என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

24 September, 2014

தப்பித்தது ....! தகவல் அறியும் உரிமை சட்டம்...!!


கடந்த 17-09-2014-ஆம் தேதி நமது சென்னை உயர் நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக முக்கியத் (!) தீர்ப்பு ஒன்றை பகர்ந்தது. அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உயிரோடு குழிதோண்டிப் புதைக்க முனைந்த  தீர்ப்பு என்று சொன்னால் மிகையாகாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி தகவல் கேட்பவரிடம் எதற்காக தகவல் தேவைப்படுகின்றது என்பதற்கான காரணங்களை பொதுத் தகவல் அலுவலர் கேட்கக் கூடாது. மனுதாரர் கேட்கின்ற தகவல் இருக்கும் பட்சத்தில் அதனை காரணம் ஏதும் கோராமல் பொதுத் தகவல் அலுவலர் வழங்க வேண்டும். இந்த ஒரு சிறப்பான வகைமுறை காரணமாக மக்கள் உரிமைச் சட்டங்கள் பலவற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிரீடமாக விளங்குகின்றது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் The Public Information Officer, The Registrar (Administration), High Court, Madras Vs. The Central Information Commission, rep. by its Registrar, New Delhi and Mr. B.Bharathi (W.P. No. 26781 of 2013 & M.P. No. 1 of 2013) என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில் தகவல் கேட்டு மனு செய்பவர் அதற்கான குறைந்தபட்ச காரணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அதிரடியான, ஆனால் பிரிவு 6(2)-அய் மீறிய தீர்ப்பை வழங்கி எல்லோரையும் கதிகலங்க வைத்தது.

பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரி மனு செய்தார். அவர் கோரிய தகவல்கள் யாவும் அவர் தொடுத்த வழக்கு மற்றும் புகார் தொடர்பானவை. அவர் கோரிய தகவல்களை அவருக்கு வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு மைய தகவல் ஆணையம் ஆணையிட்டது. இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தார்.

அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறான காரணத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க, தகவல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் கோருவது சொந்த நலனுக்கா அல்லது பொது நலனுக்கா என்பது குறித்து குறைந்தபட்ச காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று மாண்பமை நீதியரசர்கள் என்.பால்வசந்தகுமார், கே.இரவிச்சந்திர பாபு ஆகியோர் கருத்துரைத்தனர். அவ்வாறு சொல்லாத நிலையில் அவரது மனு தகவல் அறியும் சட்ட வகைமுறையை நிறைவு செய்ததாக கொள்ள முடியாது என்றும் கூறினார். அதாவது பிரிவு 8(1)(j)-இன் கீழான விதிவிலக்கை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டுகின்றது. மனுதாரர் கோரும் தகவல்கள்  அவரிடமே உள்ளன. அப்படியிருக்க அவர் மீண்டும் இச்சட்டத்தின் கீழ் தகவல் கோரி பொது அதிகாரஅமைப்பின் பணிச்சுமையை அதிகப்படுத்துகின்றார்;  இது பொது அதிகாரஅமைப்பின் வளஆதாரங்களை பொருத்தமில்லாத வகையில் மாற்றி விடக்கூடியதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் கூறுகின்றது. இங்கு பிரிவு 7(4) சென்னை உயர் நீதிமன்றம் கைக்கொள்கின்றது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விடயத்திலிருந்து தகவல் வேண்டும் என்றால், நகல் மனு தாக்கல் செய்து அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரக்கூடாது என்றும் கூறுகின்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொறுத்தவரை, அதன் வகைமுறைகளுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்றால் அங்கு "இசைவமைந்த பொருள் விளக்கம்"தான் (Harmonious Construction) எடுபடும். இது பொது மக்களின் நலன் கருதி இயற்றப்பட்ட சட்டமே (Beneficial Legislation) தவிர, அரசின் நலன் கருதி அல்ல.எனவே குடிமக்களுக்கு "பயன்தரும் முறையில் பொருள் கொள்ள வேண்டும்" (Beneficial Construction). நாடாளுமன்றத்தின் உள்ளக்கிடக்கையை (Intention of the Legislature) ஒட்டி பொருள் தர வேண்டும்.

இச்சட்டத்தின் பிரிவு 6(2) தான் இதன் அச்சாணி. இதன்படி தகவல் கேட்பதற்கான காரணங்களை மனுதாரர் தெரிவிக்க வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமை, குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். இவற்றை மையமாக கொண்டே பிரிவு 7-இன்படி தகவல் கோரும் வேண்டுகோளை முடிக்க வேண்டும். அவ்வாறே பிரிவு 8-இன் கீழ் வரும் விதிவிலக்குகளை பொருள் கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் பிரிவு 6(2) எனும் அச்சாணியை கழற்றி விட்டு தீர்ப்பு வழங்கியதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிலைகுலைந்தது. பொது தகவல் அலுவலர்கள் மகிழ்ந்தனர். அரசு அலுவலர்கள் மறுபடியும் மெத்தனப் போக்குக்கு தாவ திட்டமிட்டனர். நல்ல வேளையாக ஒரே வாரத்தில் அதாவது 23-09-2014-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை  மறுஆய்வுக்கு எடுத்து தனது தீர்ப்பை மாற்றிவிட்டது. பிரிவு 6(2)-ஐ கவனிக்காமல் தீர்ப்பு வழங்கிவிட்டதாக நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். "குறைந்தபட்ச காரணம் தெரிவிக்க வேண்டும்" என்ற வரிகளை இரத்து செய்வதாகவும் தங்கள் புதிய தீர்ப்பில் குறிப்பிட்டனர். புதிய தீர்ப்பு நகலை வெளியிடவும் பதிவகத்திற்கு ஆணை பிறப்பித்தனர்.

இப்படி ஒரு தீர்ப்பு வந்தததும் நல்லதுதான். ஒரு புறம் தகவல் அறியும் உரிமை சட்டம் தப்பித்தது. அதே நேரம் தனது தீர்ப்பை தகவல் அறியும் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உயர் நீதிமன்றம் திருத்திக் கொண்டதால், அச்சட்டத்தின் வலிமை மேலும் கூடியுள்ளது என்றும் கொள்ள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மேலும் புடம் போட்டதாக மாறியுள்ளது.

4 comments:

ஊமைக்கனவுகள். said...

பயனுள்ள பதிவுகளை யாவரும் அறிய எளிய தமிழில் தரும் தங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள் அய்யா!
தங்களைத் தொடர்கிறேன்!!!

Advocate P.R.Jayarajan said...

Nanri....

Advocate P.R.Jayarajan said...

//தங்களைத் தொடர்கிறேன்!!!//

Nanri

kkjegthe san said...

ஐயா ஆனால் பொது தகவல் அலுவலர்கள் நான் கொடுத்த புக்கர் மனுவின் நகலை
மேற்படி உயர்நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு கொடுக்க மறுக்கிறார்கள்.

எனது மனு வுடன் இணைத்த போட்டோவின் நகல் கொடுக்க மறுக்கிறார்கள்....

Related Posts Plugin for WordPress, Blogger...