என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

12 January, 2013

ஒட்டுக் கேட்பவர்களின் கவனத்திற்கு ...!


சில தினங்களுக்கு முன் ஒரு ஹிந்தி சேனலில் குறு நாடகம் ஒன்றை பார்த்தேன். ஒட்டுக் கேட்பது தொடர்பாக ஒரு முக்கிய கருத்தை அது வலியுறுத்துகிறது.

ஒருவர் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றார். அவருக்கு  தனது தாயை எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவு மனைவியையும் பிடிக்கும். அதாவது ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வேலை கிடையாது. ஒரே சமயத்தில் மனைவிக்கு நல்ல கணவன் என்றும்,  தாய்க்கு  நல்ல மகன் என்றும் பேர் வாங்குவது "நெருப்பற்றின் குறுக்கே மயி*ப் பாலம் கட்டி நடப்பதைப் போன்று.."


மாமியார் மருமகள் கருத்து பேதங்கள் எங்கும் இருப்பது.  அதுவும் ஒரே வீட்டில் வசித்தால் இது நிறையவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய தேவையில்லை. எனவே அவர் இந்த இருவரையும் மேலாண்மை செய்ய நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தார். எப்படி...?

தனது மனைவி மீது தனது தாய்க்கு கோபம் வரும் நேரத்தில், குறிப்பாக  மனைவி இல்லாத நேரத்தில் தனது தாயிடம், "அவ கிடக்கிறா.. விடும்மா.. அவ சுத்த சோம்பேறி... எதுக்கும் லாயக்கு இல்லாதவள்... என்ன இருந்தாலும் இந்த வயதிலும் உன் சுறுசுறுப்பு என்ன..? உன் சமையல் என்ன..?" என்று தனது தாயை புகழ்த்து பேசுவது. தாய்க்கு உச்சி குளிர்ந்து விடும் என்பதை மறுக்க முடியுமா..?

அதே போன்று, தனது மனைவியிடம், தாய் இல்லாத நேரத்தில், "எங்கம்மாவிற்கு வயசாச்சே தவிர கொஞ்சம் கூட புத்தி கிடையாது...நம்ம உயிரை எடுக்குது கிழடு... எங்கியாவது ஆசிரமத்திலே கொண்டு போய் விட்டுவிடலாம் போல இருக்கு" என்று தாயைப் பற்றி சலித்துக் கொள்வது. தன்னை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் இப்படி பேசுகிறாரே என்று நினைத்து மனைவி அவரை அப்படியே ஆசையுடன் கட்டிக் கொள்வாள்.

இருவருக்கும் சேலை, நகை போன்று ஏதாவது வாங்கும் போதும் இவ்வாறு ஏற்றியும்.. மட்டம் தட்டியும் பேசி நன்றாகவே மேலாண்மை செய்து வந்தார் அக்கணவர்.

பிரச்சனைகளை சமம் செய்து, அவர் நன்றாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இது ஒரு நாள் பூதாகரமாகி விட்டது. மனைவி வீட்டில் இல்லை என்று நினைத்து, தனது தாயிடம் மேற்கண்டவாறு மனைவியைப் பற்றி "புகழ்ந்து" பேசும் போது, மனைவி ஒட்டுக் கேட்டு விடுகிறாள். அதற்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறுதான் தனது மகன் தன்னிடமும் பேசி வந்துள்ளார் என்று தாய்க்கும் புரிந்து அவருக்கு ஏகப்பட்ட வருத்தம். நிலையை விளக்கி புரிய வைப்பதற்குள் கணவனுக்கு போதும்போதும் என்றாகி விட்டது.

குடும்பத்தில் ஒட்டுக் கேட்பது, வேவு பார்ப்பது மிகமிக கெட்ட பழக்கம்.

ஒருவர் மீது உள்ளபடியாகவே அக்கறை கொண்ட மற்றொருவர், இன்னொருவரிடம் பேசும் போது, சந்தர்ப்ப சூழல்களை அனுசரித்து ஏதாவது எதிர்நிலையாக பேசலாம். அதைப் போய் ஒட்டுக் கேட்டால், அல்லது அதை பெரிதாக நினைத்து ஏதும் முடிவெடுத்தால், நிறைய சிக்கல் தோன்றும்; நிம்மதி போய் விடும். 


ஒட்டுக் கேட்பது நல்லதல்ல. ஒரு குடும்பத்தில் தனது  மனைவிடம் பேச கணவனுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அது போல, தனது தாயிடம் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்ள மகனுக்கு லட்சம் விஷயமிருக்கும். அது போல ஒரு மகள் எந்த சங்கதியானாலும் தனது தாயிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வாள். இதை ஒட்டுக் கேட்கும் போது, அவ்வாறு கேட்பவரின் பேர் அதில் அடிபட்டால் அவர் நிம்மதி இழப்பர். அது போல ஒரு அப்பா தனது பிள்ளைகளிடம் தனித்தனியாக பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். அதை மற்ற பிள்ளைகள் ஒட்டுக் கேட்டால், விரிசல். இங்கு கவனிக்க வேண்டியது, உறவின் முக்கியத்துவமே தவிர, உதடுகள் பேசியதை அல்ல. இதை சம்பந்தப்பட்டவர்  உடனடியாக பேசித் தீர்த்து விட்டால் பிரச்சனை இல்லை. இல்லாது போனால், ஒட்டுக் கேட்டவரின் மனதில் பகை எண்ணம் தோன்றும். பழி வாங்கும் மனப்பான்மை மேலோங்கும். தொடர் பிரச்சனை ஆகி விடும்.

அதே நேரத்தில் இங்கே ஒரு 'டிஸ்கிளைமர்' பற்றியும் சொல்லியாக வேண்டும். "நாம் ஒருவருக்கு இன்னது (அதாவது அகட விகடமான, பிரச்சனைக்குரிய செயல்கள்) செய்தால், நம்மை பற்றி, சம்பந்தப்பட்ட அவர் தனக்கு நெருங்கிய மற்றொருவரிடம் என்ன பேசுவார் ...? (நன்றாகவா பேச முடியும்..? முன் எப்போதோ செய்தது கூட தொடர்புபடுத்தி உரையாடல் தொடரும்).. அதற்கு என்ன பதில் வரும்...? (ஆமாமா... அவர்/அவள் அப்படிதான்... என்கிட்டே கூட இப்படி நடந்துகிட்டார்/இப்படி பேசினார்.. என்று அம்மற்றொருவர்  தன பங்குக்கு ஏதாவது பேசி வைப்பார்)...  தவறான விமர்சனம் என்ன வரும்..? அதை எப்படி பயன்படுத்தி கொள்வது.. ? " என்று எண்ணத்தில் திட்டமிட்டு அச்செயலை செய்து, அவ்விருவர் தனியே இருக்கும் போது, 'ரெகார்டிங் டிவைஸ்' ஒளித்து வைத்து அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்வது... பின் அதை காட்டி பிளாக் மெயில் செய்வது..." போன்ற கிருமினாளிகளுக்கும் இந்த தலைப்புக்கும் வெகு தூரம்.

எனவே பொதுவாக ஒட்டுக் கேட்டால், ஒட்டுக் கேட்பவர் முதலில் கெட்டுப் போய் விடுவார். இந்த பழக்கம் உள்ளவர் இந்த போகியுடன் போக்கி, வளமாக வாழ வாழ்த்துகள்.

இந்த பதிவை உலகெங்கும் வாசிக்கும் அனைவருக்கும், அது போல பதிவுலக சக நண்பர்களுக்கும்  பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெ.

09 January, 2013

இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?

"செல்போன் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய பிரச்சனைகள் வருகின்றன" என்பது நாம் அறிந்தது. ஆனால் இது உண்மையா, அல்லது வெறும் சங்கதியா என்பதில் நமக்கு அய்யப்பாடு இருந்து வந்தது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. தற்போது இது உண்மைதான் என்று உலக சுகாதார அமைப்பு தனது நெடுநாள் ஆய்வின் முடிவில் கூறியுள்ளது. 

"ரேடியோ பிரிகுவென்சி எலக்ட்ரோ மக்னடிக் பில்டு" [Radiofrequency electromagnetic field (EMF)]  - உங்களை செல்போனில் யாரேனும் அழைத்தவுடன் இந்த மின்காந்த பகுதி அந்த செல் போன் கருவியை சுற்றிலும் உருவாகி விடுகிறது. அது போல செல்போன் கோபுர இடத்திற்கு அருகே இந்த மின் காந்த பகுதி எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது. அதாவது இதை மின்காந்த கதிரலை வீச்சு என்றும் சொல்லலாம். இந்தக் கதிர் வீச்சு மனிதர்களுக்கு மூளைப் புற்று நோய் மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட உடல் பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கலாம்  என்று உலகளவில் நடந்த மாநாட்டில் கூறப்பட்டது.

புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் உட்பட மொத்தம் பத்து நாடுகளை சேர்ந்த 29 ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட உலக மாநாடு ஒன்றில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாத முடிவில், செல்போனை முதல் சில நிமிடங்கள் பயன்படுத்தும் போது நமது உடலில் சில விளைவுகள் உடனடியாக நிகழ்கின்றன என்றும், செல்போன் கோபுரத்தின் அருகில் நிற்கும் போது இந்த காந்தக் கதிர் வீச்சுக்கு நமது உடல் முழுவதும் உட்படுகிறது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இது கொடுத்த அறிக்கையில், இப்படிப்பட்ட கதிர்வீச்சின் காரணமாக நமது உடலில் ஏற்படும் அபாய விளைவுகள், நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதால் அதிகரிக்கின்றன என்றும், இது நமது உடலின் இயல்பான போக்கில் மூக்கை நுழைக்கிறது என்றும், சேதமான DNA செல்களை நமது உடல் சரி செய்து கொள்வதை தடுக்கிறது என்றும், நமது உடலுக்கு இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது.

செல்போன் கதிர் வீச்சின் காரணமாக ஆணின் விந்தணுக்கள் சேதமாகின்றன என்றும், இது செல்போனில் பேசுவதால் மட்டுமல்லாமல், செல்போனை இடுப்பில் அல்லது இடுப்பு கச்சையில் கட்டிக்கொண்டு இருக்கும் ஆண் மகனின் விந்தணுவை உடனடியாக குறி வைக்கின்றது என்றும், மேலும் கணினியை மடியில் வைத்துக் கொண்டு கம்பியில்லா இணையத்தில் (அதாவது Data Card) உலா வரும் ஆண் நண்பர்களை அதிகம் பதம் பார்க்கின்றது என்றும், இந்த அறிக்கையின் துணை ஆசிரியர் சிண்டி சகே குறிப்பிடுகிறார்.


இந்த ஆய்வில் கலந்து கொண்ட சுவிடன் ஓரிப்ரோ பல்கலைக்கழத்தை சேர்ந்த லேன்னர்ட் ஹர்டெல் என்ற  மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகையில், "செல்போன் பயன்படுத்தவதால், 'Glioma' (தீவிரமான மூளைக் கட்டி) என்ற நோய் ஏற்படுவதாகவும், 'Acoustic Neuroma' (காது மற்றும் மூளையை இணைக்கும் நரம்புகளில் மெல்ல வளரும் கட்டி) என்ற மற்றொரு நோய் மெல்ல உருவாவதாகவும்" கருத்துரைக்கிறார். மேலும், "தற்போது இருக்கும் போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்றும்" இவர் குறை கூறுகிறார்.

நமது இந்திய நாட்டைப் பொருத்த வரை, செல் போன் கோபுர கதிர் வீச்சு பரவும் எல்லை முன்பு 9.2 w/m2 ஆக இருந்தது. இது இந்த தொடர் உடல் ஆரோக்கிய பிரச்சனை காரணமாக 0.92 w/m2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செல்போனை பயன்படுத்தும் போது கதிர் வீச்சை நமது உடல் இழுத்துக் கொள்ளும் அளவின் வீதம் 2 யூனிட்டிலிருந்து 1.6 watt per kg ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய தொலைதொடர்புத் துறையின் தொழில் நுட்ப ஆலோசகர் ஆர்.கே.பட்நகர் தெரிவித்துள்ளார். மேலும் செல்போனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நமது தொலைத்தொடர்புத் துறை பொது மக்களுக்கு விடுத்த அறிக்கையில், (1) நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும். (2) செல்போனை நேரடியாக காதில் வைத்துக் கொள்வதை தவிர்த்து, 'headset' பயன்படுத்த வேண்டும், என்று கூறியுள்ளது. 

இதய நோய் உள்ளவர்கள் குறிப்பாக இதயத்தில் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகள் செல்போனை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று Dr Ashok Seth என்ற மருத்துவர் கூறுகின்றார்.

இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?
இடுப்புக்கு அருகே செல்போனை கட்டிக் கொள்வீர்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...