என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

29 June, 2013

வெளிமாநில சட்டப் படிப்பு தமிழகத்தில் செல்லுமா...?


வெளி மாநிலங்களில் சட்டப்படிப்பு அதாவது எல்எல்.பி. படித்தவர்கள் தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதையோ, அவ்வாறு தொழிலாற்றுவதையோ தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில், தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், கர்நாடகா மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவிப்பு அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயம் கடந்த வியாழனன்று ஆணையிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவின் அடிப்படையில் மாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள், மைய சட்ட ஆணையம் ஆகியனவும் தரப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

மனுதாரர் ரமேஷ், "பள்ளிப்படிப்பை கூட முடித்திராத பலரும் தங்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொண்டுள்ளதன் மூலம் உயர்வான வழக்குரைஞர்களின் தொழில் மாசடைந்துள்ளது.ஆந்திரபிரதேஷ், கர்நாடகா மாநிலத்திலிருந்து எல்எல்.பி. பட்டம் பெற்றுள்ளவர்கள், தங்களை கட்டப்பஞ்சாயத்து மன்றங்கள், சட்ட விரோதமான ரியல்-எஸ்டேட் நடவடிக்கைகள், காவல்துறை-குற்றவாளிகள் தொடர்பு, இதர மலிவான தொழில் நடத்தைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்" என்று குறிப்பிடுகின்றார்.

மேலும், எல்எல்.பி. பட்டங்கள் வெளி மாநில பல்கலைக்கழகங்களால் விற்கப்படுவதாகவும் அவர் சாட்டுரைக்கின்றார். குறிப்பாக, கல்லூரிக்கு செல்லாமலேயே சட்டக்கல்விக்கான பட்டத்தை பெறுவதாகவும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுகளை எழுதுவதில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக முகவர்களோ, தரகர்களோ தேர்வு எழுதுவதாகவும், தரகர்களின் வாயிலாக போலியான சான்றிதழ்களை சமர்ப்பிப்பதன் மூலம் பெரும்பாலான எல்எல்.பி. பட்டங்கள் பெறப்படுவதாகவும், அவ்வாறு பெற்றவர்கள் தங்களை தமிழகத்தில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொண்டு வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்களாகி விடுகின்றனர் என்றும் அவர் சாட்டுரைக்கின்றார்.

"கடந்த 10லிருந்து 15 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சட்டத் தொழிலில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களில் பலர் கறை படிந்தவர்கள் என்றும், அவர்களது குற்றவியல் செயல்பாடுகள், தமிழ் நாட்டில் சட்டப்படிப்பு முடித்த வழக்குரைஞர்களின் தொழிலுக்கு இடர்பாடுகளை விளைவிக்கின்றன என்றும்" மனுதாரர் ரமேஷ் குறிப்பிடுகிறார்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள போலியான வழக்குரைஞர்களை கண்டறிய தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பெரு மன்றத்திற்கு ஏவுரைக்க வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் வெளி மாநிலங்களில் சட்டம் படித்த வழக்குரைஞர்களின் பதிவு குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கோருகின்றார்.

முன்னதாக ஏப்ரல், 13-ஆம் தேதியில் இந்தக் கோரிக்கையை வழக்குரைஞர் பெரு மன்றத்தின் தலைவருக்கு தாம்  அனுப்பியதாகவும், அது பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் வழக்குரைஞர் ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரரின் வாதத்தைக் கேட்டறிந்த மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் எதிர்மனுதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்ப ஆணையிட்டு, வழக்கை 10 தினங்களுக்கு ஒத்தி வைத்தார்.

28 June, 2013

அம்மா கேதார்நாத் போகவில்லை....!

அண்மையில் கேதார்நாத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிர் சேதங்கள் எனது தாயாரை மிகவும் அதிர்ச்சி அடைய செய்திருந்தது. அவர் 1989-ஆம் ஆண்டில் ரயில் மற்றும் பஸ்ஸில் இந்தியா முழுவதும் 50 நாட்கள்  தீர்த்த யாத்திரை மற்றும் சுற்றுலா சென்று வந்தார். அதில் விட்டுப்போன இடம் கேதார்நாத். அதாவது யாத்திரை நடத்தும் கம்பெனியாரின் திட்டப்படி பத்ரிநாத் போக விருப்பம் உள்ளவர்கள் கேதார்நாத் செல்ல முடியாது. அதுபோல கேதார் நாத் செல்ல விருப்பம் உள்ளவர்கள் பத்ரிநாத் செல்ல முடியாது. இதில் எனது தாயார் பத்ரிநாத் செல்ல தேர்வு செய்தார். எனவே கேதார்நாத் செல்ல முடியவில்லை. ஆனால் எனது தாயார் "அந்த சமயத்திலேயே பத்ரிநாத் போயிட்டு வந்ததே ஒரு திகில் அனுபவம்தான்" என்று உடல் சிலிர்க்க கூறினார்.

முன்னதாக அவர் தனது தாயார் (அதாவது எனது பாட்டி ராஜலக்ஷ்மி) மற்றும் உறவினர்களுடன் தனது பயணத்தை தொடங்கும் போது, நான் கையில் ஒரு பழைய 'டைரியை' கொடுத்து, "இதில் உங்கள் பயண அனுபவத்தை ஒரு பயணக் கட்டுரையாக எழுதுங்கள்" என்று கூறி அனுப்பினேன். சொன்னது போல் அதில் அவர் தனது அன்றன்றைக்கான பயண அனுபவத்தை அழகாக எழுதி இருந்தார்.

தான் இதுகாறும் மிகப் பத்திரமாக பேணிப் பாதுகாத்து வரும் அந்த டைரியை இரு தினங்களுக்கு முன் என் கையில் எடுத்துக் கொடுத்து, "நான் போயிட்டு வந்த எல்லா ஊர்களைப் பற்றியும், கோவில்களைப் பற்றியும் இதிலே  எழுதி இருக்கேன்... ஆனா எனது பத்ரிநாத் பயண அனுபவத்தை பற்றி மட்டும் உன்னோட ப்ளாக்லே எழுதுவியாப்பா...?" என்று கேட்டு விட்டு, "நான் உன்னை விட நல்லா எழுதுவேன்னு உனக்கு தெரியுமில்லே" என்று கொசுறாக ஒரு 'பஞ்ச்'-ம் வைத்தார்.

"இது ஏது ... மதுரைக்கு வந்த சோதனை..!" என்று கருதி உடனே, "அந்த டைரியை கொடுங்க... நான் உங்க பயணத்தை பதிவு செய்கின்றேன்" என்று அதை வாங்கிக் கொண்டேன்.


6-8-1989-ஆம் தேதியில் திண்டுக்கல் நகரிலிருந்து தொடங்கிய அந்த யாத்திரைக்கு எனது தாயார் 'காசி யாத்திரை' என்று தலைப்பு வைத்து பிள்ளையார் சுழி போட்டு, முருகனை துணைக்கு அழைத்து எழுத ஆரம்பித்து இருந்தார். அந்த யாத்திரையில் எனது தாயாரின் அவாவை நிறைவு செய்யும் முகமாக பத்ரிநாத் பயண அனுபவம் மட்டும் இங்கு பதிவு செய்கின்றேன்.


"21ந் தேதி 5 மணிக்கு எழுந்து காப்பி குடித்து வேலைகளை முடித்துக் கொண்டோம். பிளாட்பாரத்தில் டிபன் சாப்பிட்டோம். பத்ரிநாத்துக்கு 28 பேரும், கேதாரிநாத்துக்கு 28 பேருமாக 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தனிதனி பஸ்ஸில் போக தயாரானோம். பத்திரிநாத்தில் 3 தினங்கள் தங்க வேண்டும் என்று சொன்னதால், வேண்டிய துணிமணி, மருந்து, கம்பளி முதலிய சாமான்களை எடுத்துக் கொண்டு எங்களுக்கென்று இருந்த பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டோம். பஸ் கிளம்பியது. நடு வழியில் சாப்பாடு சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டோம். மறுபடியும் பஸ் கிளம்பியது. 5 மணிக்கு பஸ் நின்றது. மத்தியப் பிரயாகையில் காப்பி சாப்பிட்டோம். S.V.R. பாவாவுக்கு லோ பிரசர் வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவரை ரெஸ்ட் எடுக்கச் செய்து பின்னர் பஸ்ஸில் கிளம்பினோம். பிப்லி கேட் என்னுமிடத்தில் இரவு தங்கிக் கொண்டோம். இரவு சமையல் செய்து கொடுத்ததை சாப்பிட்டோம். மழை வந்தது. நாங்கள் தூங்கி விட்டோம்.
22ந் தேதி காலை 5 மணிக்கு எழுந்து கொண்டோம். மழை பெய்து கொண்டே இருந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டோம். பத்ரிநாத் கிளம்ப தயார் படுதிக்கொண்டோம். ஆனால் மழை இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு கிளம்ப முடியவில்லை. காலை 7 மணிக்கு கிளம்பினோம். நான்கு மணி நேர பிரயாணத்துக்கு பின் சுமார் 12 மணிக்கு ஒரு ஊரில் போய் தங்கினோம். அங்கே சமையல் செய்தார்கள். சாப்பிட்டோம். மிகவும் குளிராக இருந்தது. சில பேர் குளித்தார்கள். சுமார் 4 மணிக்கு மறுபடியும் எல்லோரும் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். பஸ் பத்ரிநாத்தை நோக்கி கிளம்பியது. S.V.R. பாவாவை  பிப்லி கேட்டில் தங்க வைத்து விட்டோம். அவருக்கு ரெஸ்ட் வேண்டுமென்று டாக்டர் சொல்லி விட்டார். 
விடாத  மழையினால் பத்ரிநாத் செல்லும் வழி மண் சரிந்து பாதை அடைபட்டு இருப்பதாக தகவல் வந்தது. சுமார் 7 மணிக்கு பஸ் நடுக்காட்டில் நின்று விட்டது. மேற்கொண்டு போக வழியில்லாமல் எல்லா பஸ்களும் நின்று விட்டன. நாங்கள் நின்ற இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் போனால் ஊர் வருகின்றது. பஸ் லைனாக நின்றிருந்தாதால் எங்கள் பஸ் போக முடியவில்லை. எங்கள் டிரைவர் சாப்பிட சென்று விட்டார். எங்களுக்கு அந்த இடத்தில் உப்புமா செய்து தந்தார்கள். நாங்கள் சாப்பிடவில்லை. இரவு சுமார் 10 மணிக்கு பஸ் எல்லாம் சென்ற பின், எங்கள் பஸ் கிளம்பி அடுத்த ஊரில் போய் நிறுத்தினார்கள். எந்த இடத்திலும் எங்களுக்கு ரூம் கிடைக்கவில்லை. அதனால் அந்த கொட்டும் மழையிலும், பனியிலும் பஸ்ஸில் கால்களை மடக்கிக் கொண்டு படுத்தோம். மழையும், பனியுமாக இருந்ததால் கண்ணாடி ஜன்னல்களை மூடிக் கொண்டோம். இரவு 1 மணி வரை பஸ்ஸில் பஜனையும், கதாகலாட்சேபங்களும் நடந்தன. மேற்கொண்டு பஸ்ஸில் உட்கார முடியவில்லை. காற்று இல்லை. மிகுந்த கஷ்டமாக இருந்தது. அதனால் நானும், அம்மாவும் அந்த கொட்டும் மழையில் கீழே இறங்கி பக்கத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் போய் உட்கார்ந்தோம். டீ போட்டுக் கொடுக்கும்படி கேட்டோம். அதற்கு ஓட்டல் ஆள் சக்கரை இல்லை என்று சொல்லி விட்டார். டீ குடிக்கவில்லை. குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. 
23ந் தேதி காலை 6 மணிக்கு அந்த இடத்திலேயே எல்லோரும் பல் விளக்கிக் கொண்டு, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பஸ்ஸில் உட்கார்ந்தோம். பஸ் எல்லாம் இப்போது போக வர முடிகிறது என்று சொல்லிவிட்டார்கள். ராணுவ வீரர்கள் வந்து ரோடு சரி செய்து இருப்பதாக தகவல் வந்து, எங்கள் பஸ்சும் காலை 7 மணிக்கு கிளம்பியது. 
ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் 315 கிலோ மீட்டார். மலை உச்சியின் உயரம் 12 ஆயிரம் அடி. பஸ் போய்க்கொண்டிருக்கும் போது கீழே பார்த்தால் ஒரே பள்ளம். இரண்டு பக்கமும் மலை நடுவில் ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. மிகவும் அதிகமான பனி. தண்ணீர் ஐஸ் கட்டியாக பல இடங்களில் இருந்தது. சில இடங்களில் ஒரு பஸ்தான் போக முடியும். இப்படியாக பத்ரிநாத்தை காலை 10 மணிக்கு போய்ச் சேர்ந்தோம். சென்றவுடன் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூமில் தங்கிக் கொண்டோம் காப்பி சாப்பிட்டோம். 10 மணிக்கு ஓம குண்டம் (சுடு தண்ணீர்) ஊற்றில் குளிக்கச் சென்றோம். பார்க்க அதிசயமாக இருந்தது. ஒரு சிறு இடத்தில் சுடு தண்ணீர் ஊற்று வந்து கொண்டே இருக்கிறது. தண்ணீர் ஆவி பறக்கின்றது. 15 அடிக்கு 15 அடி அந்த அளவுக்குத்தான் சதுரம். அதில் தண்ணீர் 4 அடிக்கு இருக்கிறது. ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றுமாக இருக்கிறது. அது கந்தக தண்ணீர். 10 நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது. அதனால் சீக்கிரமாக குளித்து முடித்து விட்டு கோவிலுக்கு சென்றோம். பத்ரி நாராயண சுவாமியைக் கண்டு தரிசித்தோம். சுவாமி நன்கு அலங்காரத்துடன் இருந்தார். சுவாமிக்கு அன்னம் வைத்து தீபாராதனை செய்ததை பக்கத்திலிருந்து பார்த்தோம். 1 1/2 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பினோம். வழியில் கழுத்து மாலைகள் வாங்கிக் கொண்டோம். ரூமுக்கு வந்து சாப்பிட்டோம். நன்றாக வெய்யில் இருந்ததால் குளிரவில்லை. மாலை 4 மணிக்கு பத்ரிநாத்தை விட்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். 
மழை தூறிக்கொண்டிருந்தது. அரை மணி நேரம் பஸ்ஸில் வந்திருப்போம். வழியில் மரம் ஒன்று சாய்ந்து வழி மறிக்கப்பட்டு கிடந்து இருந்தது. எங்கள் பின்னால் சிங்குகாரர்கள் வந்து அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். 

சிறிது  தூரம் சென்றிருப்போம். வழி நெடுக மலை மீது இருக்கும் கற்கள் உருண்டு கீழே விழுந்து இருந்தன. அதையும் சிங்குகள் அப்புறப்படுத்திக் கொண்டே இருக்கும் சமயத்தில் பல பெரிய பெரிய கற்கள் கீழே உருண்டு விழுந்ததை நம் கண் முன்னால் பார்த்தோம். இன்னும் சில கற்கள் பாறை மேல் தொற்றிக் கொண்டு எப்போது விழுமோ என்று நின்றிருந்தது. மண் சரிவினால் பாதை இல்லாமல் அரை அடி வித்தியாசத்தில் எங்கள் பஸ் முன்னேறியது. அந்த சமயத்தில் பஸ் கண்ட ஆட்டம் எங்கள் எல்லோரையும் ஆண்டவனை கூப்பிட வைத்து விட்டது. அந்த அளவுக்கு நாங்கள் தப்பித்து வந்தோம். இறைவன் இல்லாமல் எந்த காரியமும் நடப்பதில்லை என்று தெரிந்து கொண்டோம். அந்த பத்ரிநாராயணன்தான் எங்களை காப்பாற்றினார். 

(இப்படி விழுந்திருக்க வேண்டியது.... 
பத்ரிநாராயணனின் மகிமையில் தப்பித்தாக எனது தாயார் சொன்னார்கள்.)
இரவு 9 மணிக்கு பிப்லி கேட்டிற்கு வந்து சேர்ந்தோம். இரவு சாப்பிடும் போது 12 மணி. அன்று இரவு அம்மாவுக்கு உடம்பு நலமில்லாமல் இருந்தது. வரும் வழியில் இந்த அதிர்ச்சியினால் அம்மாவுக்கு புரையேறி மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்கள். மிகுந்த சிரமத்தின் பேரில் அவர்களுக்கு உடம்பு சரியானது." 
இப்படியாக எனது தாயாரின் பத்ரிநாத் பயண அனுபவம்  அபாயகரமானதாக அமைந்திருந்தது. ஊருக்கு திரும்பியவர்கள் அனைவரும் தாங்கள் உயிர் தப்பி வந்ததையே அச்சமயத்தில் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பத்ரிநாத் கோவில் வாசல் முன்பு 

காசியில் படகு சவாரி

காஷ்மீர் நிசான் கார்டன் 

காஷ்மீர் நேரு பார்க் 

காஷ்மீர் டால் ஏரி 

பத்ரிநாத்துக்குப் பிறகு பயணம் ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜம்முதாவி, காஷ்மீர், தில்லி, ஆக்ரா, ஷிரிடி, பம்பாய், சோலாப்பூர், மதராஸ் என தொடர்ந்து  ராமேஸ்வரம் சென்று, பிறகு திண்டுக்கல் வந்து சுபமாக முடிந்தது.

ஒவ்வொரு ஊர் பற்றியும், கோவில் பற்றியும் எனது தாயார் நிறைய எழுதி இருந்தார்கள். வருணனையில் சாண்டில்யன் தோற்றார் போங்கள்!

இந்தப் பதிவை வாசித்து முடித்து விட்டு, தனது டைரியை காட்டி "இதை ஒரு புத்தகமாக நான் பப்ளிஷ் பண்ணப்போறேன்... இப்படி யாத்திரை செல்பவர்களுக்கு நினைவுப் பரிசாக கொடுக்கப்போறேன்..." என்றார்..! எனது 40க்கும் மேலான சட்டப் புத்தகங்களை கடந்த 26 ஆண்டுகளாக பதிப்பித்து வெளியிட்டு, இரண்டு புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த சட்ட நூல் பதிப்பாளர் விருதை பெற்ற அவருக்கு,  இந்தப் பணி ஒன்றும் பிரமாதம் அல்ல...!

வணக்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...