என்னைப் பற்றி....

My photo
Salem, Tamil Nadu, India
Advocate, Author and Academician

21 June, 2019

காணத்தவறாதீர்கள்...கட்டக்கால் கோவிந்தராஜனின் ஆட்டத்தை...

"பொய்க்கால் குதிரை" ஆட்டத்தை நேரில் பார்த்திருக்கின்றேன். கட்டக்கால் ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை.

ஆனால் பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டக்கால் ஆட்டம் இரண்டும் சிவாஜியும், ரஜினியும் நடித்த "விடுதலை" என்ற திரைப்படத்தில் வரும் "நாட்டுக்குள்ளே நம்மைப் பத்தி கேட்டுப்பாருங்க... அம்மம்மா..  இவர்தான் சூப்பர் ஸ்டாருங்கோ" என்ற பாடலில் இடம் பெறும். அதைக்கண்டு கட்டக்கால் ஆட்டத்தைப் பற்றி அந்தக்கால கட்டத்தில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இந்த ஆட்டத்தை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு அண்மையில்தான்  கிடைத்தது.  வாடிப்பட்டியில் நடந்த விழா ஒன்றில், அதன் அமைப்பாளர்கள் இந்த ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக இதில் சிறந்து விளங்கும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் த.கோவிந்தராஜ் என்பவரை அழைத்திருந்தனர்.  இதோ.... ஆட்டக்காரர் கோவிந்தராஜ் உடன்


இதோ.... அசல் கோவிந்தராஜ் உடன்

 
"நாட்டுக்குள்ளே நம்மைப் பத்தி கேட்டுப்பாருங்க...
அம்மம்மா.. இவர்தான் சூப்பர் ஸ்டாருங்கோ"  (நன்றி : விடுதலை திரைப்படம்)

 "விடுதலை" திரைப்படத்தில் ஆடியவர்கள் கூட சிரமப்பட்டு ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் திரு கோவிந்தராஜ் மிகச் சிறப்பாக ஆடினார். மேலும் இவர் தனது ஆட்டத்துடன் நிற்காமல், ஆடிக்கொண்டே கண்களில் பிளேடு வைத்து காட்டுவது, காதை பக்கவாட்டில் சாய்த்து அந்த ஓட்டையில் சக்கரம் வைத்து சுற்றுவது என அமர்களப்படுத்தினார்.  இவ்வாறெல்லாம் எப்படி ஆட முடிகின்றது என நான் வியந்து போனேன்.   காரணம், அந்த கட்டைக்கால்களே ஆளுயரத்திற்கு உள்ளன. அதில் ஏறி நின்று சமநிலை தவறாமல் நடக்க வேண்டும், ஆட வேண்டும், வித்தை காட்ட வேண்டும் எனும் பொழுது, இவர் தமிழக அரசின்  "கலை வளர்மணி" விருது மட்டுமல்ல, கின்னஸ் விருது பெறவும் தகுதியானவர் என்றே எனக்கு தோன்றியது.

தமிழ் நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக மாவட்ட அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றுதான் இந்த கலை வளர்மணி விருது.

குரலிசை, பரத நாட்டியம், ஒவியம், சிற்பம், நாடகக் கலை, நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், கரகம் ,காவடி, பொய்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், கூத்து முதலிய கலைகள் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் என சிறந்த கலைஞர்களில் 18 வயது மற்றும் அதற்குட்பட்டோருக்கு 'கலை இளமணி’ விருதும்,  19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு 'கலை வளர்மணி’ விருதும்,  36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு 'கலை சுடர்மணி’ விருதும், 51 வயது முதல் 60 வயது பிரிவினர்க்கு 'கலை நன்மணி’ விருதும், 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு 'கலை முதுமணி’ விருதும் என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலை மேம்பட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரை நாமும் நிகழ்ச்சிகளின் போது அழைத்து ஆட வைத்தால், இந்த அரிய கலை மேலும் சிறப்புற வளரும்; வந்திருக்கும் கூட்டத்தினரும் மகிழ்வார்கள்.

இவரது முகவரி :
டாக்டர் த.கோவிந்தராஜ்,
கலை மேம்பாட்டு நிறுவனம்,
108, வீரமாகாளியம்மன் கோவில் தெரு,
ஜெய்ஹிந்துபுரம, மதுரை 625011.
செல்லிடப்பேசி எண்கள் : 8760130152, 9952142800


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...