ஒரு பகிர்வை வாசித்தேன். அது பயனுள்ளதாகவும், விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் இருந்த காரணத்தால் இங்கு சுட்டி கட்ட விளைகின்றேன்.
அதாகப்பட்டது, உங்கள் வீட்டில் அல்லது அலுவலத்தில் இணையதள இணைப்பு கொண்ட  கணினி இருந்தால் கவலை இல்லை. ஒரு வேளை அவ்வாறு இல்லாமல் அல்லது அவசர நிமித்தம் காரணமாக வெளியில் இருக்கும் இணைதள சேவை வழங்கும் மையத்திற்கு சென்று பக்கங்களை பார்வை இடப் போகிறீர்கள் என்றால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்த  உள்ள கணினியின் cpu பின்புறம் கீழ்வரும் படத்தில் உள்ளது போல் ஏதேனும் கருப்பு 'பின்' சொருகப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும். 
இவ்வாறு சொருகப்பட்டிருப்பின் நீங்கள் அந்தக் கணினியின் வாயிலாக இணையதளத்தில் பதிவு செய்யும் கடவுச் சொற்கள், ரகசிய விவரங்கள் ஆகிய அனைத்தும் தானாக அந்தப் பின் பதிவு செய்து கொண்டு விடும். அவற்றை பிறகு எடுத்துப் பார்த்து மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தபடக் கூடும்.


எனவே எச்சரிக்கை ! 

02 November, 2011

கருத்தடை அறுவை செய்த பிறகும் குழந்தை பிறந்தால் மருத்துவர்கள் இழப்பீடு தர வேண்டும் - மதுரை அமர்வாயம் தீர்ப்பு"கருத்தடை அறுவைக்கு பின் மீண்டும் குழந்தை பிறந்தால் அது மருத்துவர்களின் மருத்துவ கவனக்குறைவாகும்" என்று மேல்முறையீடு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம் தீர்ப்புரைத்துள்ளது.

கருத்தடை அறுவைக்குப் பிறகும் குழந்தை பிறந்தது !

ஒரு பெண்ணுக்கு 'டயுபக்டமி' எனும் கருத்தடை அறுவை செய்த பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்தததற்காக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அந்த மருத்துவர்களும் மருத்துவ அதிகாரஅமைப்புகளும் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து ஆணையிடுகையில் மாண்பமை நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ்  மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார். எனினும் இவ்வழக்கில் கருத்தடை அறுவை செய்யும் நடைமுறை 100 சதம் வெற்றி தருவதில்லை என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

வழக்கின் சங்கதிகள் :

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்மணியின் பெயர் சரஸ்வதி.  இவர் 1985-ஆம் ஆண்டில் ஆர்.முருகன் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.  இதற்குப் பிறகு இவர் கருத்தடை அறுவை செய்து கொள்வதற்காக கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதியில் சரஸ்வதிக்கு கருத்தடை அறுவை செய்யப்பட்டது. 

இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, சரஸ்வதி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக உணர்ந்தார். அந்த நேரத்தில் கரு நன்கு வளர்ந்து விட்டிருந்த படியால் அதைக் கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. தொடர்ந்து 1992, செப்டெம்பர் 15-ஆம் தேதியில் கும்பகோணத்தில் உள்ள செயின்ட் அன்னீஸ் மருத்துவமனையில் சரஸ்வதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

கருத்தடை அறுவை செய்து கொண்ட பிறகும் குழந்தை அதுவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது, தனக்கு அறுவை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவை காட்டுகின்றது என்றும், எனவே தனக்கு அவர்கள் இழப்பீடாக ரூபாய் 3 இலட்சம் தர ஆணையிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது கணவர் முருகன் ஒரு தினக் கூலி. 

கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு :

வழக்கின் சங்கதிகளை சாட்சியங்களுடன் ஆராய்ந்த கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றம், சரஸ்வதிக்கு இழப்பீடாக ரூபாய் 1,25,000௦௦௦/-மும், அதற்கு வழக்கு தாக்கல் தேதியில் இருந்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்ட தேதி வரை 12 சதவீத வட்டியும், அதன் பின் தொகை வசூலாகும் வரை 6 சதவீத வட்டியும், செலவுத் தொகையுடன் பிரதிவாதிகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்புரைத்தது. 

மருத்துவர்களின் மேல்முறையீடு தள்ளுபடி :

இந்த தீர்ப்பை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் மருத்துவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. 

மதுரை அமர்வாயத்தில் மேல்முறையீடு :

கீழமை விசாரணை நீதிமன்றம் வழங்கிய  இத்தீர்ப்பை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், கும்பகோணம் நலப் பணிகள் இணை இயக்குனர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரஅமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வயத்தில் 2006-ஆம் ஆண்டில் தற்போதைய  மேல்முறையீட்டை செய்தனர். 

முன்னதாக இவர்கள் தாக்கல் செய்திருந்த எதிர் வழக்குரையில் சரஸ்வதிக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்றும், ஆனால் இந்த அறுவை நடைமுறையில் 2 சதவீதம் தோல்விக்கு வாய்ப்பு உண்டு என்றும், அப்பெண்மணிக்கு கருத்தடை அறுவை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே அவர் மீண்டும் கருவுற்றுள்ளார், இது அந்த அறுவை வெற்றி பெற்றுள்ளதையே காட்டுகிறது என்றும், எனவே அவருக்கு அறுவை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தரப்பில் எந்த கவனக்குறைவும் இல்லை என்றும் வாதுரைத்திருந்தனர்.  


Related Posts Plugin for WordPress, Blogger...