என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

30 December, 2012

நினைத்து நினைத்துப் பார்த்தால் ....

வருடம் முடிய வழக்கமான பண்டிகைகள்.. கொண்டாட்டங்கள்.. உறவினர் வருகை... பயணங்கள்... செலவுகள், வரவுகள்.. இப்படி வழக்கமான நிகழ்வுகளுடன் 2012 முடிகிறது. இது சென்று விட்ட கடந்த காலமாகப் போகிறது, டிசம்பர் 31-உடன்.

எனினும் விடை கொடுத்து அனுப்ப இருக்கும் 2012-இல் நாம் என்ன செய்தோம், நமக்கு என்ன நடந்தது ? நாம் கற்றுக் கொண்டது என்ன... நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ன? என்று நினைத்துப் பார்ப்பதே 2012-க்கு நாம் செய்யும் மரியாதை.

எனவே இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்  2012-ஐ சற்றே  நினைத்துப் பார்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது. நினைத்து நினைத்து பார்த்தால், 2013-இல் என்ன செய்யலாம், எதை தவிர்க்கலாம் என்ற சிந்தனை கிடைக்கும்; வாழ்வை இனி முன்னெடுத்து செல்வது எவ்வாறு என்ற தெளிவு பிறக்கும்.

மனிதன் என்பவன் யார்...? எளிய கேள்வி. தவறு செய்பவன் மனிதன். திருத்திக் கொள்பவன் மாமனிதன். ஆனால் மன்னிப்பவன் கடவுள். கடந்த காலத்தில் செய்த தவறுகளை நிகழ்காலத்தில் திருத்திக் கொள்ளலாம். தவறுகள்தாம் நமது சரியான வாழ்க்கைப் பாதையை கண்டுகொள்ள உதவுகிறது. முன்னேற்றத்தையும் தருகிறது. நம்ப வேண்டிய ஒன்று. ஆனால் செய்த தவறை மீண்டும் செய்து விடக் கூடாது, என்பதில் திண்ணமாக இருந்தால்.  அதுபோல் தவறால் பாதிக்கப்பட்டிருந்தால், தவறு செய்தவனை மன்னிக்கலாம். எனினும், யாரையும் மன்னித்து விடலாம் .. ! ஆனால் நம்பிக்கை துரோகிகளை மன்னிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மீண்டும் மீண்டும் துரோகம் செய்யத் தயங்காதவர்கள் இத்துரோகிகள். மன்னிப்பின் மகத்துவம் அறியாதவர்கள். இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால்  பாடம் புகட்டுவதே சிறந்த வழி, அதுவும்  எச்சரிக்கையாக. நினைத்துப் பார்க்கும் போது நமது தவறுகள் தெரிய வரும். எத்தனை தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம்? எத்தனை பேரை மன்னித்துள்ளோம்? எத்தனை துரோகிகளிடம் இருந்து விலகி உள்ளோம் ? என்பதை அறிந்து கொள்ளலாம்.

2012-இல் செய்த வரவு செலவுகளை நினைத்துப் பார்த்தால், 2013-இன் நிதிநிலையை எப்படி வகுப்பது என்று தெரிய வரும். பொதுவாக வரவுக்கு மீறி செலவு செய்வது மனித சுபாவம். அது.. இது.. நிறைய வெட்டி சாமான்களை வாங்கி இருப்போம்..! திடீர் செலவுகளும் நமது 'பர்சை' தாக்கி இருக்கும். திடீர் வரவுகள் வர பெரிதும் வாய்ப்பில்லை.

உறவுகளில் காலத்தால் மாற்றம் ஏற்படுவதுண்டு. புதிய உறவுகள் உருவாகி இருக்கலாம். சில உறவுகள் முறிந்து இருக்கலாம். சில உறவுகளில் விரிசில் தோன்றி இருக்கலாம். இவற்றில் எதை சரி செய்ய முயன்று இருக்கின்றோம்? எதை வரவேற்று இருக்கின்றோம்? எப்படி தொடர்ந்து சமாளிக்க இருக்கின்றோம்? இதையும் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது. எதுவும் நிலையானது இல்லை. அதில் உறவும் விதி விலக்கல்ல.

சென்ற ஆண்டில் இழந்தது எவ்வளவு? சேர்ந்தது எவ்வளவு? நஷ்டமா..? இலாபமா ? நிர்ணயம் செய்த இலக்குகளை அடைந்தோமா? கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று.

முத்தாய்ப்பாக

"நினைத்து நினைத்து பார்த்தால்...
...... ......... ......... .......... .......... ..........
உன்னால்தானே நானே வாழ்கின்றேன்...
...... ......... ......... .......... .......... .......... "

இது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள். கேட்பதற்கு மனதை மயக்கும். ஆனால் இதில் வரும் "உன்னால்தானே நானே வாழ்கின்றேன்" என்ற வரிகள் கண்டிப்பாக நமது வாழ்வை மயக்கி விடும்.

யாராலும் யாரும் வாழ்வதில்லை. நமது வாழ்வில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். சிலர் உதவுகிறார்கள். சிலர் உபத்ரவம் செய்கிறார்கள். உதவி செய்தவனே உபத்திரவம் செய்கின்றான். உபத்ரவம் செய்தான் மனம் மாறி உதவியும் செய்கின்றான். எதுவும் நாம் பயன்படுத்திக் கொள்வதில் உள்ளது.

"தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை". நமது வாழ்வு நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு நாமே காரணம். அதாவது நாம் மற்றவர்களை, நமக்கு கிடைக்கும் வளங்களை, காலத்தை நன்றாக பயன்படுத்தி இருக்கின்றோம் என்று பொருள். வாழ்வு கெட்டுப் போனது என்றால் அதற்கும் நாமே காரணம். மற்றவர்களின் மீது பழி போட்டு பயனில்லை. கெட்டுப் போகின்ற போது மற்றவர்களின் மீது பழி போட்டு பழகிய நாம், நன்றாக இருக்கும் போது பொதுவாக அதற்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து கூட பார்ப்பதில்லை. சுட்டிக் காட்டுவதில்லை.


நமது வாழ்வு நமது கையில் என்பதை நினைத்துப் பார்த்து, எதிர் வரும் புத்தாண்டு 2013, எல்லா வளங்களையும் நமக்கு வழங்கி, அவற்றை பயன்படுத்தும் மனத் தெளிவு மற்றும் நம்பிக்கையை நாம் பெற்று இன்பமுடன் வாழ புத்தாண்டை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராவோம்.

வாழ்க ! வளர்க !!

Related Posts Plugin for WordPress, Blogger...