என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
Advocate, Author and Academician

11 June, 2019

"ஒரு பள்ளி ஆசிரியரின் பணி நிறைவு விழா" எவ்வாறு இருக்க வேண்டும்? இதோ ஓர் வாழும் உதாரணம் புலவர் வை.சங்கரலிங்கம்"சித்திரைத் திருவிழா... பங்குனி உத்திரத்  திருவிழா.... கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா.... நெல்லையப்பர் ஆனித் தேர்த் திருவிழா" என எத்தனையோ திருவிழாக்களைப் பார்த்த எங்களுக்கு, "வருகின்ற சூன் மாதம் 3-ஆம் தேதி வாடிப்பட்டியில் மகிழ்ச்சித் திருவிழா... எல்லோரும் வர வேண்டும்... வாழ்த்த வேண்டும்......" என்று மதுரை வாழ் புலவர், அன்பிற்கினிய  தமிழாசிரியர், தினத்தந்தியின் "வெற்றி நிச்சயம்"  நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக மேடைக்கு மேடை பாங்குடன் தொகுத்து வழங்கும் பண்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் வை.சங்கரலிங்கம் கூறிய போது எங்களுக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது.     

இங்கே 'எங்களுக்கு' என்ற பதம் என்னையும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாக இயல் துறைத்தலைவரான பேராசிரியர் முனைவர் நெல்லை கவிநேசன் அவர்களையும் குறிக்கும். எங்கள் இருவருக்கும் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களை "வெற்றி நிச்சயம்"  நிகழ்ச்சியில் வைத்துதான் அறிமுகம்.  இப்படி அறிமுகம் ஆகியே இன்றைக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.   


"ஒரு நட்பு ஏழு ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தால், அங்கு நீங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமல்ல, குடும்பத்தினராகவும் ஆகி விடுகின்றீர்கள்", என்று பிரிட்டனில் ஒரு பேச்சுவழக்குண்டு. அப்படி ஒரு குடும்பத்தைப் போன்ற உணர்வுடையதாக எங்கள் நட்பு அண்மைக் காலத்தில் மாறிப்போனதை நாம் மறுக்க முடியாது.

சரி... தலைப்புக்கு வருகின்றேன்.... 

நாங்கள் அவரிடம், "அதென்ன.. மகிழ்ச்சித் திருவிழா?"  என்று வினவினோம். அதற்கு அவர், தனக்கு கிடைத்த ஆசிரியர் பணியை இதுகாறும் செவ்வனே ஆற்றி மன நிறைவுடன் பணி நிறைவும் பெறவிருப்பதாகவும், தான் அவ்வாறு சிறப்பாக செயல்பட்டதற்கு உறுதுணையாக நின்ற அனைவருடனும் அதற்கான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த விழா" என்றும் பதிலளித்து, "எனவே இது ஒரு மகிழ்ச்சித் திருவிழாதானே?" என்று திருப்பி ஒரு கேள்வியையும் கேட்டார். 

உண்மைதான். 

இதையடுத்து மகிழ்ச்சித் திருவிழாவை அவர் ஆசிரியராக பணியாற்றிய வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கான அழைப்பிதழை எங்களுக்கு தந்தார். அதன் வடிவமைப்பு கண்டு நாங்கள் மட்டுமல்ல.. புலனத்தில் (வாட்ஸ்அப்) கிடைக்கப் பெற்ற அனைவரின் புருவங்களும் உயர்ந்துதான் போனது. அவ்வளவு பிரமாண்டம்!
அழைப்பிதழைப் போலவே அதில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் அனைவரும் பல்வேறு சிறப்புகளுக்கு உரிய பெருமக்கள். அந்த வகையில் இத்திருவிழாவிற்கு தினத்தந்தியின் தலைமை பொது மேலாளர் (புரமோஷன்ஸ்) திரு ஆர்.தனஞ்செயன் அவர்கள் தமது துணைவியாருடன் தலைமை தாங்கினார். 

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குனர் டாக்டர் எம்.கருணாகரன், இ.ஆ.ப., பணி நிறைவு பெற்ற இந்திய காவல் பணி அலுவலர் திரு.பாரி  இ.கா.ப., அன்னை ஃபாத்திமா கல்விக் குழும தலைவர் திரு. ஷா, வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு. ஞானசம்பந்தன், பேராசிரியர் திருமதி சண்முகா தேவி, அரிமா சங்க ஆளுநர்கள் திரு.கண.நாகராஜன் மற்றும் திரு. வாசவி ரவிச்சந்திரன்,  மதுரை விக்டோரியா எட்வார்டு மன்ற செயலர் டாக்டர் திரு.இஸ்மாயில், ஜெயப்பிரபா நகை மாளிகை அதிபர் திரு பிரபாகரன், பத்மராஜன் கல்விக்குழும தலைவர் திரு. பாலன், திரு.பெரிஸ் மகேந்திரவேல் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சர்வோதயம் சுந்தர்ராஜன், பொருளாளர் குருசாமி, பள்ளி வளர்ச்சிக் குழு பொருளாளர் வழக்கறிஞர் திரு செல்வகுமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். 

மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி  தொடங்கும் முன்னர்  நமது நாயகர் சங்கரலிங்கம் அவர்கள் தான் பணியாற்றிய வகுப்பின் கரும்பலகையில் நிறைவாக ஒரு முறை எழுதிப் பார்த்தார். 

இதை தொடர்ந்து சுமார் 9.30 மணி அளவில் மகிழ்ச்சித் திருவிழா திருவள்ளுவர் அரங்கில் தொடங்கியது. 3-6-2019 பள்ளி திறக்கும் நாள். எனவே வழக்கமான பள்ளி பிரார்த்தனை, கொடியேற்றம், தமிழ்த்தாய் வாழ்த்து, தினம் ஒரு சேதி என பள்ளி மாணவிகள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ச.கலைச்செல்வி வரவேற்புரை நல்கினார். 

இதையடுத்து பள்ளி வளாகத்தில் 'பணி நிறைவு நினைவு மரம் நடு விழா' நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் திரு.சுபாஷினி, மாவட்டகல்வி அலுவலர் திரு.திலகவதி, புலவரய்யா ஆகியோர் வேல மரத்தையும், சிறப்பு விருந்தினர் திரு அ.பாரி இ.கா.ப. (பணி நிறைவு) ஆல மரத்தையும் நட்டார்கள்.   முன்னதாக புலவர் சங்கரலிங்கம் மற்றும் முனைவர் நெல்லை கவிநேசன் எழுதிய "வெற்றி உங்கள் கையில்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதன் முதற் பிரதியை திரு தனஞ்ஜெயன் வெளியிட, திரு பாரி பெற்றுக்கொண்டார்.

 
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தன. முதலில் கட்டக்கால் கோவிந்தராஜனின் ஆட்டம் நடந்தது. மிகச்சிறப்பாக இருந்தது. இவர் தனது ஆட்டத்தோட நிற்காமல், ஆடிக்கொண்டே கண்களில் பிளேடு வைத்து காட்டுவது, காதை பக்கவாட்டில் சாய்த்து அந்த ஓட்டையில் சக்கரம் வைத்து சுற்றுவது என அமர்களப்படுத்தினார். வந்திருந்த அனைவருக்கும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இவர் கின்னஸுக்கு பரிந்துரைக்கப் பட  வேண்டியவர்.
 

அடுத்து டாக்டர் நன்னிலம் கேசவன் அவர்கள் 108 குரலில் பாடி அசத்தினார். இவர் வெறும் பாடகர் மட்டுமல்ல, மத்திய ஆயத்தீர்வை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி துறையின் கண்காணிப்பாளரும் ஆவார். "ரௌடி பேபி" என்று பாடும்  போது மாணவிகளுக்கு ஒரே உற்சாகம்... நமக்கும்தான்.

புலவரய்யாவிடம் படித்த  மாற்றுத் திறனாளி மாணவர் திரு ஷியாம் என்பவர் "என்னைப்பார் ... கையை தட்டி உண்டாச்சு உலகம்... " என்ற பாடலை பாடி நடிகர் ரஜினியை மகிழ்ச்சித் திருவிழாவில் கொண்டு வந்து நிறுத்தினார்.


 

தொடர்ந்து  திரைப்பட பாடகர் மறைந்த திரு டி.எம்.சௌந்தரராஜனின் சிஷ்யர் திரு. மகாதேவன் ஒரு பாடலை பாடினார்.


ஒரு சிறுவன் மேடையில் அசத்தலாக  நடனமாடினார்.


இவ்வாறு மாறுபட்ட கலை நிகழ்ச்சிகள் மாணவிகளையும், விருந்தினர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

இதைத் தொடர்ந்து திரு தனஞ்செயன் அவர்கள் நல்கிய தலைமையுரை  ஓர் நெகிழ்ச்சியுரையாக மாறிப்போனது. புலவரய்யாவுடன் அவர் கொண்ட தொடர்பு மற்றும் நட்பை நினைவு கூர்ந்து அவர் ஆற்றிய அந்த உரை மகிழ்ச்சிக்கும் மேலாக ஆனந்தத்தை தந்தது. ஆம்... புலவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.


இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பட்டிமன்ற பேச்சாளர், மதுரை அல்ட்ரா கல்லூரி நூலகர் திரு. திருநாவுக்கரசர் சுவை(மகிழ்ச்சி)பட தொகுத்து வழங்கிக் கொண்டிருக்க, "அடுத்து  அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு பரிசு" என்ற அவரது அறிவிப்பு மாணவிகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

சிறப்பு விருந்தினர் மதுரை அன்னை பாத்திமா கல்விக் குழும தலைவர் திரு ஷா, தினத்தந்தி தலைமை பொது மேலாளர் திரு தனஞ்செயன், சென்னை பேராசிரியை முனைவர் காயத்ரி, மதுரை பட்டய கணக்காளர் டாக்டர் தவமணி, பேராசிரியர் முனைவர் நெல்லை கவிநேசன்  உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.


 

பரிசு பெற்ற மாணவிகளின் விருப்பத்திற்கிணங்க, அவர்கள் அனைவரும் அன்னை பாத்திமா கல்விக் குழும தலைவர் திரு. ஷா உடன் சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.


தொடர்ந்து திரு ஷா, திரு அ.பாரி  உள்ளிட்ட பலர் புலவரய்யாவுக்கு வாழ்த்துரை வழங்கினர். 

திரு. பாரி மற்றும் பெனிட் அன்ட் கோ உரிமையாளர் திரு. பெனிட்கரன்   20 மின் விசிறிகளை பள்ளிக்கு கொடையாக அளித்தனர். 


மேலும் புலவரின் நண்பர்களான பல ஆதரவாளர்கள் பள்ளிக்கு பீரோக்களை நன்கொடையாக வழங்கினர்இப்படி மகிழ்ச்சி திருவிழா நண்பகலை தொட்டு விட்டது. அடிக்கும் வெயிலுக்கு ஜில்லென்று ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நமது கையில் பட்டென ஒரு ஐஸ்கிரீம் குப்பியை தந்தார்கள். அது தேவாமிர்தமாக இருந்தது. 

அதே மகிழ்ச்சியுடன் மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

நிறைவாக, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ஒன்றன் பின் ஒன்றாக மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி தனது நன்றியை உரிய மரியாதையுடன் தெரிவித்தார் மகிழ்ச்சிப் புலவர் திரு வை.சங்கரலிங்கம்.

 


இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக நின்று பம்பரமாக செயல்பட்ட நண்பர்கள் திரு. காளியப்பன், திரு. நாராயணன் ஆகியோருக்கு புலவர் நன்றி கூறினார்.

மேலும் அவர் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் பெருந்தகையையும் மேடைக்கு அழைத்து நன்றி தெரிவித்து பெருமை சேர்த்தார்.


ஒரு பள்ளி ஆசிரியர் தனது பணி நிறைவை தனது பள்ளிக்கும், பள்ளி மாணவிகளுக்கும், சமுதாயத்திற்கும் பயன் தரும் வகையில் செம்மையாக கொண்டாடியது யாவருக்கும் மகிழ்ச்சி.

இவ்வளவு மகிழ்ச்சியிலும் எனக்கு ஒரு வருத்தம் இருக்கவே செய்தது. அதை புலவரிடமே கேட்டு விட எண்ணி, "அய்யா... உங்க வீட்டுக்காரம்மா இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சிக்கு வராமே இருந்திட்டாங்களே.. ஏன்.. என்னாச்சு...?" என்றேன். அதற்கு அவர், "அது ஒன்னும் இல்லீங்கய்யா... அவங்களும் ஒரு பள்ளி ஆசிரியை.. இன்னிக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாள். இப்படி முதல் நாளிலேயே விடுப்பு எடுப்பது என்பது ஒரு சரியான நிலைப்பாடாக இருக்காது.. அரசுப் பணிக்கு பாதுகாப்பும் சேர்க்காது. பணி முக்கியம்.. எனவே நான்தான் இந்த நிகழ்ச்சி காரணமாக விடுப்பு போடாமல் அவர்களை பள்ளிக்கு சென்று விடும்படி அறிவுறுத்தினேன்... பணியை தவறாமல் செய்வதும் ஒரு மகிழ்ச்சிதானே அய்யா...?" என்றார் அவருக்கே உரிய ஏற்ற இறக்கமான பேச்சில்.

ஆம்... பணியை, கடமையை தவறாமல் ஆற்றுவதும் நமது வாழ்வில் ஓர் மகிழ்ச்சி திருவிழாதான்.மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,
பி.ஆர்.ஜெயராஜன்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...