என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

29 June, 2013

வெளிமாநில சட்டப் படிப்பு தமிழகத்தில் செல்லுமா...?


வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு அதாவது எல்எல்.பி. படித்தவர்கள் தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதையோ, அவ்வாறு தொழிலாற்றுவதையோ தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில், தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், கர்நாடகா மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவிப்பு அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம் கடந்த வியாழனன்று ஆணையிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவின் அடிப்படையில் மாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள், மைய சட்ட ஆணையம் ஆகியனவும் தரப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

மனுதாரர் ரமேஷ், "பள்ளிப்படிப்பை கூட முடித்திராத பலரும் தங்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொண்டுள்ளதன் மூலம் உயர்வான வழக்குரைஞர்களின் தொழில் மாசடைந்துள்ளது.ஆந்திரபிரதேஷ், கர்நாடகா மாநிலத்திலிருந்து எல்எல்.பி. பட்டம் பெற்றுள்ளவர்கள், தங்களை கட்டப்பஞ்சாயத்து மன்றங்கள், சட்ட விரோதமான ரியல்-எஸ்டேட் நடவடிக்கைகள், காவல்துறை-குற்றவாளிகள் தொடர்பு, இதர மலிவான தொழில் நடத்தைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்" என்று குறிப்பிடுகின்றார்.

மேலும், எல்எல்.பி. பட்டங்கள் வெளி மாநில பல்கலைக்கழகங்களால் விற்கப்படுவதாகவும் அவர் சாட்டுரைக்கின்றார். குறிப்பாக, கல்லூரிக்கு செல்லாமலேயே சட்டக்கல்விக்கான பட்டத்தை பெறுவதாகவும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுகளை எழுதுவதில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக முகவர்களோ, தரகர்களோ தேர்வு எழுதுவதாகவும், தரகர்களின் வாயிலாக போலியான சான்றிதழ்களை சமர்ப்பிப்பதன் மூலம் பெரும்பாலான எல்எல்.பி. பட்டங்கள் பெறப்படுவதாகவும், அவ்வாறு பெற்றவர்கள் தங்களை தமிழகத்தில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொண்டு வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்களாகி விடுகின்றனர் என்றும் அவர் சாட்டுரைக்கின்றார்.

"கடந்த 10லிருந்து 15 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சட்டத் தொழிலில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களில் பலர் கறை படிந்தவர்கள் என்றும், அவர்களது குற்றவியல் செயல்பாடுகள், தமிழ் நாட்டில் சட்டப்படிப்பு முடித்த வழக்குரைஞர்களின் தொழிலுக்கு இடர்பாடுகளை விளைவிக்கின்றன என்றும்" மனுதாரர் ரமேஷ் குறிப்பிடுகிறார்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள போலியான வழக்குரைஞர்களை கண்டறிய தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பெரு மன்றத்திற்கு ஏவுரைக்க வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் வெளி மாநிலங்களில் சட்டம் படித்த வழக்குரைஞர்களின் பதிவு குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கோருகின்றார்.

முன்னதாக ஏப்ரல், 13-ஆம் தேதியில் இந்தக் கோரிக்கையை வழக்குரைஞர் பெரு மன்றத்தின் தலைவருக்கு தாம்  அனுப்பியதாகவும், அது பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் வழக்குரைஞர் ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரரின் வாதத்தைக் கேட்டறிந்த மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் எதிர்மனுதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்ப ஆணையிட்டு, வழக்கை 10 தினங்களுக்கு ஒத்தி வைத்தார்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் போலிகளை கண்டிபிடிக்கட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

தகவல் பகிர்வுகளுக்கு நன்றிகள்.

Chellappa Yagyaswamy said...

ஒரு காலத்தில் பி.ஜி.எல்.படித்தால் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொள்ளும் நிலைமை இருந்தது. பல ஆண்டுகள் கழித்து அத்தகுதி நீக்கப்பட்டது. பி.எல். படித்தே ஆக வேண்டும் என்று ஆனது. தமிழ்நாட்டுக்கு வெளியில் அப்போது பி.எல்.என்ற படிப்பு இருக்கவில்லை. அதையே எல்.எல்.பி. என்று அழைத்தார்கள். எனவே இப்போது அதே படிப்பைத் தமிழ்நாட்டில் இகழ்வதன் காரணம் என்ன என்று தெரியவில்லை. உதாரணமாக மங்களூரில் நான் பல ஆண்டுகள் இருந்தேன். அங்குள்ள எல்.எல்.பி.படிப்பு, சென்னையிலுள்ள பி.எல். படிப்பை விட மிகவும் கௌரவமானது என்று உறுதியாகச் சொல்வேன்.
சென்னையைப் பொறுத்தவரை, சட்டக் கல்லூரியில் இடம் கிடைப்பதிலும், நியாயமாகத் தேர்வு எழுதி பாஸ் ஆவதிலும் பல சந்தேகங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் அரசியலும் பணமும் விளையாடுவதால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருபவர்களின் தகுதியைப்போலவே நமது சட்டக்கல்லூரிகளிலிருந்து வெளிவருவர்களைப் பற்றியும் நாம் அதிக நம்பிக்கை கொள்வதற்கில்லை என்பது என் அனுபவம்.

Related Posts Plugin for WordPress, Blogger...