என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

26 November, 2011

'பேக்கு வர்மம்' பற்றி தெரியுமா ?

'வர்மம்' என்பது தற்காப்பு மற்றும் மருத்துவ முறைக்கு பயனாகும் ஒரு கலையாகும். வர்மத்தில் படு வர்மம், தொடு வர்மம், நோக்கு வர்மம் என பலவகை உண்டு.


'தொடு வர்மம்' மூலம் பல கடுமையான உடல் வலிகள் குணமாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தாக்க வரும் எதிரியின் சில முக்கிய நரம்பு முனை பகுதியை கையால் அழுத்திக் குத்தி பிரள வைப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை தடுத்து அவனை செயலிழக்கச் செய்ய முடியும். உடனே முடக்க முடியும்.

'நோக்கு வர்மம்' பற்றி 7-ஆம் அறிவு திரைப்படத்தில் இயக்குனர்  முருகதாஸ் சொல்ல நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம். இதற்கு முன் 'படு வர்மம்' பற்றி 'இந்தியன்' திரைப்படத்தில். 7-ஆம் அறிவில் முருகதாஸ்  'அறி துயில் நிலையை' (ஹிப்னாடிசம்) நோக்கு வர்மம் என்கிறார். அதே நேரத்தில் போதி தருமர் வாழ்க்கை வரலாறை புரட்டிப் பார்த்தால் அது முருகதாஸ் சொல்வது போல் இல்லை. அந்த முரண்பாடுகள் இந்தக் கட்டுரைக்கு வேண்டாம்.

வர்மக் கலையின் வாயிலாக நல்லதையும் செய்யலாம் . பொல்லாததையும்  செய்யலாம். நல்லது செய்யும் வர்மக் கலையின் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு.

Anyway, தலைப்புக்கு வருகின்றேன்..

சில காலங்களுக்கு முன் ஒரு குடும்பத்தினரைப் பற்றி ஒருவர் சொல்லக் கேட்டு அறிந்தேன்.

அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நிறைய நல்லன செய்து, உளப்பூர்வமாக உதவி செய்கிறார். அவர் நல்ல மனதோடு, வெள்ளிந்தியாக செய்து வந்த பல காரியங்களை அக்குடும்பம் ஏற்று சுபிட்சம் அடைகிறது. ஆனால் அக்குடும்பம் அவரை முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்கிறது என்பதையோ, காரியங்கள் முடிந்த பிறகு அவர் மீது அபாண்டமாக பழி போட்டு பணம் பறிக்கப் போகிறது என்பதையோ அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு கமுக்கமாக அக்குடும்பத்தினர் இருந்து காரியங்களை சாதித்துக் கொண்டனர்.

இதற்கு அக்குடும்ப உறுப்பினர் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் எது தெரியுமா?

அது "பேக்கு வர்மம்" 
(குறிப்பு : இது வர்மக்கலையில் சேர்த்தி அல்ல)

அக்கு(டு)ம்ப உறுப்பினர்கள் தங்களை 'பேக்கு' மாதிரி காட்டிக் கொண்டு காரியங்கள் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். 'அப்பாவி என்பது வேறு.. அப்பாவி போல் காட்டிக் கொள்வது' என்பது வேறு. இதில் அக்குடும்பம் இரண்டாவது ரகம். அக்குடும்பத்தினருக்கு உதவிய அந்த நல்லவர் அக்குடும்பத்தில் தங்கி இருக்கும் போது அனைவரும் 'ஒன்றும் தெரியாத அமுக்கு பாப்பாக்கள்' போல நடந்து கொள்வர். மிகப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு உதவிகள் கேட்பார். இளகிய மனம் படைத்த அந்த நல்லவர் அவர்கள் கேட்டவாரெல்லாம் செய்து கொடுப்பார், நடந்து கொள்வார். அதனால் அக்குடும்பத்தினர் பெரும் பயன் அடைந்தனர்.

அக்கு(டு)ம்பத் தலைவன் ஒரு 'சைலென்ட் துரை'.  குறிப்பாக தனது மகளிடம் அதிகமாக பேச மாட்டார். இருவரும் கண்களாலே 'சைகை' செய்து கொள்வர். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அவை அந்த இருவருக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு சட்டென புரியாது. அந்த நல்லவருக்கும் புரியாது போனதில் வியப்பு ஏதும் இல்லை. சுருங்கச் சொன்னால் அவரை தந்தையும் மகளும் சேர்ந்து அந்த நேரத்தில் ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.

அக்கு(டு)ம்பத் தலைவியை 'ஒரு அபிநய சரஸ்வதி' எனலாம். சூழலுக்குத் தக்கவாறு முகத்தில் பாவனை காட்டுவார். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் முகவாய்க் கட்டு இன்னும் கோனையாகிவிடும். பிடித்திருக்கிறது என்றால் உள்ளே கோணல்மாணலாக வளர்ந்திருக்கும் அத்த்தனை பற்களும் தெரிய உதடுகள் காது வரை எட்ட சத்தமில்லாமல் சிரிப்பார். விரும்பாத ஒன்று நடந்து விட்டதாக அவர் எண்ணினால் 'ஸ்...ஸ்ச் ...' என்ற சத்தம் மட்டும் கேட்கும். பல சமயங்களில் ஏறுக்குமாறாகவும் பாவனை காட்டுவார், காரியம் சாதிக்க. பாவம்..... அந்த நல்ல மனிதர் இந்த அபிநய சரஸ்வதியின் முக பாவனைகளால் பல முறை குழம்பி போய் இருக்கிறார்.

அக்கு(டு)ம்ப தலைவரின் மகள், தனக்கு சாதகமான பதிலை சிரித்துக் கொண்டே போட்டு வாங்குவதில் கில்லாடி. அவர் கேட்ட கேள்வி மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் அந்த நல்ல மனிதர் சொன்ன பதில் எல்லோருக்கும் தெரியும். குரங்கிடமிருந்து  தொப்பியை திரும்பப் பெற வியாபாரி, முதலில் தனது தொப்பியை தூக்கி எறிவானாம். அதை போல செய்து முதலில் ஒரு ஒத்திகை பார்த்துக் கொள்வார். அவர் ஒத்திகைக்கு செய்ததை அந்த நல்ல மனிதரும் நல்லெண்ணத்தில் செய்தார்.  பின் 'அது தவறு.. நீ ஏமாந்து விட்டாய்' என இன்று அவரை பரிகசிக்கின்றார். அந்த மனிதருடன் சேர்ந்து கமுக்கமாக செய்த பல காரியங்களை இன்று ஒருபுறமாக நின்று 'தவறு' என்று சொல்கிறார். ஆனால் அதெப்படி தவறாகிவிடும்? எனினும் இப்படியே அவரது நுண் உணர்வுகளை தூண்டி, சீண்டி மெல்லமெல்ல அவரை சீரழித்து வந்தார். நேரத்திற்கு தக்க கபட நாடகம் போடுவதில்,  ஆடுவதில்  கில்லாடி. அந்த நல்லவரை எப்படியும் தவறானவராக சித்தரிக்க வேண்டும் என்று பலே திட்டங்கள் எல்லாம் போட்டார்.  எல்லாம் 'பேக்கு வர்ம' மயம்.

அக்கு(டு)ம்ப தலைவனின்  மகன் ஒரு அசகாய பேக்கு (சூரன்). காரியம் ஆக வேண்டும் என்றால் எதையும் செய்வான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு பதில் சொல்ல மாட்டன். 'ஹு..ஹும்.. ஹு..ஹும்..' என்ற ஒரு விசித்திர முனகல் தவிர வேறு எந்த சத்தமும் அவன் வாயில் வராது. அதாவது எதிர் தரப்பினர் பேசுவதை அமோதிப்பதை போல. இப்படி 'ஹு..ஹும்.. ஹு..ஹும்..' என்று சொல்லி பின்னிட்டு தங்கள் 'கை  கழுவும்  திட்டத்தை நிறைவேற்ற' அந்த நல்ல மனிதரிடம்  பல விடயங்களை கறந்து கொண்டான். தேவைக்கு தகுந்தாற் போன்று பல பொருட்களை இரவலாக, பரிசாக பெற்றுக் கொண்டான்.

அக்கு(டு)ம்ப உறுப்பினர் அனைவரும் நடப்பதே ஏதோ பாதம் தரையில் தொட்டும் தொடாமலும் நடப்பது போல இருக்கும். பூனை தோற்று விடும் போங்கள். மெல்ல நடந்து வந்து ஒற்றர் வேலை பார்ப்பதில் வல்லவர்கள். அதே நேரம் திடீரென மாயமாக மறைந்தும் போய் விடுவார்கள். "இங்கேதானே இருந்தார்கள்.. எங்கே போனார்கள்?" என்று நாம் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த மனிதருக்கு வேண்டியவர்களிடம் அவரை அறியாமலேயே பழகி வந்துள்ளனர். தற்போது அவர்களிடம் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு, அவரை பற்றி வெகு சாதுரியமாக குறை கூறி துவேசம் விளைவிக்கின்றனர். அவருக்கு வேண்டாதவர்களை இனம் கண்டு அவர்களிடமும் பழகினர். எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா?

அந்தக் குடும்பம் இந்த நல்ல மனிதரிடம் காட்டிய பேக்கு வர்மத்தால், இன்று அவர் கிட்டத்தட்ட சிதைந்து போய் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றியா ? கிலோ எவ்வளவு? என்று கேட்கிறது அக்குடும்பம்.

அக்குடும்பம் இதுகாறும்  வன்ம உணர்வுடன் பழகி வந்துள்ளது என்பதை அந்த நல்ல மனிதர் அறிந்து கொள்வதற்குள் எல்லாம் கை மீறிப் போய் விட்டது.

இப்படிப்பட்ட 'வர்மக் கலையை' பிரயோகிக்கும் சேறும் சகதியுமான நபர்களை அடையாளம் கண்டு விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் முடங்கி போவது உறுதி. 

24 November, 2011

நான் இறக்கின்ற போது....

னது கண்களை, 
சூரிய உதயத்தையே காணாதவருக்கு கொடுங்கள்;

னது இதயத்தை, 
இதயத்தின் வலியை உணர்ந்தவருக்கு கொடுங்கள்;

னது குருதியை, 
கொடும் விபத்தில் காயம்பட்ட இளைஞனுக்கு கொடுங்கள்;

னது சிறுநீரகங்கள், 
மற்றொருவர் உடலிலிருந்து கழிவை வெளியேற்றட்டும்;

னது எலும்புகள், 
முடமான குழந்தையை நடக்கச் செய்வதற்கு உதவட்டும்;

ன்னில் என்ன மிச்சமிருக்கிறதோ அதை எரியுங்கள்; 
அந்தச் சாம்பலை மலர்ச்செடி வளர காற்றில் தூவுங்கள்;

ன்னுடையது எதையாவது நீங்கள் புதைக்க வேண்டியிருந்தால், 
அது எனது தவறுகளாகவும், நான் எனது சக மனிதனுக்கு எதிராக செய்த குற்றங்களாகவும் இருக்கட்டும்;

னது பாவங்களை பிசாசுகளுக்கு கொடுங்கள்;

னது ஆன்மாவை ஆண்டவனுக்கு கொடுங்கள்;

நீங்கள் என்னை நினைக்க விளைந்தால், 
யாருக்குத் தேவையோ அவருக்காக கனிவான செயல் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது சொல் ஒன்றைக் கூறுங்கள். அதுவே என்னை நினைப்பதாகும்.

நான் கேட்டதை எல்லாம் நீங்கள் செய்வீர்களானால், 
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் !


- நானி ஏ. பல்கிவாலா.
சட்ட மேதை.21 November, 2011

இது என் 100-வது பதிவு ! வாழ்த்துகளை வேண்டுகிறேன் !!

இது என் 100-வது பதிவு.

வாழ்த்துகளை வேண்டுகிறேன் !

முதலில் எனது வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வரும் உங்கள் அனைவரிடமும் வாழ்த்துகளை பெற விளைகின்றேன். உங்கள் வாழ்த்துகளை இந்தப் பதிவுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டுகள் மூலம் சுட்டிக் காட்டினால், அதுவே கூட போதுமானது. என் மனம் நன்றியுடன் என்றும் நினைக்கும்.

நன்றி தெரிவிக்கின்றேன் !

எனது இந்த வலைப்பதிவிற்கு உறுப்பினர்களாக இதுகாறும் எழுபத்து ஏழு பேர் சேர்ந்திருக்கின்றனர். அவர்களில் பலர் மிகப் பெரும் வலைப்பதிவர்கள். கிட்டத்தட்ட ஜாம்பவான்கள் அல்லது முன்னோடிகள் என்று கூறலாம். அவர்கள் எல்லோருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றி தெரிவிக்க விளைகின்றேன்.  குறிப்பாக திருவாளர்கள்  ராஜராஜேஸ்வரி ஜெகமணி, கவிதை வீதி சௌந்தர்,ரமேஷ் வெங்கடபதி, வேடந்தாங்கல் கருன், நெற்குப்பை தும்பி,  ரத்தினவேல் நடராஜன், மக்சிமம் இந்தியா ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் அடிக்கடி பின்னூட்டம் இட்டவர்கள் என்ற வகையில் என் நினைவில் நிற்கிறார்கள்.


அடுத்து அந்த உறுப்பினர்களில் பலர் இந்த வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து, அவ்வப்போது ஓட்டும், மறுமொழியும் இட்டு வருகிறார்கள். அவர்களில், வலைப்பதிவர்கள் அல்லாத பல வாசகர்கள் அடங்குவர். குறிப்பாக சொல்வதென்றால் அமைதி அப்பா, கோவை சக்தி, செல்வராசு (அன்னை மோட்டோர்ஸ்), வக்கீல் ராஜா, அண்மையில் 'ஆளுங்க' - இவ்வாறு சிலர். இவர்களுக்கும் நன்றி சொல்கின்றேன்.


உறுப்பினர்களாக சேர்ந்த வேறு சிலருடன் எனக்கு பெரிய பரிச்சயம் ஏதும் ஏற்படவில்லை. காரணம் அவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்த போது, அவ்வாறு சேர்ந்துள்ள விவரத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, வேறு வகையில் விவரங்களை அறிய முடியவில்லை.

மற்றபடி இந்த வலைப்பதிவை உலகெங்கிலும் உள்ள, தமிழறிந்த மக்கள் அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கினறனர் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் யாவருக்கும் நீங்கா நன்றிகள்.

சில வேடிக்கை அனுபவங்கள் :

நான் சில மாதங்களுக்கு முன் '' 'Disc Bulge' வலிக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு'' என்ற தலைப்பில் அனுபவக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன்.அது மட்டும் இன்றளவும் தினமும் குவைத் தேசத்திலிருந்து பார்வை இடப்படுகிறது. யாரோ ஒருவர் இப்படி தினமும் வாசிக்கின்றார் என்பதை என்னுடைய அனுமானத்தில் அறிய முடிகிறது. நீங்கள் தொடர்ந்து இந்த வலைப்பதிவின் ஓரத்தில் உள்ள 'Live Traffic Feed'பெட்டியை கவனித்தால் புரியும். ஆனால் அவர் ஏன் அப்படி தொடர்ந்து பார்க்கின்றார் அல்லது வாசிக்கின்றார், யார் அவர் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு என்ன தெரிய வேண்டும் என்பதும் புரியாத மர்மமாக உள்ளது. அல்லது 'அந்தக் கட்டுரையை அவர் தொடர்ந்து பார்க்கிறார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறாரா ?" - அதுவும் புரியவில்லை. 

அந்த டிஸ்க் பல்ஜ் வலி எனது நண்பருக்கு ஏற்பட்டது, என்று நான் கட்டுரையை தொடங்கி இருந்தாலும், உள்ளபடி அந்த வலி எனக்குதான் ஏற்பட்டது.  அக்கட்டுரையின் முடிவில் 'வலி வந்தது எனக்குத்தான்' என்பதை புரிய வைத்திருப்பேன். சிறிய எழுத்துகளில் இருக்கும் அதையும் படித்து என் மீது அன்பு கொண்டவர்கள், 'உங்களுக்கு ஏதோ வலியாமே..? இப்போ எப்படி இருக்கு..?" என்று கேட்கத் தொடங்கி, அதற்கு நான் பதில் அளித்து கொஞ்ச காலம் இப்படியே சென்றது. சிறிய எழுத்துக்கே இப்படி என்றால், 'எனக்குத்தான் வலி' என்று பெரிய எழுத்துகளில் எழுதி இருந்தால்...? சில சமயங்களில் சில சங்கடங்களை தவிர்க்க வேண்டி உள்ளது. எனினும் அப்படி என் மீது அன்பு கொண்டு விசாரித்தவர்களுக்கும் நன்றி.

இன்னும் சிலர் திடீரென ஒரு தொடர்பில்லாத கேள்வியை கேட்டு வலைப்பதிவிற்கு பின்னூட்டமாக அனுப்புவர். ஏதோ என்னிடம் கேட்க வேண்டும் என்ற நோக்கில் அது இருக்கும். அவர்களின் விவரங்கள் பார்த்தால் அது அப்போதுதான் உருவாக்கப்பட்டதாக இருக்கும். இப்படியும் சில நேரங்களில் சில மனிதர்கள்.

வலைப்பதிவில் எழுதுவதால் ஒரு வலைப்பதிவாளருக்கு என்ன பயன்? 

இது ஒரு முக்கிய கேள்வி என்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

நீங்கள் எழுதுவதற்கு  யாராவது பணம் கொட்டித் தருகிறார்களா? 'ஒரு பைசா வருமானமும் கிடையாது' என்று  உங்கள் மனது உடனே பதில் சொல்லியிருக்குமே ?

சரி போகட்டும்.. வேறு ஏதேனும் வருமானம் உண்டா, என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், கூகுள்  'ஆட்சென்ஸ்' என்று ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது ஏதோ ஒன்று (!) நமது வலைப்பதிவில் விளம்பரங்களை வைக்குமாம். அதுவும் வலைப்பதிவு மிகவும் பிரபலமான, பலர் வாசிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு அப்போதைக்கப்போது வைக்கும் விளம்பரங்களின் மீது யாரவது சொடுக்கி, அது சம்பந்தப்பட்ட வலைதளத்திற்கு சென்றால், ஒரு சொடக்குக்கு  ஏதோ 'ஒரு காசு.. ரெண்டு காசு' என்ற சொற்ப வீதத்தில், காசு தருவார்களாம். இந்தச் சங்கதி எல்லா வலைப்பதிவர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த 'ஆட்சென்ஸ்'-இல் நீங்கள் பதிவு செய்து கொள்ள விரும்பி, அது கேட்கும் தகவல்களை பூர்த்தி செய்து மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பம் செய்தால், நமக்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு பதில் வரும். அதில் 'உங்கள் வலைப்பதிவின் மொழி ஆட்சென்ஸ் அங்கீகரிக்காத மொழியாக (அதாவது நமது செம்மொழி தமிழ்) இருப்பதால், உங்கள் வலைப்பதிவை ஏற்க முடியாது. எனவே நிராகரிக்கின்றோம்' என்று நமது விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விடுவார்கள்.  தமிழ் மொழியில் வெளியாகும்  பதிவுகளை  'ஆட்சென்ஸ்' அங்கீகரிக்க வேண்டும்.

இப்படி பணரீதியாக பெரிய பயன் ஒன்றும் இல்லை. இதை சக பதிவர்கள்  பெரும்பாலும் ஆமோதிப்பார்கள் என்று நினைக்கின்றேன். 'ஆனால் மனரீதியாக ஏதோ ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது' என்று சொல்வது எனக்கு புரிகிறது. ஆம், வலைப்பதிவர்களுக்கு கிடைப்பது அந்த மகிழ்ச்சி ஒன்றுதான்.

நாம் வாசித்து புரிந்து கொண்டதை, நமக்கு தெரிந்ததை, நமது சிந்தனைகளை, நாம் கேட்டதை, பார்த்ததை, உணர முடிந்ததை, நமது அனுபவத்தை, கண்டு பிடித்ததை இந்த வலைப்பதிவின் மூலம் வெளி உலகிற்கு எடுத்து சொல்கிறோம். ஒன்றிரண்டு பக்க அளவில்.

சாமானிய மக்கள் இவற்றை  அச்சில் சொந்தமாக கொண்டு வந்து, உலகம் முழுக்க விநியோகம் செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது. அல்லது வேறு யாரும் பிரசுரம் செய்ய முன் வருவார்களா? வேண்டுமானால் ஒரு முழுப் புததகமாக எழுதி, அது சம காலத்திற்கு பயன் அல்லது மகிழ்ச்சி தருவதாக இருந்தால், பதிப்பாளர்கள் முன் வரலாம். அதற்கும் ஆரம்பத்தில் பணம் தரமாட்டார்கள். பதிப்பாகி வெளி வந்த புத்தகத்தில் 50  அல்லது 100௦௦ புத்தகத்தை ௦௦ தருவார்கள்.

அந்த வகையில் இந்த வலைப்பதிவு பன்மடங்கு சிறந்தது என்றே கூற வேண்டும். நமது நேரம் ஒன்று மட்டும் செலவாகிறது. கருத்துகள் வெளியே உடனுக்குடன் பறக்கிறது, அதுவும் அகிலம் முழுக்க. ஆனால் மனமகிழ்ச்சி ஒன்றை தவிர வேறு பிரதிபலன் ஏதும் இல்லாமல். இதுவும் ஒரு சேவை, அதுவும் இலவசமாக !

மற்றொரு சங்கதியும் இங்கு கவனிக்கத் தக்கது. அதாவது நாம் இணையதளம் வாயிலாக எழுதும் அல்லது பதிக்கும் எல்லாம், அறிவியல் உள்ளவரை இருக்கும். ஒரு கணினி இருந்தால் எங்கும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், வாசிக்கலாம், அச்செடுத்துக் கொள்ளலாம்.  நமது  சிந்தனைகளின் பெட்டகம், இந்த வலைப்பதிவு கருத்துரு. 

ஏடு கூட கிழிந்து விடலாம். ஆனால் ஒரு பதிவை அப்பதிவர் நீக்கினால்  தவிர மற்றவர் நீக்க முடியாது; அழிக்க முடியாது.

இன்று சிறப்பான, பயன் தரக்கூடிய வலைப்பதிவுகள் பல உள்ளன. அவை அடிக்கடி உலகம் முழுக்க உலவப்படுகின்றன.  அவற்றை பெரிய வணிக நிறுவனங்கள் இனம் கண்டு, அவற்றில்  தங்கள் விளம்பரங்களை பதிக்க முன் வர வேண்டும். சில வலைப்பதிவுகளில் இவ்வாறு காண முடிகிறது. ஆனால் இது பரவலாக்கப்பட வேண்டும். இதற்கு  வலைப்பதிவாளர்களுக்கு கணிசமாக ஒரு தொகை தரமுடியாது போனாலும், மாதாமாதம் ஒரு சிறு தொகையை  ஊக்கத் தொகையாக வழங்க அந்நிறுவனங்கள் முன் வர வேண்டும்.

இப்பதிவுலகம் நாளாவட்டத்தில் மிகப் பிரதானமான ஊடகக் களமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பதிவர்களுக்கு ஒரு சங்கம் அமைக்கப் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பதிவர்கள் சந்திக்கலாம், அவர்களுக்கு நன்மையும், பலனும்  தரும் சங்கதிகளை கூடி விவாதிக்கலாம். 

முடிவில், வலைப்பதிவில் நாம் எழுதும் விடயங்கள் யாரோ ஒருவருக்கு மகிழ்ச்சியை தருகிறது, யாரோ ஒருவர் பயன் பெறுகிறார், யாரோ ஒருவரின் சிந்தனைக்கு விருந்தாகிறது என்ற அளவில் வலைப்பதிவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சி (ஆத்ம திருப்தி) கொள்கின்றனர். இதுதான் நேரத்தை ஒதுக்கி   எழுதும் பதிவர்களுக்கு கிடைக்கும் மறுபயன். எழுதியதற்கு மறுமொழியும், அதிக ஓட்டும் கிடைத்தால், இந்த மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. 

அவ்வாறே நானும் மன மகிழ்ச்சி அடைகின்றேன். நான் சிறிது காலம் சில பின்னடைவு காரணமாக மிக மன வருத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் இந்த வலைப்பதிவில் அவ்வப்போது எழுதி வந்ததின் வாயிலாக, அந்த வருத்தத்தை திசை திருப்பிக் கொள்ள வழி கிடைத்தது. பதிவர்களுக்கு இப்படியும் ஒரு ஆறுதலை தருகிறது இந்தப் பதிவுலகம்.

திரட்டிகளுக்கு நன்றி !!

எனது பதிவு உள்ளிட்ட மற்ற எல்லா பதிவர்களின் பதிவுகளையும் திரட்டி அளித்து வரும் தமிழ்மணம், tamil10, indli, Thiratti, valaiyugam, thamilbest, valaipookal, ulavu, தமிழ்வெளி, Udanz, yellameytamil ஆகிய வலைதளங்களுக்கு நன்றி தெரிவிக்காது போனால் இக்கட்டுரை முழுமை பெறாது. அந்த வகையில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றி..

வணக்கம்.

20 November, 2011

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்"

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்"

ஏன் இந்த பேச்சு வழக்கு வந்தது?

கூத்தாடி என்பவர், கூத்தாடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதிப்பவர்.  ஊர்ஊராக சென்று தனது கூத்தாட்டத்தை காண்பித்து அந்த ஊர் மக்களை மகிழ்வித்து பணம் ஈட்டுபவர். ஒரே ஊரில் நீண்ட நாள் தனது வித்தையை காட்ட முடியாது. மக்களுக்கு அலுப்பு தட்டி விடும். பணமும் வராது; பயனும் இராது. அவனது வித்தையை தெரிந்த மக்களுக்கு சலிப்பாகி விடும்.

ஆனால் ஒரே ஊர் ஏதோ பிரச்சனை காரணமாக ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு மிகவும் வசதியாகி விடும். ரெண்டுபட்ட மக்களிடையே மாற்றிமாற்றி தனது வித்தையை காட்டி பிழைக்கலாம். அந்த நேரத்திற்கு அவர்களுக்கு உள்ள பிரச்சனை அடிப்படையில் தனது கூத்தாட்டத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். இரண்டு தரப்பினரில் எந்த தரப்பு மக்களுக்கு தனது கூத்தாட்டத்தை அவர் காண்பிக்கின்றரோ அந்த தரப்பு மக்களை உயர்த்தியும், அவர்களது செயல்களை நியாயப்படுத்தியும், மற்றொரு தரப்பு மக்களின் செயலை மட்டம் தட்டியும் வசனம் பேசி, நடித்து, பாட்டு பாடி கவரலாம். மாற்றிமாற்றி 'சீன்' போடலாம்.

இப்படி ரெண்டு பக்கமும் கூத்தாட கூத்தாட அவனுக்கு வருமானமும் கூடிக் கொண்டே போகும். மக்களும், "என்னமா அவுகளைப் பத்தி நக்கல் பண்ணி பாட்டு பாடுறான் பாரு" என்று ஆமோதித்து, வரவேற்றுக் கொண்டிருப்பார்கள், விவரம் தெரியாமல்.

சில சமயம் மற்றொரு தரப்பினர் 'இதை செய்வார்கள்.. அதை செய்வார்கள்' என்று பயமுறுத்தியும் பாடுவான். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சவாலும் விடுவான். கூத்தாடியை சட்டென புரிந்து கொள்ள முடியாது. அவன் நேரத்துக்கு தக்க வேஷம் கட்டி, வசனம் பேசுபவன். ரெண்டுபட்ட ஊரை ரெண்டாகவே வைத்து, அவன் தனது பிழைப்புக்கு வழி செய்து கொண்டிருக்கிறான் என்பதுதான் நிதர்சனம். அந்த மக்கள் சமாதானம் ஆனாலும், அதற்கும் விடமாட்டன்.  சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்படி தூண்டுவான். இதனால் இரு தரப்பினருக்கும் நிறைய இழப்பு ஏற்படும். காலம் முழுக்க நீங்கா மனவருத்தம் ஏற்படும். 'நாம் ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்றோ.. இவனால்தான் தாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம் என்றோ.. ரெண்டுபட்ட மக்கள் ஒருக்கணம் ஒற்றுமையாக சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே போதும், கூத்தாடியின் வேஷம் களைந்து விடும். அவனது ஆட்டம் முடிவடைந்து  விடும். இங்கே இவ்வளவுதான் தனது பப்பு வேகும் என்று எண்ணி உடனே தனது படுதாவை தூக்கி கொண்டு வேறு ஊருக்கு ஓடி விடுவான். இதனால்தான் 'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்று பேச்சு வழக்கு தோன்றியது என்று சொல்லலாம்.

இது ஒரு பொதுவான நிலைப்பாடு. விதிவிலக்குகளைப் பற்றி பேசவில்லை.

நாம் மேலே கண்ட அத்தகு கூத்தாடியை அதே பெயர் கொண்டு அழைப்பதை விட இன்னொரு பெயராலும் அழைக்கலாம். அது 'அனுகூல சத்துரு' எனப்படும். நல்லது செய்வதாகக் கூறி ஒட்டிக் கொண்டு, அவனது பிழைப்பை ஓட்டிக் கொள்வான். நட்பாக பழகி தனது இடத்தை இரண்டு பக்கமும் நிலையாக தக்க வைத்துக் கொள்வான். இரு தரப்பு பிரச்சனைகளில் உண்மையான எதிரியே இப்படிப்பட்ட அனுகூல சத்துருக்கள்தாம். அவன் யாருக்கும் அனுகூலம் செய்வதில்லை. அனுகூலம் செய்வதாக சொல்லி அவன் தனக்கு அனுகூலம் தேடிக் கொள்வான். அவன் செய்வது அனுகூலம் என்று நம்பினால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பிரச்சனைக்குரிய இரு தரப்பினரில் யாராவது விட்டுக் கொடுத்தலொழிய பிரச்சனை முடியாது. யாரும்  விட்டுக் கொடுப்பதில்லை என்றால் பிரச்சனை பெரிதாகும். அப்படி பெரிதானால் இந்த அனுகூல சத்துருக்கு இன்னும் கொண்டாட்டம்.  பிரச்சனை வேறு வகையில் மேலும் பெரிதானால் 'நமக்கெதுக்கு ரிஸ்க்' என்று அப்படியே போட்டது போட்டபடியும்  ஓடி விடுவான்.

இந்த அனுகூல சத்துருக்கள் பிரச்னை தோன்றக் கூடிய இடங்களில் எல்லாம் இருப்பார்கள். அல்லது சும்மா இருந்தாலும் கோள்மூட்டி பிரச்சனைகளை தோற்றுவிப்பார்கள். அதற்கு இரு தரப்பிலும் ஆரம்பத்திலிருந்தே மிக நம்பிக்கைக்கு உரிய நபராக பழகுவார்கள். பின் ஒருவரை மற்றொருவருக்கு எதிராக குழி தோண்ட வைப்பான். உண்மையில் அந்த இரு தரப்பினரும் தங்களுக்காக குழி தோண்ட வைக்கின்றான் இவன்.

இரு தரப்பினருக்கும் விவரம் தெரியும் போது இந்த 'அனுகூல சத்துரு' ஒரு மிகப் பெரிய 'நம்பிக்கை துரோகி', 'கூட இருந்து குழி பறிப்பவன்' என்பது புலனாகும்.

இப்படிப்பட்ட கூத்தாடிகள், அனுகூல சத்துருக்கள், நம்பிக்கை துரோகிகள் புதிதாக எங்கிருந்தும் முளைப்பதில்லை. இவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருந்து கொண்டு நமது செயல்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். எப்போது ஏமாறுவார்கள், எப்போது சண்டை மூட்டி விடலாம் என்று காத்திருப்பார்கள். ஒரு குடும்பத்தில், நட்பு வட்டத்தில், தொழிலில் இப்படிப்பட்டவர்களை சாதாரணமாக காணலாம். இதில் மிகவும் சிரமமானது இவர்களை அடையாளம் கண்டு கொள்வது. அவ்வளவு அருமையாக நடிப்பார்கள், முதலைக் கண்ணீர் கூட வடிப்பார்கள். கண்டறிவது கடினம். ஆனால் அப்படியும் கண்டு கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி உள்ளது. இப்படிப்பட்ட துரோகிகள் நமது குடும்ப விவகாரங்களில், பிரச்சனைகளில் திடீரென அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். நமது நம்பிக்கைக்குரிய மற்றவர்களை சந்தேகம் கொள்ள வைப்பார்கள். அதற்கு ஏதோ சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசுவார்கள். உண்மையில் அவன் எதிர் தரப்பினரின் கையாளாக அப்போது செயல்பட்டுக் கொண்டிருப்பான். நம்மிடமிருந்து விவரங்களை கேட்டறிந்து எதை சொன்னால் பிரச்சனை முடிவுக்கு வருமோ அதைச் சொல்லாமல் இதர விவரங்களை சொல்லி பிரச்னையை மேலும் பெரிதாக்குவன். விவரங்கள் எப்படி தெரிகின்றன என்று கேட்டால் ஏதோ ஞானோதயத்தில் தெரிந்தது போல் பாவனை காட்டி  பேசுவான். செய்வதெல்லாம் பித்தலாட்டம், ஆனால் மிகவும் தெரிந்தது போல் கட்டி ஏமாற்றுவான். இப்படி மாற்றி மாற்றி நல்லவனாக நடித்து, பிழைப்பை ஓட்டிக் கொள்வான். எந்தப் பக்கம் ஒட்டினால் நிறைய பலன் கிடைக்கும் என்பதை கணித்து அந்தப் பக்கம் நன்றாக ஒட்டிக் கொள்வான். எதிர் தரப்பினரை மறைமுகமாக மிரட்டவும் செய்வான். அந்த எதிர் தரப்பினர் அவனுக்கு ஆதியில் பல நன்மைகள் செய்திருந்தாலும், அதை முற்றிலும் மறந்து நன்றி கெட்டதனத்தின் மொத்த உருவமாக நிற்பான். இவன் ஒரு தரப்பினருக்கு தந்திரமாக சொல்லிக் கொடுக்கும் திட்டங்கள் யாவும் பெரிதும் 'பேக் பயர்' ஆகிவிடும். 'கெடுவான் கேடு நினைப்பான்' என்பதை இவனை ஆதரவாக சார்ந்து நிற்கும் தரப்பினர் விரைவில் புரிந்து கொண்டால் நிம்மதியும் சாந்தியும் கிட்டும்.

இப்படிப்பட்டவரின் லீலைகளை இன்னும் நிறைய சொல்லலாம்.

எனவே  பிரச்சனைகளின் போது 'சம்மன்' இல்லாமல் வாஞ்சையாக 'ஆஜராகும்' இப்படிப்பட்ட பேர்வழிகளிடம் இருந்து கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே) எட்டி இருங்கள். இல்லாவிட்டால் தங்கள் சுயநலத்திற்காக மொத்த வாழ்வையே கெடுத்து விடுவார்கள் ! அடையாளம் கண்டு கொண்டால் அவனை ஒரு அற்பபதராக, ஒரு புழுவாக கருதி, 'சீ... நீ இவ்வளவுதானா?...' என்று அவனை மன்னித்து விடுங்கள். அவன் வேறு இடம் போய் விடுவான்.


சில தினங்களுக்கு முன் ஒரு பதிவர் 'துரோகம்' பற்றி மிகச் சிறப்பாக எழுதி இருந்ததை வாசித்தேன். அதை அவரது அனுமதியுடன் இங்கு மேற்கோளாக சுட்டிக் காட்டினால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

தலைப்பு : ஒரு துரோகத்தின் முன்னால் 


ரு துரோகத்தின் முன்னால்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதைப் பற்றிச் சில குறிப்புகள்...

சற்றும் எதிர்பாராத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
துரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம்

ஒருவேளை
வெகு அருகிலேயே
ஒரு திருடனைப் போல
ஓடி ஒளிந்துகொண்டிருக்கலாம்

அதன் முன்பு
கண்ணீர்விட்டோ
அழுது புலம்பியோ
ஒரு துளி இரக்கத்தைப்
பெற்றுவிடலாமென்று
நினைத்துவிடாதீர்கள்

அது
அன்பை... காத்திருப்பை
தியாகத்தை... துயரத்தை
ஒருபோதும்
ஏறிட்டுப் பார்க்காது

மூக்கு நுனியில்
நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும்
உங்களின் பெருங்கோபம்
நியாயமானதென்றாலும்
மற்றவர் முன்னிலையில் அதனை
அடையாளம் காட்டியோ
சத்தம் போட்டோ
பேசிட வேண்டாம்

உங்களைக் குற்றவாளியாக்கிப் பார்த்திட
ஓராயிரம் பொய்களைப்
புனைந்து வந்திருக்கும் அது

சற்றும் பொருட்படுத்தாது
விட்டுவிடுங்கள் அல்லது
புன்னகை ஒன்றை ஏற்றி
வாசல் வரை சென்று
வழியனுப்பிப் பாருங்கள்
தலைகுனிந்தவாறு
விடைபெறாமலேயே
சென்றுவிடக்கூடும்

அதிகம் கடினம் என்றாலும்
பெருங்கருணைகொண்டு
மன்னித்துவிடுங்கள்.
அடுத்த நிமிடமே
அது இறந்துவிடும்!
Related Posts Plugin for WordPress, Blogger...