என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

27 October, 2014

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா, 2014 - மதுரை


உள்ளபடியே அது திருவிழாதான் ! ஆம்... மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா, 2014.மூத்த பதிவர்கள், முன்னணி பதிவர்கள், பிரபல பதிவர்கள், அறிமுக பதிவர்கள் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பதிவர்கள் பலர் கலந்து கொண்டு இத்திருவிழாவை பதிவுலக வரலாற்றில் ஓர் பெரும் விழாவாக்கி விட்டனர்.

சக பதிவர்களின் எழுத்துகளை மட்டுமே இதுகாறும் பார்த்து வாசித்துக்  கொண்டிருந்த நாம், நேற்று (26-10-2014) மதுரை, கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டோம். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் சட்டென விவரிக்க முடியாது. மொட்டாக இருந்த வலைப்பூ இந்த விழாவில் விரிந்து மலர்ந்து மணம் பரப்பத் துவங்கியது.

3-ஆம் ஆண்டாக நடைபெறும் இவ்விழா காலை 9 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலமாக துவங்கியது. உணவு உலகம் வலைப்பூவின் உரிமையாளர் திரு. சங்கரலிங்கம் அவர்கள் வரவேற்புரை நல்கினார். தலைவராக பிரபல வலைப்பூவான வலைசரத்தின் (http://blogintamil.blogspot.in/) உரிமையாளர் திருமிகு சீனா அய்யா அவர்கள் தலைமை வகித்தார்.அவருடன் தீதும் நன்றும் பிறர்தர வாரா வலைப்பூவின் உரிமையாளர் திருமிகு ரமணி அவர்கள் துணைத் தலைவராக அமர்ந்து மேடைக்கு அணி சேர்த்தார். திருமிகு மதுரை சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். நியுசிலாந்து வாழ் பதிவரும் துளசிதளம் என்ற வலைப்பூவின் உரிமையாளருமான திருமதி துளசிகோபால் அவர்கள் நியுசிலாந்திலிருந்து தனது கணவர் திருமிகு கோபால் அவர்களுடன் விழாவிற்கு வந்திருந்து விழா மேடைக்கு பெருமை சேர்த்தார். நிகழ்ச்சி துவங்க ஆரம்பித்தது. வெளியூர் பதிவர்கள்  ஒவ்வொருவராக அரங்கத்தில் நுழைந்து கொண்டிருந்தனர்.அவர்களின் வருகை அரங்கின் வரவேற்பு முகப்பில் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து திண்டுகல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் உள்ளிட்ட தொழில்நுட்ப வலைப்பதிவர்கள் பாராட்டப்பட்டனர். இதையடுத்து திருவிழாவிற்கு வந்திருந்த பதிவர்களின் சுய அறிமுகம் நடைபெற்றது. நிகழ்ச்சி தொகுப்பாளர் வலைப்பூவின் பேரை வாசிக்க அதன் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் மேடைக்கு சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

எழுத்துகள் ஏற்கனவே அறிமுகமான பதிவர்களின் முகத்தை நேரில் கண்டு தொடர்புடைய பதிவர்களுக்கு மகிழ்ச்சி. திடம்கொண்டு போராடு வலைப்பூ உரிமையாளர் திருமிகு சீனு, கோவை ஆவி, ஸ்கூல் பையன் ஆகிய பிரபல பதிவர்களை சந்தித்து மகிழ்ந்தேன்.

நிகழ்ச்சி இப்படி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டே இருந்தபோது, மதுரை என்ற பேருக்கு மீனாட்சி அம்மன் எப்படி பக்கபலமாக இருக்கின்றாரோ, அப்படி மதுரை நினைவுக்கு பாலம் போடும் ஒன்று எங்கள் அனைவருக்கும் தரப்பட்டது.நாங்கள் மகிழ்ந்தோம் என்று சொல்வதை விட, குளிர்ந்தோம் எனலாம். அது என்ன..? நீங்கள் நினைப்பது சரிதான். சுவையான ஜிகிர்தண்டா எங்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கும் சுவை சேர்த்தது.

சிறப்புரையாளர் பேராசிரியர் திரு. தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் தனது உடல்நலம் காரணமாக விழாவிற்கு வர இயலவில்லை.பதிவர்கள் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இவ்வாறு சிந்தனைகளுக்கு விருந்தாக இத்திருவிழா சென்று கொண்டிருந்த அதே நேரம், நாவிற்கு சுவையாக மதிய உணவு தயார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.


 பிற்பகல் அமர்வில் பதிவர் திருமிகு குடந்தை சரவணன் அவர்களின் "சில நிமிட சிநேகம்" என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. கோவை ஆவி அவர்கள் நடித்திருந்தார். 7 நிமிடம் ஓடிய இந்தக் குறும்படம் மிகச் சிறப்பாக இருந்தது. குடந்தை சரவணன் அவர்களுக்கும், கோவை ஆவி அவர்களுக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.


 தொடர்ந்து பிரபல எழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்.இதையடுத்து புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. பதிவர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. முதலில் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்  எழுதிய "கரந்தை மாமனிதர்கள்" என்ற புத்தகமும், அடுத்து திருமதி கிரேஸ் பிரதிபா அவர்கள் எழுதிய "துளிர் விடும் விதைகள்" என்ற கவிதை நூலும், இதையடுத்து திருமதி மு.கீதா அவர்கள் எழுதிய "ஒரு கோப்பை மனிதம்" என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.

இதை அடுத்து நான் எழுதிய "நல்லா எழுதுங்க ...! நல்லதையே எழுதுங்க...!!" என்ற நூலை ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ் உரிமையாளரும், எனது தாயாருமான திருமதி பி.ஆர்.காஞ்சனமாலா அவர்கள் வெளியிட திருமதி துளசி கோபால் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


 


புத்தக வெளியீட்டு விழாவில் நேரம் போனதே தெரியவில்லை. திருவிழா நிறைவடையும் நேரம் வந்து விட்டது. திரு திண்டுகல் தனபாலன் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


பதிவர் ஒருங்கிணைப்பு பணியை திருவாளர்கள் பகவான்ஜி (ஜோக்காளி), பால கணேஷ் (மின்னல் வரிகள்), முத்து நிலவன் (வளரும் கவிதை), தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்) ஆகியோர் திறம்பட மேற்கொண்டனர்.

பதிவர் சந்திப்பு வாழ்க...! 
பதிவர் ஒற்றுமை ஓங்குக ..!!

07 October, 2014

இணையக் குற்றங்களை தடுக்க என்ன வழி ?


இணையத்தில் பல்வேறு குற்றங்கள் உலவுகின்றன. அவற்றை முப்பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். அவை, 1. மோசடி. 2. ஆபாசம் மற்றும் பாலியல் தொடர்பானவை. 3. அவதூறு. இப்பிரிவுகளின் கீழ் பல குற்றங்கள் உட்பிரிவுகளாக வருகின்றன.

ஒரு அரசு, குற்றங்களுக்கு கடும் தண்டனையைத் தருவதால், அதை கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. முதலில் குற்றம் புரியும் எண்ணத்தையே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதாவது குற்றம் புரிய திட்டமிடுபவனின் குற்றக் கருத்து, குற்றச் செயலாகிவிடாமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும். குற்றம் செய்யும் குற்றக் கருத்து நிறைவேறிவிடாமல் முட்டுக்கட்டைகளை இட வேண்டும். "கண்டுபிடித்து விடுவார்கள்....நிச்சயம் மாட்டிக் கொள்வோம்" என்ற அச்சுறுத்தல் மனதில் ஏற்பட வேண்டும். சுருங்கச் சொன்னால், இணையதளம் வழி குற்றங்களை செயவது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி.?

ஒருவர் இணையதளம் வாயிலாக ஒரு செயலை ஆற்ற விரும்பினால் அதற்கு அவர் தனது சரியான விவரங்களை தர வேண்டும். அதற்கு மின்னஞ்சல் முகவரி அவசியம். அரசு இந்த ஆரம்பகட்டத்திலேயே கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆள் மற்றும் இருப்பிடம் குறித்த சரியான மற்றும் ஏற்கனவே மெய்ப்பிக்கப்பட்ட விவரங்களை தந்தால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி பெற முடியும் என்ற நியாயமான கட்டுப்பாட்டை அரசு கொண்டு வர வேண்டும்.
இந்த நடைமுறையை புதிதாக இணையதளம் தொடங்குவதிலும் கொண்டு வர வேண்டும். இன்று புதிய இணையதளம் தொடங்குவதற்காக அதன் முகவரியை பதிவு செய்தல், அதற்கான அடிப்படை கருத்து வடிவத்தை (தீம்) வாங்குதல், வடிவமைக்கப்பட்ட தளத்தை உலக இணையத்தில் ஏற்றுதல் ஆகியவற்றுக்கு அயல்நாட்டு இணைய நிறுவனங்களை நாம் சார்ந்திருக்கிறோம். அங்கு இணையதளத்தை ஆரம்பிப்பவர் குறித்து எந்த விவரங்களையும் கேட்பதில்லை. எவ்வித சரிபார்த்தலும் கிடையாது. இதைத் தவிர்க்க, இணையதளம் தொடங்குவோருக்கு சட்டப்படியான சரிபார்ப்புடன், நமது அரசே வகை செய்யலாம்.

ஒரு பத்திரிக்கை அல்லது பருவ இதழை தொடங்க பத்திரிக்கை மற்றும் புத்தக பதிவு சட்டம், 1867-ல் உள்ள பல்வேறு வகைமுறைகளை நிறைவு செய்ய வேண்டும். அதை ஆரம்பிப்பவர் எண்ணற்ற சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உள்ளாக வேண்டும். சந்தாதாரர்களுக்கு அஞ்சல் வழி சுற்றுக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகச் சட்ட திட்டங்களின்படி அனுமதி பெற வேண்டும்.

அவ்வாறே திரைப்படங்களுக்கு திரைப்படவியல் சட்டத்தின்படி தணிக்கை வாரியத்தின் தணிக்கைக்கு உள்ளாக வேண்டும். இவையெல்லாம் பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரம் எல்லை மீறி சென்று விடக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட நியாயமான கட்டுப்பாட்டுச் சட்டங்களாகும்.
ஆனால் இணையதளம் வழி கருத்து, படம், காணொலி ஆகிய எவற்றையும் பதிவேற்ற எந்த கட்டுப்பாடும், ஆள் மற்றும் முகவரி அடையாள சரிபார்த்தலும் கிடையாது. இவை இணையக் குற்றங்கள் புரிவோருக்கு வசதியாக போய்விட்டன.

காரணம் போலி அடையாளத்தை (Fake Id) இணையத்தில் உருவாக்குவது மிக எளிதாக உள்ளது. இங்கிருந்து குற்றம் தொடங்கி விடுகிறது. இதைத் தடுத்தால் குற்றச் செயல் நடவாது தடைபடும் ! இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் !!
- Jaya Rajan


24 September, 2014

தப்பித்தது ....! தகவல் அறியும் உரிமை சட்டம்...!!


கடந்த 17-09-2014-ஆம் தேதி நமது சென்னை உயர் நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக முக்கியத் (!) தீர்ப்பு ஒன்றை பகர்ந்தது. அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உயிரோடு குழிதோண்டிப் புதைக்க முனைந்த  தீர்ப்பு என்று சொன்னால் மிகையாகாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி தகவல் கேட்பவரிடம் எதற்காக தகவல் தேவைப்படுகின்றது என்பதற்கான காரணங்களை பொதுத் தகவல் அலுவலர் கேட்கக் கூடாது. மனுதாரர் கேட்கின்ற தகவல் இருக்கும் பட்சத்தில் அதனை காரணம் ஏதும் கோராமல் பொதுத் தகவல் அலுவலர் வழங்க வேண்டும். இந்த ஒரு சிறப்பான வகைமுறை காரணமாக மக்கள் உரிமைச் சட்டங்கள் பலவற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிரீடமாக விளங்குகின்றது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் The Public Information Officer, The Registrar (Administration), High Court, Madras Vs. The Central Information Commission, rep. by its Registrar, New Delhi and Mr. B.Bharathi (W.P. No. 26781 of 2013 & M.P. No. 1 of 2013) என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில் தகவல் கேட்டு மனு செய்பவர் அதற்கான குறைந்தபட்ச காரணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அதிரடியான, ஆனால் பிரிவு 6(2)-அய் மீறிய தீர்ப்பை வழங்கி எல்லோரையும் கதிகலங்க வைத்தது.

பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரி மனு செய்தார். அவர் கோரிய தகவல்கள் யாவும் அவர் தொடுத்த வழக்கு மற்றும் புகார் தொடர்பானவை. அவர் கோரிய தகவல்களை அவருக்கு வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு மைய தகவல் ஆணையம் ஆணையிட்டது. இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தார்.

அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான காரணத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க, தகவல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் கோருவது சொந்த நலனுக்கா அல்லது பொது நலனுக்கா என்பது குறித்து குறைந்தபட்ச காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று மாண்பமை நீதியரசர்கள் என்.பால்வசந்தகுமார், கே.இரவிச்சந்திர பாபு ஆகியோர் கருத்துரைத்தனர். அவ்வாறு சொல்லாத நிலையில் அவரது மனு தகவல் அறியும் சட்ட வகைமுறையை நிறைவு செய்ததாக கொள்ள முடியாது என்றும் கூறினார். அதாவது பிரிவு 8(1)(j)-இன் கீழான விதிவிலக்கை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டுகின்றது. மனுதாரர் கோரும் தகவல்கள்  அவரிடமே உள்ளன. அப்படியிருக்க அவர் மீண்டும் இச்சட்டத்தின் கீழ் தகவல் கோரி பொது அதிகாரஅமைப்பின் பணிச்சுமையை அதிகப்படுத்துகின்றார்;  இது பொது அதிகாரஅமைப்பின் வளஆதாரங்களை பொருத்தமில்லாத வகையில் மாற்றி விடக்கூடியதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் கூறுகின்றது. இங்கு பிரிவு 7(4) சென்னை உயர் நீதிமன்றம் கைக்கொள்கின்றது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விடயத்திலிருந்து தகவல் வேண்டும் என்றால், நகல் மனு தாக்கல் செய்து அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரக்கூடாது என்றும் கூறுகின்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொறுத்தவரை, அதன் வகைமுறைகளுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்றால் அங்கு "இசைவமைந்த பொருள் விளக்கம்"தான் (Harmonious Construction) எடுபடும். இது பொது மக்களின் நலன் கருதி இயற்றப்பட்ட சட்டமே (Beneficial Legislation) தவிர, அரசின் நலன் கருதி அல்ல.எனவே குடிமக்களுக்கு "பயன்தரும் முறையில் பொருள் கொள்ள வேண்டும்" (Beneficial Construction). நாடாளுமன்றத்தின் உள்ளக்கிடக்கையை (Intention of the Legislature) ஒட்டி பொருள் தர வேண்டும்.

இச்சட்டத்தின் பிரிவு 6(2) தான் இதன் அச்சாணி. இதன்படி தகவல் கேட்பதற்கான காரணங்களை மனுதாரர் தெரிவிக்க வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமை, குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். இவற்றை மையமாக கொண்டே பிரிவு 7-இன்படி தகவல் கோரும் வேண்டுகோளை முடிக்க வேண்டும். அவ்வாறே பிரிவு 8-இன் கீழ் வரும் விதிவிலக்குகளை பொருள் கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் பிரிவு 6(2) எனும் அச்சாணியை கழற்றி விட்டு தீர்ப்பு வழங்கியதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிலைகுலைந்தது. பொது தகவல் அலுவலர்கள் மகிழ்ந்தனர். அரசு அலுவலர்கள் மறுபடியும் மெத்தனப் போக்குக்கு தாவ திட்டமிட்டனர். நல்ல வேளையாக ஒரே வாரத்தில் அதாவது 23-09-2014-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை  மறுஆய்வுக்கு எடுத்து தனது தீர்ப்பை மாற்றிவிட்டது. பிரிவு 6(2)-ஐ கவனிக்காமல் தீர்ப்பு வழங்கிவிட்டதாக நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். "குறைந்தபட்ச காரணம் தெரிவிக்க வேண்டும்" என்ற வரிகளை இரத்து செய்வதாகவும் தங்கள் புதிய தீர்ப்பில் குறிப்பிட்டனர். புதிய தீர்ப்பு நகலை வெளியிடவும் பதிவகத்திற்கு ஆணை பிறப்பித்தனர்.

இப்படி ஒரு தீர்ப்பு வந்தததும் நல்லதுதான். ஒரு புறம் தகவல் அறியும் உரிமை சட்டம் தப்பித்தது. அதே நேரம் தனது தீர்ப்பை தகவல் அறியும் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உயர் நீதிமன்றம் திருத்திக் கொண்டதால், அச்சட்டத்தின் வலிமை மேலும் கூடியுள்ளது என்றும் கொள்ள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மேலும் புடம் போட்டதாக மாறியுள்ளது.

18 September, 2014

புலனாய்வு நிலுவையில் உள்ளது என்பது மட்டுமே தகவல் தர மறுப்பதற்கான காரணம் ஆகாது - மைய தகவல் ஆணையம் மீண்டும் அதிரடி ஆணை !


புலனாய்வு/விசாரணை நிலுவையில் உள்ளது என்பது மட்டுமே, கேட்ட தகவலை கொடுக்காமல் நிறுத்தி வைப்பதற்குரிய போதுமான முகாந்திரம் ஆகாது; தகவலை வெளிப்படுத்தினால் அது புலன் விசாரணையை தடுக்கும் அல்லது முடக்கும் என்பதை மைய பொதுத் தகவல் அலுவலர் காண்பிக்க வேண்டும், என்று மைய தகவல் ஆணையம் அண்மையில் (16/9/2014) தனது ஆணை ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது. 

தகவல் மறுக்கப்பட்டதால் குறையுற்ற சௌபே என்பவர் தாக்கல் செய்த இரண்டாம் மேல்முறையீட்டை அனுமதித்து பிறப்பித்த ஆணையில், இந்நிலைப்பாடு குறித்து முன்னதாக தில்லி உயர் நீதிமன்றம் Bhagat Singh Vs. CIC & Anr [WP(C) 3114/2007, decision dated 03/12/2007] என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு நெறியை மைய தகவல் ஆணையம் சுட்டிக்காட்டியது. அத்தீர்ப்பின் 13-ஆம் பத்தியில் தில்லி உயர் நீதிமன்றம் பின்வருமாறு பொருள்விளக்கம் அளித்துள்ளது.

"13. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் தகவலை அணுகிப் பெறுதல் என்பது விதி என்றால், பிரிவு 8-இன் கீழான விலக்குகள், அதற்கான விதிவிலக்காகும். எனவே இந்த அடிப்படை உரிமை மீதான தடையாக இருக்கும் பிரிவு 8 கடுமையான முறையில் பொருள் கொள்ளப்பட வேண்டும். இந்த உரிமையையே மறைக்கும் முறையில் பொருள் விளக்கம் கொள்ளலாகாது. தகவலை வெளிப்படுத்துகையானது புலனாய்வு செயல்முறை அல்லது குற்றவாளிகளின் மீது குற்ற வழக்கு தொடர்கையை தடுக்கும் வகையில் இருந்தால்தான் பிரிவு 8-இன் கீழான விலக்கு வழங்கப்படும்.
ஒரு புலனாய்வு செயல்முறை நிலுவையில் உள்ளது என்பது மட்டுமே தகவலை வழங்க மறுப்பதற்கான ஓர் அடிப்படை ஆகாது என்பது வெளிப்படையானதாகும்; தகவலை வழங்காமல் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும் அதிகாரஅமைப்பானது, ஏன் அத்தகு தகவலின் வெளிப்படுத்துகை புலனாய்வு செயல்முறையை மேல்செல்ல விடாமல் முடக்கும் என்பதற்கு மனநிறைவளிக்கும் காரணங்களை காட்ட வேண்டும். அத்தகு காரணங்களும் தொடர்புடையதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் புலனாய்வு செயல்முறை முடக்கத்திற்குள்ளாகும் என்று பொது தகவல் அலுவலர் செய்த அபிப்பிராயமும் நியாயமானதாகவும், ஏதேனும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பரிசீலனை மட்டும் இல்லாது போனால், பிரிவு 8(1)(h) மற்றும் அத்தகு பிற வகைமுறைகளானவை தகவலுக்கான கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதற்கான ஓர் சொர்க்கமாகி விடும்."
Citation : File No. CIC/BS/A/2013/002090/5999 - Mr. Y.N.Chaubey Vs. CPIO & Under Secretary - Date of Decision : 16-09-2014 - Central Information Commission - Basant Seth, Information Commissioner.

14 September, 2014

"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வது எனது பொழுதுபோக்கு"


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால், அங்கீகரிக்கப்பட்ட விதிவிலக்கான சூழல்களில் தவிர, மற்ற நேர்வுகளில் பொது அதிகாரஅமைப்புகள் வகுத்துரைக்கபட்ட கால வரையறைக்குள் தகவல் கொடுத்தாக வேண்டும்; தகவல் தரத் தவறும் பொதுத் தகவல் அலுவலர்கள் அபராதம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றுக்கு உள்ளாவார்கள். இந்த சிறப்பம்சங்களை கொண்ட பயன்மிகு இச்சட்டத்தை பலர் பலவிதங்களில் பயன்படுத்தி பலன் பெற்றுள்ளனர்/பெற்று வருகின்றனர். அது தனிநலன் கருதியோ, பொது நலனை முன்னிட்டோ இருப்பதுண்டு.

ஆனால் சிலர் அரசு அலுவலகங்களை வேண்டுமென்ற சீண்ட இந்த சட்டத்தை ஒரு பொழுதுபோக்காகவும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அண்மையில் மைய தகவல் ஆணையம் ஒரு "குட்டு" வைத்துள்ளது.

ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தனது பொழுதுபோக்காக வைத்துக் கொள்ள முடியுமா ? அதிலும் குறிப்பாக தகவல் கேட்பதில் பொது நலன் ஏதும் உள்ளடங்காத நிலையில் ? இதை வாசிக்கும் போது நமக்கே ஒரு எரிச்சல் தோன்றுகிறது. அப்படியிருக்க மைய தகவல் ஆணையத்திற்கு கடும் எரிச்சல் தோன்றியதில் வியப்பு ஒன்றும் இல்லை.

அண்மையில் மைய தகவல் ஆணையத்தின் முன் நடந்த விசாரணை ஒன்றில் மனுதாரர் ஒருவர், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வது எனது பொழுதுபோக்கு, அந்த மனுக்களில் பொது நலன் ஏதும் கிடையாது" என்று மிகக்குளிர்ச்சியாக கூறினார். (இதைக் கேட்ட மைய தகவல் ஆணையத்திற்கு 'மூக்கின் மீது கோபம் வந்துவிட்டது' அல்லது 'தலை சுற்றியது' என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எனினும் நடை நயம் கருதி..) இதைக் கேட்டு மனுதாரர் மீது கடும் மனக்குறைவு அடைந்த மைய தகவல் ஆணையம், "பொது நலன் ஏதும் இல்லாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொழுதுபோக்காக மனு தாக்கல் செய்வது என்பது அரசாங்கத்தின் காலத்தையும், சக்தியையும் வீணடிப்பது. பொது அதிகாரஅமைப்பின் வளஆதாரங்களை பொருத்தமில்லாத வகையில் மாற்றிவிடக்கூடியது" என்று கடிந்து கொண்டது. [Sec. 7(9) An information shall ordinarily be provided in the form in which it is sought unless it would disproportionately divert the resources of the public authority or would be detrimental to the safety or preservation of the record in question.]

மனுதாரரை எச்சரிக்கும் முகமாக, "பொது அதிகாரஅமைப்பின் காலத்தையும் வளங்களையும் வீணடிக்கக்கூடாது என்றும், தவறினால் அப்படிப்பட்ட மேல்முறையீட்டையோ, புகாரையோ விசாரணைக்கு ஏற்காது என்றும்" மைய தகவல் ஆணையம் கூறியது.

முன்னதாக இந்த மனுதாரர் 11 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அவற்றில் சுமார் 15 முதல் 22 இனங்களில் தகவல் கோரியிருந்தார். அவை அனைத்தும் ஹிஸ்சூரில் உள்ள பிரச்சார் பாரதியின் (All India Radio) அரசாங்க மற்றும் தனியார் வாகனங்களின் பயணக்குறிப்பு புத்தகம் பற்றியது. இந்த தகவல் எதற்காக தேவைப்படுகின்றது என்றும், இதில் அடங்கியுள்ள பொது முக்கியத்துவம் என்ன என்பது குறித்தும் மைய தகவல் ஆணையம் வினவிய போது, தான் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இருந்து அத்தகு தகவலை 'பொழுதுபோக்காக' கேட்டதாகவும், அதில் பொது நலன் ஏதும் இல்லை என்றும் மனுதாரர் பதில் அளித்தார்.

இங்கு ஒன்று கவனிக்கத்தக்கதாக உள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி எதற்காக தகவல் கோரப்படுகின்றது என்று பொதுத் தகவல் அலுவலர் கேட்கக்கூடாது. வேறு விதத்தில் சொன்னால் தகவல் கோரிக்கைக்கான காரணங்களை பொது அதிகாரஅமைப்பு வினவக் கூடாது. இந்நிலையில் பிரிவு 7(9)-அய்ப் பயன்படுத்தி மைய தகவல் ஆணையம் மேற்கண்டவாறு கொடுத்த சட்டப் பொருள்விளக்கம் வரவேற்கத்தக்கது.

- Jaya Rajan

06 September, 2014

தண்டனைக் காலத்தில் பாதியளவை வழக்கு விசாரணை இன்றி அனுபவித்த கைதிகளை விடுதலை செய்

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி ஆணை !


குற்றம் மெய்ப்பிக்கப்படாமல், அதற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தில் பாதியளவை அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யும்படி  மைய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தண்டனை காலத்திற்கும் மேலாக இந்திய சிறைகளில் அடைபட்டுள்ள அயல்நாட்டு விசாரணைக் கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீதான விசாரணையின் போது, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணையை மாண்பமை இந்திய தலைமை நீதியரசர் ஆர்.எம்.லோதா தலைமையில் அமைந்த அமர்வாயம் பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி ஆணையின் விளைவாக, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேவேளையில், மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள விசாரணைக் கைதிகளுக்கு இந்த ஆணை பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதை செயல்படுத்துவதற்கான முறையை அந்தந்த வட்டாரத்திற்குரிய நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் ஆணையிட்டுள்ளது.

இந்த ஆணையை பிறப்பிக்கும் போது, சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலஅளவில் பாதியை நிறைவு செய்த கைதிகளை நீதிமுறை அலுவலர்கள் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும், சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் அந்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க அந்த சிறைச்சாலையிலே உரிய ஆணைகளை அவர்கள் பிறப்பிக்க வேண்டும் என்றும், மாண்பமை நீதியரசர் லோதா கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டறிய வரும் அக்டோபர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை  சட்ட அலுவலர்கள், சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டத்தை தங்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மைய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் தேக்கநிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மைய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருக்கின்றனர். இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் குற்றம் மெய்ப்பிக்கப்படாமலே பல ஆண்டுகளாக  சிறையில் உள்ளனர்.

05 September, 2014

இந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு

இந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு;
ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
----------------------------------------------------------------


இந்திய தலைமை நீதியரசராக தற்போது பதவியில் உள்ள மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதியரசராக எச்.எல். டட்டு நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த மூத்த நீதிபதி எச்.எல்.டட்டு :

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக உள்ள ஆர்.எம்.லோதா இம்மாதம் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எச்.எல்.டட்டு பணியாற்றி வருகிறார். இவரை அடுத்த தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து மைய அரசு பரிசீலித்து வந்தது. தற்போது, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தத்துவை தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும் தலைமை நீதியரசர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

1975-ல் வழக்குரைஞராக தனது சட்டத் தொழிலை தொடங்கியவர் :

1950-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி டட்டு, 1975-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பெங்களுரில் தனது சட்டத் தொழிலை தொடங்கினார். 1995-ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக பணியாற்றினார். இதை அடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவர் :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, நீதிபதிகள் நியமனத்திற்காக "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை" (National Judicial Appointments Commission Bill)   நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சட்டமாக்கப்பட்டு, இதன் தலைவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு ஏற்று கொள்வார். இதனால், அடுத்த தலைமை நீதியரசராக  நியமிக்கப்பட உள்ள எச்.எல்.தத்துவுக்கு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவராகும்  வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பணிக்காலம் :

தற்போது 63 வயதாகும் டட்டு, இப்பதவியில் ஓராண்டிற்கும் சற்று மேலாக அதாவது டிசம்பர் 2015 வரை நீடிப்பார்.

கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு :

இவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றின் போது, தான் கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு ஆகிய மூன்று கோட்பாடுகளை நம்புவதாகவும், தான் இன்று  இந்நிலையில் இருப்பதற்கு காரணம் தனது பெற்றோர்கள், தனது குருவான மேனாள் இந்திய தலைமை நீதியரசர் ராஜேந்திர பாபு, கடவுள் பாலாஜி ஆகியோரின் ஆசிகள்தாம், என்று குறிப்பிட்டார்.

03 September, 2014

கங்காவை காப்பாற்று...!

மிகப் 'புனிதமானது' எனப்படும் ஒன்றை 'சுத்தப்படுத்த' வேண்டும் என்று எவரேனும் சொன்னால் அது நமக்கு சற்று வியப்பாகத்தான் இருக்கும். "அதுவே புனிதமானது; அப்படியிருக்க அதை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?" என்ற கேள்வி எழுகிறது அல்லவா..? இந்த அவல நிலைதான் புனிதமான கங்கைக்கும் ஏற்பட்டுள்ளது. 

கங்கை கரையில் பிணங்களை எரித்து, அரைகுறையாக நீரில் தள்ளி விடுவது, வைதீக காரிய பொருட்களை அப்படியே நீரில் விடுவது, துர்கா சிலைகளை கரைப்பது, குப்பைகளை சேர்த்து கொட்டுவது என நாளுக்கு நாள் கங்கை கடுமையாக மாசடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் வாசிகளே முகம் சுளிக்கும் அளவிற்கு பிரச்சனை விசுவரூபம் எடுத்து விட்டது. இதை மெல்ல உணர்ந்த மைய அரசு, "கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை" (Ganga cleaning plan) கொண்டு வந்தது. ஆனால் முழுமையற்ற இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு ஒன்றின் போது, "இதே நிலை நீடித்தால் இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் கங்கையை உங்களால் சுத்தப்படுத்த முடியாது. கங்கையின் சுத்தமான பொலிவை நாங்கள் பார்க்க முடிகின்றதோ இல்லையோ, வருங்கால சந்ததியினர் காணும் வகையில் அதன் பொலிவைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறி மைய அரசையும் அதன் செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் முடுக்கிவிட்டுள்ளது.
மைய அரசே கங்காவை விரைவில் காப்பாற்று..!

- Jaya Rajan

03 July, 2014

ஆர்குட்டுக்கு மூடு விழாவாம்....!

 ஆரம்பத்தில் அதாவது 2005-06 ஆண்டுகளில் நான் 'ஆர்குட்' பயன்படுத்தி வந்தேன். அந்தக் காலகட்டத்தில் ஆன்ட்ராய்டு போன்கள், 3G போன்ற வசதிகளுக்கு பெரிய அறிமுகம் ஏதும் இங்கில்லை. எனவே ஆர்குட்டில் நுழைய கணினியை பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.
அதே காலகட்டத்தில் Blog என்ற இப்படிப்பட்ட வலைப்பதிவுகளில் எழுதுவது பெரிதும் வளர்ச்சியுற்றது. 'நான் ஒரு பிளாக் ஓனர்' என்று சொல்வது 'நான் ஒரு பிளாட் ஓனர்' என்று பெருமையாக சொல்வதற்கு ஒத்ததாக இருந்தது. இதனால் 'ஆர்குட்' கவர்ச்சி குறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் நான்  "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision" என்ற எனது வலைப்பதிவில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். பல்வேறு நாடுகளில் இருந்து இதுகாறும் சுமார் 1,25,000 பேர் வாசித்துள்ளனர் அல்லது வருகை தந்துள்ளனர்.  இருந்தாலும் வலைப்பதிவு மூலம் கருத்து மற்றும் கட்டுரை வெளியிடும் ஆர்வம் அல்லது மோகம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வருகையால் கொஞ்சம் குறைந்தது. இது ஆன்ட்ராய்டு போன், டேப் மற்றும் 3G யின் சகஜ வருகையால் மேலும் குறைந்தது.

இந்நிலையில்தான் ஆர்குட்டை அனைவரும் சுத்தமாக மறந்து போயினர். தனது சரிவைப் பற்றி ஆர்குட்-ம் பெரிதாக கவலைப்படவில்லை.

ஆர்குட் தொடர்பின் போது அயல்நாட்டு வாழ் தமிழர்கள் நிறைய பேர் எனக்கு நண்பர்களாயினர். சிறிது காலம் பழகினாலும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி தொடர்பு ஆகியவற்றுக்கு அடுத்து ஆர்குட்டே எனக்கு மிகப்பெரிய சமூக வலைத் தொடர்பாக இருந்தது.

அதற்கு மூடு விழாவாம்.... நெஞ்சம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது... ஆர்கூடே இனி நீ யார் கூடவும் இல்லை.... 

25 June, 2014

தகவல் கோரும் மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றியனுப்பு அல்லது அத்துறைடமிருந்து தகவலை சேகரித்து கொடு - மைய தகவல் ஆணையம்.

 தகவல் கேட்டு த.அ.உ. சட்டம் பிரிவு 6(1) -இன்படி மனு செய்தால் பொதுத் தகவல் அலுவலர் தகவல் தர வேண்டும். அல்லது அத்தகவல் எந்த பொது அதிகார அமைப்பிடம் உள்ளதோ அதன் பொதுத் தகவல் அலுவலருக்கு மனுவை பிரிவு 6(3)-இன் கீழ் மாற்றி அனுப்புதல் வேண்டும். மேலும் அது குறித்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு மனு பெற்ற தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிகுதல் ஆகாது.

அண்மைக்காலமாக தகவல் கோரும் மனுக்களை பொதுத் தகவல் அலுவலர்கள் இந்தப் பிரிவுகளை பயன்படுத்தி பந்தாடிக் கொண்டு வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. "தாங்கள் கோரும் தகவல் அங்கு உள்ளது, இங்கு உள்ளது" என்று மனுவை மாற்றி அனுப்புதல், மாற்றிப் பெற்ற பொ.த.அலுவலர் அம்மனுவின் மீது காலதாமதமாக நடவடிக்கை எடுத்தல், அல்லது பதில் தெரிவிக்காமை, மனுதாரரை அலைக்கழிக்க வைத்தல், இப்படி இச்சட்டத்தின் வலிமை நீர்த்துப் போகுமளவிற்கு செயல்பாடுகள் தொடர்கின்றன.

இந்நிலைப்பாட்டை மைய தகவல் ஆணையத்தின் அண்மைக்கால ஆணை ஒன்று களைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆணையின் பொருள் விளக்கப்படி,

(1) மனுவைப் பெறும் பொதுத் தகவல் அலுவலர் ஒன்று தகவல் கொடுக்க வேண்டும் அல்லது அத்தகவலை வைத்துள்ள அலுவலருக்கு அல்லது துறைக்கு மனுவை பிரிவு 6(3)-இன்படி (காலவரம்பிற்குள்) மாற்றி அனுப்புதல் வேண்டும்.

(2) அப்படி பிரிவு 6(3)-இன் கீழ் மாற்றி அனுப்பவில்லை என்றால், எந்த பொதுத் தகவல் அலுவலரிடம் அல்லது துறையிடம் அத்தகவல் உள்ளதோ அவரிடமிருந்து அதை சேகரித்துப் பெற்று மனுதாரருக்கு அனுப்புதல் வேண்டும்.

அருமையான ஆணை. 

File No. CIC/AD/A/2013/001265­SA - Date of Decison : 18­-06­-2014.

24 May, 2014

உலக கல்விக் காட்சி விழா, 2014 - ஓர் சர்வதேச கல்வி உற்சாகம்

World Education Fair, 2014 - 
An International Education Enthusiasm

அயல்நாட்டில் கல்வி கற்க வேண்டும், தொடர்ந்து வேலை வாய்ப்பையும் உடனடியாக பெற வேண்டும் என்ற பேரார்வம் அங்கு வந்திருந்த இளைஞர்கள், யுவதிகள் முகங்களில் பிரகாசமாக காண முடிந்தது.

பெங்களூரு, எம்.ஜி.சாலையில் அமைந்துள்ள 'விவந்தா பை தாஜ்' என்ற நட்சத்திர சர்வதேச விடுதியின் முதல் தளத்தில் கடந்த 22/5/14இல் நேர்த்தியாக நடைபெற்ற இந்த கல்விக் காட்சி விழாவில் பிரிட்டன், அய்க்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


விண்ணப்பம், பதிவு போன்ற வழக்கமான சடங்குகள் முடிந்த பின்னர், எந்த நாட்டில், எந்த படிப்பை படிக்க விரும்புகின்றோம் என்பதை அறிந்து அதற்கொப்ப அந்தந்த நாட்டு பல்கலைக்கழக பிரதிநிதியிடம் மாணவ, மாணவியர் அனுப்பப்பட்டனர். மிகப் பெரிய கூட்ட அறை ஒன்றில் நமது நாட்டு உதவியாளர் ஒருவருடன் வரிசையாக அமர்ந்திருந்த அப்பிரதிநிதிகள் மாணவ, மாணவியர்க்கு மிக அழகாக விளக்கமளித்து வழி காட்டினர். 

பொறியியல், மேலாண்மை, தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை படிக்க நிறைய பேர் ஆர்வம் காட்டினர். சட்டத்தில் மேற்படிப்பு தொடர்பாக எனக்கு புகழ்பெற்ற எஸ்செக்ஸ் பல்கலைக்கழக பிரதிநிதி (பிரிட்டன்) நன்றாக விளக்கினார். எல்எல்.எம். ஓராண்டு படிப்புக்கு உண்டான கட்டணம் நமது இந்திய மதிப்பில் ரூபாய் 10 முதல் 12 இலட்சம். பிறகு உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்கு ரூபாய் 8 இலட்சம். மொத்தம் ரூபாய் 20 இலட்சம் வரை இருந்தால் படிப்புக்கு தயாராகலாம். கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அவர்களே நுழைவிசைவிற்கு (விசா) ஏற்பாடு செய்கின்றார்கள். அதுபோல உணவு, பல்கலைக்கழக விடுதி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. பாதுகாப்பு பிரச்சனை ஏதுமில்லை. எல்லாமே சட்டபடியும், அதிகாரப்பூர்வமாகவும் உள்ளது.

இது ஒருபுறம் என்றால், நிறைய பேர் எம்.பி.ஏ. (MBA) படிக்க ஆர்வம் காட்டினர். அயல்நாட்டில் எம்.பி.ஏ. படிக்க வேண்டுமென்றால், வணிக மேலாண்மை அல்லது வேறு படிப்பில் இளநிலை பட்டம் பெற்ற அம்மாணவர், நிறுவனம், தொழிலகம் போன்றவற்றின் மேலாண்மையில் 2 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனித வளம், மேலாண்மை போன்ற முக்கிய கிளைகளில் சேர முடியும். இல்லாவிட்டால் நிதி, வங்கியியல் போன்ற வேறு கிளைகள் கிடைக்கின்றன. பணி அனுபவம் இருப்பவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகின்றது.உளவியல், அரசியல் விஞ்ஞானம், நாட்டிடை உறவுகள், சமூகவியல், மானுடவியல், ஊடக அறிவியல். தகவல் தொடர்பு என விதம்விதமான படிப்புகளை இப்பல்கலைக்கழகங்கள் வழங்கும் சிறு பிரசுரங்கள், கையேடுகள் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

சேர விரும்பும் படிப்பு எதுவாக இருந்தாலும், இப்பல்கலைக்கழகங்கள் குறிப்பாக கவனிப்பதும், விசாரித்து தெரிந்து கொள்வதும் எவை என்று கேட்டால் 10வது மற்றும் +2வில் பெற்ற மதிப்பெண்கள்தாம். இவை இரண்டிலும் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டுக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டியது விரும்பத்தக்கது என்று வலியுறுத்துகின்றனர். அவ்வாறே ஆங்கிலப் பாடத்தில் 70 விழுக்காட்டிற்கும் மேல் பெற்று இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக பிரதிநிதியிடம் பேசும்பொழுது அவர், "அயல்நாட்டில் கல்வி அல்லது மேற்கல்வியை கற்பது என்பது ஒரு புதிய அனுபவம். அது கல்வித் தகுதியோடு தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலையும் தருகின்றது. மொழியை பேசுவதற்கும், அறிவை அறிந்து கொள்ளவும் பயனாகின்றது. இவையே உடனடியாக ஒரு பெரிய வேலை வாய்ப்பை பெற்றுத் தந்துவிடும்," என கூறினார். இங்கு 'கூறினார்' என்பதை விட நுனிநாக்கு ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மெல்லிய பாட்டாக பாடினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாலை 6 மணி வரை நீடித்த இந்த ஓர் நாள் கல்வி விழாவில் கலந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது.

விவந்தா பை தாஜ் விடுதியின் தரை தளத்தில் உணவகம் உள்ளது. எனவே புறப்படும் முன் அங்கு சென்றேன். தரை தளத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள அந்த உணவகத்தின் கட்டுமானம் வெகு அழகு. அதன் உணவு விவர விலைப் புத்தகத்தின் (மெனு புக்) அலங்காரமான வடிவமைப்பு ஒன்றே, அங்கு வழங்கப்படும் உணவின் விலையை சொல்லாமல் சொல்லக் கூடியதாகும். எனவே தக்காளி சூப்பிற்கு மட்டும் கட்டளை வழங்கி, நீச்சல் குளத்தருகே உள்ள மேஜையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன். இதற்கு இடைப்பட்ட சுமார் அரை மணி நேரத்தில் சில நிழற்படங்களை எடுத்தேன்.
இதைத் தொடர்ந்து புதினா இலை போட்டு, மிக மென்மையான சில நல்ல வாசனைகளுடன் (?!), மிகச் சூடாக தக்காளி சூப் வழங்கப்பட்டது. அதில் இட்டு சாப்பிட தனியாக ரொட்டி மற்றும் வருக்கி தரப்பட்டன. அவ்வாறே பசும் வெண்ணை ஒரு கிண்ணியில் வழங்கப்பட்டது. எனக்கு தக்காளி சூப்புடன் வருக்கியே சுவையானதாக இருந்தது.

மனதும், வயிறும் நிறைவாயின.

08 April, 2014

மனைவியின் மொழியை புரிந்து கொள்வது எப்படி ?

சார் .... நீங்க ஒரு மேதாவியா இருக்கலாம்....! இல்லே... எந்த சொல்லுக்கும் விளக்கம் சொல்ற ஒரு அகராதியா கூட இருக்கலாம்...!! சரி.. அப்படி கூட வாணாம்..... 3வது மாடியிலே பெரிய பெரிய பல்பு போட்ட ரூம்லே ஏசி போட்டு வேலை பாக்குற சீனியர் ஆபிசரா கூட இருக்கலாம். ஆனா என்ன பிரயோசனம்...?

உங்களுக்கு உங்க மனைவியின் மொழி தெரியுமா...? அவங்க பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும், வரிக்கும் ஒரு தனி அர்த்தம், பொருள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா...? 

"அது தெரிஞ்சா, நான் ஏன் சார் இப்படி காலாகாலத்துக்கு வீட்டுக்கு போகமே, பொழுதென்னைக்கும் ஆபிசு, வேலைன்னு மாரடிச்சிகிட்டு இருக்கேன்" என்று சொல்கிறீர்களா...? 

கவலைப்படாதீர்கள்... கை கொடுக்கும் கையாக உங்களுக்கு நான் சில எளிய எடுத்துக்காட்டுகளை அடுத்தடுத்து முன் வைக்கின்றேன்...  (இது 'நீ ரொம்போ நல்லவொ' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளி வந்த பதிவின் இரண்டாம் பாகம் என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது). சரி .... பாடத்தை ஆரம்பிக்கலாமா...? 

மனைவி : சரி.. உங்க இஷ்டம்
பொருள் :  நான் சொல்றதுதான் கரெக்ட். அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செய்ங்க... போங்க...
பொருள் :  பின்னாடி எப்படியும் என்கிட்டேதானே வருவீங்க... அப்போ பாத்துக்குறேன்.

மனைவி : தாராளமா செய்யுங்க ....
பொருள் : எனக்கு துளி கூட இஷ்டமில்லே.

மனைவி : நான் இந்த வீட்டிலே யாரு..? வெறும் ஒப்புக்கு சப்பாதானே...?
பொருள் : இரு... இரு... உன்னை என்ன பண்றேன் பாரு...

மனைவி : என்னை என்ன கட்டுன பொண்டாட்டி மாதிரியா நடத்துறீங்க..?
பொருள் : நீதான் எனக்கு அடிமையே தவிர நான் அல்ல.

மனைவி : இது நமக்கு வேணும்..
பொருள் : எனக்கு வேணும்.

மனைவி : இதிலே எனக்கு ஒன்னும் வருத்தமில்லை.
பொருள் : வருத்தமாக இருக்கின்றேன்.

மனைவி : பக்கத்துக்கு வீட்டு வசந்தியோட மாமியார் என்னை நீங்க நல்ல வெச்சிக்கிட்டு இருக்கீங்களான்னு கேட்டாங்க...
பொருள் : பக்கத்து வீட்டுக்காரனோட எதற்காகவாவது பின்னாளில் சண்டை போட வேண்டும்.

மனைவி : போங்க... நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க...
பொருள் : முதல்லே ஷேவ் பண்ணுடா வெண்ணை....

மனைவி : உங்க ஆபீஸ் பக்கத்திலேயே வீடு இருந்தா பரவாயில்லே...
பொருள் : வீடு மாற்ற வேண்டும்....

மனைவி : என்னை உங்களுக்கு பிடிக்குமா...?
பொருள் : பெருசா ஏதோ கேட்கப் போகின்றேன்.

மனைவி : என் புஜிலி குட்டி இல்லே.. என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு சொல்லுங்க பாக்கலாம்...?
பொருள் : உங்களுக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கின்றேன்.

மனைவி : இங்கே நான் ஒருத்தி இருக்கேன்...
பொருள் : கண்களை கண்டபடி மேய விடாதே....

மனைவி : எனக்கு பிரைடு ரைஸ் ரொம்ப பிடிக்கும்.
பொருள் : எனக்கு சைனீஸ் மெனு பூராவும் பிடிக்கும்.

மனைவி : நான் குண்டாயிட்டேன் இல்லே...
பொருள் : அழகாக சிலிம்மா இருக்கேன்னு சொல்லு.

மனைவி : இன்னிக்கு செஞ்ச புது டிபன் ஐட்டம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கின்றேன்.
பொருள் : ஒய்யலே .... செஞ்சு போடுறதே அப்படியே சாப்பிட பழகிக்கோ...

மனைவி : இதுலே பேச ஒண்ணும்மில்லே
பொருள் : நிறைய இருக்கு.

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலே.
பொருள் : ஏதாவது பேச ஆரம்பிப்பதாக இருந்தால், அதை முதலில் பேசுங்கள்.

மனைவி : பாருங்க.. எனக்கு எதுவும் வேணாம்...
பொருள் : எல்லாம் வேண்டும்.

மனைவி : அந்த சட்டை வேணாம்... இந்த சட்டை உங்களுக்கு ரொம்ப அழகாக இருக்கும். இதேயே வாங்கிக்கோங்க...
பொருள் : நீங்க என்னை விட 'லுக்'காக தெரியக் கூடாது.

மனைவி : குடும்பத்திலே ஆயிரம் இருக்கும்; ஆயிரம் நடக்கும்.
அதையெல்லாம் நீங்க அப்படியே வெளியே சொல்லக்கூடாது.
பொருள் : தான் அவ்வப்போது (சொற்களால்) அடித்து சித்ரவதை செய்வதை வெளியே சொல்லக் கூடாது.

மனைவி : ஏங்க... நான் திடீர்ன்னு செத்துப் போய்ட்டா...?
பொருள் : நீங்க உயிரோட இருக்கறப்போவே என்னோட பியுசர் லைஃபுக்கு வேண்டிய செக்யூரிட்டியை பண்ணிடுங்கோ....!

மனைவி: இது முடியாது.
பொருள் : ஆனா.. நானா இருந்தா முடிச்சி காண்பிப்பேன். 

மனைவி: இது முடியும்.
பொருள் : நீங்க எப்படி முடிப்பீங்கன்னு நான் பாக்கத்தானே போறேன்...? ஹாஹ..ஹா.....

மனைவி : எதுவும் பேசாமல், கண்களை பெரிதாக்கி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது.
பொருள் : விபரீதமாக ஏதாவது நடப்பதற்கு முன் சரண்டர் ஆகி விடு.

மனைவியின் மொழிக்கு பொருள் தெரிந்து முழி பிதுங்கி விட்டதால்,
இப்போதைக்கு இது போதும்...!

என்றும் அன்புடன்,
பி.ஆர்.ஜெ.

03 April, 2014

இறந்து போன மனைவியின் பணத்தைக் கேட்க, திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வாசித்தேன். கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் வாதத்தைகேட்டறிந்து மாண்பமை நீதியரசர் பால் வசந்தகுமார் கடந்த மார்ச் 28-ஆம் தேதி நல்கிய தீர்ப்பு அது.

இதில் இறந்து போன மனைவியின் பணப்பலன்களை கேட்க திருமணமே செல்லாது என்று விளம்பக் கோரி வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

வழக்கின் சங்கதிகள்படி காஞ்சனா என்பவர் தமிழக அரசின் வருவாய்த் துறையில் இள நிலை உதவியாளராக 1993-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். பின்னிட்டு வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த காஞ்சனா, 1996-ஆம் ஆண்டில் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் நடந்த சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, காஞ்சனா தனது தாய்வீடு திரும்பி விட்டார். இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. தாய் வீடு சென்ற காஞ்சனாவை, பிரகாஷ் திரும்ப அழைக்கவில்லை. மாறாக தனக்கும் காஞ்சனாவுக்கும் நடந்த திருமணம் செல்லத்தக்கதல்ல என்று விளம்பக் கோரி (praying for a declaration of nullity of marriage) பிரகாஷ் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். காஞ்சனா இந்த வழக்கை எதிர்த்து வழக்காடி வந்தார். 

மண வாழ்க்கையும், வழக்கும் தந்த மன உளைச்சல் காரணமாக, காஞ்சனா உடல் நலம் குன்றி நோய் வாய்ப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட பிரகாஷ் அவரை வந்து பார்க்கவில்லை. இந்த வேதனைகளின் காரணமாக மேலும் உடல் நலம் பாதித்து காஞ்சனா 2011-ஆம் ஆண்டில் இறந்து போனார். அவரது இறுதிக் காரியங்களுக்கு கூட பிரகாஷ் வரவில்லை. காஞ்சனாவின் இறப்பு நிகழும் வரை வழக்கு நடந்து கொண்டிருந்தது. அதை எதிர்த்து காஞ்சனா வழக்காடி வந்தார். 

காஞ்சனா இறந்து போன பிறகு, அவருக்குரிய பணப் பலன்களை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பிரேமாவதி வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தார். இதற்கு பிரகாஷ் ஆட்சேபணை செய்தார். இறந்து போன காஞ்சனாவின் கணவர் என்ற முறையில் தனக்கே அவரது பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். எனவே மகள் காஞ்சனாவின் பணப்பலன்கள் ஏதும் பிரேமாவதிக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

இறப்புக்கு பின் பலனை அடையும் நபராக (நாமினி) காஞ்சனா தனது தாயார் பிரேமாவதியின் பெயரை தனது பணி படிவங்களில் குறிப்பிட்டு இருப்பதால், அவருக்கே அப்பலன்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் பிரேமாவதியின் சார்பில் கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் அவர்கள் வாதிட்டார். மேலும், காஞ்சனாவின் இறப்பிற்கு முன் திருமணமே செல்லாது என்று மனு தாக்கல் செய்து விட்டு, தற்போது அவர் இறந்த பிறகு கணவர் என்ற முறையில் பலன் தனக்கு தரப்பட வேண்டும் என்று பிரகாஷ் தரப்பில் முன் வைக்கப்படும் வாதம் ஏற்புடையதல்ல என்றும் அவர் வாதிட்டார். 

தனது மகளின் வாழ்வை துயரத்தில் தள்ளியதோடு மட்டுமல்லாமல், நடந்த திருமணத்தையும் செல்லாத ஒன்றாக விளம்பக் கோரியவருக்கு தனது மகளின் இறப்பினால் கிடைக்கும் எந்தப் பலனும் சென்றடையக் கூடாது என்று அத்தாயார் முன் வைத்த வாதத்தை மாண்பமை நீதியரசர் பால் வசந்த குமார் ஏற்றுக் கொண்டு, காஞ்சனாவின் அனைத்து பலன்களையும் அவரது தாயார் பிரேமாவதிக்கு வழங்க ஆணையிட்டார். 

அவர் தனது தீர்ப்பில், பெயர் நியமன படிவத்தில் காஞ்சனா தனது தாயார் பிரேமாவதியின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளார். அதை அவர் மாற்றவில்லை. எனவே அவரது பணப் பலன்களை கோர பிரகாசுக்கு சட்டப்படியான உரிமை இல்லை. வாழும் பொழுது காஞ்சனாவை தனது மனைவியாக பிரகாஷ் ஏற்கவில்லை. அந்த திருமணத்தை செல்லாது (disclaimed the marriage) என்று விளம்பக் கோரியிருந்தார். எனவே காஞ்சனா இறந்த பிறகு அவரது பணப்பலன்களை பெற பிரகாசுக்கு தார்மிக உரிமையும் இல்லை. எனவே காஞ்சனாவின் பணப் பலன்களை அவரது தாயாருக்கு வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு காலமாக வழக்கை தாமதப்படுத்தியதால் அவருக்கு பத்தாயிரம் ரூபாயை வழக்கு செலவுத் தொகையாக வருவாய்த் துறை வழங்க வேண்டும், என்று ஆணையிட்டார்.

01 April, 2014

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா


மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான திரு ஆர்.எம்.லோதா, இந்தியாவின்  41வது தலைமை நீதியசராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர், ஏப்ரல் 26ஆம் தேதியில் ஓய்வு பெறும் இந்திய தலைமை நீதியரசர் பி.சதாசிவத்திற்கு அடுத்து அப்பதவியில் அமர உள்ளார். இந்நியமனத்திற்கான அறிவிக்கை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

இராஜஸ்தான் உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் எஸ்.கே.மால் லோதாவின் மகனான ஆர்.எம்.லோதா தனது சட்டக்கல்வியை ஜோத்பூர் பல்கலைகழகத்தில் படித்து முடித்து, 1973-ஆம் ஆண்டில் இராஜஸ்தான் வழக்குரைஞர் பெருமன்றத்தில் தன்னை ஒரு வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டார். இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத் தொழிலை ஆரம்பித்த திரு ஆர்.எம்.லோதா, 1994-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதியில் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னிட்டு பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 

தொடர்ந்து வந்த காலகட்டங்களில் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், 1974-ஆம் ஆண்டின் காபிபோசா சட்டம், 1981-ஆம் ஆண்டின் எம்.பி.டி.எ. சட்டம் ஆகியவற்றின்  கீழ் கட்டமைக்கப்பட்ட ஆலோசனை வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். இதை அடுத்து இவர் 2007-ஆம் ஆண்டில் மீண்டும் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கே பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு இவர் நிருவாகத்துறை நீதிபதியாக பணியாற்றினார். மேலும் ஜோத்பூர் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் செயல் துறை உறுப்பினராகவும், இராஜஸ்தான் மாநில நீதிமுறை கல்விக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.  
2008-ஆம் ஆண்டில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக நியமனம் செய்யப் பட்டார். தொடர்ந்து அதே ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 
உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய கடந்த 5 ஆண்டுகளில், இவர் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை நல்கியுள்ளார். வழக்கொன்றில் இவர் சில்லறை  விற்பனை கடைகளில் அமிலம் விற்பதற்கு தடை விதித்து, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 3 இலட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்க ஆணையிட்டார். 
  • Satya Pal Anand vs. State of MP [2013 (10) SCALE 88) என்ற மற்றொரு வழக்கில் வன்புணர்வு குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 10 இலட்ச ரூபாய் வழங்க ஆணையிட்டார். 
  • Deepak Aggarwal v. Keshav Kaushik என்ற வழக்கில், அரசு குற்ற வழக்கறிஞராக அல்லது அரசு உரிமையியல் வழக்குரைஞராக நியமனம் செய்யப்படும் ஒருவர், 1961-ஆம் ஆண்டின் வழக்குரைஞர் சட்டம் மற்றும் இந்திய வழக்குரைஞர் மன்ற விதிகளின் கீழ் 'வழக்குரைஞர்' -ஆக செயல்படுவதற்கு அற்றவர் ஆகிவிட மாட்டார் என்று தெளிவு படுத்தினார். 
  • விசாகா - 2 என்று சிறப்பாக அழைக்கப்படும் Medha Kotwal Lele v. Union of India என்ற வழக்கில், பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க மேலும் பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துரைத்தார். 
  • Bar Council of India v. Union of India என்ற வழக்கில் 'நிரந்தர மக்கள் மன்றங்களை' கட்டமைக்க வகை செய்யும் 1987-ஆம் ஆண்டின் சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டப்  பிரிவு 6எ-இன் செல்லுந்தன்மையை நிலை நிறுத்தினார்.

அண்மையில் மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலிக்கு எதிராக, அவரிடம் சட்டப் பயிற்சிக்காக சேர்ந்த பெண் ஒருவர் செய்த பாலியியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த மூன்று நபர் அடங்கிய குழுவிற்கு நீதியரசர் லோதா தலைமை வகித்தார். அப்பெண்ணின் எழுத்துபூர்வமான மற்றும் வாய்மொழியான வாக்கு மூலங்களை பதிவு செய்த இக்குழு தனது முடிவில் 'வரவேற்கத்தக்கதற்ற நடத்தை'-க்கான செயலை அவை வெளிப்படுத்துவதாக கூறியது. இதன் விளைவாக நீதியரசர் கங்குலி தான் வகித்து வந்த மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை துறந்தார். 

14 February, 2014

பாலு மகேந்திரா மற்றும் அகிலா, ஷோபா, மௌனிகா

நான் காமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் தீவிர ரசிகன். அவரது ஒளிப்பதிவே காட்சியை வசனமாக்கும். அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் உணர்வு பூர்வமானவை.  சொல்லும் கதை என்னமோ ஒரு வரிதான். ஆனால் அதில் ஓராயிரம் நுண் உணர்வுகளை கூட்டி நம்மையும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மனதில் ஆக்கியவர். அவரது படைப்புகள் அனைத்தும் வாழ்வின் யாதார்த்தத்தை அழகாக, அமைதியாக பிரதிபலிக்கும்.

அவரைத் தவிர வேறு யாரும் இது வரை  ஊட்டியை இந்த அளவு அற்புதமாக காட்சிப் பேழைக்குள் பதிந்து, திரைக்கு தந்து  இருக்கமாட்டார்கள். அவரது படங்களில் கதாநாயகிகள்  தங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வரும் நாலணா அளவு பொட்டு ஒரு வித கவர்ச்சி கலந்த அழகை காட்டும். நடிப்பவர்களின் உடல் மொழியை இயக்குவதில் வல்லவர்.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934-இல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஓர் சிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், மூத்த இயக்குனர், தமிழ் சினிமா உலகின் முக்கிய படைப்பாளி. அவரது மரணம் சினிமா உலகிற்கு ஓர் பேரிழப்பு.

ரசிகர்கள் பலரது மனதிலும்  இடம்பெற்றவர் பாலு மகேந்திரா. அதே நேரத்தில் அவரது மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் அகிலா, ஷோபா, மௌனிகா.பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார்.

இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திராவின் கருத்து என்ன…? இதோ அவரது வார்த்தைகளில்….

“சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத்தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள்தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான்.

இந்த உறவை (மௌனிகாவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. ..........

மௌனிகாவின் பேரன்பு… மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வமாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு. ‘இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?”
”காரணம் மௌனியின் பேரன்புதான். ‘நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்ட வளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும். இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதேசமயம், என்அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!
”மௌனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?”
”ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனி மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.’
”மௌனிகாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?”
”என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், ‘பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு’ என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98|ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன். மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.
‘ நான் பாலு மகேந்திராவின் மனைவிதான்… ஆனால் திருமதி பாலுமகேந்திரா அல்ல!! நான் திருமதி பாலுமகேந்திரா அல்ல… என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டவர் மௌனிகா. ஏன் அப்படி? “பாலு மகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது. 
முதலில் பாலுமகேந்திரா என்ற பெயரைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அவரது தகப்பனார் பெயர் பாலநாதன். நண்பர்களாலும் உறவினர்களாலும் அவர் ‘பாலு’ என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆக, பாலுமகேந்திரா என்ற பெயரில் அவருடைய தகப்பனாரது பெயரும் சேர்ந்திருக்கிறது. எனவே, பாலுமகேந்திரா என்ற பெயர் ஒரு தனி நபரின் பெயரல்ல. அது பாலுமகேந்திராவைத் தலைவராகக் கொண்ட அவரது நேரடிக் குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவி அகிலாம்மா, மகன் ஷங்கி, பேரன் ஷிறேயாஸ், மருமகள் ரேகா ஆகியோரது குடும்பப் பெயர். ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது |
இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்! பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை முதன்முதலாக அவர் பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம். எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசிக்கிறேன். அவரும் அப்படித்தான். எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலு மகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும். என்னை பாலு மகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள். மனைவி என்பதும் துணைவி என்பதும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கும் வார்த்தைகள்தான். இருப்பினும் ஒரு ஆண், இரண்டு சம்சாரங்களுடன் வாழும்போது, பிரித்தறிதல் வேண்டி, மூத்த சம்சாரத்தை மனைவி என்றும் இளைய சம்சாரத்தை துணைவி என் றும் குறிப்பிடுதல் அவசியமாகிறது. இப்போது எனது பிரார்த்தனையெல்லாம், இந்த மனிதர் மறுபடியும் ஆஸ்பத்திரி அது இது என்று போகாமல், ஆரோக்கியமாக அவருக்குப் பிடித்த சினிமாவைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வரத்தை இறைவன் நிச்சயம் எனக்குத் தருவார்!

படம்

எனில்… ஷோபா யார்? அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!! ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்…
“தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா… நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா… குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா…? அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..? எதை? எதை எழுதுவது? மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன.
நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை “அம்போ” என்று விட்டு விலகிக்கொள்கிறது. அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…? ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.
” எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது. தேவலோகவாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.
ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம். அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை” படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன். ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு.. எனக்கு… எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்…!”

Related Posts Plugin for WordPress, Blogger...