என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

30 December, 2012

நினைத்து நினைத்துப் பார்த்தால் ....

வருடம் முடிய வழக்கமான பண்டிகைகள்.. கொண்டாட்டங்கள்.. உறவினர் வருகை... பயணங்கள்... செலவுகள், வரவுகள்.. இப்படி வழக்கமான நிகழ்வுகளுடன் 2012 முடிகிறது. இது சென்று விட்ட கடந்த காலமாகப் போகிறது, டிசம்பர் 31-உடன்.

எனினும் விடை கொடுத்து அனுப்ப இருக்கும் 2012-இல் நாம் என்ன செய்தோம், நமக்கு என்ன நடந்தது ? நாம் கற்றுக் கொண்டது என்ன... நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ன? என்று நினைத்துப் பார்ப்பதே 2012-க்கு நாம் செய்யும் மரியாதை.

எனவே இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்  2012-ஐ சற்றே  நினைத்துப் பார்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது. நினைத்து நினைத்து பார்த்தால், 2013-இல் என்ன செய்யலாம், எதை தவிர்க்கலாம் என்ற சிந்தனை கிடைக்கும்; வாழ்வை இனி முன்னெடுத்து செல்வது எவ்வாறு என்ற தெளிவு பிறக்கும்.

மனிதன் என்பவன் யார்...? எளிய கேள்வி. தவறு செய்பவன் மனிதன். திருத்திக் கொள்பவன் மாமனிதன். ஆனால் மன்னிப்பவன் கடவுள். கடந்த காலத்தில் செய்த தவறுகளை நிகழ்காலத்தில் திருத்திக் கொள்ளலாம். தவறுகள்தாம் நமது சரியான வாழ்க்கைப் பாதையை கண்டுகொள்ள உதவுகிறது. முன்னேற்றத்தையும் தருகிறது. நம்ப வேண்டிய ஒன்று. ஆனால் செய்த தவறை மீண்டும் செய்து விடக் கூடாது, என்பதில் திண்ணமாக இருந்தால்.  அதுபோல் தவறால் பாதிக்கப்பட்டிருந்தால், தவறு செய்தவனை மன்னிக்கலாம். எனினும், யாரையும் மன்னித்து விடலாம் .. ! ஆனால் நம்பிக்கை துரோகிகளை மன்னிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மீண்டும் மீண்டும் துரோகம் செய்யத் தயங்காதவர்கள் இத்துரோகிகள். மன்னிப்பின் மகத்துவம் அறியாதவர்கள். இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்  பாடம் புகட்டுவதே சிறந்த வழி, அதுவும்  எச்சரிக்கையாக. நினைத்துப் பார்க்கும் போது நமது தவறுகள் தெரிய வரும். எத்தனை தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம்? எத்தனை பேரை மன்னித்துள்ளோம்? எத்தனை துரோகிகளிடம் இருந்து விலகி உள்ளோம் ? என்பதை அறிந்து கொள்ளலாம்.

2012-இல் செய்த வரவு செலவுகளை நினைத்துப் பார்த்தால், 2013-இன் நிதிநிலையை எப்படி வகுப்பது என்று தெரிய வரும். பொதுவாக வரவுக்கு மீறி செலவு செய்வது மனித சுபாவம். அது.. இது.. நிறைய வெட்டி சாமான்களை வாங்கி இருப்போம்..! திடீர் செலவுகளும் நமது 'பர்சை' தாக்கி இருக்கும். திடீர் வரவுகள் வர பெரிதும் வாய்ப்பில்லை.

உறவுகளில் காலத்தால் மாற்றம் ஏற்படுவதுண்டு. புதிய உறவுகள் உருவாகி இருக்கலாம். சில உறவுகள் முறிந்து இருக்கலாம். சில உறவுகளில் விரிசில் தோன்றி இருக்கலாம். இவற்றில் எதை சரி செய்ய முயன்று இருக்கின்றோம்? எதை வரவேற்று இருக்கின்றோம்? எப்படி தொடர்ந்து சமாளிக்க இருக்கின்றோம்? இதையும் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது. எதுவும் நிலையானது இல்லை. அதில் உறவும் விதி விலக்கல்ல.

சென்ற ஆண்டில் இழந்தது எவ்வளவு? சேர்ந்தது எவ்வளவு? நஷ்டமா..? இலாபமா ? நிர்ணயம் செய்த இலக்குகளை அடைந்தோமா? கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று.

முத்தாய்ப்பாக

"நினைத்து நினைத்து பார்த்தால்...
...... ......... ......... .......... .......... ..........
உன்னால்தானே நானே வாழ்கின்றேன்...
...... ......... ......... .......... .......... .......... "

இது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள். கேட்பதற்கு மனதை மயக்கும். ஆனால் இதில் வரும் "உன்னால்தானே நானே வாழ்கின்றேன்" என்ற வரிகள் கண்டிப்பாக நமது வாழ்வை மயக்கி விடும்.

யாராலும் யாரும் வாழ்வதில்லை. நமது வாழ்வில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். சிலர் உதவுகிறார்கள். சிலர் உபத்ரவம் செய்கிறார்கள். உதவி செய்தவனே உபத்திரவம் செய்கின்றான். உபத்ரவம் செய்தான் மனம் மாறி உதவியும் செய்கின்றான். எதுவும் நாம் பயன்படுத்திக் கொள்வதில் உள்ளது.

"தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை". நமது வாழ்வு நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு நாமே காரணம். அதாவது நாம் மற்றவர்களை, நமக்கு கிடைக்கும் வளங்களை, காலத்தை நன்றாக பயன்படுத்தி இருக்கின்றோம் என்று பொருள். வாழ்வு கெட்டுப் போனது என்றால் அதற்கும் நாமே காரணம். மற்றவர்களின் மீது பழி போட்டு பயனில்லை. கெட்டுப் போகின்ற போது மற்றவர்களின் மீது பழி போட்டு பழகிய நாம், நன்றாக இருக்கும் போது பொதுவாக அதற்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து கூட பார்ப்பதில்லை. சுட்டிக் காட்டுவதில்லை.


நமது வாழ்வு நமது கையில் என்பதை நினைத்துப் பார்த்து, எதிர் வரும் புத்தாண்டு 2013, எல்லா வளங்களையும் நமக்கு வழங்கி, அவற்றை பயன்படுத்தும் மனத் தெளிவு மற்றும் நம்பிக்கையை நாம் பெற்று இன்பமுடன் வாழ புத்தாண்டை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராவோம்.

வாழ்க ! வளர்க !!

29 December, 2012

முதலிரவு


சின்ன தலைப்புதான்....! ஆனா மேட்டர் பெரிசு...!! இதே முதல்லே ஒத்துக்கறீங்கல்லே !!!

கல்யாணம் ஆனவங்களுக்கு தெரிஞ்ச விஷயம்.. ஆகாதவங்களுக்கு புரிஞ்ச விஷயம். ஆனா அது பத்தி நிறைய கனவுகள் எல்லோருக்கும் இருக்கும். படிக்கிறப்போவே குதிரை பின்னாடி போகுது இல்லே...? அப்படி ஒரு விஷயம் சார் இது. 
முதலிரவு யாருக்கு...? ஒருவனுக்கு ஒருத்தியா.. ஒருத்திக்கு ஒருவனா இருந்தா அங்கே அது சம்பிரதாயப்படி முதலிரவு. வேறு ஏதாவது சமச்சாரம்ன்னா  முதலிரவுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லே. அதுக்கு பேரு வேற..!


சிலருக்கு முதலிரவு சுகம். அதாவது ஏற்கனவே ஒருத்தருக்கொருத்தர் பாத்துப், பழகி, பேசி பின் திருமணமாகி (கிட்டத்தட்ட காதல் திருமணம்) அதன் பின் வரும் முதலிரவு ... புரிதல் நிறைய இருக்கும்..! நினைத்தாலே இனிக்கும் !!

வேறு சிலருக்கு கொஞ்சம் கஷ்டமா கூட இருக்கலாம்.. மனசிலே என்ன இருக்கு என்பது யாருக்கு தெரியுங்க..?

இன்னும் சிலருக்கு புரிதல் ரொம்ப அதிகம் இருக்கும். திருமணக் களைப்பிலே ரெண்டு பேரும் முதலிரவுலே படுத்து தூங்கி விடுவது கூட உண்டு. அதனாலே ஒரு பாட்டி தனது பேத்தியை திருமணம் முடிந்த கையோடு ஒரு நாலு மணி நேரேம் பகல் பொழுதிலே நல்ல படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னாங்களாம் . மாப்பிள்ளை அதுக்கு முன்னடியே ரெஸ்ட் எடுக்க போனது யாருக்கும் தெரியாது என்பது இன்னொரு முக்கிய  மேட்டர். கவனிக்க வேண்டியது சார்...!!


முதலிரவு முடிந்த கையோட தேனிலவு போகிற சதிபதிகள் நிறைய உண்டு. அதாவது வீட்டிலே டிச்டர்பன்ஸ் ஜாஸ்தியாம். ரெண்டு பேரா போனவங்க மூணு பேரா தயாராவதும் (தாயராவதும்) உண்டு.


சிலருக்கு முதலிரவிலே தகராறு வருவதும் உண்டு. என்ன பண்றது ..? எல்லாம் தலை விதி சார் ! எப்படியோ போகப் போக பிக்கப் செய்து மேக்கப் ஆவுருதும் உண்டு. ஆனா பேக்கப் ஆகாம இருந்தா சரி..

இன்னும் சிலர் முதலிரவை திட்டமிடுவாங்க... அதாவது குடும்பத் திட்டமிடல். கொஞ்ச நாள் ஜாலிய இருக்கலாம்..! அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்..!! இது ஒரு ரகம். ஆனா இப்படி ஜாலியா  இருக்கலாம் என்று நினைத்து கொஞ்சம் சீரியசாக போன  விசயமும் உண்டு. அவர்கள் கடைசி வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஒருவர் மற்றொருவருக்கு குழந்தையாக மாறிய வரலாறும் மருத்துவத்தில் உண்டு. எதுவும் காலத்தே பயிர் செய்யனும் சார்.

இன்னொரு ரகமும் உண்டு. கல்யாணம் முடிஞ்ச கையேடு பலகாரம் தர்றதிலே சம்மந்தி சண்டை வந்து முதலிரவு தள்ளிப் போகிறதும் உண்டு. அந்த சிருசுங்கலே பாக்க பாவமா இருக்குமில்லே சார்..? இது இருதலை விருப்பம்.


இதோ ஒருதலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதாவது, மாப்பிள்ளை பையன் பொண்ணை ரொம்ப விரும்பி கல்யாணம் பண்ணியிருப்பான். எப்போடா தாலி கட்டலாம்.. எப்போடா ரூமுக்கு போகலாம் என்று அடிக்கடி பொண்ணை பாத்து  ஒரு தினுசா  சிரிச்சுகிட்டே இருப்பான்.  ஆனா பொண்ணுக்கு அப்படி விருப்பம் எதுவும் இருக்காது. மனசிலே வேறு சிந்தனைகள் அல்லது பழைய பழகிய ஆள் ஒட்டிக் கொண்டு இருப்பான். ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு கல்யாணம் பண்ணியிருப்பா அவ. அப்போ ரொம்ப கஷ்டம் சார். பையனோட கனவுலே மண்ணை அள்ளிப் போட்ட கதைதான். பின் குறிப்பு :  இது பொண்ணு விசயத்திலும் பொருந்தும் சார்...

பாஸ்ட் நைட்டுக்கு முன்னாடி ஹிந்து மதப்படி ரெண்டு ஹோமம் செய்வது நல்லது.  அதாவது,  (1) கர்ப்ப சாந்தி ஹோமம். இது கர்ப்பம் நல்ல முறையில் தரிக்க வேண்டும் என்பதற்கு. (2) சந்தான ஹோமம். - இது குழந்தை பேறை தருவது. அதாவது குழந்தை நன்றாக பிறந்து, தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்கு. ஒரு சந்தேகம் சார். இந்த ஹோமம் எல்லாம் இப்போ செய்றாங்களா  சார்.... ?

முக்கியமா ஒன்னு இங்கே கவனிக்க வேணும்..? அதாவது, 'பஸ்ட் நைட்' என்று சொன்னவுடன், நிச்சயம் 'லாஸ்ட் நைட்' என்று ஒன்றும் உண்டு என்பதை நாம் இங்கே மறக்கக் கூடாது. 

பஸ்ட் நைட்டுக்கும், லாஸ்ட் நைட்டுக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா?

"பூவுக்கு மேலே நாம படுத்திருந்த அது பஸ்ட் நைட். நம்ம மேலே பூ போட்டிருந்த அது லாஸ்ட் நைட்."

என்ன சார் கரெக்டா..?

சுவாரஸ்யமா இருந்தா கட்டாயம் பதில் போடுங்க பிளீஸ்...


28 December, 2012

மதியே .. ! வா...!! உன்னை அடையாளப்படுத்துகின்றேன் வ.... வா...!!!

மதி என்ன என்னாங்க... ?

கொஞ்சம் புரியாமத்தான் கேட்கின்றேன்...!

மதியென்னா  நிலவு..... சரி அறிவு... சரி திங்கலேன்னே வைத்துக் கொள்வோம். அதென்ன 'வைத்துக் கொள்வோம்' என்று கேட்கிறீர்களா? மதியென்னா   திங்கள் என்றுதானே பொருள்.

சரி திங்களுக்கு தானே வெளிச்சம் உண்டா...? அது தினமும் ஒரே சைசிலே வருமா? கொஞ்ச நாள் வளரும்.. கொஞ்ச நாள் தேயும்..... பௌர்ணமியப்போ கொஞ்சம் வெளிச்சம் ஜாஸ்தியா இருக்கும். அதுவும் மேக மூட்டம் இல்லமே இருந்தா..!!

திங்களுக்கு மனுஷன் போய் வர்றா காலம் என்னிக்கோ ஆரம்பமாய்டிச்சு..... அது ரொம்ப கிட்டக்க இருக்கு.....

சாதாரண கண்ணாலே பாக்கலாம்... அதுவும் நேரடியா ... ரொம்ப நேரம் பாக்கலாம்..!

சரி மதிக்கு எங்கிருந்து பவர் கிடைக்குது...?

சிம்பிள்... ஞாயிறு வேணும்..


ஆதாங்க  நம்ப ஆளு சூரியன் ஆப்சென்ட் ஆனாதான் திங்கள் தெரியும். சூரியன் வருகின்ற போது ..? சுத்தமா வாய்டுதான். சூரியனே  வெறும் கண்ணாலே நேரடிய பாக்க முடியுமா...? சத்தியமா முடியாதுங்க !!

ஞாயிறு வந்தாத்தான் எல்லோருக்கும் பொழுது விடியுது. பொழப்பு நடக்குது. அது சரி திங்கள் வரும்போதும் ஒரு விதமான பொழப்பு நடக்குது.. அதே மறுக்க முடியாதில்லே ...!! நாட்டினுடைய ஜனத் தொகை எந்த சமயத்திலே கூடுது...?

ஞாயிறுலே திங்கள் கூட தெரியும். ஆனா திங்கல்லே ஞாயிறு தெரியாது.

ஆக மதியை அடையாளப்படுத்துறது யாரு? சூரியன்தானே..? சூரியன் இல்லாமே மதிக்கு எப்படி பேர் வரும்... ? என்ன பெருமை...?? 

சூரியன் தினமும் வரும்... வளர் அல்லது தேய் கிடையாது. சூரியன்தான் அப்பா... சூரியனே நெருங்க முடியுமா...? சுட்டெரிச்சு சாம்பலக்கிடாது.... ?

அட சந்திரா... ! கொஞ்சம் கூட்டி கழித்துப் பார்த்தல் கணக்கு புரியும்...!!

(கொஞ்சம் சீரியசியலிருந்து விலகி.....)

27 December, 2012

விதி வலியது !

மகாபாரதத்தில் விதுரரின் பங்கு மிக முக்கியமானது. திருதராஷ்டிரர், பாண்டு ஆகிய இவர்களுக்கு விதுரர் தம்பி முறையாவார்.

"வித்" என்ற வேர்ச் சொல்லிருந்து பெறப்பட்ட தனது பெயருக்கேற்ப விதுரர் மாபெரும் அறிஞராக விளங்கினார். குறிப்பாக அற இயலிலும், அரசியல் சாஸ்திரத்திலும் ஒப்பற்ற அறிவு பெற்றிருந்தார். அரசியிலில் ஆதாயம் தேடாமல் எளிமையாக வாழ்ந்தார். முக்காலமும் அறிந்திருந்த அவர் எக்காலத்திலும் நேர்மையை வலியுறுத்தினார்.

விதுரர் சிறந்த பண்பாளர். அனைவரிடமும் பணிவாகவும் கனிவாகவும் பழகியவர். அவர் திருதராஷ்டிரருக்கு நெருக்கமானவராகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார். திருதராஷ்டிரரும் ஒவ்வொரு விசயத்திலும் அவரிடம் ஆலோசனை கேட்பதுண்டு. கௌரவர்களின் தந்தையான திருதராஷ்டிரர் தனது மகன்  துரியோதனன் மீதுள்ள பாசத்தால், விதுரரின் ஆலோசனையை மீறிய போதெல்லாம் அவதிப்படதான் நேர்ந்தது. பாண்டு புத்திரர்களான பாண்டவர்களுக்கு துன்ப காலத்தில் விதுரர் பேருதவியாக இருந்தார்.

பாண்டவர்களை நேர்மையான வழியில் வெல்ல முடியாது என்று புரிந்து போனதும், துரியோதனனும் சகுனியும் குறுக்கு வழியில் வெல்ல முடிவு செய்கிறார்கள். தருமரை சூதாட அழைத்து வெல்வதுதான் அவ்வழி. இதன் தொடர்ச்சியாக, பாஞ்சாலி துகிலுரிப்பு, பாஞ்சாலி சபதம், விதுர நீதி, கண்ணன் தூது, கீதோபதேசம், பாரதப் போர், கௌரவர் வீழ்ச்சி என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நமது பாரதத்தில் நிகழ்கிறது. முடிவில் பாண்டவர்களே வெல்கின்றனர்.

நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருப்பதுதானே தீயவர்களின் குணம். துரியோதனன் அதில் கெட்டிக்காரன். அகம்பாவம் மிக்கவன். துரோணர், கிருபர், பீஷ்மர் என எல்லாப் பெரியவர்களும் துரியோதனின் செயல்களுக்கு மறு பேச்சு பேசாமல் மௌனம் காத்தனர். பாண்டவர்கள் நிறைய அவமானப்பட நேர்ந்தது.  சூதாட்டத்தில் பாஞ்சாலியை வைத்து தோற்றதும், அவளை  பங்கப்படுத்த சபைக்கு அழைத்து வர விதுரருக்கு துரியோதனன் கட்டளை இடுகின்றான். ஆனால் விதுரர் மறுத்து அவனைக் கண்டிக்கிறார். "மாண்டு தரை மேல், மகனே, கிடப்பாய் நீ" என்று எச்சரிக்கிறார். வருங்காலம் உணர்ந்த விதுரர் கூறியபடியே, துரியோதனன் தொடை பிளக்க தரையில் மாண்டு கிடக்க நேர்ந்தது.

தான் செய்வதே சரியானது என்ற  எண்ணம்; தானே வலிமையானவன் என்ற அகம்பாவம்; தன்னை மிஞ்ச யாராலும் முடியாது என்ற அதீத துணிச்சல். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தான் மட்டுமே புத்திசாலி என்ற கர்வம், அடைந்தே ஆக வேண்டும் என்ற ஆசை.  - இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் ஆணிவேராக இடம் பிடிக்கும் போது, விதி வலியதாகப் போகிறது என்று பொருள். அப்போது எதுவும் காதில் ஏறாது. எந்த சமாதானமும் எடுபடாது. யாருடைய அறிவுரையும் துச்சமாகும். சூழ்ச்சி வென்று விடும் என்று மனம் இறுமாப்பு கொள்ளும்.  இவை யாவும் விதி வெல்லப் போகிறது என்பதற்கு அறிகுறிகள்.

பாரதப் போர் தொடங்கி  விடலாம் என்ற நிலை. அப்போது விதுரர் சமூகத்தின் நான்கு வருணத்தவர்களின் கடமைகளை விளக்கி, சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்களுக்கு நாடாளும் கடமையை கொடுக்கும்படி திருதரஷ்டிரரிடம் கேட்கிறார். அதற்கு திருதராஷ்டிரர், "விதுரா  ! நீ நெடுங்காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்றுதான் நானும் நடவடிக்க எடுக்க விரும்புகின்றேன். ஏனெனில் நீ கூறும் அறிவுரை மிகவும் சரியானதாகும். என் மனம் எப்பொழுதுமே பாண்டவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் விரும்பி இருக்கிறது. ஆனால் துரியோதனனுடன் தொடர்பு கொள்ளும் போது  என் மனம் மாறிப் போய் விடுகிறது" என்று பதில் தருகிறார்.

மேலும், "விதியின் வலிமை அளவிடற்கரியது. இதுவரை விதியை வென்ற மனிதர் யாரும் கிடையாது. நாம் என்னதான் முயற்சித்தாலும், எவ்வளவுதான் முயற்சித்தாலும் விதியின் விருப்படிதான் எதுவும் நடக்கும். விதியின் போக்கை மற்றோவோ, அதன் விளைவுகளை தடுக்கவோ முடியாது. விதிதான் வலிது.முயற்சி அதை வெல்லாது" என்று திருதராஷ்டிரர் கூறி முடிக்கிறார்.

நல்லது எது என்று திருதராஷ்டிரருக்கு தெரிந்திருந்தும் மகன் மீது கொண்ட அளவு கடந்த பாசம் அவரை நல்லது செய்ய விடாமல் தடுத்து விடுகிறது. திருதராஷ்டிரர் தனது இயலாமையை ஒத்துக் கொள்ளாமல் விதியின் மேல் பழியைப் போட்டு நழுவப் பார்க்கிறார் என்று தோன்றினாலும், தீயவனான, சூழ்ச்சிக்காரனான  துரியோதனன் மாள வேண்டும் என்பதும், நல்லவர்களான பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதும் விதியின் கட்டாயமாகும் என்பதால், தான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில் பயனில்லை என்று திருதராஷ்டிரர் கருதுவதாக தோன்றுகிறது துரியோதனனை அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதிலிருந்து தடுத்து அவனது தலைவிதியை தன்னால் மாற்ற முடியாது என்று திருதராஷ்டிரர் உணர்கிறார் எனலாம்.

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அவ்வாறு வெல்வதும் நம் தலைவிதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். 

எனவே விதி வெல்லப் போகிறது என்பதற்கு ஒருவருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எச்சரிக்கை காட்டும்.

26 December, 2012

வெட்டிச் சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா..?ஒரு வழக்கில் எழுந்த பிரச்சனைக்கு தரப்பினர் சொல்லும் சமாதானம் சரியாக, சட்டப்படியாக, நம்பும்படியாக இருக்க வேண்டும். இதை விடுத்து, ஏதாவது சாமதானம் சொல்லியாக வேண்டுமே என்று கதையளந்தால் வழக்கு பொய் வழக்கு என்று அவரே ஊர்ஜிதம் செய்வது போலாகிவிடும்.

அது போல், தொடுத்த வழக்கில் எதிர்வாதம் எடுப்பதும் ஒரு கலை. அதே நேரத்தில் எப்படிப்பட்ட எதிர்வாதம் வரும் என்பதை ஊகித்து வழக்கு தொடுக்க வேண்டும். எல்லா வாதங்களுக்கும் எதிர் வாதம் உண்டு.

அடுத்து மெய்ப்பிக்கும் சுமை. அதாவது வழக்கு தாக்கல் செய்பவரே வழக்கை மெய்ப்பிக்க வேண்டும். வழக்கில் மெய்ப்பிக்கும் சுமையை, அவ்வழக்கை  தொடுப்பவர் மீதே இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். எதிர் தரப்பினர் தன் மீது சுமதிக் கொள்ளக் கூடாது. வழக்கில் கோரிக்கை செய்யும் தரப்பினர் அதாவது வழக்கை  தொடுத்த வாதி தன் பக்கம் தீர்ப்பு பிறப்பிக்க கோர வேண்டுமெனில், அவர் முதலில் நியாயமான நபராக இருக்க வேண்டும். அதாவது கறை  படிந்த கரங்களுடன் நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட முடியாது.

சரியான திட்டம் இருந்தும், வாதுரைகளை தயாரித்து எழுதுவதில் தவறு செய்தால் வழக்கு எங்கு சென்றாலும் நிற்காது. அதே போன்று சரியான, சட்டப்படியான எதிர்வாதம் எடுத்து விட்டால், அது எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றியை தரும்.

வெட்டி வாதுரைகள், சமாதானங்கள் வழக்கு பரிசீலனையின் போது நீதிபதியால் கழித்துக் கட்டப்படும். வழக்கின் நற்கூறுகளே பேசும்.

வழக்கில் ஒரு தரப்பினர் மேலமை நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோளாக சுட்டிக்காட்டினால், அதற்கு மாற்றாக நிச்சயம் தீர்ப்பு இருக்கும். அதற்கு பின் வேறு எதாவது புதிய தீர்ப்பு வந்திருக்கலாம். அதை தேட வேண்டும். அல்லது அத்தீர்ப்பே தவறான கொள்கை அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்றாக இருக்கலாம்.  அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும். தீர்ப்பு எழுதும் நீதிபதிகளும் மனிதர்கள்தானே ! பொருள் விளக்கம் சொல்லும் பணி வழக்குரைஞரின் கையில் உள்ளது.

ஒரு வழக்கை தொடுப்பது பெரிதல்ல. எதிர் வழக்கு என்ன வரும் என்பதையும் கணிக்க வேண்டும். எழுதப்பட்டுள்ள வாதுரைகளில் இருந்தே எதிர் தரப்பினர் எதிர் வழக்கிற்கான காரணத்தை உருவாக்க முடியும். செலவு செய்ய பணமும், நேரமும் எதிர் தரப்பினருக்கு இருந்தால், நிலை சற்று கடினமாகி விடும்.

"அதைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை, போனால் அது.." என்ற பாணியில் எல்லாம் வழக்கு இட்டால் அவ்வாறு வழக்கு இடுபவர் தொந்தரவுகளை விலைக்கு வாங்குவது போன்று.

எனவே வெட்டி சமாதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகாது. 

24 December, 2012

சட்டம் ஒரு இருட்டறை !

சட்டம் ஒரு இருட்டறை !


இது ஆதியில் விஜயகாந்த் நடித்து இப்போது மறுபடியும் அதே கதையோட வேறு நடிகர்களை கொண்டு வெளிவந்த படம். ரீமா சென், எஸ்.ஏ.சந்திரசேகர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள்.

மையக் கதையில் ஒரு திருத்தத்தை மட்டும் செய்திருக்கிறார் இதன் இயக்குனரும், விஷுவல் கம்யூனிகேசன் பட்டதாரியுமான சினேஹா பிரிட்டோ.

சட்டம் ஒரு இருட்டறை என்பதால் படத்தையும் கொஞ்சம் இருட்டாகவே காண்பித்திருக்கிறார்கள். அதாவது வெளிச்சமாக இருக்க வேண்டிய காட்சியையும் ஏதோ புளு லென்ஸ் போட்டு மங்கலாக படம் பிடித்திருக்கிறார்கள். இதில் ஹாங்காக் நாட்டில் சுமார் 1/2 மணி நேரம் படம் படு வெட்டியாக நகர்கிறது. வசனத்திலும் காட்சி அமைப்பிலும் உயிரோட்டம் இல்லை. காமெடி டிராக் சொதப்புகிறது. பாட்டுக்கள் திணிக்கப்பட்டிருக் கின்றன. மனதில் ஏறவில்லை.

விஜயகாந்த்துக்கும், சந்திரசேகருக்கும் அன்றைய 'சட்டம் ஒரு இருட்டறை' ஒரு மிகப் பெரிய வெற்றிப்படம். ஆனால் இன்றைய படம், எப்படி ஒரு படத்தை ரீ-மேக் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம். இது யாருக்கும் வெற்றியாக அமையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இனி மீண்டும் தலைப்புக்கு வருகின்றேன்.

'சட்டம் ஒரு இருட்டறை' என்பதன் பொருள் என்ன ?

அதாவது 'சட்டம் சூட்சுமமானது' என்பதுதான் இதன் பொருள். 'திருடுவது பாவம்' என்பது நன்னெறி. 'திருடினால் தண்டனை உண்டு' என்பது சட்டம். சட்டம் தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் மக்களின் நடத்தைகளை நெறிப்படுத்த கட்டளை இடுகிறது. அதை மீற முடியாது. சட்டம் ஒன்றை சொல்லிவிட்டால் அதற்கு என்னதான் பொருள் விளக்கம் கொடுத்து வழக்கறிஞர் வாதாடினாலும், சட்டமே நிலை பெறும். ஒரு வழக்கின் பிரச்சனை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒன்றாக இருக்கும் போது, அதை சங்கதி சார்ந்த பிரச்சனையாக மாற்ற முடியாது, நீதிமன்றமே நினைத்தாலும் கூட. ஆனால் ஒரு வழக்கின் பிரச்சனை, சங்கதி சார்ந்த பிரச்சனையாக இருக்கும் போது அதில் வக்கீலின் வாதம் விளக்காக அமையலாம். எனவே வழக்கில் சட்டப் பிரச்னையை கிளப்பி விட்டால், சட்டமே வெற்றி பெறும். அவ்வாறு கிளப்பியவரும் வெற்றி பெறுவார்.

சட்டத்தில் மெத்த அறிவும், துணிச்சலும் கொண்ட வழக்குரைஞர்கள் பலர் உண்டு. ஆனால் அண்மையில் நடந்த,  சட்டப் பிரச்னையை மையமாகக் கொண்ட ஒரு வழக்கில் ஒரு வழக்கறிஞர் தனது அதீத நம்பிக்கை மற்றும் தகாத துணிச்சல் காரணமாக தனது கட்சிக்காரரையே சிறைக்கு அனுப்பத் துணிந்தார். கட்சிக்காரரின் வழக்கில் வாதுரைகளை அப்படி எழுதி இருந்தார். சான்றவனங்களையும் சமர்ப்பித்து இருந்தார், தனது கட்சிக்காரர் குற்றவாளி  என்று. எனினும் அக்கட்சிக்காரரை தார்மிக அடிப்படையில் எதிர் கட்சிக்காரர்  காப்பாற்றி பிரச்னையை முடிக்க வேண்டியதாகி விட்டது. 

எனவே சட்டம் சூட்சுமமானது. அதற்கு எதிராக எல்லாம் செயல் இழந்து போகும். தரப்பினர்களின் நடத்தை, கால வரையறை, தெரிகை, ஒப்புதல், தளர்த்தீடு  உட்பட எந்த சட்டக் கோட்பாடுகளும் வேலை செய்யாது. தந்திரங்கள் எடுபடாது. நேராக செய்ய முடியாத ஒன்றை சுற்றி வளைத்து செய்ய முடியாது.  சட்டமே மேலோங்கி நிற்கும்.

இருட்டாக, சூட்சுமமாக உள்ள சட்டத்தை கருப்பு அங்கி போட்டவர்கள் நீதிபதிக்கு விளக்குகிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட சட்டம் இயற்றப்படும் போது நாடாளுமன்றத்தின் அல்லது நேர்விற்கேர்ப்ப சட்டமன்றத்தின் உள்ளக் கிடக்கை என்னவாக இருந்தது என்பதை ஒட்டி விளக்க வேண்டும். அதை வழக்கின் சூழலுக்கு பொருத்த வேண்டும். சங்கதி சார்ந்த பிரச்சனைகளில் முடிவெடுக்க சாட்சியங்கள் போதும். 

23 December, 2012

துஷ்பிரயோகம் செய்தால் பறித்து கொள்வான் !
அதிகாரம், பதவி, செல்வம், செல்வாக்கு, தகுதி, உரிமை ஆகிய இவை யாவும் இருப்பவரிடம் இருக்க வேண்டும். இவற்றுக்கு தகுதி அல்லாதவருக்கு சில சமயம் இவை முயன்று பெறாமல் கிடைத்து விடக் கூடும். எல்லாம் கடவுளின் திருவிளையாடல் அல்லது அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். 

ஆனால்  இதனால் ஏற்படும் விளைவு ? "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்ற கதைதான். 

முயன்று கிடைக்காதது ஏன் நமக்கு கிடைத்தது என்பதற்கு கடவுள் எப்போதும் ஒரு பதில் வைத்திருப்பான். அந்த பதில் நல்ல பதிலாக அமைவதற்கும், கெட்டதாக  அமைவதற்கும் நமது செயல்பாடே அளவு கோலாக அமையும். அதாவது கிடைத்ததை தவறாக பிரயோகம் செய்தால், கடவுள் அதை நிச்சயம் பறித்துக் கொள்வான். 

அதே நேரத்தில் முயன்று கிடைத்ததையும் துஷ்பிரயோகம் செய்தலாகாது. அது திரும்பத் தாக்கி விடும்.

எனவே துஷ்பிரயோகம் தவிர்.

21 December, 2012

தூண்டுதலுக்கு பலியாகி விடாதே..!!

மீண்டும் என்னால் காப்பாற்ற முடியாது.
"தூண்டுதல்" என்பது  நமது வாழ்வின் ஒரு முக்கிய சக்தி. 

இதை இரண்டு விதங்களில் கூறலாம். 

 • ஒன்று நம்மை பிறர் தூண்டுவது. 
 • மற்றொன்று நமது மனமே நம்மை தூண்டுவது. 

நல்லவர்கள் தூண்டினால் அதனால் நலம் விளையும். தீயவர்கள் தூண்டினால் தீதே ஏற்படும். பிரதிபலன் பாராமல் தூண்டுபவர்கள் நல்லவர்கள். நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள். அவர்கள் தூண்டுதல் நம்மை
முன்னேற்றி விடும். அதற்கு கடவுளும் துணை நிற்பார். உலகும் துணை நிற்கும். 

ஆனால் தீயவர்களின் தூண்டுதல்.. ? அப்படியல்ல !! தங்களுக்கென ஆதாயம் இல்லாமல் தூண்ட மாட்டார்கள்.அதனால் பலன் கிடைத்தாலும் அது நிலைத்து நிற்காது. எல்லாமே நமக்கு சாதகமாக நடப்பதாக ஒரு மாயை  அல்லது ஒரு பிரமை ஏற்படும். ஆனால் முடிவோ வேறு விதமாக இருக்கும். அப்போது.. அத்தீயவர்கள் "என்ன செய்வது..? இப்படி ஆகும் என்று நினைக்க வில்லை" என்று கழண்டு  கொள்வார்கள். கடவுள் காப்பாற்ற மாட்டார். துணை நிற்க மாட்டார். 

இது ஒரு விதம் என்றால் நமது மனம் நம்மை தூண்டுவது சற்று வேறுபட்டது. நல்ல மனம் என்றுமே ஜெய்க்கும்.காரணம் நல்ல மனம் நல்ல செயல்களையே செய்யும். தீது தெரியாது. நல்ல எண்ணங்களுக்கு என்றும் ஏற்றம் உண்டு.

அதனாலதான் மனம் போல் வாழ்வு, எண்ணம் போல வாழ்வு  என்றெல்லாம் வழங்கப்படுகிறது.

கடவுள் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறார். அதாகப்பட்டது  மனதால் நல்ல எண்ணம் இருந்தும் பிறர் பேச்சைக் கேட்டு தவறான வழியில் செல்பவருக்கு தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை இயற்கை தரத் தவறுவதில்லை.  அதாவது கடவுள் தர மறுப்பதில்லை. தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட பிறகு மீண்டும் அத்தவறை செய்பவரை கடவுள் காப்பாற்ற முன் வருவதில்லை. தண்டிக்க செய்கிறார்.

இன்னா செய்தாரை ஒறுத்தால் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

நன்னயம் பெற்ற பிறகும், இன்னா செய்தால் நிச்சயம் ஒறுக்கப்பட வேண்டும். கிடைத்த பலன் பறி போகும் அல்லது நிலைத்து நிற்காது. தீயவர்களின் தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம். தீய எண்ணங்களின் தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம். 

அங்கு கடவுள் சொல்வது,

"மீண்டும் என்னால் காப்பாற்ற முடியாது"

21 November, 2012

என்று பொருளல்ல....


நான் அமைதியாக இருக்கின்றேன்;
அதனால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பொருளல்ல.

நான் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றேன்;
அதனால் எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருளல்ல.

நான் வாய்விட்டு சிரிக்கின்றேன்;
அதனால் என்  வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லை என்று பொருளல்ல.

நான் உன்னை மன்னித்து விட்டேன்;
அதனால் நீ எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருளல்ல.

நான் உன்னுடன் எல்லா நேரமும் இருக்க முடியவில்லை;
அதனால் உன்னை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று பொருளல்ல.

நான் ஒரு வெகுளி;
அதனால் நீ என்னை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று பொருளல்ல.

நான் கடுமையானவன்;
அதனால் எனக்காக நீ உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என்று பொருளல்ல.

நான் உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை;
அதனால் எனக்கு உணர்வுகள் இல்லை என்று பொருளல்ல.

நான் உன்னை விரும்புகின்றேன் என்று சொல்லவில்லை;
அதனால் நான் உன்னை வெறுத்துவிட்டேன் என்று பொருளல்ல.

நான் நேர்மையானவன்;
அதனால் நான் வெளிப்படையானவன் என்று பொருளல்ல.

நான் உன்னை போன்றவன் அல்ல;
அதனால் நான் வித்தியாசமானவன் என்று பொருளல்ல.

நான் அனுமதித்து விட்டேன்;
அதனால் நீ அதை துஷ் பிரயோகம் செய்யலாம் என்று பொருளல்ல.

நான் என் பிரச்சனைகளை பேசவில்லை;
அதனால் அவை மறைந்து விட்டதாக பொருளல்ல.

நான் விட்டுக் கொடுத்திருக்கின்றேன்;
அதனால் அதை நீ ஒரு உரிமையாக எடுத்துக் கொள்ளலாம் என்று பொருளல்ல.

நான் தெரிந்தே தவறிவிட்டேன்;
அதனால் எனக்கு தவறை சரி செய்யத் தெரியவில்லை என்று பொருளல்ல.

நான் எதையும் சொல்லவில்லை;
அதனால் நான் பயப்படுகின்றேன் என்று பொருளல்ல.17 January, 2012

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. 


 • ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். 
 • ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
 • பூஜை அறையில் கடவுளின் படம்  அல்லது  உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
 • பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து  வைக்க  வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
 • தென் - கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
 • முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.
 • பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
 • பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். 
 • சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சிலசமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் வைக்கலாம்.
 • கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும்.  அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
 • ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. 
 • பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.
 • அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது. 
நன்றி : architectureideas.info. 

11 January, 2012

சில வரிச் சிந்தனைகள் ....

Related Posts Plugin for WordPress, Blogger...