என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

24 December, 2011

இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா?

இயக்கூர்திகள் சட்டம் (59/1988), பிரிவு 169 - உரிமையியல் நடைமுறை சட்டம், கட்டளை 38, விதி 5; கட்டளை 41, விதி 23-A. - 

வழக்கின் சங்கதிகள்படி, விபத்து ஏற்படுத்திய 'டிராக்டர் மற்றும் ட்ரைலர்'  வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்தை 'தீர்ப்பிற்கு முன் பற்றுகை' (Attachment before judgment) செய்யவும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா எனும் கேள்வி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன் எழுந்த போது, உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 38, விதி 5-இல் கண்ட வகைமுறைகள் (தீர்ப்பிற்கு முன் பற்றுகை செய்வது குறித்த நடைமுறைகளைக் கூறுவது), இயக்கூர்திகள் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நிலை நிறுத்தப்பட்டது.

எனவே, விபத்து வழக்குகளில் இழப்பீட்டிற்கான முடிவான தீர்வம் பகரப்படுவதற்கு முன்னதாக அத்தீர்வத் தொகையை பின்னிட்டு வசூலிப்பதற்கு உதவிகரமாக இருப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தை பற்றுகை (ஜப்தி) செய்யலாம். தீர்வத்திற்கு பிறகு அவ்வாகனத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

(Duvvuru Siva Kumar Reddy and etc. v. Malli Srinivasulu and etc.)


23 December, 2011

அணிலைப் போலவாவது வாழ்வோமே !


" ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....

அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...

ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....

காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்

நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .............."

இது அண்மையில் நான் படித்த, கவிஞர் சுஜா எழுதிய கவிதை. அப்படி ஒரு சிறு துரும்பெடுத்து போட்டதற்கே,  இராமாயணத்தில் அணிலுக்கு மிகச் சிறப்பானதொரு இடம் கிடைத்தது.

சீதையை மீட்க, கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டது. பாலவேலை நடந்த இடத்தில் இருந்த அணில், வானரங்களோடு சேர்ந்து பணிசெய்து ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று எண்ணியது. கடல் நீரில் மூழ்கி, கடற்கரை மணலில் புரண்டு எழுந்தது. ஈரவுடம்பில் ஒட்டிக் கொண்ட மணலை குரங்குகள் போட்ட பாறையில் உதிர்த்துவிட்டு வந்தது. (சில குறிப்புகளில் அது மிகச் சிறிய கூழாங் கற்களை தனது வாயில் கவ்வி கொண்டு வந்து இட்டது எனப்படுகிறது). இப்படி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த அணிலின் செயலை கவனித்தார் ராமன். அன்போடு அதன் முதுகில் தனது கைகளால் தடவிக் கொடுத்தார். அது அணிலின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகளாக விழுந்தன. அன்றுமுதல் அணில் ராமபிரானுக்கு மட்டுமல்ல, நமக்கும் அன்பிற்குரிய பிராணியாகிவிட்டது. 

இந்த ராமாயண குறுங்கதை சொல்லாமல் சொல்வது என்ன?

ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்பது அணிலின் விருப்பம். அதற்கு அவரது கருத்தைக் கவர வேண்டும். அருகில் பாலம் கட்டப்படுகிறது. ஆனால் அதற்காக பலம் வாய்ந்த வானரங்கள் பணி செய்கின்றன. சிறியவன், எளியவனாகிய தான் என்ன செய்து விட முடியும் என்று அணில் திகைத்தது. எனினும் தனது சக்திக்கு இயன்ற வரையில் செய்ய முடிவு செய்து அப்பாலம் கட்ட மணலை, (சிறு கூழாங் கற்களை) ஒட்டிக் கொண்டு வந்து உதிர்த்தது.    சிறிய உதவிதான். எனினும் அப்பாலத்தின் உருவாக்கத்தில் அணிலின் மணலும் சேர்ந்துள்ளது. அணில் காலத்தே செய்த உதவி ராமனின் மனதை ஈர்த்தது. அவர் அன்புடன் அணிலை தடவிக் கொடுத்து அதற்கு அருள் பாலித்தார். அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் அதற்கு ராமர் அணிவித்த தங்கப் பதக்கமாக இன்றும் காட்சி தருகிறது. இறைவனின் அருளைப் பெற்றதும்,   சமகாலத்தில் கண்ணெதிரே வாழ்வதுமான ஓர் உயிரினத்திற்கு இந்த சிறு அணிலும் ஒரு சான்று. முதுகில் மூன்று கோடுகள் உள்ள அணில்கள் ராமனின் அருளையும், அன்பையும் பெற்றவையாக போற்றப்படுகின்றன. அணில் 'பிள்ளை' என்று பாசமுடன் அழைக்கின்றோம்.

எளியவனின் சிறு உதவி என்றாலும் அது காலத்தே செய்யும் உதவியாக இருப்பின், மிகப் பெரியது. அதை போற்ற வேண்டும். மறந்து விடக் கூடாது. உதவி செய்தோருக்கு தக்க சமயத்தில் மறு உதவி செய்யவும் தயங்கக் கூடாது. 

ஆனால் இந்தக் காலத்தில் யார் இப்படிப்பட்ட கதை பற்றி கவலைப் படுகிறார்கள் ? கேட்டு கேட்டு உதவிகளை வலியப் பெற்று, பலன் அடைந்தவுடன், உடனடியாக அதை மறந்தும் விடுகிறர்கள். உதவி செய்தவரை எங்கோ பார்த்தது போல் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது. ஏறி வந்த ஏணியை எட்டித் தள்ளி விடுகிறார்கள். இன்னும் சில நேரங்களில் உதவி செய்தவனுக்கு சுயநலம் கருதி உபத்திரவம் செய்யவும் தயங்குவதில்லை. கொடுமையிலும் கொடுமை இதுவன்றோ..?

"வலியவனோ, எளியவனோ அவன் யாராக இருந்தாலும் எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும். வாங்கியாச்சுன்னா அவ்வளவுதான்.., நீ யாரோ.. நான் யாரோ.. " என்று சொல்லும் கூட்டம்தான் இந்த உலகில்  அதிகம் நடமாட்டம் செய்கிறது. 

இப்படி கூட சொல்லலாம்... 

அதாவது, இராமாயணத்தில் ராமர் ஒரு மானுட அவதாரம். அப்படி ஒரு மனிதன் ஒரு நெருக்கடியில், தேவையில் இருந்த போது அவருக்கு அணில் உதவியது. அத்துடன் குரங்கு, ஜடாயு போன்ற மற்ற உயிரினங்களும் உதவின. அப்படி மற்ற உயிரினங்களே உதவும் போது ஒரு மனிதன் துன்பத்தில், தேவையில் இருக்கையில், மற்றொரு சக மனிதன் அவனுக்கு பெரிய உதவி செய்யாது போனாலும் அணிலைப் போல சிறு துரும்பையாவது தூக்கிப் போடலாம். சில ஆறுதல் வார்த்தைகள் கூட போதும். அதே போன்று செய்த உதவிக்கு ராமன் அணிலுக்கு கொடுத்த அங்கீகாரம் மிகப் பெரியது. அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், இந்த மனிதப் பிறவியினர் செய் நன்றி மறக்காமலாவது இருந்தால் நன்று. 

செய் நன்றி கொன்றவருக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும்  உய்வில்லை !  

22 December, 2011

சீனாவில் ஒரு வினோத ஜந்து - படங்கள்

சீனாவில் ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வினோத ஜந்து (அல்லது விலங்கு) அங்கிருக்கும் வீடுகளில் நுழைந்து மக்களை பயமுறுத்தியது. மிரட்டும் பெரிய கண்கள், சிறிய உருவம், தலையில் முடி இல்லை என அது விசித்திரமாக  உள்ளது. அதன் முகத்தை பார்த்தால் மட்டும், அது குரங்கு இனத்தை சார்ந்ததாக தெரிகிறது. அதை பழத்தாசை காட்டி ஒருவர் லாவகமாக பிடித்து விட்டார். தற்போது அது குரங்கு இனத்தின் ஒரு வகையா என்பதை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வினோத 'ஏலியனின்' படங்களை பார்த்தால் உங்களுக்கு விவரம் புரியும்.20 December, 2011

"தட்கல்" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் !


பேருந்து கட்டண உயர்வின் எதிரொலியாக அனேகம் பேர் தொடர்வண்டியில் பிரயாணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதைய பேருந்து கட்டணத்தைக்  காட்டிலும் தொடர்வண்டி கட்டணம் மிகக் குறைவாக தெரிகிறது. எனவே கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்தாலொழிய பயணச் சீட்டோ, அமர இடமோ கிடைப்பதில்லை.

'தட்கல்' முறையில் பயணச் சீட்டு வேண்டுமெனில் இரண்டு நாட்களுக்கு  முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இது முன்பு இருந்த விதி. தற்போது கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல், பயணம் செய்வதற்கு முதல் நாளில்தான் தட்கல் பயணச் சீட்டு வழங்கப்படும் என்று தொடர்வண்டி நிருவாகம் அறிவித்துள்ளது. அதாவது தொடர்வண்டி கிளம்பும் தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக மட்டுமே தட்கல் சீட்டு வழங்கப்படும். சுருங்கச் சொன்னால் முன்பதிவானது, 48  மணி நேரங்களுக்கு முன்பு என்பது தற்போது 24  மணி நேரங்களுக்கு முன்பு என்று ஆக்கப் பட்டுள்ளது. 


ஒரு தொடர்வண்டி அதன் தொடக்க நிலையத்தில் இருந்து அடுத்தமாதம் இரண்டாம் தேதி புறப்படுகிறது என்றால், அதற்கான தட்கல் பயணச் சீட்டு வழங்கும் நேரம் அதற்கு முந்தைய தினமான 1-ஆம் தேதி காலை 8  மணிக்கு தொடங்குகிறது. முந்தைய நடைமுறைப்படி இரண்டு நாட்களுக்கு முன்பே தட்கல் சீட்டு பெறலாம் என்ற நிலை இருந்த போது, ஒரேடியாக அனைவரும் கணினியில் குவிந்து பதிவு செய்தனர். (அச்சமயம் தொடர்வண்டி நிருவாக இணையத்தளம் கூட சட்டென திறக்காமல் சண்டித்தனம் செய்யும்.) இதனால் விரைவில் எல்லா  சீட்டுகளும்  தீர்ந்து,  இடத்திற்கான மறு வாய்ப்புக்கு வழி இல்லாமல் போனது. தற்போது இந்த மறு வாய்ப்பு, தினம் தினம் பயணிகளுக்கு கிட்டியுள்ளது. இது பயணிகளுக்கு கிடைத்துள்ள உள்ளபடியான வசதி என்று எனக்குத் தோன்றுகிறது. (இதில் மாற்றுக் கருத்து ஏதும் இருந்தால் கருத்துரை இடலாம்.)

அதே நேரம் இங்கு மற்றொரு சங்கதியையும் அலச வேண்டியுள்ளது. அதாவது தட்கல் முறையில் பயணச் சீட்டு பெற்று, அதை இரத்து செய்தால் பயணக் கட்டணம் திரும்பத் தரப்படமாட்டது. இது தொடர்வண்டி நிருவாகத்தின் வணிகச் சுற்றறிக்கை கூறும் விதி. இதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உடன்பாடு இல்லை. 

சாதாரண முன்பதிவு சீட்டை இரத்து செய்தால் எப்படி கட்டணம் திரும்பத் தரப்படுகிறதோ, அவ்வாறே தட்கல் சீட்டுக்கும் தரப்படவேண்டும். காரணம் தட்கல் முன்பதிவு முறையில் முன்பதிவு செய்தவர் தனது பயணத்தை தள்ளி வைக்கிறார் அல்லது அவரால் அன்றைய தினம் பயணம் செய்ய இயலவில்லை என்றால், அவர் தனது தட்கல் பயணச் சீட்டை இரத்து செய்ய முன்வருவதில்லை. 'இரத்து செய்தால்தான் என்ன கிடைக்கப் போகிறது?' என்ற எண்ணத்தில் அப்படியே பேசாமல் இருந்து விடுவர். பெரும்பாலனோர் அதற்காக மெனக்கெடுவதில்லை.  அப்போது என்ன ஆகிறது? அவருக்கடுத்து காத்திருப்போருக்கு சீட்டு கிடைப்பதில்லை. இதனால் யாருக்கு என்ன பலன்? 
'தட்கல்' சீட்டை இரத்து செய்வோருக்கு, பயணக் கட்டணத்தை தொடர்வண்டி நிருவாகம் தர மறுப்பது நியாயமா?

எனவே சாதாரண பயண சீட்டை போல், தட்கல் முறை பயணச் சீட்டை இரத்து செய்தாலும், பயணக் கட்டணத்தை திரும்பத் தர தொடர்வண்டி நிருவாகம் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

என்ன சரிதானே?


Related Posts Plugin for WordPress, Blogger...