என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

20 January, 2013

நெஞ்சம் மறப்பதில்லை ....!

"நான் இ.பி.கோ.-விற்கு பயப்படவில்லை. ப.பி.கோ.-விற்கு பயப்படுகின்றேன். அதாவது 'பகவான் பிரசிஜர் கோட்'-க்கு பயப்படுகின்றேன்." - கவிஞர்  கண்ணதாசன்.

தனது புத்தகம் ஒன்றில் கவியரசு எழுதிய இந்த வரிகளை முன் எப்போதோ படித்த நியாபகம். எவ்வளவு ஆழமான சிந்தனை, வேடிக்கையான வார்த்தை ஜாலங்களில்.

ப.பி.கோ.-விற்கு பயப்பட்டு விட்டால், பிறகு நாட்டில் இ.பி.கோ., சி.பி.கோ., (சிவில் பிரசிஜர் கோட்), சிஆர். பி.கோ. (கிரிமினல் பிரசிஜர் கோட்) ஆகிய சட்டங்களுக்கு வேலை இல்லை என்பது உண்மைதானே ?

எல்லாவிதமான உணர்வுகளையும் தனது பாடல்களில் காட்டியவர் கண்ணதாசன். அவரது பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்கள் எத்தனையோ? உடலை வருடும் தென்றல் காற்றாய் மனதை தழுவும் அவரது மெல்லிசை பாடல் வரிகளை இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆயிரம் அர்த்தங்கள் அவற்றில் மென்மையாக உறங்கிக் கொண்டிருக்கும்.

"நெஞ்சில் ஒரு ஆலயம்" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மிக அருமையான பாடல் வரிகளை பாருங்கள்,-

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை;
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை.
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே;
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே."

நமது வாழ்வில் நினைப்பது எல்லாமே நடந்து விடுகின்றதா..? சத்தியமாக கிடையாது. ஏதோ "காக்கை உட்கார பனம் பழம் விழுந்து விட்டால்" உடனே "நான் அப்போவே சொன்னேனில்லே .... இது நடந்தே தீருமின்னு" என்று மார் தட்டிக் கொள்கின்றோம். நடக்காது போனால், "சாமி எப்படியாவது முடிச்சு வையப்பா .." என்று கடவுளிடம் கற்பூரம் காட்டுகின்றோம். அதுபோல  முடிந்து போன கசப்பான, வேதனையான நிகழ்வுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்து ஆக வேண்டியதை யார் பார்ப்பது? நாம்தானே பார்த்தாக வேண்டும் ? மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே செயல் சரியாக நடைபெறும்.

தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், "வாழ்வில் நாளை நடப்பது உனக்கு தெரியுமா ?" என்றொரு கேள்வியை கேட்டு பதிலும் சொல்கின்றார் கவிஞர்.

"எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை... இதுதான் பயணம்...என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறிவரும்; பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும்"

இதோ அந்தப் பாடலை உங்களுக்காக போடுகின்றேன். எத்தனை முறை கேட்டிருந்தாலும் மீண்டும் ஒரு முறை கேட்டு சாந்தமடையுங்கள்.


சில சமயம் நமக்கு ஏற்படும் இழப்புகள் மிகப் பெரிதாக இருக்கும். நம்மை நிறையவே தாக்கி இருக்கும். அதை இலகுவாக எடுத்துக் கொள்ள கவிஞர் கண்ணதாசன் 'பாலும் பழமும்' படத்தில் அருமையான வரிகளை தருகிறார்."பாத கணிக்கை"-யில்,

யாரெல்லாம் எது வரை வருவார்கள் 
என்று அருமையான விளக்கம் கூறி விட்டு,

"சென்றவனை கேட்டால், 
வந்து விடு என்பான். 
வந்தவனைக் கேட்டால் 
சென்று விடு என்பான்"

என்ற வரிகள் எவ்வளவு சிந்திக்க வைக்கின்றன.


இப்படி எத்தனையோ பாடல்கள். எல்லாம் சொல்ல ஒரு பதிவு போதாது ! அவர் எழுதிய 10 பாகங்கள் கொண்ட 'அர்த்தமுள்ள இந்து மதம்' உண்மையிலேயே அர்த்தமுள்ளவை. எழுதிய கவிதைகள் பல ஆயிரம். 'மன வாசம்', 'வனவாசம்' ஆகிய புத்தகங்களில் தனது சுய சரிதையை அவர் கூறுகின்றார். பத்திரிகை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், அரசியல்வாதி உள்ளிட்ட பல்வேறு முகங்களை தன்னகத்தே கொண்டவர்.  எல்லாப் பழக்கமும் கொண்ட அவர், சோதனை மற்றும்  வேதனைகளுக்கு நடுவே சாதனை படைத்தவர்.

பார்வதி, பொன்னழகி, வள்ளியம்மை என்ற மூன்று மனைவிகளையும், 9 மகன்களையும், 5 மகள்களையும்  கொண்ட அவர் காரைக்குடி அருகே 'சிறுகூடல்பட்டி' என்ற சிற்றூரில் பிறந்தவர். அங்கு அவர் பிறந்த வீடு இன்று நினைவு இல்லமாக உள்ளது. அண்மையில் அந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு வந்ததில், ஒரு மிகப் பெரிய கவிஞன் பிறந்து, சுவாசித்து வாழ்ந்த  வீட்டில் எனது சுவாசமும் கலந்தது என்று பெருமை கொண்டேன்.


கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் நெஞ்சம் மறப்பதில்லை...!

11 comments:

Anonymous said...

சகாப்தக் கலைஞ்சனைப் பற்றியப் பதிவு அருமையோ அருமை.
தத்துவப்பாடல்கள் தான் மிகப் பிடிக்குமோ ?

Advocate P.R.Jayarajan said...

வருகைக்கு நன்றி சகோதரி...

கண்ணதாசன் எல்லாவிதமான உணர்வுகளையும் தனது பாடல்களில் வெளிப்படுத்தி இருந்தாலும், வாழ்க்கைத் தத்துவங்கள் மிளிரும் பாடல்கள் பல்வேறு சோதனையான சூழல்களில் நம்பிக்கையூட்டும்.

Ramani said...

ஆழமான சிந்தனையுடன் கூடிய அருமையான பதிவு
தத்துவப்பாடல்கள் என்றால் அது கண்ணதாசன் பாடல்கள்தான்
அதிலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் காலம் வென்றவை
அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

சேக்கனா M. நிஜாம் said...

கவிஞரைப் பற்றிய நினைவூட்டல்லுக்கு நன்றி

தொடர வாழ்த்துகள்...

Advocate P.R.Jayarajan said...

@ Ramani said...

//அதிலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் காலம் வென்றவை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Advocate P.R.Jayarajan said...

@ சேக்கனா M. நிஜாம் said...

//கவிஞரைப் பற்றிய நினைவூட்டல்லுக்கு நன்றி//

நன்றி திரு சேக்கனா M. நிஜாம்
அவரது பாடல்கள் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன...

ரமேஷ் வெங்கடபதி said...

கண்ணதாசன்..அனுமானக் கவிஞன் அல்ல..அனுபவக் கவிஞர் !

அனுபவங்களின் தாக்கம்..அந்த மகாக்கவியை..நடுவயதிலேயே இயற்கையாக்கிவிட்டது..!

அவர் வாழ்ந்த காலத்தில்..நாமும் சிலகாலம் வாழ்ந்தோம் என்பதே..நமக்குப் பெருமை !

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...
//அனுமானக் கவிஞன் அல்ல..அனுபவக் கவிஞர் ! //

பொருத்தமான வரிகள் ரம்மி சார்..

Advocate P.R.Jayarajan said...

//அனுபவங்களின் தாக்கம்..அந்த மகாக்கவியை..நடுவயதிலேயே இயற்கையாக்கிவிட்டது..!//

பல சிறந்தவற்றை உலகம் பெற சிலருக்கு இப்படி அனுபவங்களை ஆண்டவன் ஏற்படுத்துகின்றான் என்று நான் கருதுகின்றேன்... இது சரியா சார்..?

Advocate P.R.Jayarajan said...

//அவர் வாழ்ந்த காலத்தில்..நாமும் சிலகாலம் வாழ்ந்தோம் என்பதே..நமக்குப் பெருமை !//

நிச்சயம் பெருமை சார்... வருக்கைக்கும், நாடிதுடிப்பான கருத்து பதிவிடலுக்கும் நன்றி சார்...

இராஜராஜேஸ்வரி said...

ஆழமான சிந்தனை, வேடிக்கையான வார்த்தை ஜாலங்களில்.

அருமையான பகிர்வுகள் .. பாராட்டுக்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...