என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

19 December, 2013

சீரடி சாயிபாபாவின் நேரடி சிஷ்யை


பெங்களூர் நகரத்தின் மையப் பகுதியான மடிவாளா எனும் இடத்தில் உள்ள  ரூபன் அக்ரஹாராவில் சீரடி சாயிபாபாவிற்கு அற்புதமான ஆலயத்தைக் கட்டி உள்ள சீரடி சாயிபாபாவின் நேரடி சிஷ்யையான அன்னை  சிவம்மா தாயீ என்பவருடைய வாழ்கை வரலாறு அற்புதமானது. அவரைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. 

அவர் கட்டி உள்ள ஆலயம் பற்றியும் வெளியில் அதிகம் எவருக்கும் தெரியவில்லை. காரணம், அது அக்ராஹாரத்தின் மத்தியில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்து உள்ளது. 

ஒரே வளாகத்துக்குள்  மூன்று சாயி ஆலயங்களை சிவம்மா தாயீ அமைத்து உள்ளார். அந்த மூன்று ஆலயங்களையுமே எந்த விதமான விளம்பரமும் இன்றி, ஆடம்பரமும் இன்றி விளம்பரம் போட்டு, விழாக்களை நடத்தி  நன்கொடை வசூலிக்காமல், தன்னிடம் வந்த பக்தர்கள் தாமாக முன் வந்து கொடுத்த காணிக்கைகளைக் கொண்டே கட்டி உள்ளார் என்பது மிகவும் அதிசயமான விஷயம். 

அந்த அன்னை ஆடம்பரமான வாழ்கையை வாழவில்லை.ஒரு தெய்வத்தை போல் எப்படி அடக்கமாக இருக்க வேண்டுமோ அத்தனை அடக்கமாக இருந்துள்ளார்.

அந்த அன்னை கட்டி உள்ள அந்த ஆலயங்களில் நுழைந்து விட்டால் நம்மை அறியாமல் நமக்குள்  ஒரு வித அமைதியும், மனதில் இனம் புரியாத படபடப்பும் தோன்றுவதைக் காணலாம். 


அத்தனை உயிர் உள்ள ஆலயமாக அது உள்ளது என்பது உண்மை. ஒரு முறை அங்கு செல்லும் பாபாவின் பக்தர்கள் அடுத்தடுத்து அங்கு செல்ல விரும்புவர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

09 December, 2013

மணிமொழி..... உன்னை மறப்பதெப்படி.....?


என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?

எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!

வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?

முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !

கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.

பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு. இங்கு
பிழை செய்தவள் நீதான்.

தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்
வா.. வா... கண்ணே !


இயன்றவரை பணிகின்றேன்....
நம்மிருவரின் எதிர்காலத்துக்காக அல்ல.
புரியும் சக்தி இருந்தால் 
புரிந்து கொள்... இல்லாவிட்டால்...

கண்ணே மணிமொழி.... 
கண்டிப்புடன் சொல்கின்றேன்..
என்னை மறந்து விடு.....
என்னுடையதையும் துறந்து விடு.....

01 July, 2013

தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் தனிப்பெருமை !

மாண்பமை நீதியரசர் திரு. பி.சதாசிவம்

இந்திய தலைமை நீதியரசராக, தமிழகத்தைச் சேர்ந்த, மாண்பமை நீதியரசர் திரு. பி.சதாசிவம், இம்மாதம் 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய தலைமை நீதியரசராக பதவி வகிக்கவிருப்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் தனிப்பெருமை என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக  தற்போது, மாண்பமை நீதியரசர் அல்டமாஸ் கபீர் உள்ளார். இவர், இம்மாதம் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த பணிநிலை மூத்தவராக உள்ள நீதியரசர் சதாசிவம் தலைமை நீதியரசராக  19ம் தேதி பதவியேற்கிறார்.


ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதியரசர் சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்ரல், 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில் முதலாவதாக சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர், கூடுதல் அரசு வழக்குரைஞர் , சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆகிய  பதவிகளை  வகித்தார். உரிமையியல், குற்றவியல், நிறுவன வழக்குகளில் முன்னிலையாகி வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி நியமிக்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப் - அரியானா நீதிமன்றத்திற்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில் இடமாற்றம் செய்யப்பட்டார்.உச்ச நீதிமன்ற  நீதியரசராக  2007ம் ஆண்டு, ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக  இம்மாதம் 19ம் தேதி பதவியேற்கிறார். 40வது தலைமை நீதியரசராக பதவியேற்கும் இவர், 2014ம் ஆண்டு, ஏப்ரல், 26ம் தேதி வரை அப்பதவி வகிப்பார்.


பல்வேறு முக்கிய வழக்குகளில் மாண்பமை நீதியரசர் சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். பட்டியலிட இந்த ஒரு பதிவு போதாது !


மாண்பமை நீதியரசர் எம். பதஞ்சலி சாஸ்திரி

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த நீதியரசர் பதஞ்சலி சாஸ்திரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக 1951- 54ல் பதவி வகித்துள்ளார். இவர் உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதியரசராக பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின் தமிழகத்தைச் சேர்ந்த, நீதியரசர் சதாசிவம் 40வது தலைமை நீதியரசராக  பதவி ஏற்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் பதவியில் அமரவிருக்கும் மாண்பமை நீதியரசர் திரு. பி.சதாசிவம் அவர்களை உரிய பணிவடக்கத்துடன் வணங்கி வரவேற்போம்.

29 June, 2013

வெளிமாநில சட்டப் படிப்பு தமிழகத்தில் செல்லுமா...?


வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு அதாவது எல்எல்.பி. படித்தவர்கள் தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதையோ, அவ்வாறு தொழிலாற்றுவதையோ தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில், தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், கர்நாடகா மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவிப்பு அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம் கடந்த வியாழனன்று ஆணையிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவின் அடிப்படையில் மாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள், மைய சட்ட ஆணையம் ஆகியனவும் தரப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

மனுதாரர் ரமேஷ், "பள்ளிப்படிப்பை கூட முடித்திராத பலரும் தங்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொண்டுள்ளதன் மூலம் உயர்வான வழக்குரைஞர்களின் தொழில் மாசடைந்துள்ளது.ஆந்திரபிரதேஷ், கர்நாடகா மாநிலத்திலிருந்து எல்எல்.பி. பட்டம் பெற்றுள்ளவர்கள், தங்களை கட்டப்பஞ்சாயத்து மன்றங்கள், சட்ட விரோதமான ரியல்-எஸ்டேட் நடவடிக்கைகள், காவல்துறை-குற்றவாளிகள் தொடர்பு, இதர மலிவான தொழில் நடத்தைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்" என்று குறிப்பிடுகின்றார்.

மேலும், எல்எல்.பி. பட்டங்கள் வெளி மாநில பல்கலைக்கழகங்களால் விற்கப்படுவதாகவும் அவர் சாட்டுரைக்கின்றார். குறிப்பாக, கல்லூரிக்கு செல்லாமலேயே சட்டக்கல்விக்கான பட்டத்தை பெறுவதாகவும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுகளை எழுதுவதில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக முகவர்களோ, தரகர்களோ தேர்வு எழுதுவதாகவும், தரகர்களின் வாயிலாக போலியான சான்றிதழ்களை சமர்ப்பிப்பதன் மூலம் பெரும்பாலான எல்எல்.பி. பட்டங்கள் பெறப்படுவதாகவும், அவ்வாறு பெற்றவர்கள் தங்களை தமிழகத்தில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொண்டு வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்களாகி விடுகின்றனர் என்றும் அவர் சாட்டுரைக்கின்றார்.

"கடந்த 10லிருந்து 15 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சட்டத் தொழிலில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களில் பலர் கறை படிந்தவர்கள் என்றும், அவர்களது குற்றவியல் செயல்பாடுகள், தமிழ் நாட்டில் சட்டப்படிப்பு முடித்த வழக்குரைஞர்களின் தொழிலுக்கு இடர்பாடுகளை விளைவிக்கின்றன என்றும்" மனுதாரர் ரமேஷ் குறிப்பிடுகிறார்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள போலியான வழக்குரைஞர்களை கண்டறிய தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பெரு மன்றத்திற்கு ஏவுரைக்க வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் வெளி மாநிலங்களில் சட்டம் படித்த வழக்குரைஞர்களின் பதிவு குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கோருகின்றார்.

முன்னதாக ஏப்ரல், 13-ஆம் தேதியில் இந்தக் கோரிக்கையை வழக்குரைஞர் பெரு மன்றத்தின் தலைவருக்கு தாம்  அனுப்பியதாகவும், அது பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் வழக்குரைஞர் ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரரின் வாதத்தைக் கேட்டறிந்த மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் எதிர்மனுதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்ப ஆணையிட்டு, வழக்கை 10 தினங்களுக்கு ஒத்தி வைத்தார்.

28 June, 2013

அம்மா கேதார்நாத் போகவில்லை....!

அண்மையில் கேதார்நாத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிர் சேதங்கள் எனது தாயாரை மிகவும் அதிர்ச்சி அடைய செய்திருந்தது. அவர் 1989-ஆம் ஆண்டில் ரயில் மற்றும் பஸ்ஸில் இந்தியா முழுவதும் 50 நாட்கள்  தீர்த்த யாத்திரை மற்றும் சுற்றுலா சென்று வந்தார். அதில் விட்டுப்போன இடம் கேதார்நாத். அதாவது யாத்திரை நடத்தும் கம்பெனியாரின் திட்டப்படி பத்ரிநாத் போக விருப்பம் உள்ளவர்கள் கேதார்நாத் செல்ல முடியாது. அதுபோல கேதார் நாத் செல்ல விருப்பம் உள்ளவர்கள் பத்ரிநாத் செல்ல முடியாது. இதில் எனது தாயார் பத்ரிநாத் செல்ல தேர்வு செய்தார். எனவே கேதார்நாத் செல்ல முடியவில்லை. ஆனால் எனது தாயார் "அந்த சமயத்திலேயே பத்ரிநாத் போயிட்டு வந்ததே ஒரு திகில் அனுபவம்தான்" என்று உடல் சிலிர்க்க கூறினார்.

முன்னதாக அவர் தனது தாயார் (அதாவது எனது பாட்டி ராஜலக்ஷ்மி) மற்றும் உறவினர்களுடன் தனது பயணத்தை தொடங்கும் போது, நான் கையில் ஒரு பழைய 'டைரியை' கொடுத்து, "இதில் உங்கள் பயண அனுபவத்தை ஒரு பயணக் கட்டுரையாக எழுதுங்கள்" என்று கூறி அனுப்பினேன். சொன்னது போல் அதில் அவர் தனது அன்றன்றைக்கான பயண அனுபவத்தை அழகாக எழுதி இருந்தார்.

தான் இதுகாறும் மிகப் பத்திரமாக பேணிப் பாதுகாத்து வரும் அந்த டைரியை இரு தினங்களுக்கு முன் என் கையில் எடுத்துக் கொடுத்து, "நான் போயிட்டு வந்த எல்லா ஊர்களைப் பற்றியும், கோவில்களைப் பற்றியும் இதிலே  எழுதி இருக்கேன்... ஆனா எனது பத்ரிநாத் பயண அனுபவத்தை பற்றி மட்டும் உன்னோட ப்ளாக்லே எழுதுவியாப்பா...?" என்று கேட்டு விட்டு, "நான் உன்னை விட நல்லா எழுதுவேன்னு உனக்கு தெரியுமில்லே" என்று கொசுறாக ஒரு 'பஞ்ச்'-ம் வைத்தார்.

"இது ஏது ... மதுரைக்கு வந்த சோதனை..!" என்று கருதி உடனே, "அந்த டைரியை கொடுங்க... நான் உங்க பயணத்தை பதிவு செய்கின்றேன்" என்று அதை வாங்கிக் கொண்டேன்.


6-8-1989-ஆம் தேதியில் திண்டுக்கல் நகரிலிருந்து தொடங்கிய அந்த யாத்திரைக்கு எனது தாயார் 'காசி யாத்திரை' என்று தலைப்பு வைத்து பிள்ளையார் சுழி போட்டு, முருகனை துணைக்கு அழைத்து எழுத ஆரம்பித்து இருந்தார். அந்த யாத்திரையில் எனது தாயாரின் அவாவை நிறைவு செய்யும் முகமாக பத்ரிநாத் பயண அனுபவம் மட்டும் இங்கு பதிவு செய்கின்றேன்.


"21ந் தேதி 5 மணிக்கு எழுந்து காப்பி குடித்து வேலைகளை முடித்துக் கொண்டோம். பிளாட்பாரத்தில் டிபன் சாப்பிட்டோம். பத்ரிநாத்துக்கு 28 பேரும், கேதாரிநாத்துக்கு 28 பேருமாக 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தனிதனி பஸ்ஸில் போக தயாரானோம். பத்திரிநாத்தில் 3 தினங்கள் தங்க வேண்டும் என்று சொன்னதால், வேண்டிய துணிமணி, மருந்து, கம்பளி முதலிய சாமான்களை எடுத்துக் கொண்டு எங்களுக்கென்று இருந்த பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டோம். பஸ் கிளம்பியது. நடு வழியில் சாப்பாடு சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டோம். மறுபடியும் பஸ் கிளம்பியது. 5 மணிக்கு பஸ் நின்றது. மத்தியப் பிரயாகையில் காப்பி சாப்பிட்டோம். S.V.R. பாவாவுக்கு லோ பிரசர் வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவரை ரெஸ்ட் எடுக்கச் செய்து பின்னர் பஸ்ஸில் கிளம்பினோம். பிப்லி கேட் என்னுமிடத்தில் இரவு தங்கிக் கொண்டோம். இரவு சமையல் செய்து கொடுத்ததை சாப்பிட்டோம். மழை வந்தது. நாங்கள் தூங்கி விட்டோம்.
22ந் தேதி காலை 5 மணிக்கு எழுந்து கொண்டோம். மழை பெய்து கொண்டே இருந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டோம். பத்ரிநாத் கிளம்ப தயார் படுதிக்கொண்டோம். ஆனால் மழை இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு கிளம்ப முடியவில்லை. காலை 7 மணிக்கு கிளம்பினோம். நான்கு மணி நேர பிரயாணத்துக்கு பின் சுமார் 12 மணிக்கு ஒரு ஊரில் போய் தங்கினோம். அங்கே சமையல் செய்தார்கள். சாப்பிட்டோம். மிகவும் குளிராக இருந்தது. சில பேர் குளித்தார்கள். சுமார் 4 மணிக்கு மறுபடியும் எல்லோரும் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். பஸ் பத்ரிநாத்தை நோக்கி கிளம்பியது. S.V.R. பாவாவை  பிப்லி கேட்டில் தங்க வைத்து விட்டோம். அவருக்கு ரெஸ்ட் வேண்டுமென்று டாக்டர் சொல்லி விட்டார். 
விடாத  மழையினால் பத்ரிநாத் செல்லும் வழி மண் சரிந்து பாதை அடைபட்டு இருப்பதாக தகவல் வந்தது. சுமார் 7 மணிக்கு பஸ் நடுக்காட்டில் நின்று விட்டது. மேற்கொண்டு போக வழியில்லாமல் எல்லா பஸ்களும் நின்று விட்டன. நாங்கள் நின்ற இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் போனால் ஊர் வருகின்றது. பஸ் லைனாக நின்றிருந்தாதால் எங்கள் பஸ் போக முடியவில்லை. எங்கள் டிரைவர் சாப்பிட சென்று விட்டார். எங்களுக்கு அந்த இடத்தில் உப்புமா செய்து தந்தார்கள். நாங்கள் சாப்பிடவில்லை. இரவு சுமார் 10 மணிக்கு பஸ் எல்லாம் சென்ற பின், எங்கள் பஸ் கிளம்பி அடுத்த ஊரில் போய் நிறுத்தினார்கள். எந்த இடத்திலும் எங்களுக்கு ரூம் கிடைக்கவில்லை. அதனால் அந்த கொட்டும் மழையிலும், பனியிலும் பஸ்ஸில் கால்களை மடக்கிக் கொண்டு படுத்தோம். மழையும், பனியுமாக இருந்ததால் கண்ணாடி ஜன்னல்களை மூடிக் கொண்டோம். இரவு 1 மணி வரை பஸ்ஸில் பஜனையும், கதாகலாட்சேபங்களும் நடந்தன. மேற்கொண்டு பஸ்ஸில் உட்கார முடியவில்லை. காற்று இல்லை. மிகுந்த கஷ்டமாக இருந்தது. அதனால் நானும், அம்மாவும் அந்த கொட்டும் மழையில் கீழே இறங்கி பக்கத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் போய் உட்கார்ந்தோம். டீ போட்டுக் கொடுக்கும்படி கேட்டோம். அதற்கு ஓட்டல் ஆள் சக்கரை இல்லை என்று சொல்லி விட்டார். டீ குடிக்கவில்லை. குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. 
23ந் தேதி காலை 6 மணிக்கு அந்த இடத்திலேயே எல்லோரும் பல் விளக்கிக் கொண்டு, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பஸ்ஸில் உட்கார்ந்தோம். பஸ் எல்லாம் இப்போது போக வர முடிகிறது என்று சொல்லிவிட்டார்கள். ராணுவ வீரர்கள் வந்து ரோடு சரி செய்து இருப்பதாக தகவல் வந்து, எங்கள் பஸ்சும் காலை 7 மணிக்கு கிளம்பியது. 
ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் 315 கிலோ மீட்டார். மலை உச்சியின் உயரம் 12 ஆயிரம் அடி. பஸ் போய்க்கொண்டிருக்கும் போது கீழே பார்த்தால் ஒரே பள்ளம். இரண்டு பக்கமும் மலை நடுவில் ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. மிகவும் அதிகமான பனி. தண்ணீர் ஐஸ் கட்டியாக பல இடங்களில் இருந்தது. சில இடங்களில் ஒரு பஸ்தான் போக முடியும். இப்படியாக பத்ரிநாத்தை காலை 10 மணிக்கு போய்ச் சேர்ந்தோம். சென்றவுடன் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூமில் தங்கிக் கொண்டோம் காப்பி சாப்பிட்டோம். 10 மணிக்கு ஓம குண்டம் (சுடு தண்ணீர்) ஊற்றில் குளிக்கச் சென்றோம். பார்க்க அதிசயமாக இருந்தது. ஒரு சிறு இடத்தில் சுடு தண்ணீர் ஊற்று வந்து கொண்டே இருக்கிறது. தண்ணீர் ஆவி பறக்கின்றது. 15 அடிக்கு 15 அடி அந்த அளவுக்குத்தான் சதுரம். அதில் தண்ணீர் 4 அடிக்கு இருக்கிறது. ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றுமாக இருக்கிறது. அது கந்தக தண்ணீர். 10 நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது. அதனால் சீக்கிரமாக குளித்து முடித்து விட்டு கோவிலுக்கு சென்றோம். பத்ரி நாராயண சுவாமியைக் கண்டு தரிசித்தோம். சுவாமி நன்கு அலங்காரத்துடன் இருந்தார். சுவாமிக்கு அன்னம் வைத்து தீபாராதனை செய்ததை பக்கத்திலிருந்து பார்த்தோம். 1 1/2 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பினோம். வழியில் கழுத்து மாலைகள் வாங்கிக் கொண்டோம். ரூமுக்கு வந்து சாப்பிட்டோம். நன்றாக வெய்யில் இருந்ததால் குளிரவில்லை. மாலை 4 மணிக்கு பத்ரிநாத்தை விட்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். 
மழை தூறிக்கொண்டிருந்தது. அரை மணி நேரம் பஸ்ஸில் வந்திருப்போம். வழியில் மரம் ஒன்று சாய்ந்து வழி மறிக்கப்பட்டு கிடந்து இருந்தது. எங்கள் பின்னால் சிங்குகாரர்கள் வந்து அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். 

சிறிது  தூரம் சென்றிருப்போம். வழி நெடுக மலை மீது இருக்கும் கற்கள் உருண்டு கீழே விழுந்து இருந்தன. அதையும் சிங்குகள் அப்புறப்படுத்திக் கொண்டே இருக்கும் சமயத்தில் பல பெரிய பெரிய கற்கள் கீழே உருண்டு விழுந்ததை நம் கண் முன்னால் பார்த்தோம். இன்னும் சில கற்கள் பாறை மேல் தொற்றிக் கொண்டு எப்போது விழுமோ என்று நின்றிருந்தது. மண் சரிவினால் பாதை இல்லாமல் அரை அடி வித்தியாசத்தில் எங்கள் பஸ் முன்னேறியது. அந்த சமயத்தில் பஸ் கண்ட ஆட்டம் எங்கள் எல்லோரையும் ஆண்டவனை கூப்பிட வைத்து விட்டது. அந்த அளவுக்கு நாங்கள் தப்பித்து வந்தோம். இறைவன் இல்லாமல் எந்த காரியமும் நடப்பதில்லை என்று தெரிந்து கொண்டோம். அந்த பத்ரிநாராயணன்தான் எங்களை காப்பாற்றினார். 

(இப்படி விழுந்திருக்க வேண்டியது.... 
பத்ரிநாராயணனின் மகிமையில் தப்பித்தாக எனது தாயார் சொன்னார்கள்.)
இரவு 9 மணிக்கு பிப்லி கேட்டிற்கு வந்து சேர்ந்தோம். இரவு சாப்பிடும் போது 12 மணி. அன்று இரவு அம்மாவுக்கு உடம்பு நலமில்லாமல் இருந்தது. வரும் வழியில் இந்த அதிர்ச்சியினால் அம்மாவுக்கு புரையேறி மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்கள். மிகுந்த சிரமத்தின் பேரில் அவர்களுக்கு உடம்பு சரியானது." 
இப்படியாக எனது தாயாரின் பத்ரிநாத் பயண அனுபவம்  அபாயகரமானதாக அமைந்திருந்தது. ஊருக்கு திரும்பியவர்கள் அனைவரும் தாங்கள் உயிர் தப்பி வந்ததையே அச்சமயத்தில் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பத்ரிநாத் கோவில் வாசல் முன்பு 

காசியில் படகு சவாரி

காஷ்மீர் நிசான் கார்டன் 

காஷ்மீர் நேரு பார்க் 

காஷ்மீர் டால் ஏரி 

பத்ரிநாத்துக்குப் பிறகு பயணம் ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜம்முதாவி, காஷ்மீர், தில்லி, ஆக்ரா, ஷிரிடி, பம்பாய், சோலாப்பூர், மதராஸ் என தொடர்ந்து  ராமேஸ்வரம் சென்று, பிறகு திண்டுக்கல் வந்து சுபமாக முடிந்தது.

ஒவ்வொரு ஊர் பற்றியும், கோவில் பற்றியும் எனது தாயார் நிறைய எழுதி இருந்தார்கள். வருணனையில் சாண்டில்யன் தோற்றார் போங்கள்!

இந்தப் பதிவை வாசித்து முடித்து விட்டு, தனது டைரியை காட்டி "இதை ஒரு புத்தகமாக நான் பப்ளிஷ் பண்ணப்போறேன்... இப்படி யாத்திரை செல்பவர்களுக்கு நினைவுப் பரிசாக கொடுக்கப்போறேன்..." என்றார்..! எனது 40க்கும் மேலான சட்டப் புத்தகங்களை கடந்த 26 ஆண்டுகளாக பதிப்பித்து வெளியிட்டு, இரண்டு புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த சட்ட நூல் பதிப்பாளர் விருதை பெற்ற அவருக்கு,  இந்தப் பணி ஒன்றும் பிரமாதம் அல்ல...!

வணக்கம்.

17 June, 2013

பழைய தகவலாக இருந்தாலும் தேடி எடுத்துக் கொடு - மைய தகவல் ஆணையம்.


மரண தண்டனை விதிக்கப்பட்டு அது பின்னிட்டு குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தண்டனை கைதிகளின் பதிவேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்து வதற்காக, 1970-ஆம் ஆண்டு முதல் தேடி எடுக்கும்படி அரசுக்கு மைய தகவல் ஆணையம் இம்மாதம் 14-ஆம் தேதி ஆணையிட்டுள்ளது.

முன்னதாக அத்தகு பதிவேடுகள் தங்களிடம் 1981-ஆம் ஆண்டு முதல்தான் உள்ளது என்றும், எனவே 1970-ஆம் ஆண்டிலிருந்து அப்பதிவேடுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாது என்றும் அரசு செய்த வாதத்தை மைய தகவல் ஆணையம் நிராகரித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்துவதற்குரிய தகவலான அப்பதிவேடுகளை அரசு தேடி எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தேடி எடுக்க முடியாத அளவிற்கு அவை ஒன்றும் பழையதல்ல என்றும் மைய தகவல் ஆணையம்  தனது ஆணையில் கூறியது.

ஆக்ரா மைய சிறைச் சாலையில் கடந்த 17 ஆண்டுகளாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி நரேந்தர் என்பவருக்கு அப்பதி வேடுகளை வழங்கும்படி உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MHA) தகவல் ஆணையர் திருமதி சுஷ்மா சிங் தனது ஆணையில் ஏவுரைத்துள்ளார்.


Mrs. Sushma Singh, Information Commissioner, CIC.


குடியரசுத் தலைவரின் செயலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரேந்தர் அனுப்பிய மனுவில்  மரண தண்டனை விதிக்கப்பட்டு அது கருணை மனுவின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தண்டனைக்  கைதிகளின் பட்டியலையும், அதற்கான ஆணைகளின் நகல்களையும் 1970-ஆம் ஆண்டு முதல் தனக்கு வழங்கும்படி கேட்டிருந்தார்.

இந்த மனுவை குடியரசுத் தலைவரின் செயலகம் தகவல் வழங்குவதற்காக உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றி அனுப்பியது. அது மனுதாரர் நரேந்தர் கோரும் தகவல் விவரங்கள் தங்களிடம் 1981-ஆம் ஆண்டிலிருந்து தான் உள்ளது என்றும், நகல் கட்டணம் ரூ.22 செலுத்துவதன் பேரில் அவற்றை நரேந்தருக்கு வழங்கலாம் என்றும் அவரது மனுவின் மீது முடிவு தெரிவித்தது.

உள் விவகாரங்கள் அமைச்சக மைய பொதுத் தகவல் அலுவலரின்   (CPIO)  இந்த முடிவால் குறையுற்ற நரேந்தர், தான் கோரும் தகவலை தனக்கு செலவுத் தொகையின்றி இலவசமாக வழங்க வேண்டும் என்று மேல்முறை யீட்டு அதிகார அமைப்பிடம்  (Appellate Authority) முறையிட்டார். ஆனால் 'வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர் அட்டையை' (BPL Card) வைத்திருக் கும் மனுதாரர்களுக்கு மட்டுமே இலவசமாக தகவல் வழங்கப்படும் என்று கூறி, நரேந்தரின் வாதத்தை மேல்முறையீட்டு அதிகார அமைப்பு நிராகரித்து விட்டது.

உள் விவகாரங்கள் அமைச்சகத்தின் மைய பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு வழங்கிய இந்த முடிவுகளை எதிர்த்து நரேந்தர் மைய தகவல் ஆணையத்திடம் இரண்டாம் மேல்முறையீடு செய்தார். அதில் முன்னதாக தனது மனுவில் கூறியிருந்த அதே கோரிக்கைகளை முன் வைத்து, தனக்கு முழுமையான தகவல்களை வழங்கும்படி உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு ஏவுரைக்கும்படியும், தான் நகல் கட்டணங்களை செலுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டாம் மேல்முறையீடு மைய தகவல் ஆணையத்தின் முன் பரிசீலனைக்கு வந்த போது, நரேந்தரின் வாதத்தை அது ஏற்றுக் கொண்டு, "மேல்முறையீட்டாளர் கோரும் தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் ஆகும் என்றும், அவற்றை தேடி எடுத்து தர முடியாத அளவிற்கு அவை ஒன்றும் பழைய தல்ல என்றும்," கருத்துரைத்தது.

முடிவாக நரேந்தர் கோரும் பதிவேடுகளை ஆணை கிடைக்கப் பெற்ற தேதியிலிருந்து  4 வாரங்களுக்குள் அவருக்கு செலவுத் தொகையின்றி  வழங்க வேண்டும் என்று உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு ஆணையிட் டது.

நரேந்தரின் வாதத்தை மைய தகவல் ஆணையம்  'காணொளி கூட்டுரை யாடல்' (வீடியோ கான்ஃபரன்சிங்) வாயிலாக கேட்டறிந்தது.

பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கினால் ஆணையின் முழு வடிவம் கிடைக்கும். 


16 June, 2013

மனைவியின் பொய் புகாரால் கணவனுக்கு டைவர்ஸ் கிடைத்தது !


தன்னை கொடுமை செய்ததாக கூறி தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒரு இந்து மனைவி பல்வேறு பொய் புகார்களை காவல் நிலையத்திலும் கணவனின் அலுவலகத்திலும் கொடுத்தார். குறிப்பாக வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், தனது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், தனது கணவனுக்கு மற்றொரு சக பெண் பணியாளருடன் கள்ளத் தொடர்பு உள்ளது என்றும் பலவாறு கூறி பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

இவ்வாறு கணவனுக்கு எதிராக பொய்ப் புகார்களை கொடுப்பது அவரை மன ரீதியாக மனைவி கொடுமை செய்ததாகும் என்றும், எனவே அவர் இந்து திருமண சட்ட வகைமுறைகளின்படி தனது மனைவியிடமிருந்து மணமுறிவு தீர்ப்பாணை பெற அருகதையுடையவர் என்றும் தில்லி உயர் நீதிமன்றம் கடந்த வியாழனன்று  தீர்ப்புரைத்தது.

Hon'ble Mr. Justice Pradeep Nandrajog


மாண்பமை நீதியரசர்கள் பிரதீப் நந்துரஜொக் மற்றும் வி.காமேஷ்வர் ராவ் அடங்கிய ஈராயம் இத்தீர்ப்பை எழுதுகையில், "திருமண பிரச்சனை என்பது ஒரு சட்டப் பிரச்சனை மட்டுமல்ல, அது முக்கியமாக ஒரு குடும்பப் பிரச்சனை மற்றும் சமூகத்திற்கு கவலை தருவது.  திருமணப் பிரச்சனைகளை சட்ட நுணுக்கங்கள் என்ற கண்ணாடிகளின் வழியாக பார்த்தல் ஆகாது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான ஓர்  முரண்பாடாக இருக்கும் அதை மனித வாழ்வின் நிலையில் இருந்து மதிப்பிட  வேண்டும். அத்தகு பிரச்சனைகளை உணர்வு பூர்வமாக அணுக வேண்டுமே தவிர எந்திரத்தனமாக அல்ல" என்று முக்கியக் கருத்துரைத்தது.

முன்னதாக இவ்வழக்கில் மணமுறிவு கோரி குடும்ப நீதிமன்றத்தில் கணவன் தாக்கல் செய்த மனுவில், மனைவின் எதிர்வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு, கணவனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று மணமுறிவுத் தீர்ப்பாணை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மனைவி தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

["A matrimonial dispute is not just a legal dispute but, more importantly, it is a family problem and a social concern. Matrimonial disputes should not be viewed from the glasses of legal technicalities. They should be appreciated at the human level of being a conflict between a husband and a wife. Such issues should be dealt with sensitively rather than mechanically"]

14 June, 2013

இன்று என்னுடைய பிறந்த நாள்...

இன்று  என்னுடைய பிறந்த நாள்...

காலம் வேகமாக போய் விட்டது. என்ன செய்தேன்..? எப்படி வாழ்ந்தேன்...? எந்த  அளவுக்கு மற்றவர்கள் விரும்புமாறு வாழ்ந்தேன்? நான் என்னை விரும்பி வாழ்ந்தேனா?

எல்லாம் கேள்விகள்....????


எனினும், என்னைப் பொருத்தவரை யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. யாரையும் வஞ்சிக்கவில்லை. துரோகம் செய்யவில்லை. நேர்மைக்கு சோதனை வந்தாலும் நிதானம் கடைப்பிடித்திருக்கிறேன். எனது சட்ட அறிவை மற்றவர் வாழவே பயன்படுத்தியுள்ளேன். மேலாக 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே.." என்றே வாழ்ந்து வந்திருக்கின்றேன். அதை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன். தொடர்ந்து அவ்வாறு வாழ மன வலிமை, திட்பம் வேண்டும் என வேண்டுகின்றேன்; ஆண்டவனை வணங்குகின்றேன். ஆனாலும், விதி வசம் அகப்பட்ட வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் என்றும் தோற்றுப் போனதில்லை என்றே கருதுகின்றேன்.


அண்மையில் ஒரு அம்மையார் மேடைப் பேச்சு ஒன்றின் போது, "நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும்" என்று பேசியதை செய்தித் தாளில் வாசித்தேன். மனது முழுக்க தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் எப்படி அது நடக்கும்? எனவே வேண்டிய அடிப்படை யாதெனில், நல்ல எண்ணங்கள். தொடர்ந்து நல்ல செயல்கள். நிச்சயம் நல்லது தானாக நடக்கும் என்று நம்புகின்றேன்.குற்றவியல் சட்டத்தில் ஒரு குற்ற செயலுக்கு குற்ற மனம் (mens rea) இருந்ததா என்பதை கவனிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. எனவே ஒன்று குற்ற செயலா (actus reus) என்று ஆராயும் முன்பு குற்ற மனம் இருந்ததா என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது. குற்ற மனமில்லாச் செயல் குற்றமாவதில்லை [actus non facit reum nisi mens sit rea, which means: "an act does not make a person guilty unless (their) mind is also guilty] என்பது சட்டக் கோட்பாடு. எனவே குற்ற மனமில்லாமல் வாழ்வது சிறந்த ஒன்று.


கடந்த கால பிறந்த நாட்களில் இருந்து தொடங்கிய வாழ்க்கையில் நிறைய சவால்கள், நிறைய நண்பர்கள், அதே நேரத்தில் நண்பர்கள் போர்வையில் எதிரிகள், சுயநலவாதிகளின் சொரூபங்கள், பிரச்சனைகள், சூழ்ச்சிகள், சமாளிப்புகள் என எல்லாவற்றையும் மிக மிக பொறுமையுடன் பார்த்து வருகின்றேன். எல்லாம் காலம் கற்றுத் தரும் பாடம். சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றேன்.

நிறைய பேர்களை அடையாளம் கண்டு கொண்டேன். விலகி இருக்கின்றேன். இது வரை வாழ்ந்ததோ, கற்றுக் கொண்டதோ ஏதுமில்லை என்று உணர்கின்றேன். இனி வாழ்வதும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய உள்ளது என்று அறிகின்றேன்; அறிய வைக்கப்பட்டிருக்கின்றேன்.

இப்படி பல்வேறு உணர்வுகளின் நடுவே பிறந்திருக்கும் இந்தப் பிறந்த நாளில் பதிவுலக நண்பர்களின் வாழ்த்துகளை வேண்டுகின்றேன்.

என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெயராஜன்.


12 June, 2013

நாங்க நிறைய அழுதுட்டோம் ...

அழுகையுடன் தொடக்கம் :

மனித வாழ்க்கை அழுகையுடன் தொடங்குகின்றது. பிறந்த குழந்தை அழுதவுடன், அது ஆரோக்கியமாக உள்ளது என்று மருத்துவர் சான்றளிக்கின்றார். எனவே மனிதன் முதலில் கற்றுக் கொள்வது அழுகை என்று சொன்னால் அது மிகை அல்ல.

அழுகை பல வகை :

இந்த அழுகையை முதலில் வெளிப்படுத்துவது  நமது கண்கள். 'கண்கள் குளமானது' என்கின்றோம். 'கண்ணில் நீர் வழிந்தது' என்கின்றோம். சில சமயங்களில் கண்களில் நீர் வராமலே 'ஓவென கதறி அழுவதும்' உண்டு. 'முதலைக் கண்ணீரும் உண்டு', 'ஆனந்தக் கண்ணீரும் உண்டு', 'நீலிக் கண்ணீரும் உண்டு'. 'இரத்தக் கண்ணீர் வடிப்பதையும்' கேள்விப் பட்டிருக்கின்றோம். இதற்கு சற்று வித்தியாசமாக 'மனதுக்குள்ளேயே அழுவதும் உண்டு'.

எப்பொழுது அழுகின்றோம்?

அழுகை என்பது வேதனையின் வெளிப்பாடு. துன்பம், பிரிவு, நட்டம், ஏமாற்றம்,  நம்பிக்கை துரோகம், இறப்பு, அவமானம்  என எத்தனையோ நிகழ்வுகள் அழுகைக்கு காரணமாகின்றன.

இவற்றின் போது நன்கு அழுது விட்டால் மனம் பின்னிட்டு அமைதி கொள்கின்றது என்பது உளவியல் பூர்வமான ஒன்று. ஏகப்பட்ட சிக்கல், துன்பம், இழப்பு இவற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு அப்படிப்பட்ட சிக்கல் மீண்டும் தோன்றினால் சமாளிக்கும் தெளிவு இந்த அழுகையில் கிடைக்கின்றது. "நாங்க ஏற்கனேவே நிறைய அழுதுட்டோம்... இனி அழ ஒன்னும் இல்லை... நடக்கறது நடக்கட்டும்... பாத்துக்கலாம்" என்ற திட்டவட்டமான வார்த்தைகள் இழப்பை சந்தித்த அழுகை தரும் தெளிவு.

 'என்ன செய்வது?', 'எப்படி கொண்டு செல்வது?', 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்விகளின் தாக்கத்தை அனுசரித்து அழுகையின் வெளிப்பாடும் வேறுபடுகின்றது.

கொஞ்சம் யதார்த்தமாக சிந்திக்கலாம் !

அதாவது திருமணமாகி சில வருடங்களுக்குள் கணவன் அகாலமாக  இறந்து விட்டால் மனைவியின் அழுகை சத்தம் அதிகமாக இருக்கும். காரணம், எதிர்கால பயம். கணவனின் மரணத்தால் முதலில் வருமான இழப்பு. மரியாதை குறைவு. குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரச்சனை. எப்படி தொடர்ந்து வாழ்வை முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வி. இவை ஒவ்வொன்றையும் நினைத்து திடீர்திடீரென அழுகை வெடிக்கும். கணவன் இறந்து விட்டானே என்பதை விட இந்தக் கேள்விகளால் திணறும் மனது அழுகையை அதிகப்படுத்தும்.

திருமணமான ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் கணவன் இறந்த, அதுவும் குழந்தைகள் பிறக்காத நேர்வில், இளம் வயது மனைவியின் அழுகையில் பல்வேறு பிடிபடாத உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கும். மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கி விட்டிருக்கும்.  "இடையில் வந்தான், இப்போது இல்லாமல் போய் விட்டான்... இருப்பவருக்கு இன்னும் எவ்வளவோ வாழ்க்கை இருக்கிறது... தொடர்ந்து அழுவதில் பயன் ஏதும் இல்லை" என்ற நிலையில் அங்கு ஒரு சம்பிரதாய அழுகை மட்டுமே கேட்கக் கூடும். அதாவது விதவைக் கோலம் இளம் வயது மனைவிக்கும் சரி.. அவளது பெற்றோர், உறவினருக்கும் சரி வேண்டாத ஒன்று என்று பட்டு விடும். மறுமண வாழ்வுக்கு மனம் சாத்தியமாகி விடும்.

ஒருக்கால் கணவன் ஓரளவு சம்பாதித்து, சொந்த வீடு, நகை நட்டு, சேமிப்பு, காப்பீட்டுப் பணம் ஆகியவற்றை விட்டு இறந்து விட்டிருந்தால், கணவனின் பாசம், அன்பு, சுகம் ஆகியன கிடைக்காமை தரும் ஏக்கம் நிலையான அழுகையை தொடர்ந்து தரும். 'வாழ வேண்டிய வயசுலே இப்படி அல்பாய்சுலே போயிட்டாரே... நான் வாங்கிட்டு வந்த வரம் அவ்வளவுதான்... ஏதோ இருக்கறதே வைச்சு சமாளிக்கின்றேன்.. இருந்தாலும் இந்தக் குழந்தைகளை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமாக இருக்கு" என்ற வார்த்தைகள் மெல்லிய அழுகையூடே வந்து விழும்.

அதே நேரத்தில் கணவன் ஊர் முழுக்க அல்லது வங்கி முழுக்க கடன் வாங்கி வைத்து விட்டு இறந்து விட்டிருந்தால் இந்த அழுகை சற்று வேறுபாடும். 'இந்த மனுஷன் அதைப் பண்றேன்... இதை பண்றேன்னு சொல்லி ஊரே சுத்தி கடன் வாங்கி வச்சிட்டு போயிட்டாரு... இப்போ என்ன பண்றதேன்னு தெரியலே... மனுஷன் செத்ததுக்கு அழுவறதா இல்லே.. இந்த கடன்காரங்களே நினைச்சு அழுவறதான்னு தெரியலே ?" என அழுகை பெருங்குரலாக இருக்கும்.

ஓரளவு வாழ்ந்து, பிள்ளைகளுக்கு கல்வி, திருமணம் என்று முடித்த பிறகு, அல்லது அறுபதாம் கல்யாணம் முடித்த பிறகு கணவன் இறந்து போனால் அங்கு அவரது 'பாடையை' தூக்கும் போதும், சிதையில் வைக்கும் போதும் வேதனை அழுகை சற்று தூக்கலாக இருக்கும். மனைவியின் கோலம் அமங்கலமாகும் போது விசுக்கென ஒரு அழுகை பொங்கும். இப்படி வாழ்ந்து முடித்த வாழ்வின் ஆண் துணை மரணம் சம்பந்தப்பட்ட பெண் துணைக்கு பல்வேறு நினைவுகளை மனதில் எழுப்பும். வாழ்ந்த வரை கணவன் தனது மனைவியை நன்றாக, சந்தோசமாக வைத்திருக்கலாம் அல்லது ஏதாவது குடைச்சல்களை தந்து வேதனைப் படுத்திக் கொண்டே இருந்திருக்கலாம். இதை அனுசரித்து வாழ்ந்து முடித்த கணவனின் மரணம் ஒரு விசனமா அல்லது விடுதலையா என்பது அமையும். வார்த்தைகளால் சட்டென விவரிக்க முடியாத உணர்வுகள் !

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, கணவன் இறந்து விட்டால் பணம், சொத்து என அனுபவிக்க நிறைய கிடைக்கும் என்ற நப்பாசை நினைவுகளுடன்  வாழ்ந்து வரும் நய வஞ்சக மனைவியின் அழுகை, யாரும் சந்தேகிக்க முடியாத நாடக அழுகையாக இருக்கும். பெரிய ஆர்ப்பாட்டம் அழுகையில் தெரியும். முதலை கண்ணீர் வடிக்கும். ஊர் உலகத்தில் நடக்காததை நான் சொல்லி விடவில்லை. அந்த வகையில் ஒரு கணவனின் மரணம், மனைவியின் கள்ளக் காதலை நிறைவேற்றலாம், பணம், பொருள்களை சுருட்ட வகை செய்யலாம். ஆடம்பர வாழ்விற்கு தடையற்ற வழி ஏற்படுத்தலாம்.

கணவனின் அழுகை :


ஒரு கணவன் இறந்த பிறகு மனைவியின் அழுகை பற்றி இதுவரை ஓரளவு பார்த்தோம். இதுவே மனைவி இறந்து விட்டால், கணவனின் அழுகை ? பொதுவாக "பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புது மாப்பிள்ளை" என்று சொல்வார்கள். ஆனால் இதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. முதல் மனைவி என்றுமே முதல் காதல். கணவன் தனது வாழ்க்கை மற்றும் சமுதாய  நிர்பந்தத்திற்காக மீண்டும் மறு மணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் நினைவுகள் என்றும் அகலாது. அவன் தனது அழுகையை வெளிப்படுத்தி கொள்ளாது போனாலும், "நீ இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா...?" என்ற அழுகை என்றுமே அவன் மனதில் தொடர்ந்து கொண்டிருக்கும். இதில் கவனிக்க வேண்டியது கணவனின் மறு மணம் என்பது அவனது 'வாழ்க்கை மற்றும் சமுதாய நிலையை' முன்நிறுத்தியதாக இருக்கும். மனைவி இழந்த ஒரு ஆடவனுக்கு பெண் வேண்டுமென்றால், அவன் மறு மணம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாடு ஏதும் கிடையாது என்பது இங்கு கவனத்திற்குரியது.

ஒரு நல்ல, பொறுப்புள்ள, அன்பான, அழகான, நம்பிக்கைக்குரிய முதல் மனைவியின் மரணம், கணவன் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அவனுக்கு அது ஒரு நிலையான இழப்பு. என்னதான் சந்தோஷ சூழல்கள் ஏற்பட்டாலும், 'நீ என்னோட இல்லையே?' என்ற ஏக்க அழுகை அந்தக் கணவனின் மனதில் என்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்.

மனைவியை இழந்த ஒரு கணவனுக்கு மறு மண வாழ்க்கை பொருத்தமாக அமைவது அல்லது தொடர்ந்து நீடித்திருப்பது எல்லாம் மிக அரிது. அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் கணவன் மறுமணம் செய்து கொள்ள முனைவது கிட்டத்தட்ட ஒரு அபாயம்தான். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணுக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கலாம்; அல்லது ஒரு கட்டாயத்திற்காக அவ்வாறு  வாழ்க்கைப்படலாம்; அல்லது வேறு உள்நோக்கங்களுக்காக திருமணம் செய்து கொள்ளலாம். புரிய முயன்றாலும் புதிராகவே தொடரும் வாழ்க்கை அது. தனியாக அமர்ந்து அவ்வப்போது வாய் விட்டு அழுவது ஒன்றுதான் வழி. தீதும், நன்றும் நாம் வரவழைத்துக் கொள்வதுதானே..!

குற்றங்களை தவிர்க்கும் அழுகை :

இவை யாவும் வாழ்க்கைத் துணை இறப்பினால் கிளம்பும் அழுகைகள். இதுவே நம்பியவர் ஏமாற்றும் போதும், துரோகம் செய்யும் போதும், தொழில் இழப்பு, நட்டம், அவமானம் ஏற்படும் போதும் நன்கு அழுது விட வேண்டும். இல்லாது போனால் அது பழி வாங்கும் உணர்வாக மாறி விடும். இந்த உணர்வு குற்றச் செயலில் சென்று முடியும். எனவே இங்கு அழும் அழுகை, மனதை சமாதானப் படுத்துகிறது; சாந்தப்படுத்துகிறது. பழி வாங்கும் உணர்வை நேர்மறை எண்ணமாக மாற்றுகிறது. மனதுக்குள் புழுங்குவதை விட அழுது தீர்த்து விடுவது நன்று.

இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். ஏதாவது குத்தம் குறை இருந்தா குத்திக் காட்டுங்க...!

21 May, 2013

குத்தி விடும் ஆண்கள்'பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள்" என்ற சென்ற பதிவின் முடிவில் குத்தி விடும் ஆண்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று சொல்லி முடித்திருந்தேன். அதை இங்கு தருகின்றேன்.

குத்தி விடும் பெண்களும் உண்டு. இவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. குத்தி விட்டு தானும் மாட்டிக் கொண்டு மூக்கறுபடுவர். ஆனால் குத்தி விடும் ஆண்கள் அபாயகரமானவர்கள்.

அதென்ன குத்தி விடுவது?

ஒரு பிரச்சனையில் இருவரையும் குத்தி விட்டு குளிர் காய்வது அல்லது சுய லாபம் அல்லது பலன் பெறுவது. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ! பிரச்சனைக்குரிய இருவர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் !! அவர்கள் பிரச்சனையில் நாம் பிழைத்தால் சரி என்ற மனப்போக்கை கொண்ட ஆண்கள். கிட்டத்தட்ட கோள் மூட்டுவது அல்லது தூபம் போடுவது இவர்களுக்கு கை வந்த கலை. சகுனியை விஞ்சிய எத்தர்களாக இவர்களை கிரகங்கள் செயல்பட வைக்கும். இவர்கள் பேச்சில் மயங்கி விட்டால் பிரச்சனை மேலும் வலுவடையுமே தவிர, தீராது. இதுதான் இவர்கள் எதிர்பார்க்கும் ஒன்று.

குத்தி விடும் ஆண்கள் இருக்குமிடம் !

இவர்கள் எங்கு இருப்பார்கள் என்று வலை வீசித் தேட வேண்டியதில்லை.  நம்முடனே இருப்பார்கள். நம்பிக்கையாக, உண்மையாக, நட்பாக நடப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் மெல்ல மெல்ல படிப்படியாக குத்தி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை எவ்வளவு விரைவாக இனம் அல்லது அடையாளம்  கண்டு கொள்ள முடிகின்றதோ அவ்வளவுக்கு நல்லது. உடனே இவர்களை மெல்ல கழட்டி விட்டு விட வேண்டும்.

குத்தி விடும் ஆண்கள் என்ன செய்வார்கள் ?

பிரச்சனைக்குரிய நபர்களுக்கு இவர்கள் பொதுவான, மிகவும் அறிமுகமான, அதாவது ஒரு நண்பராக, உறவினராக இருப்பார். பிரச்சனையில் ஆலோசனை சொல்கின்றேன் பேர்வழி என்று மார் தட்டிக் கொண்டு பிரச்சனையை பெரிது படுத்துவார்கள். இவரே பிரச்சனையின் மறு பக்கத் தரப்பினரிடம் சென்று "அவர்கள் ஏதேதோ செய்கின்றார்கள்... நீங்கள் பேசாமல் இருந்தால் எப்படி...?" என்று தூபம் இடுவார்கள். இவர் வழங்கும் ஆலோசனைக்கு இரு தரப்பினரிடம் இருந்தும் மற்றவருக்கு தெரியாமல் இவர் பணம் பெறலாம். அல்லது இவருக்கு மரியாதை கிடைக்கலாம் அல்லது  சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு  பக்க பலமாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் இவரிடம் வேறு பணிகளை சன்மானத்தின் அடிப்படையில் ஒப்படைக்கலாம் அல்லது குடும்ப இரகசியங்களை சொல்லலாம். குத்தி விடும் ஆண், எல்லாவற்றையும் சமயம் பார்த்து பயன்படுத்தி கொண்டே வருவர். ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்த விவரங்களை சம்பந்தப்பட்டவருக்கு எதிராகவே பயன்படுத்தவும் இவர்கள் தயங்க மாட்டர். இவர்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் இவர்களிடம் சிக்கிக் கொண்டால் கிட்டத்தட்ட் சனி பிடித்த மாதிரிதான்.

குத்தி விடும் ஆண்களின் சூட்சுமம் !!

பிரச்சனைக்குரிய நபர்களை தூண்டி விட்டு ஆதாயம் அடைவது இவர்கள் வேலை. அவ்வாறு தூண்டி விட வேண்டுமானால், தரப்பினர்கள் சமரசம் அடைந்து விடக்கூடாது. எனவே இரண்டு பக்கமும் ஒரு நல்ல நண்பராகவே இவர்கள் பழகி இருவரையும் ஒருவரை மற்றவருக்கு எதிராக குத்தி விட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் பேசும் போது எதிர் தரப்பினரை தனது ஜென்ம விரோதியாக கருதி பேசி ஒரு தரப்பினரை உசுப்பேத்துவர். "அவரு ஏதாவது பண்றத்துக்கு முன்னாடி, நாம இப்படி செஞ்சிடரது நல்லது... அதுக்கு என்கிட்டே ஒரு 'ஃபிட் பெர்சன்' இருக்காரு... அவருகிட்டே கொஞ்சம் பீஸ் கொடுத்தா போதும்... அவர் பட்டையை கிளப்பிடுவாரு" என்று ஒரு தரப்பினரிடமும், "அவங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்த இப்படி பண்ணுவாங்க.... அவங்களை லேசுலே விடக்கூடாது, இருங்க என்ன செய்றது என்று ரூம் போட்டு யோசிக்கின்றேன்"  என்று மற்றொரு தரப்பினரிடமும் பேசி பிரச்சனையை வளர்த்துவர். தரப்பினர்களை அவ்வளவு எளிதில் இணக்கமாக விட மாட்டர்.

குத்தி விடும் ஆண்களிடமிருந்து விலகுவது எப்படி ?

பிரச்சனைக்குரிய நபர்களை தூண்டி விட்டு ஆதாயம் அடைவது இவர்கள் சுபாவம். பிரச்சனையில் யாராவது ஒருவர் இறங்கி வந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. "என்னங்க... நான் ஏதேதோ யோசனை சொன்னேன்.. இப்படி மோசம் போயிட்டீங்களே" என்று ஒரு போலி ஒப்பாரி வைத்து விட்டு கிளம்பி விடுவர். எனவே அடையாளம் தெரிந்து கொண்ட இவர்களை, "எல்லாம் நாங்க பாத்துகிறோம்... நீ கிளம்பு ஃபர்ஸ்ட்" என்று லேசாக கழுத்தின் மீது கை வைத்து நட்பாக நெட்டித் தள்ளி விட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.

பல குடும்பங்கள், தொழில்கள், உறவுகள் இத்தகு சுயநல ஆண்களால் சிதைந்து போனது என்பதுதான் நிதர்சனம். 

முடிவாக, புழுவை விட கேவலமான இவர்களை உடனே அடையாளம் கண்டு களையுங்கள் நண்பர்களே...!20 May, 2013

பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள் !

"பல்வேறு பெண்களின் ராசி பலன்களைப் பத்தி சொன்னீங்க ..... அதே மாதிரி ஆண்களைப் பத்தியும் சொல்லலாமே ...." என்று கேட்ட சில நண்பர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் முகமாக இந்தப் பதிவு. (நான் ஜோதிடர் அல்ல. ஆன்மிகப் பதிவர் ராஜராஜேஸ்வரி அம்மா சொன்னது போல இது ஒரு பொதுவான ஆராய்ச்சிப் பார்வை)


"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கின்றாள்" என்று ஒரு சொல் வழக்கு இருப்பது நமக்குத் தெரியும். இதற்கு சற்று முரணாக, "ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே..." என்று மற்றொரு சொல் வழக்கு இருப்பதும் நமக்குத் தெரியும். ஆக பெண்ணின் ராசி ஆணை பாதிக்கும் அல்லது சாதிக்கும் என்று சொல்லலாம். எனினும் அப்படி  ஒரேடியாக ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. ஆணுக்கும் தனிப்பட்ட குணங்களை ஜாதக கிரக அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. கிரக பெயர்ச்சிகள் மாற்றுகின்றன.

முன்னேற நினைக்கும் ஒரு ஆணின் இலட்சியம் தடையில்லாதொரு நல்ல படிப்பு, அதற்கு ஏற்றதொரு வேலை அல்லது தொழில் அல்லது வணிகம், போதுமான வருமானம், அன்பான மனைவி (கவனிக்க : அழகான மனைவி என்று சொல்லவில்லை. எனினும் வாய்த்தால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்),  குழந்தைகள், ஒரு வீடு, வாகனம், கொஞ்சம் சேமிப்பு மற்றும் இடர் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு உதவும் சுற்றம். இவற்றை அடைந்து, பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வை ஓட்ட முடிந்து விட்டால் மகிழ்ச்சிதான்.

ஆனால் இந்த ஒவ்வொன்றையும் ஒரு கிரகம் தருவதாக ஜோதிடப் பதிவர்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட கிரகம் எந்தக் கட்டத்தில் அமர்ந்து இருக்கின்றதோ அதைப் பொருத்து பலன் மாறுகின்றது. குணம் வேறுபடுகின்றது.

 • பள்ளிப்படிப்பின் போது 'இது பூட்ட கேசு' என்று ஆசிரியரால் பட்டம் கொடுக்கப்பட்ட மாணவன், கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு படிப்பில் பட்டையை கிளப்புவான்.
 • பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தவன் கல்லூரியில் கோட்டை விடுவான்.
 • படிப்பறிவே மிகவும் குறைவாக இருக்கும் ஒருவன் அருமையாக வியாபாரம் செய்வான். நன்கு பொருளீட்டுவான்.
 • நன்கு படித்து தேர்ச்சி அடைந்திருப்பான். அவன் எதிர்பார்த்த வேலை கிடைக்காது.
 • வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பான். அவனுக்கு திருமணம் என்று ஒன்று ஆகிய பிறகு பொறுப்பாக முன்னேறிக்  கொண்டு வருவான். 
 • நல்ல படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம். ஆனால் மண வாழ்க்கை சரியாக அமையாது. சண்டை, சச்சரவு, பிரச்சனை, நீதிமன்றம், பிரிவு என வாழ்க்கை பேசித் தீர்க்க முடியாத அளவுக்கு போர்க்களம் ஆகி விடும்.
 • தீய பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லாத, சுத்தமாக சுகாதாரமாக வாழும்  ஒருவன், திடீரென அல்ப ஆயுளில் நோயால் மடிவான்.
 • எல்லா விதமான பழக்க வழக்கங்களும் ஆல் ரௌண்டராக கொண்ட ஒருவன், அதே பழக்க வழக்கங்களுடன் கொள்ளுப் பேரன்களையும் கண்டு விட்டு மடிவான். 
ஜாதகக் கட்ட கிரகங்கள் காரணமாக ஆண்களின் குணாதிசியம் பல வகையில் அமைந்து விடுகின்றது.
 • முரட்டு சுபாவ ஆண்கள். எதிலும் முன் கோபம், முரட்டுத்தனம். இவர்களை அன்பு ஒன்றைக் கொண்டு மட்டுமே கட்டுப்படுத்த முடியும். பொட்டிப் பாம்பாக அடங்கி விடுவர். அதிகாரம் செய்ய நினைத்தால், எகுறுவார்கள். முரண்பாடு காட்டுவார்கள். புரிந்து கொண்டவர்களுக்கு இவர் ஒரு தெய்வப் பிறவி. இவர்களிடம் நிறைய சாதிக்கலாம்.
 • சாந்த சொரூபி ஆண்கள். இவர்களுக்கு கோபமே வராது. "எல்லாம் பாத்துக்கலாம் போ", என்று அந்த நேரத்துக்கு சமாளிப்பார்கள். அப்படி சரியாக சமாளிக்கவும் செய்வார்கள். 
 • புத்திசாலி ஆண்கள். நல்ல கல்வியுடன், தொழில், குடும்பம் என அமைத்து போதுமென்ற மனதுடன், தான் உண்டு தன்  வேலை, குடும்பம் என்று உண்டு வாழும் மனப்பக்குவத்தை கிரகம் அருளப் பெற்றவர்கள், இவர்கள். அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று எதையாவது செய்கின்றபோது அதற்கே உரிய பிரச்சனைகள் வரவே செய்யும். இவர்கள் எது நம்மால் முடியும், எது முடியாது, எது பயன் தரும், எது பிரச்சனை தரும் என்பதை தனது அறிவால் நன்கு அளவிட்டு வைத்திருப்பார். எனினும் 'ரிஸ்க்' எடுக்காத வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. போதுமென்ற மனம் படைத்த இவர்கள், ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.
 • கலவை ஆண்கள். இவர்கள் முன்கோபம், முரட்டுதனம், சாந்தம் ஆகிய மூன்றையும் கொண்டவர்கள். இவர்கள் அபாயகரமானவர்கள். புரிந்து கொள்வது கடினம். இவர்களின் எந்த செயலுக்கும் இவர்களிடம் பொருத்தமான ஒரு பதில் இருக்கும். அதை மறுத்துரைப்பது கடினம். "எல்லாத்துக்கும் வழி இருக்கு" என்று நம்புபவர்களாக அல்லது நம்பிக்கை தருபவர்களாக இவர்கள் கிரக அமைப்பு இருக்கும்.
 • ஆழ மனது ஆண்கள். பெண்களுக்கு மட்டுமே ஆழமான மனது உண்டு என்று நினைத்தால் அது தவறு. ஆண்களுக்கும் உண்டு. இந்த ஆழ மனது ஆண்கள், நீண்ட கால சாத்திய சிந்தனைகளை செய்வதில் வல்லவர்கள். இவர்களை 'மூடி டைப்' என்று கிரகம் காட்டும்.
 • வள்ளல் ஆண்கள். வள்ளலாக்கும் கிரகம் இவர்களுக்கு நன்கு வேலை செய்யும். பிறருக்கு தருவதற்கென்றே ஆண்டவன் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான்.
 • உதவும் ஆண்கள். கேட்டவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்பவர்கள். பொருளாக தர முடியாது போனாலும், தனது அறிவால், தொழிலால், செல்வாக்கால் உதவி செய்வார்கள். உதவி செய்யும் இவர்களுக்கு உதவி தேவைப்படும் இக்கட்டான கட்டம் வருகின்ற போது, உதவி கிடைக்காத நிகழ்வும் உண்டு.
 • தொட்டதை பொன்னாக்கும் ஆண்கள். இவர்கள் எது செய்தாலும் அதில் வெற்றி மட்டுமே காண்பர். தொட்டது துலங்கும். கை ராசிக்காரராக இருப்பர். எடுத்த காரியம், வேலை, தொழில், வியாபாரம் என இவர்கள் செய்யும் எதிலும் ஜெயம்தான். இப்படிப்பட்ட ஆண்களை இனம் கண்டு அவர்கள் கையால் எதை மற்றவர்கள் செய்து கொண்டாலும் அது சிறப்பாக அமையும். 
 • அதே நேரத்தில் தன் வாழ்வு சிறப்பாக அமையாத ஆண்களும் உண்டு. ஊருக்கு, உற்றார் உறவினருக்கு நிறைய செய்திருப்பார். ஆனால் அவரது வாழ்வு சொல்லிக் கொள்ளும்படி மகிழ்ச்சியாக இருக்காது. ஏதோ ஒன்று அவர் மனதில் வாழ்நாள் முழுவதும் வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
 • அப்பாவி ஆண்கள். இப்படி நிறைய பேர் உண்டு. அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அப்பாவியாக இருக்கின்றார்களோ இல்லையோ, அப்படி ஆக்கப்படும் நிகழ்வு அதிகம் நடக்கின்றது. அதாவது "ஏதாவது சொன்ன குத்தமாய்டுமா, செஞ்ச தாப்பாய்டுமா ?" என்ற கேள்விக்கு ஆளாக்கப்பட்டே அப்பாவியாக மாறி விடுகின்றனர். தன் கருத்தை வெளிப்படுத்த முட்டுக்கட்டைக்கு ஆளாபவர்கள், இவர்கள்.
 • வசிய ஆண்கள். இவர்கள் பெண்களை விரும்புகின்றாரோ இல்லையோ, இவர்களை பெண்கள் அதிகம் விரும்புவர்கள். இவர் சினிமா கதாநாயகனாக இருக்க மாட்டார். அல்லது அப்படி ஒரு அழகனாக கூட இருக்க மாட்டார். ஆனாலும் ஏதோ ஒரு வசியம் இவர் முகத்தில் இருக்கும். இவர் வசியப் படுத்த வேண்டும் என்று நினைத்து விட்டால், நிச்சயம் வசியமாக்கி விடுவார்.
 • தோல்வி ஆண்கள். முக்கி முக்கி எதை செய்தாலும் இவர்களுக்கு அதில் தோல்வியே தொடர்ந்து ஏற்படும். எதிலும் தயக்கம், தடுமாற வைக்கும் கிரகங்கள் இவர்களை தடைப்படுத்தும்.
 • துணிச்சல் ஆண்கள். ஒரு ஆணுக்கு இலட்சணம் துணிச்சல். அதாவது தைரியம். எதிலும் தைரியமாக முன்னேறுவார்கள். தகாத துணிச்சல் இவர்களிடம் இருக்காது. இவர்கள் பயப்படுகின்றார்கள் என்றால் எதையோ துணிச்சலாக செய்ய திட்டமிடுகின்றார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம். 
 • சவடால் ஆண்கள். இவர்களை உதார் விடும் ஆண்கள் என்றும் சொல்லலாம். தாம் தூம் என்று பேசுவார்கள். ஆனால் விஷயம் இருக்காது. பேசுவதற்கு யாரிடமிருந்தாவது விஷயம் பெற்றுக் கொள்வார்கள். பயப்படுத்துவார்கள். ஆனால் 'ரீ-ஆக்ட்' ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவார்கள். 
 • உதவியவர்களை உதறித் தள்ளும் ஆண்கள். நிறைய பேர்களிடம் உதவி கேட்டு படிப்படியாக முன்னுக்கு வந்திருப்பார்கள். ஆனால் பின்னிட்டு உதாசீனப்படுத்துவார்கள். அது மட்டுமல்லாது அவமானப் படுத்துவார்கள்.
 • துரோக ஆண்கள். இவர்கள் மிக மிக அபாயகரமானவர்கள். இவர்களை கூட இருந்து குழி பறிப்பவர்கள் என்று சொல்லலாம். பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். இவர்கள் கண் எதிரே பணம், பொருள்  மட்டுமே தெரியுமே தவிர, அதற்குரிய ஆள் யார், எவர் என்று சுத்தமாக தெரியாது. அண்டிப் பிழைத்து துரோகம் செய்பவர்கள்.
 • பழி வாங்கும் ஆண்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தாங்கிக் கொள்ளும் மன வலிமை படைத்த ஆண்கள்,  அதை அப்படியே மனதில் கொண்டு நிச்சயம் பழி வாங்கி விடுவர். "அடிபட்ட பாம்பு கொத்தம விடாது" என்ற ஆண்கள் இவர்கள். பழி வாங்கும் நேரம் வரும் வரை, தனது வருத்தங்களை நன்கு ஜீரணித்துக் கொண்டே இருப்பார்கள். நிறைய திட்டமிடுவார்கள். அந்த நேரம் வருகின்ற போது, இவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியாது. துரோகம் செய்தவன் மட்டுமே இலக்கு. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. வஞ்சம் தீர்த்து விடுவார்கள்.
 • குத்தி விடும் ஆண்கள். இதை மட்டும் ஒரு தனிப் பதிவாக அடுத்த பதிவில் சொல்கின்றேன். இந்த குணாதிசியத்தை பெற்ற ஆண்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே இதற்கு ஒரு தனிப்பதிவு அவசியம்.
இப்படி இன்னும் எத்தனையோ வகையான ஆண்கள் உள்ளனர். எல்லோரும்  கிரக வலிமை, கட்டங்கள், பார்வைகள் காரணமாக தனி குணாதிசியத்தை பெறுகின்றார்கள் அல்லது  மாற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். 

வழக்கம் போல், தெரிய வைக்கப்பட்ட வரை எழுதி இருக்கின்றேன். ஏதாவது  குத்தம் குறை இருந்த சொல்லுங்க....!

16 May, 2013

பல்வேறு பெண்களின் ராசி பலன்கள் !


ஜோதிட ஆய்வு மற்றும் பலன் பற்றிய வலைப்பதிவுகளை நான் தொடர்ந்து வாசிப்பது வழக்கம். தொழில்ரீதியான நிறைய பதிவர்கள் மிக நன்றாக, துல்லியமாக எழுதுகிறார்கள்.

அந்த வகையில் பெண்களுக்கான ஜோதிடக் கட்டங்களில் இன்னென்ன கிரகங்கள் இருந்தால், அல்லது பார்வை இருந்தால் இந்தெந்த பலன்கள் ஏற்படும் அல்லது அப்பெண்ணின் குணாதிசியம் இப்படி இருக்கும் என்றெல்லாம் வாசித்துள்ளேன். அதுபோலவே ஒரு ஆணின் வருமானம், புகழ், குணாதிசியம் எப்படி இருக்கும் என்றும் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.

அவற்றின் சாறை பிழிந்து எடுத்தால் பின்வரும் பொதுக் கருத்துகள் மனதில் உருவாகின்றன. 

1. சில பெண்கள் பொதுவாகவே நல்ல அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தாய் வீட்டில் இருக்கும்போதும் சரி, திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகும் சரி இரண்டு பக்கமும் நற்பலன்களை வழங்குவார்கள்.

2. சில பெண்கள் தங்கள் தாய் வீட்டில் இருக்கும் வரை, தங்கள் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, தங்கள் நடத்தை அல்லது பழக்க வழக்கம் அல்லது செயல்பாடு காரணமாக  தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ கசக்கிப் பிழிந்து கொண்டிருப்பார்கள். இதனால் வறுமை, வெறுமை, பிரச்சனை அவர்கள் குடும்பத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும். புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து தானும் சிக்கலில் சிக்கி, பெற்றோர்களையும் அதில் சிக்க வைப்பது. அவர்களும் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அவளுக்கு ஒரு திருமணம் முடித்து அனுப்பி விடுவது உகந்தது என்ற நிலைப்பாடு அவர்களுக்கு சிறந்ததாக தெரியும்.  அச்சமயம் பின்வரும் பலன்கள் தோன்றுகின்றன.

 • தாய் வீட்டினரை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த அப்பெண்ணுக்கு திருமணம் முடித்த பிறகு, அத்தாய் வீட்டினரின் வறுமையும், வெறுமையும் நீங்கி சுபிட்சம் ஏற்படும். நல்ல முன்னேற்றம் தோன்றும். 'அப்பாடா' என்ற மன நிம்மதி ஏற்படும். (இந்த பலனை, "எல்லாம் மாப்பிள்ளை வந்த நேரம்" என்று பெண்ணின் பெற்றோர்கள் சொல்லிக் கொள்வதில்லை)
 • தாய் வீட்டினரை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது இரண்டு பலன்கள் தோன்றுகின்றன. (அ) புகுந்த வீட்டின் பெருமையை உயர்த்துகிறாள் அல்லது அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் ஏற்படுகின்றது. இதனால் அவளையும் புகுந்த வீட்டினர் நன்றாக கவனித்து, சிறந்த அந்தஸ்துடன் மகிழ்ச்சியோடு வைத்திருக்கின்றார்கள்; அல்லது  (ஆ) தாய் வீட்டினரை கசக்கியது போலவே புகுந்த வீட்டினரையும் கசக்குகிறாள். நன்றாக இருந்த அவர்கள் நிலையை தாழ்த்துகிறாள். தன்னை அறியாமல் தனக்குள் உள்ள கிரக சுபாவம் காரணமாக தான் உயர்ந்தவள் என்று காட்ட, தனது பிழைகளுக்கு புகுந்த வீட்டினர் மீது பழி போடுகிறாள். எப்போது, எப்படி, எதில் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்து சிறுமைப்படுத்துவது. இதனால் வேண்டாத நிகழ்வுகள் தோன்றுகின்றன. நிம்மதி மறைந்து விடுகின்றது.இந்நிலைப்பாடு மாப்பிள்ளையின் ஜாதகம் வலுவாக இருந்தால் அல்லது அவருக்கு சமாதனம் செய்து கொள்ளும் பக்குவத்தை கிரகம் வழங்கி இருந்தால், ஓரளவு கட்டுக்குள் அடங்குகின்றது. இல்லாவிட்டால் இரண்டு வீட்டினருக்கும் மிகச்சிரமம்தான். 
 • புகுந்த வீட்டினரை கசக்கும் பலன் கொண்ட பெண்ணால் அங்கு தானும் நிம்மதியாக இருக்க முடியாது. மற்றவர்களையும் நிம்மதியாக வைத்திருக்க முடியாது. எனவே சண்டை, சச்சரவு தோன்றுகிறது. முடிவு ? அப்பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்து விடுகின்றாள்  அல்லது அவ்வாறு வரும்படி ஆக்கப்படுகின்றாள். தற்காலிகமாக என்றால் தவறில்லை. நிரந்தரமாக என்றால், அப்பெண்ணின் இலக்கின கிரக அமைப்பு காரணமாக அவரது மாறாத சுபாவத்தால் மீண்டும் தனது தாய் வீட்டினரை கசக்க ஆரம்பிக்கிறாள். அதாவது தன்னுடன் இருப்பவர்களை அல்லது வாழ்பவர்களை எதன் பொருட்டாவது கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அப்படிப்பட்ட பெண்களின் உள்ளார்ந்த அம்சம். 
3. அடுத்து வசதியாக, நல்ல நிலையில் இருக்கும் தாய் வீட்டினர், பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பிறகு வறுமைக்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை நோய் நொடி தாக்கும். விபத்து, அகால மரணம் ஏற்படும். தொழிலில் திடீர் நட்டம் ஏற்படும். முன்னேற்றம் தடைபடும். அதாவது அப்பெண் தனது தாய் வீட்டினருக்கு ஒரு கவசமாக இருந்து வந்துள்ளாள் என்று சொல்லலாம். புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு, அங்கிருக்கும் சிரமச் சூழல்கள் மறையும் பலன் ஏற்படும். புகுந்த வீட்டில் இன்றோ, நாளையோ என்று சாகக் கிடந்தவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நன்கு நடமாட ஆரம்பிப்பார். புகுந்த வீட்டு உறவு ஒன்று மயிரிழையில் உயிர் தப்பும். செல்வம், செல்வாக்கு பெருகும்.  'அவ குத்து விளக்கு மாதிரி... எல்லாம் அவ வந்த நேரம்' என்று புகுந்த வீட்டினர் பாராட்டுவர். தாம்பத்தியம் நன்கு விரிந்து கொத்தாக மலரும்.
4. திருமண வாழ்வில் கள்ள உறவு இருவருக்கும் பொது. தாய் வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி செல்வம், செல்வாக்கு, வசதி அபரீதமாக இருக்கும். இந்த நிலையில் கிரக அமைப்பு அல்லது ஜாதக சேர்க்கை காரணமாக ஒரு விபரீதம் ஏற்படுகின்றது. அப்பெண்ணால் சரியான சந்தோசத்தை கணவனுக்கு வழங்க முடியாத காரணத்தால், கணவன் வெறுப்புக்கு உள்ளாக்கப்படுகின்றான். அல்லது படுக்கையில் அதீத  சந்தோசத்தை எதிர்பார்ப்பதாலும், அதை வழங்க முடியாமல் கணவன் தனக்குத் தானே வெறுப்படைகின்றான். அதீத சந்தோசம் எதிர்பார்க்கும் பெண், தனது தேவை பூர்த்தி ஆகவில்லையென்றால் தகுந்த வேற்றிட தொடர்பு கொள்கின்றாள். இது கணவனுக்கு எதிராக சதி செய்யும் அளவுக்கும்  சென்று விடுகின்றது. கணவன் உயிருடன் இருக்கும் வரை கள்ள உறவு நல்ல உறவாக முடியாது என்று கூட்டு சேர்ந்து கொண்டு அவரை ஒரு வழி ஆக்குவதுமுண்டு. இந்த நிலைப்பாட்டிற்கு கணவனின் ராசிக் கட்டங்களும் விதிவிலக்கல்ல.

5. சில பெண்களின் ஜாதக அமைப்புகள், அவர்களை பெரும் செலவாளிகளாக காட்டும். ஊதாரிகளாக இருப்பர். தங்கள் சுயநல செலவுக்கு எதுவும் செய்யத் தயங்காத கிரக வலிமை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு தங்களது இந்த குணாதிசியம் காரணமாகவே நிறைய சிக்கல்கள் தோன்றும். தன்னுடைய மண வாழ்வை பணத்திற்காக பணயம் வைப்பர். பிரிந்து சென்று கணவன் குடும்பத்தினர் மீது வழக்கிட்டு பணம் பார்ப்பர்.  மீண்டும் மறுமணம் செய்து கொள்வர். இது தொடர் கதையாகவும் நீளும். மிரட்டுவது, பிளாக் மெயில் செய்வது, ரவுடிகள் தொடர்பு ஆகியன இவர்களுக்கு வெகு சாதாரணமாக அமையும். இந்த அம்சத்துடன் மறுமண ஜாதக அமைப்பு கொண்ட பெண்கள், இளமையாகவே வெகு காலத்துக்கு  காட்சியளிப்பர்.

6. இன்னும் சில பெண்கள் என்ன செய்தாலும் திருப்தி அடையாத ஜாதக அமைப்பை கொண்டிருப்பர். கேட்டதை செய்து கொடுத்ததும், 'என்ன பண்ணிட்டீங்க எனக்கு நீங்க..?' என்று கேள்வி கேட்டே நோகடிப்பர். எல்லாவற்றிலும் குற்றம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பர். அவர்களுக்கு என்ன வேண்டும், எதை செய்தால் திருப்தி அடைவர் என்று புரிந்து கொள்ளவே முடியாது. இது வாய் விட்டு பேசி இம்சை செய்ய வைக்கும் கிரக அமைப்பு.
7. வேறு சில பெண்கள் பேச மடந்தைகளாக இருந்து மெல்ல மெல்ல திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பர். தங்கள் சிந்தனைகளை தாங்களே நிறைவேற்றாமல் மற்றவர்களை கொண்டு நிறைவேற்ற வைப்பார்கள். 
8. இந்து திருமண சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்கின்றது. ஒரு ஆண் தனது மனைவி தவிர மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்தால் அவளை ஆசை நாயகி என்று அல்லது வேறு பெயரால் சட்டம் அழைக்கின்றது. அதே ஒரு பெண் தனது கணவன் தவிர, மற்றொரு ஆணுடனும் தொடர்பில் இருந்தால் அவளுக்கு இன்னொரு விதமான அவப்பெயர் ஏற்படுகின்றது. இங்கு சட்டமும், சமுதாயமும் பெண்ணுக்குத்தான் ஒரு அவப்பெயரை கொடுக்கின்றது. ஆசை நாயகன் என்றோ, வைப்பன் என்றோ சொல்வதில்லை. அதாவது புனித பந்தம், சட்ட முரணான பந்தமாக உள்ளது. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் ஜாதகம் கொண்ட பெண்களும் இருக்கவே செய்கின்றார்கள். இவர்கள் எப்படி தங்கள் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாலும், முடியாது. இவர்கள் பேசினாலே ஆண்கள் வசியமாகி விடுவர். வசியமான ஆணை தங்கள் எல்லா காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முயல்வர். 
9. இறுதியாக நல்லவள் போல பாசாங்கு அல்லது நடித்து சாதிக்கும் பெண்கள். இப்படி போலிப் பாசாங்கு செய்வது அல்லது அப்பாவி போல நடிப்பது  இவர்களுக்கு கை வந்த கலையாக, ஜாதகக் கட்டங்கள் அமைத்து விடுகின்றன. காரியத்தை சாதிப்பார்கள், கழுவும் மீனில் நழுவும் மீனாக. ஆனால் செய்வது பாசாங்கு என்று எதிராளி தெரிந்து கொண்டால், தொடர்ந்து பாசாங்கு செய்ய முடியாமல் முழிக்கவும் செய்வார்கள். இனி காரியம் நடக்காது அல்லது சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்து கொண்டால், உடனே இடத்தை காலி செய்து  விடுவார்கள். 
தெரிய வைக்கப்பட்ட வரை பொதுவாக எழுதி இருக்கின்றேன். ஏதாவது குத்தம் குறை இருந்தா சொல்லுங்க ...! 


Related Posts Plugin for WordPress, Blogger...