என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
சொல்கிறேன்..

06 September, 2014

தண்டனைக் காலத்தில் பாதியளவை வழக்கு விசாரணை இன்றி அனுபவித்த கைதிகளை விடுதலை செய்

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி ஆணை !


குற்றம் மெய்ப்பிக்கப்படாமல், அதற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தில் பாதியளவை அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யும்படி  மைய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தண்டனை காலத்திற்கும் மேலாக இந்திய சிறைகளில் அடைபட்டுள்ள அயல்நாட்டு விசாரணைக் கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீதான விசாரணையின் போது, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணையை மாண்பமை இந்திய தலைமை நீதியரசர் ஆர்.எம்.லோதா தலைமையில் அமைந்த அமர்வாயம் பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி ஆணையின் விளைவாக, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேவேளையில், மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள விசாரணைக் கைதிகளுக்கு இந்த ஆணை பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதை செயல்படுத்துவதற்கான முறையை அந்தந்த வட்டாரத்திற்குரிய நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் ஆணையிட்டுள்ளது.

இந்த ஆணையை பிறப்பிக்கும் போது, சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலஅளவில் பாதியை நிறைவு செய்த கைதிகளை நீதிமுறை அலுவலர்கள் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும், சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் அந்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க அந்த சிறைச்சாலையிலே உரிய ஆணைகளை அவர்கள் பிறப்பிக்க வேண்டும் என்றும், மாண்பமை நீதியரசர் லோதா கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டறிய வரும் அக்டோபர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை  சட்ட அலுவலர்கள், சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டத்தை தங்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மைய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் தேக்கநிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மைய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருக்கின்றனர். இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் குற்றம் மெய்ப்பிக்கப்படாமலே பல ஆண்டுகளாக  சிறையில் உள்ளனர்.

05 September, 2014

இந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு

இந்தியாவின் அடுத்த தலைமை நீதியரசர் எச்.எல். டட்டு;
ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
----------------------------------------------------------------


இந்திய தலைமை நீதியரசராக தற்போது பதவியில் உள்ள மாண்பமை நீதியரசர் ஆர்.எம்.லோதா வரும் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதியரசராக எச்.எல். டட்டு நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த மூத்த நீதிபதி எச்.எல்.டட்டு :

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக உள்ள ஆர்.எம்.லோதா இம்மாதம் 27ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எச்.எல்.டட்டு பணியாற்றி வருகிறார். இவரை அடுத்த தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து மைய அரசு பரிசீலித்து வந்தது. தற்போது, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தத்துவை தலைமை நீதியரசராக நியமிப்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும் தலைமை நீதியரசர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

1975-ல் வழக்குரைஞராக தனது சட்டத் தொழிலை தொடங்கியவர் :

1950-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி டட்டு, 1975-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பெங்களுரில் தனது சட்டத் தொழிலை தொடங்கினார். 1995-ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசராக பணியாற்றினார். இதை அடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவர் :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, நீதிபதிகள் நியமனத்திற்காக "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை" (National Judicial Appointments Commission Bill)   நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சட்டமாக்கப்பட்டு, இதன் தலைவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு ஏற்று கொள்வார். இதனால், அடுத்த தலைமை நீதியரசராக  நியமிக்கப்பட உள்ள எச்.எல்.தத்துவுக்கு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முதல் தலைவராகும்  வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பணிக்காலம் :

தற்போது 63 வயதாகும் டட்டு, இப்பதவியில் ஓராண்டிற்கும் சற்று மேலாக அதாவது டிசம்பர் 2015 வரை நீடிப்பார்.

கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு :

இவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றின் போது, தான் கடின உழைப்பு, நேர்மை மற்றும் பணிவு ஆகிய மூன்று கோட்பாடுகளை நம்புவதாகவும், தான் இன்று  இந்நிலையில் இருப்பதற்கு காரணம் தனது பெற்றோர்கள், தனது குருவான மேனாள் இந்திய தலைமை நீதியரசர் ராஜேந்திர பாபு, கடவுள் பாலாஜி ஆகியோரின் ஆசிகள்தாம், என்று குறிப்பிட்டார்.

03 September, 2014

கங்காவை காப்பாற்று...!

மிகப் 'புனிதமானது' எனப்படும் ஒன்றை 'சுத்தப்படுத்த' வேண்டும் என்று எவரேனும் சொன்னால் அது நமக்கு சற்று வியப்பாகத்தான் இருக்கும். "அதுவே புனிதமானது; அப்படியிருக்க அதை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?" என்ற கேள்வி எழுகிறது அல்லவா..? இந்த அவல நிலைதான் புனிதமான கங்கைக்கும் ஏற்பட்டுள்ளது. 

கங்கை கரையில் பிணங்களை எரித்து, அரைகுறையாக நீரில் தள்ளி விடுவது, வைதீக காரிய பொருட்களை அப்படியே நீரில் விடுவது, துர்கா சிலைகளை கரைப்பது, குப்பைகளை சேர்த்து கொட்டுவது என நாளுக்கு நாள் கங்கை கடுமையாக மாசடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் வாசிகளே முகம் சுளிக்கும் அளவிற்கு பிரச்சனை விசுவரூபம் எடுத்து விட்டது. இதை மெல்ல உணர்ந்த மைய அரசு, "கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை" (Ganga cleaning plan) கொண்டு வந்தது. ஆனால் முழுமையற்ற இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு ஒன்றின் போது, "இதே நிலை நீடித்தால் இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் கங்கையை உங்களால் சுத்தப்படுத்த முடியாது. கங்கையின் சுத்தமான பொலிவை நாங்கள் பார்க்க முடிகின்றதோ இல்லையோ, வருங்கால சந்ததியினர் காணும் வகையில் அதன் பொலிவைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறி மைய அரசையும் அதன் செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் முடுக்கிவிட்டுள்ளது.
மைய அரசே கங்காவை விரைவில் காப்பாற்று..!

- Jaya Rajan

Related Posts Plugin for WordPress, Blogger...