என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

16 May, 2013

பல்வேறு பெண்களின் ராசி பலன்கள் !


ஜோதிட ஆய்வு மற்றும் பலன் பற்றிய வலைப்பதிவுகளை நான் தொடர்ந்து வாசிப்பது வழக்கம். தொழில்ரீதியான நிறைய பதிவர்கள் மிக நன்றாக, துல்லியமாக எழுதுகிறார்கள்.

அந்த வகையில் பெண்களுக்கான ஜோதிடக் கட்டங்களில் இன்னென்ன கிரகங்கள் இருந்தால், அல்லது பார்வை இருந்தால் இந்தெந்த பலன்கள் ஏற்படும் அல்லது அப்பெண்ணின் குணாதிசியம் இப்படி இருக்கும் என்றெல்லாம் வாசித்துள்ளேன். அதுபோலவே ஒரு ஆணின் வருமானம், புகழ், குணாதிசியம் எப்படி இருக்கும் என்றும் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.

அவற்றின் சாறை பிழிந்து எடுத்தால் பின்வரும் பொதுக் கருத்துகள் மனதில் உருவாகின்றன. 

1. சில பெண்கள் பொதுவாகவே நல்ல அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தாய் வீட்டில் இருக்கும்போதும் சரி, திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகும் சரி இரண்டு பக்கமும் நற்பலன்களை வழங்குவார்கள்.

2. சில பெண்கள் தங்கள் தாய் வீட்டில் இருக்கும் வரை, தங்கள் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, தங்கள் நடத்தை அல்லது பழக்க வழக்கம் அல்லது செயல்பாடு காரணமாக  தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ கசக்கிப் பிழிந்து கொண்டிருப்பார்கள். இதனால் வறுமை, வெறுமை, பிரச்சனை அவர்கள் குடும்பத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும். புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து தானும் சிக்கலில் சிக்கி, பெற்றோர்களையும் அதில் சிக்க வைப்பது. அவர்களும் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அவளுக்கு ஒரு திருமணம் முடித்து அனுப்பி விடுவது உகந்தது என்ற நிலைப்பாடு அவர்களுக்கு சிறந்ததாக தெரியும்.  அச்சமயம் பின்வரும் பலன்கள் தோன்றுகின்றன.

  • தாய் வீட்டினரை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த அப்பெண்ணுக்கு திருமணம் முடித்த பிறகு, அத்தாய் வீட்டினரின் வறுமையும், வெறுமையும் நீங்கி சுபிட்சம் ஏற்படும். நல்ல முன்னேற்றம் தோன்றும். 'அப்பாடா' என்ற மன நிம்மதி ஏற்படும். (இந்த பலனை, "எல்லாம் மாப்பிள்ளை வந்த நேரம்" என்று பெண்ணின் பெற்றோர்கள் சொல்லிக் கொள்வதில்லை)
  • தாய் வீட்டினரை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது இரண்டு பலன்கள் தோன்றுகின்றன. (அ) புகுந்த வீட்டின் பெருமையை உயர்த்துகிறாள் அல்லது அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் ஏற்படுகின்றது. இதனால் அவளையும் புகுந்த வீட்டினர் நன்றாக கவனித்து, சிறந்த அந்தஸ்துடன் மகிழ்ச்சியோடு வைத்திருக்கின்றார்கள்; அல்லது  (ஆ) தாய் வீட்டினரை கசக்கியது போலவே புகுந்த வீட்டினரையும் கசக்குகிறாள். நன்றாக இருந்த அவர்கள் நிலையை தாழ்த்துகிறாள். தன்னை அறியாமல் தனக்குள் உள்ள கிரக சுபாவம் காரணமாக தான் உயர்ந்தவள் என்று காட்ட, தனது பிழைகளுக்கு புகுந்த வீட்டினர் மீது பழி போடுகிறாள். எப்போது, எப்படி, எதில் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்து சிறுமைப்படுத்துவது. இதனால் வேண்டாத நிகழ்வுகள் தோன்றுகின்றன. நிம்மதி மறைந்து விடுகின்றது.இந்நிலைப்பாடு மாப்பிள்ளையின் ஜாதகம் வலுவாக இருந்தால் அல்லது அவருக்கு சமாதனம் செய்து கொள்ளும் பக்குவத்தை கிரகம் வழங்கி இருந்தால், ஓரளவு கட்டுக்குள் அடங்குகின்றது. இல்லாவிட்டால் இரண்டு வீட்டினருக்கும் மிகச்சிரமம்தான். 
  • புகுந்த வீட்டினரை கசக்கும் பலன் கொண்ட பெண்ணால் அங்கு தானும் நிம்மதியாக இருக்க முடியாது. மற்றவர்களையும் நிம்மதியாக வைத்திருக்க முடியாது. எனவே சண்டை, சச்சரவு தோன்றுகிறது. முடிவு ? அப்பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்து விடுகின்றாள்  அல்லது அவ்வாறு வரும்படி ஆக்கப்படுகின்றாள். தற்காலிகமாக என்றால் தவறில்லை. நிரந்தரமாக என்றால், அப்பெண்ணின் இலக்கின கிரக அமைப்பு காரணமாக அவரது மாறாத சுபாவத்தால் மீண்டும் தனது தாய் வீட்டினரை கசக்க ஆரம்பிக்கிறாள். அதாவது தன்னுடன் இருப்பவர்களை அல்லது வாழ்பவர்களை எதன் பொருட்டாவது கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அப்படிப்பட்ட பெண்களின் உள்ளார்ந்த அம்சம். 
3. அடுத்து வசதியாக, நல்ல நிலையில் இருக்கும் தாய் வீட்டினர், பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பிறகு வறுமைக்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை நோய் நொடி தாக்கும். விபத்து, அகால மரணம் ஏற்படும். தொழிலில் திடீர் நட்டம் ஏற்படும். முன்னேற்றம் தடைபடும். அதாவது அப்பெண் தனது தாய் வீட்டினருக்கு ஒரு கவசமாக இருந்து வந்துள்ளாள் என்று சொல்லலாம். புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு, அங்கிருக்கும் சிரமச் சூழல்கள் மறையும் பலன் ஏற்படும். புகுந்த வீட்டில் இன்றோ, நாளையோ என்று சாகக் கிடந்தவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நன்கு நடமாட ஆரம்பிப்பார். புகுந்த வீட்டு உறவு ஒன்று மயிரிழையில் உயிர் தப்பும். செல்வம், செல்வாக்கு பெருகும்.  'அவ குத்து விளக்கு மாதிரி... எல்லாம் அவ வந்த நேரம்' என்று புகுந்த வீட்டினர் பாராட்டுவர். தாம்பத்தியம் நன்கு விரிந்து கொத்தாக மலரும்.
4. திருமண வாழ்வில் கள்ள உறவு இருவருக்கும் பொது. தாய் வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி செல்வம், செல்வாக்கு, வசதி அபரீதமாக இருக்கும். இந்த நிலையில் கிரக அமைப்பு அல்லது ஜாதக சேர்க்கை காரணமாக ஒரு விபரீதம் ஏற்படுகின்றது. அப்பெண்ணால் சரியான சந்தோசத்தை கணவனுக்கு வழங்க முடியாத காரணத்தால், கணவன் வெறுப்புக்கு உள்ளாக்கப்படுகின்றான். அல்லது படுக்கையில் அதீத  சந்தோசத்தை எதிர்பார்ப்பதாலும், அதை வழங்க முடியாமல் கணவன் தனக்குத் தானே வெறுப்படைகின்றான். அதீத சந்தோசம் எதிர்பார்க்கும் பெண், தனது தேவை பூர்த்தி ஆகவில்லையென்றால் தகுந்த வேற்றிட தொடர்பு கொள்கின்றாள். இது கணவனுக்கு எதிராக சதி செய்யும் அளவுக்கும்  சென்று விடுகின்றது. கணவன் உயிருடன் இருக்கும் வரை கள்ள உறவு நல்ல உறவாக முடியாது என்று கூட்டு சேர்ந்து கொண்டு அவரை ஒரு வழி ஆக்குவதுமுண்டு. இந்த நிலைப்பாட்டிற்கு கணவனின் ராசிக் கட்டங்களும் விதிவிலக்கல்ல.

5. சில பெண்களின் ஜாதக அமைப்புகள், அவர்களை பெரும் செலவாளிகளாக காட்டும். ஊதாரிகளாக இருப்பர். தங்கள் சுயநல செலவுக்கு எதுவும் செய்யத் தயங்காத கிரக வலிமை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு தங்களது இந்த குணாதிசியம் காரணமாகவே நிறைய சிக்கல்கள் தோன்றும். தன்னுடைய மண வாழ்வை பணத்திற்காக பணயம் வைப்பர். பிரிந்து சென்று கணவன் குடும்பத்தினர் மீது வழக்கிட்டு பணம் பார்ப்பர்.  மீண்டும் மறுமணம் செய்து கொள்வர். இது தொடர் கதையாகவும் நீளும். மிரட்டுவது, பிளாக் மெயில் செய்வது, ரவுடிகள் தொடர்பு ஆகியன இவர்களுக்கு வெகு சாதாரணமாக அமையும். இந்த அம்சத்துடன் மறுமண ஜாதக அமைப்பு கொண்ட பெண்கள், இளமையாகவே வெகு காலத்துக்கு  காட்சியளிப்பர்.

6. இன்னும் சில பெண்கள் என்ன செய்தாலும் திருப்தி அடையாத ஜாதக அமைப்பை கொண்டிருப்பர். கேட்டதை செய்து கொடுத்ததும், 'என்ன பண்ணிட்டீங்க எனக்கு நீங்க..?' என்று கேள்வி கேட்டே நோகடிப்பர். எல்லாவற்றிலும் குற்றம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பர். அவர்களுக்கு என்ன வேண்டும், எதை செய்தால் திருப்தி அடைவர் என்று புரிந்து கொள்ளவே முடியாது. இது வாய் விட்டு பேசி இம்சை செய்ய வைக்கும் கிரக அமைப்பு.
7. வேறு சில பெண்கள் பேச மடந்தைகளாக இருந்து மெல்ல மெல்ல திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பர். தங்கள் சிந்தனைகளை தாங்களே நிறைவேற்றாமல் மற்றவர்களை கொண்டு நிறைவேற்ற வைப்பார்கள். 
8. இந்து திருமண சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்கின்றது. ஒரு ஆண் தனது மனைவி தவிர மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்தால் அவளை ஆசை நாயகி என்று அல்லது வேறு பெயரால் சட்டம் அழைக்கின்றது. அதே ஒரு பெண் தனது கணவன் தவிர, மற்றொரு ஆணுடனும் தொடர்பில் இருந்தால் அவளுக்கு இன்னொரு விதமான அவப்பெயர் ஏற்படுகின்றது. இங்கு சட்டமும், சமுதாயமும் பெண்ணுக்குத்தான் ஒரு அவப்பெயரை கொடுக்கின்றது. ஆசை நாயகன் என்றோ, வைப்பன் என்றோ சொல்வதில்லை. அதாவது புனித பந்தம், சட்ட முரணான பந்தமாக உள்ளது. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் ஜாதகம் கொண்ட பெண்களும் இருக்கவே செய்கின்றார்கள். இவர்கள் எப்படி தங்கள் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாலும், முடியாது. இவர்கள் பேசினாலே ஆண்கள் வசியமாகி விடுவர். வசியமான ஆணை தங்கள் எல்லா காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முயல்வர். 
9. இறுதியாக நல்லவள் போல பாசாங்கு அல்லது நடித்து சாதிக்கும் பெண்கள். இப்படி போலிப் பாசாங்கு செய்வது அல்லது அப்பாவி போல நடிப்பது  இவர்களுக்கு கை வந்த கலையாக, ஜாதகக் கட்டங்கள் அமைத்து விடுகின்றன. காரியத்தை சாதிப்பார்கள், கழுவும் மீனில் நழுவும் மீனாக. ஆனால் செய்வது பாசாங்கு என்று எதிராளி தெரிந்து கொண்டால், தொடர்ந்து பாசாங்கு செய்ய முடியாமல் முழிக்கவும் செய்வார்கள். இனி காரியம் நடக்காது அல்லது சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்து கொண்டால், உடனே இடத்தை காலி செய்து  விடுவார்கள். 
தெரிய வைக்கப்பட்ட வரை பொதுவாக எழுதி இருக்கின்றேன். ஏதாவது குத்தம் குறை இருந்தா சொல்லுங்க ...! 


3 comments:

இராஜராஜேஸ்வரி said...


"பல்வேறு பெண்களின் ராசி பலன்கள் !"

ஆராய்ச்சிப்பார்வை அருமை..!

ÁLVARO GÓMEZ CASTRO said...

Hello, I have been visiting your blog. ¡Congratulations for your work, good luck with your blog! I invite you to visit my blog about literature, philosophy and films:
http://vniversitas.over-blog.es

RAVIKUMAR said...

ஆராய்ச்சிப்பார்வை அருமை..!
++++

Related Posts Plugin for WordPress, Blogger...