என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

14 June, 2013

இன்று என்னுடைய பிறந்த நாள்...

இன்று  என்னுடைய பிறந்த நாள்...

காலம் வேகமாக போய் விட்டது. என்ன செய்தேன்..? எப்படி வாழ்ந்தேன்...? எந்த  அளவுக்கு மற்றவர்கள் விரும்புமாறு வாழ்ந்தேன்? நான் என்னை விரும்பி வாழ்ந்தேனா?

எல்லாம் கேள்விகள்....????


எனினும், என்னைப் பொருத்தவரை யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. யாரையும் வஞ்சிக்கவில்லை. துரோகம் செய்யவில்லை. நேர்மைக்கு சோதனை வந்தாலும் நிதானம் கடைப்பிடித்திருக்கிறேன். எனது சட்ட அறிவை மற்றவர் வாழவே பயன்படுத்தியுள்ளேன். மேலாக 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே.." என்றே வாழ்ந்து வந்திருக்கின்றேன். அதை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன். தொடர்ந்து அவ்வாறு வாழ மன வலிமை, திட்பம் வேண்டும் என வேண்டுகின்றேன்; ஆண்டவனை வணங்குகின்றேன். ஆனாலும், விதி வசம் அகப்பட்ட வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் என்றும் தோற்றுப் போனதில்லை என்றே கருதுகின்றேன்.


அண்மையில் ஒரு அம்மையார் மேடைப் பேச்சு ஒன்றின் போது, "நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும்" என்று பேசியதை செய்தித் தாளில் வாசித்தேன். மனது முழுக்க தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் எப்படி அது நடக்கும்? எனவே வேண்டிய அடிப்படை யாதெனில், நல்ல எண்ணங்கள். தொடர்ந்து நல்ல செயல்கள். நிச்சயம் நல்லது தானாக நடக்கும் என்று நம்புகின்றேன்.குற்றவியல் சட்டத்தில் ஒரு குற்ற செயலுக்கு குற்ற மனம் (mens rea) இருந்ததா என்பதை கவனிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. எனவே ஒன்று குற்ற செயலா (actus reus) என்று ஆராயும் முன்பு குற்ற மனம் இருந்ததா என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது. குற்ற மனமில்லாச் செயல் குற்றமாவதில்லை [actus non facit reum nisi mens sit rea, which means: "an act does not make a person guilty unless (their) mind is also guilty] என்பது சட்டக் கோட்பாடு. எனவே குற்ற மனமில்லாமல் வாழ்வது சிறந்த ஒன்று.


கடந்த கால பிறந்த நாட்களில் இருந்து தொடங்கிய வாழ்க்கையில் நிறைய சவால்கள், நிறைய நண்பர்கள், அதே நேரத்தில் நண்பர்கள் போர்வையில் எதிரிகள், சுயநலவாதிகளின் சொரூபங்கள், பிரச்சனைகள், சூழ்ச்சிகள், சமாளிப்புகள் என எல்லாவற்றையும் மிக மிக பொறுமையுடன் பார்த்து வருகின்றேன். எல்லாம் காலம் கற்றுத் தரும் பாடம். சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றேன்.

நிறைய பேர்களை அடையாளம் கண்டு கொண்டேன். விலகி இருக்கின்றேன். இது வரை வாழ்ந்ததோ, கற்றுக் கொண்டதோ ஏதுமில்லை என்று உணர்கின்றேன். இனி வாழ்வதும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய உள்ளது என்று அறிகின்றேன்; அறிய வைக்கப்பட்டிருக்கின்றேன்.

இப்படி பல்வேறு உணர்வுகளின் நடுவே பிறந்திருக்கும் இந்தப் பிறந்த நாளில் பதிவுலக நண்பர்களின் வாழ்த்துகளை வேண்டுகின்றேன்.

என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெயராஜன்.


12 June, 2013

நாங்க நிறைய அழுதுட்டோம் ...

அழுகையுடன் தொடக்கம் :

மனித வாழ்க்கை அழுகையுடன் தொடங்குகின்றது. பிறந்த குழந்தை அழுதவுடன், அது ஆரோக்கியமாக உள்ளது என்று மருத்துவர் சான்றளிக்கின்றார். எனவே மனிதன் முதலில் கற்றுக் கொள்வது அழுகை என்று சொன்னால் அது மிகை அல்ல.

அழுகை பல வகை :

இந்த அழுகையை முதலில் வெளிப்படுத்துவது  நமது கண்கள். 'கண்கள் குளமானது' என்கின்றோம். 'கண்ணில் நீர் வழிந்தது' என்கின்றோம். சில சமயங்களில் கண்களில் நீர் வராமலே 'ஓவென கதறி அழுவதும்' உண்டு. 'முதலைக் கண்ணீரும் உண்டு', 'ஆனந்தக் கண்ணீரும் உண்டு', 'நீலிக் கண்ணீரும் உண்டு'. 'இரத்தக் கண்ணீர் வடிப்பதையும்' கேள்விப் பட்டிருக்கின்றோம். இதற்கு சற்று வித்தியாசமாக 'மனதுக்குள்ளேயே அழுவதும் உண்டு'.

எப்பொழுது அழுகின்றோம்?

அழுகை என்பது வேதனையின் வெளிப்பாடு. துன்பம், பிரிவு, நட்டம், ஏமாற்றம்,  நம்பிக்கை துரோகம், இறப்பு, அவமானம்  என எத்தனையோ நிகழ்வுகள் அழுகைக்கு காரணமாகின்றன.

இவற்றின் போது நன்கு அழுது விட்டால் மனம் பின்னிட்டு அமைதி கொள்கின்றது என்பது உளவியல் பூர்வமான ஒன்று. ஏகப்பட்ட சிக்கல், துன்பம், இழப்பு இவற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு அப்படிப்பட்ட சிக்கல் மீண்டும் தோன்றினால் சமாளிக்கும் தெளிவு இந்த அழுகையில் கிடைக்கின்றது. "நாங்க ஏற்கனேவே நிறைய அழுதுட்டோம்... இனி அழ ஒன்னும் இல்லை... நடக்கறது நடக்கட்டும்... பாத்துக்கலாம்" என்ற திட்டவட்டமான வார்த்தைகள் இழப்பை சந்தித்த அழுகை தரும் தெளிவு.

 'என்ன செய்வது?', 'எப்படி கொண்டு செல்வது?', 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்விகளின் தாக்கத்தை அனுசரித்து அழுகையின் வெளிப்பாடும் வேறுபடுகின்றது.

கொஞ்சம் யதார்த்தமாக சிந்திக்கலாம் !

அதாவது திருமணமாகி சில வருடங்களுக்குள் கணவன் அகாலமாக  இறந்து விட்டால் மனைவியின் அழுகை சத்தம் அதிகமாக இருக்கும். காரணம், எதிர்கால பயம். கணவனின் மரணத்தால் முதலில் வருமான இழப்பு. மரியாதை குறைவு. குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரச்சனை. எப்படி தொடர்ந்து வாழ்வை முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வி. இவை ஒவ்வொன்றையும் நினைத்து திடீர்திடீரென அழுகை வெடிக்கும். கணவன் இறந்து விட்டானே என்பதை விட இந்தக் கேள்விகளால் திணறும் மனது அழுகையை அதிகப்படுத்தும்.

திருமணமான ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் கணவன் இறந்த, அதுவும் குழந்தைகள் பிறக்காத நேர்வில், இளம் வயது மனைவியின் அழுகையில் பல்வேறு பிடிபடாத உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கும். மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கி விட்டிருக்கும்.  "இடையில் வந்தான், இப்போது இல்லாமல் போய் விட்டான்... இருப்பவருக்கு இன்னும் எவ்வளவோ வாழ்க்கை இருக்கிறது... தொடர்ந்து அழுவதில் பயன் ஏதும் இல்லை" என்ற நிலையில் அங்கு ஒரு சம்பிரதாய அழுகை மட்டுமே கேட்கக் கூடும். அதாவது விதவைக் கோலம் இளம் வயது மனைவிக்கும் சரி.. அவளது பெற்றோர், உறவினருக்கும் சரி வேண்டாத ஒன்று என்று பட்டு விடும். மறுமண வாழ்வுக்கு மனம் சாத்தியமாகி விடும்.

ஒருக்கால் கணவன் ஓரளவு சம்பாதித்து, சொந்த வீடு, நகை நட்டு, சேமிப்பு, காப்பீட்டுப் பணம் ஆகியவற்றை விட்டு இறந்து விட்டிருந்தால், கணவனின் பாசம், அன்பு, சுகம் ஆகியன கிடைக்காமை தரும் ஏக்கம் நிலையான அழுகையை தொடர்ந்து தரும். 'வாழ வேண்டிய வயசுலே இப்படி அல்பாய்சுலே போயிட்டாரே... நான் வாங்கிட்டு வந்த வரம் அவ்வளவுதான்... ஏதோ இருக்கறதே வைச்சு சமாளிக்கின்றேன்.. இருந்தாலும் இந்தக் குழந்தைகளை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமாக இருக்கு" என்ற வார்த்தைகள் மெல்லிய அழுகையூடே வந்து விழும்.

அதே நேரத்தில் கணவன் ஊர் முழுக்க அல்லது வங்கி முழுக்க கடன் வாங்கி வைத்து விட்டு இறந்து விட்டிருந்தால் இந்த அழுகை சற்று வேறுபாடும். 'இந்த மனுஷன் அதைப் பண்றேன்... இதை பண்றேன்னு சொல்லி ஊரே சுத்தி கடன் வாங்கி வச்சிட்டு போயிட்டாரு... இப்போ என்ன பண்றதேன்னு தெரியலே... மனுஷன் செத்ததுக்கு அழுவறதா இல்லே.. இந்த கடன்காரங்களே நினைச்சு அழுவறதான்னு தெரியலே ?" என அழுகை பெருங்குரலாக இருக்கும்.

ஓரளவு வாழ்ந்து, பிள்ளைகளுக்கு கல்வி, திருமணம் என்று முடித்த பிறகு, அல்லது அறுபதாம் கல்யாணம் முடித்த பிறகு கணவன் இறந்து போனால் அங்கு அவரது 'பாடையை' தூக்கும் போதும், சிதையில் வைக்கும் போதும் வேதனை அழுகை சற்று தூக்கலாக இருக்கும். மனைவியின் கோலம் அமங்கலமாகும் போது விசுக்கென ஒரு அழுகை பொங்கும். இப்படி வாழ்ந்து முடித்த வாழ்வின் ஆண் துணை மரணம் சம்பந்தப்பட்ட பெண் துணைக்கு பல்வேறு நினைவுகளை மனதில் எழுப்பும். வாழ்ந்த வரை கணவன் தனது மனைவியை நன்றாக, சந்தோசமாக வைத்திருக்கலாம் அல்லது ஏதாவது குடைச்சல்களை தந்து வேதனைப் படுத்திக் கொண்டே இருந்திருக்கலாம். இதை அனுசரித்து வாழ்ந்து முடித்த கணவனின் மரணம் ஒரு விசனமா அல்லது விடுதலையா என்பது அமையும். வார்த்தைகளால் சட்டென விவரிக்க முடியாத உணர்வுகள் !

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, கணவன் இறந்து விட்டால் பணம், சொத்து என அனுபவிக்க நிறைய கிடைக்கும் என்ற நப்பாசை நினைவுகளுடன்  வாழ்ந்து வரும் நய வஞ்சக மனைவியின் அழுகை, யாரும் சந்தேகிக்க முடியாத நாடக அழுகையாக இருக்கும். பெரிய ஆர்ப்பாட்டம் அழுகையில் தெரியும். முதலை கண்ணீர் வடிக்கும். ஊர் உலகத்தில் நடக்காததை நான் சொல்லி விடவில்லை. அந்த வகையில் ஒரு கணவனின் மரணம், மனைவியின் கள்ளக் காதலை நிறைவேற்றலாம், பணம், பொருள்களை சுருட்ட வகை செய்யலாம். ஆடம்பர வாழ்விற்கு தடையற்ற வழி ஏற்படுத்தலாம்.

கணவனின் அழுகை :


ஒரு கணவன் இறந்த பிறகு மனைவியின் அழுகை பற்றி இதுவரை ஓரளவு பார்த்தோம். இதுவே மனைவி இறந்து விட்டால், கணவனின் அழுகை ? பொதுவாக "பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புது மாப்பிள்ளை" என்று சொல்வார்கள். ஆனால் இதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. முதல் மனைவி என்றுமே முதல் காதல். கணவன் தனது வாழ்க்கை மற்றும் சமுதாய  நிர்பந்தத்திற்காக மீண்டும் மறு மணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் நினைவுகள் என்றும் அகலாது. அவன் தனது அழுகையை வெளிப்படுத்தி கொள்ளாது போனாலும், "நீ இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா...?" என்ற அழுகை என்றுமே அவன் மனதில் தொடர்ந்து கொண்டிருக்கும். இதில் கவனிக்க வேண்டியது கணவனின் மறு மணம் என்பது அவனது 'வாழ்க்கை மற்றும் சமுதாய நிலையை' முன்நிறுத்தியதாக இருக்கும். மனைவி இழந்த ஒரு ஆடவனுக்கு பெண் வேண்டுமென்றால், அவன் மறு மணம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாடு ஏதும் கிடையாது என்பது இங்கு கவனத்திற்குரியது.

ஒரு நல்ல, பொறுப்புள்ள, அன்பான, அழகான, நம்பிக்கைக்குரிய முதல் மனைவியின் மரணம், கணவன் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அவனுக்கு அது ஒரு நிலையான இழப்பு. என்னதான் சந்தோஷ சூழல்கள் ஏற்பட்டாலும், 'நீ என்னோட இல்லையே?' என்ற ஏக்க அழுகை அந்தக் கணவனின் மனதில் என்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்.

மனைவியை இழந்த ஒரு கணவனுக்கு மறு மண வாழ்க்கை பொருத்தமாக அமைவது அல்லது தொடர்ந்து நீடித்திருப்பது எல்லாம் மிக அரிது. அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் கணவன் மறுமணம் செய்து கொள்ள முனைவது கிட்டத்தட்ட ஒரு அபாயம்தான். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணுக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கலாம்; அல்லது ஒரு கட்டாயத்திற்காக அவ்வாறு  வாழ்க்கைப்படலாம்; அல்லது வேறு உள்நோக்கங்களுக்காக திருமணம் செய்து கொள்ளலாம். புரிய முயன்றாலும் புதிராகவே தொடரும் வாழ்க்கை அது. தனியாக அமர்ந்து அவ்வப்போது வாய் விட்டு அழுவது ஒன்றுதான் வழி. தீதும், நன்றும் நாம் வரவழைத்துக் கொள்வதுதானே..!

குற்றங்களை தவிர்க்கும் அழுகை :

இவை யாவும் வாழ்க்கைத் துணை இறப்பினால் கிளம்பும் அழுகைகள். இதுவே நம்பியவர் ஏமாற்றும் போதும், துரோகம் செய்யும் போதும், தொழில் இழப்பு, நட்டம், அவமானம் ஏற்படும் போதும் நன்கு அழுது விட வேண்டும். இல்லாது போனால் அது பழி வாங்கும் உணர்வாக மாறி விடும். இந்த உணர்வு குற்றச் செயலில் சென்று முடியும். எனவே இங்கு அழும் அழுகை, மனதை சமாதானப் படுத்துகிறது; சாந்தப்படுத்துகிறது. பழி வாங்கும் உணர்வை நேர்மறை எண்ணமாக மாற்றுகிறது. மனதுக்குள் புழுங்குவதை விட அழுது தீர்த்து விடுவது நன்று.

இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். ஏதாவது குத்தம் குறை இருந்தா குத்திக் காட்டுங்க...!

Related Posts Plugin for WordPress, Blogger...