என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

06 September, 2014

தண்டனைக் காலத்தில் பாதியளவை வழக்கு விசாரணை இன்றி அனுபவித்த கைதிகளை விடுதலை செய்

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி ஆணை !


குற்றம் மெய்ப்பிக்கப்படாமல், அதற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தில் பாதியளவை அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யும்படி  மைய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தண்டனை காலத்திற்கும் மேலாக இந்திய சிறைகளில் அடைபட்டுள்ள அயல்நாட்டு விசாரணைக் கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீதான விசாரணையின் போது, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணையை மாண்பமை இந்திய தலைமை நீதியரசர் ஆர்.எம்.லோதா தலைமையில் அமைந்த அமர்வாயம் பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி ஆணையின் விளைவாக, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேவேளையில், மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள விசாரணைக் கைதிகளுக்கு இந்த ஆணை பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதை செயல்படுத்துவதற்கான முறையை அந்தந்த வட்டாரத்திற்குரிய நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் ஆணையிட்டுள்ளது.

இந்த ஆணையை பிறப்பிக்கும் போது, சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலஅளவில் பாதியை நிறைவு செய்த கைதிகளை நீதிமுறை அலுவலர்கள் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும், சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் அந்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க அந்த சிறைச்சாலையிலே உரிய ஆணைகளை அவர்கள் பிறப்பிக்க வேண்டும் என்றும், மாண்பமை நீதியரசர் லோதா கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டறிய வரும் அக்டோபர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை  சட்ட அலுவலர்கள், சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டத்தை தங்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மைய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் தேக்கநிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மைய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருக்கின்றனர். இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் குற்றம் மெய்ப்பிக்கப்படாமலே பல ஆண்டுகளாக  சிறையில் உள்ளனர்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...